வியாழன், 2 பிப்ரவரி, 2023

தலை(பல்)யாய பிரச்சனை

 

                   தலை(பல்)யாய பிரச்சனை

சாப்பிட்டு முடித்ததும், எல்லாருமே எதிர் நோக்குற தலையாய பிரச்சனை,………..இல்லையில்லை இந்த பல்லாய பிரச்சனைதான் ’பல்லிடுக்கில் மாட்டிண்டதை CLEAR பண்றதுதான். முன்னாடியெல்லாம் ஒரு 45, 50 வயசு ஆனவாளுக்கு வர்ர இந்த பிரச்சனை இப்போ எல்லாம் SCHOOL GOING CHILDREN க்கே வர ஆரம்பிச்சுடுத்து. ஒரு மாம்பழம் சாப்பட முடியறதா.. தேங்காய் போட்ட கறி சாப்பிட முடியறதா…? அது பாட்டுக்கு ஒரு நாரோ, தோலோ பல்லிடுக்கில் மாட்டிண்டா இந்த நாக்கு படற அவஸ்தை இருக்கே! அப்பப்பா… சொல்லி மாளாது. நாம் எங்காவது பொது விருந்துல சாப்பிட்டிருப்போம்… கையலம்ப போறதுக்குள்ள இந்த நாக்கு தவியா தவிக்க ஆரம்பிச்சுடும். எவ்வளவுதான் நாம நாசூக்கா, வாயை மேலாக துடைச்சுண்டு, டிஷ்யூ வை யூஸ் பண்ணி தூக்கிப் போட்டுட்டு வரப் பாத்தாலும்… இந்த நாக்கு விடா…து நம்மளை. அதுவும் பாருங்கோ…. இந்த கடைசி கடவா பல்லுல தான் மாட்டிணிடிருக்கும். நாமளும் உடனே ரெஸ்ட் ரூம் சைடு போயி, வாஷ் பேசின் கண்ணாடில ‘ஆ……’ னு வாயத் திறந்து எங்கதான் அது மாட்டிண்டிருக்குன்னு பாக்க ட்ரை பண்ணினா….. நம்ம கண்ணுக்குத் தெரியவும் தெரியாது. நாக்கு TOUCH பண்ற இடத்தை கை FEEL பண்ணவே பண்ணாது. அப்போதான் வேற யாராவது உள்ள வருவா. நாம் ரொம்ப ஸ்டைலா வாயை துடைச்சுக்கற மாதிரி துடைச்சுண்டு வெளில வரவேண்டியது தான்.

சரி இந்த பல் இடுக்கை சரி செஞ்சுக்கலாமேன்னு DENTIST கிட்ட போனா…. ‘CLEANING’ மட்டும் தான் பண்ணுவா. CLEANING பண்ணி அன்னைக்கு இருக்கறதெ CLEAR பண்ணிடுவா… ஆனா அந்த GAP இன்னும் பெரிசா போயிடும். இன்னும் இந்த GAP ல பூசர மாதிரி எதுவும் CHEMICAL அல்லது CREAM இவா கண்டுபிடிக்கவேயில்லை! இதுல பாருங்கோ MBBS 5 வருஷம் படிச்சப்புறம்தான் ஒவ்வொரு BODY PART க்கான SPECIALISATION பண்ணமுடியும். ஆனா இந்த பல்லுக்கு மட்டும் தான் BDS COURSE னு ஒண்ணு வச்சிருக்கா. DR ம் CLEAN பண்ணிவிட்டுட்டு ‘வேற ஏதாவது மாட்டினா எடுக்கறதுக்குன்னு ஒரு BRUSH மாதிரி ஒரு INSTRUMENT குடுத்து அனுப்பிடுவா, அது வேற ஒண்ணுமில்ல, நாம் SAFTY PIN னால குத்திக் கிழிச்சு கூறு போடுவோமே அதேதான். TIP ல கொஞ்சம் வளைஞ்சு இருக்கும் அவ்வளவுதான். மத்தபடி சாக்கடை குத்தற BRUSH தான் அது. இதுவரைக்கும் பாருங்கோ TOOTH PICK ஐத் தவிர வேற ஏதாவது நாமளாவது கண்டு பிடிச்சிருக்கோமா….DENTISTS ம்  சொத்தையான பல்லைப் பிடுங்கிட்டு ROOT CANAL TREATMENT பண்ணுவா…. பல்லு கோணலா இருந்தா CLIP போடுவா…. அத்தனைப் பல்லும் விழுந்துடுத்துன்னா பல் செட் கூட கட்டிவிட்டுடுவா…. ஆனா இந்த பல் இடுக்குக்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்கப்டாதா….

DENTIST அ விடுங்கோ….. பகவானுக்கே இந்த பல்லைப் பத்தின ஒரு CLEARITY இல்லனு நினைக்கறேன். ஒரு மனுஷன படைக்கும் போது எல்லா அடிப்படை உறுப்புகளையும் அவனுக்கு வச்சே படைக்கறார். தலை முடி, நகம், கண்ணு, காது, கை எல்லாமே! பருவ வயதில சில மாற்றங்கள வச்சிருக்கார். அத ஒத்துக்கறோம். ஆனா பல்லுக்கும், பருவ வயதுக்கும் கூட எந்தத் தொடர்பும் இல்லையே! அப்படி இருக்கும் போது, பிறக்கற குழந்தைக்கு பல் இல்லாமலேயே அனுப்பிச்சுடறார். அப்புறம் 1 வயசுலேர்ந்து ஒண்ணொண்ணா வளர ஆரம்பிக்கறது. அதுவும் என்னடான்னா 8 வயசுலேர்ந்து விழ ஆரம்பிக்கறது. அதுக்கு நாம பால் பல்ன்னு சொல்லி கொண்டாடறோம். வரிசையா வளர்ந்திருக்கற பால் பல் விழுந்து முளைக்கும் போது அது இஷ்ட்டதுக்கு கோணா மாணான்னு வளர்ரது. ஒரு 40 வயசுலேர்ந்து தேய ஆரம்பிக்கறது. இடுக்கு வர்ரது. அதுல சாப்பிடற சாமான் மாட்டிக்கறது. அதனால DECAY ஆயிடறது. அப்புறம் ஒண்ணொண்ணா விழ ஆரம்பிச்சு பொக்கையா கூட ஆயிடறது. ஏனப்பா…! ஏனப்பா….! இப்படி..? கொம்பு மட்டும் மாடுகளுக்கு அப்புறம் வளர்ந்தாலும் பல் முன்னாடியே இருக்கே! எனக்குத் தெரிஞ்சு பிறக்கும் போது எந்த ANIMAL எந்த உறுப்பும் இப்படி இல்லாம பிறக்கறதில்லையே!

சரி…. பகவானே… பிள்ளையாரப்பா…. பிரம்ம தேவனே! நான் ஒண்ணு சொல்றேன் கேக்கறேளா…. நாங்க எல்லாம் பாருங்கோ ஒரு வருஷத்துக்கு அடுத்த வருஷம் UPDATED MOBILE கண்டுபிடிக்கறோம். ஜனங்களுக்கு எந்த APP ரொம்ப USEFUL ஆ இருக்கு? என்னென்ன FUNCTIONS பிடிச்சிருக்குன்னு பாத்து பாத்து UPDATE பண்றோம்! நீங்க இந்த பல்லைக் கொஞ்சம் CONSIDER பண்ணுங்கோளேன்…. நீங்க தான் எவ்வளவு PLANNINGஓட ANTIBODIES, WHITE BLOOD CARPOSELS, ஒரு கிட்னிக்கு ரெண்டு கிட்னி. கண்ணுக்கு மேல இமை, தோல் மேல முடி, காத சுத்தி காது மடல்…. இப்படி இவ்வளவு அழகா, CREATIVE ஆ படைச்சிருக்கேளே! இந்த நாக்கு TIP ல ஒரு சின்ன கண்ணும், ஒரு SHARP PINனும் மட்டும் வச்சுடறேளா… தேவை ஏற்படும்போது இந்த நாக்குக்கு HELP பண்றதுக்குத் தான். வேண்டாங்கும்போது அந்த PINம் கண்ணும் மூடியே இருக்கட்டும். இல்லேன்னா சாப்பிடும்போது இடைஞ்சலா இருக்கும். பல்லிடுக்குல அதுவும் கடவா பல்லிடுக்குல மாட்டிண்ட நாரை எடுக்கறதுக்கு மட்டும்!!!! இல்லேன்னா PLEASE நீங்களே ஏதாவது மாற்று ஏற்பாடு பண்ணுங்கோளேன்.

புதன், 2 நவம்பர், 2022

ல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி பாலகாண்டம் பகுதி IX

 


ல‌க்ஷ்மி ராமாயணம் 

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். திருச்சி வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவரது குரல் பலருக்குப் பரிச்சயமானது.
நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்Blogger. )


இவ்விடம் செய்திகள் இவ்வித மிருக்கையில்,
அவ்விடம் மாடத்தில் ஐயனை கண்டவள்,
எவ்விதம் தம்முயிர் தாங்கி நின்றாள்? –  அவள்      
விம்மிடும் மனத்தொடு ஏங்கி நின்றாள்.                                 304

அண்ணலைக் கண்டதும், எண்ணங்கள் தொலைத்தவள்
பின்னருங் கண்டிடும் ஆர்வமும் உந்திட
பளிங் குமண்டப தடாக மடுத்த
குளிர்ந்த இடத்தினை கடிதி னடைந்தாள்.                                305

அசைந் திடும் தாமரை மலரினை நோக்கி,
‘இரவினில் நின்னுரு கருமையாய்த் தெரிவதால்,
மறைந்தது எந்தன் மனவாட்ட்ம் – இருப்பினும்
தருவதற் குதவுவீர் எம்முயிரை!’ யென பிதற்றலானாள்.                  306

எண்ணத் திலே நிறைந்துள்ளான் – இருப்பினும்
யாரென்று தெரி கிலே னே!
கண்ணுள்ளே இருந்த போதும்
கா ணற் றிருக் கிறேனே!                                               307

‘பாற் கடலினின் றெடுத்த அமிர்தத்தை
பொற்பாத்திரத்துடன் தவற விட்டேன்!
அப்போதே கைப்பற்றி உண்ணாது விட்டெதென்        
தப்பன்றி வேறென்ன?’ கடிந்து கொண்டாள்.                              308

புண்பட்டு, உள்நைந்து, விம்மி அழுதழுது
துன்பமே உருவாகி பிராட்டி இருக்கையிலே
நாணேற்றி வில்முறித் தானென்று சொல்லி,
‘நீலமாலை’ எனும்சேடி ஓடி வந்தாள்                                    309

வந்தவள்; அடி வணங்கிப் பணிந்திடாமல்
அந்தமில்லா உவகை கொண் டாடிநின்றாள்.
அர்த்த மற்ற அவள்செயலால் சினத்துடனே
‘சிந்தையில் புகுந்த செய்தியென்னடி. சொல்லென்றாள்.’                   310

‘பெரும்படை யுடையவனாம் – கல்வி
மேம்பாடு டுடையவனாம் – அள்ளித்தரும்
நீள்கை யுடையவனாம் தசரத புதல்வனவன்
அழ கிலும்மேம் பட்ட வனாம்!                                          311

திரண்டு நீண்ட தோ ளுடையவன்
பரமனோ வென ஐயத் தக்கவன்.
பற்றகன்ற முனியோடும், இளவலோடும்
வந்திருக்கும் ஆற்றலுடை ஸ்ரீராமன்.                                     312

உருத்திரன் எய்த அவ்வில் லை - முனி
கருத்துடன் பார்த்திட அழைத்து வந்தார்.,
அரசனின் ஆணைக்கு சிரம் சாய்த்து
ஏற்றினன் நாணை; முறிந்தது வில்’லென்றாள்.                           313

கோ முனியுடன் வந்தவ னென்றும்,
தாமரைக் கண்ணினா னென்றவள் சொன்னதும்,
‘ஆம்! ஆம்! ஆம்! அவனே தானெனப் பூரித்தாள்.
அவனல்லன் என்றாயின் இறப்பேனெ’ன சூளுரைத்தாள்.                  314

                              சனகன் செயல்.

கமலத்தோன் பிரும்மனால் படைக்கப் பட்ட
வில்லறும் ஓசை முழங்கி யதும் - மன்னன்
எல்லை யில்லாத பெரு மகிழ்வுடனே 
கௌசிக முனியைத் தொழுது வினவினன்.                              315

‘ஐயனே! நின்புதல்வன் திரு மணத்தை
ஒருபொழுதில் முடிப்பது உன் விருப்பமோ!
முரசெறிந்து அறிவித்து தசரதமா மன்னனை
முறைப்படி யழைத்து நடத்திடலுன் விருப்பமோ?’                        316

கரைபுரண்ட உவகையுடன் கோ முனியும்,
விரைவினிலே தசரதனும் உடனிரு த்தல்
நல்லதாகும், நிகழ்ந்த வற்றை தூதனுப்பி
சொல்லுதலே சரியாகும்! ஓலைவரைந்தி டென்றார்.                      317

                            எழுச்சிப் படலம்
       (தூதுவர் அயோத்தி சேர்ந்து அரண்மனை வாயிலை அடைதல்)

இடிக் குரலில் முரசறைந் தபடி
கடுகிய தூதரும் அயோத்தி மன்னனின்
ஒளிர்கழல் பாதங்கள் தொழுது வணங்கி,
ஓலை கொணர்ந்ததைப் பகர்ந் தனராம்.                                  318

மெய்க்கீர்த்தி பல சொன்ன தூதுவர்கள்
‘மன்னா! முனிவரோடு நின் புதல்வர்
வனம் நோக்கிப் போன பின்னர்
நடந்தவை யிவையென நெடிது சொன்னார்,                              319

‘திருமண வோலை’ அது வென்றறிந்தவன்
அறிஞனை அழைத்து ‘வாசி’ யென்றனன்.
தலைமகன் இராமனின் வில்லாற்ற லுணர்ந்ததும்
மலையென வளர்ந்தன மன்னவன் தோள்கள்.                            320

வெற்றிவேல் மன்னன் மகிழ்ச்சி மேலிட
‘அன்றொருநாள் இடியொத்த ஒலி கேட்கையிலே
யாதோ! யென்று யாம் ஐயுற்றோம். – வில்
இற்ற பேரொலி தானென இன்றறிந்தோம்’                               321

என்று ரைத்த மா மன்னர்
வீரக் கழலணிந்த மிதிலை தூதருக்கு
வரிசைகளென பட்டும், பொன் கலன்களும்,
வரையி ன்றி வழங்க லானார்.                                          322

                        
                             முரசறைய பணிதல்

‘சேனையும், அரசரும் மிதிலை நகருக்கு,
சென்றிடக் கடவ ரென்ற படி,
யானை மேலே அணிமுர சறைக!’
ஆணையை யிட்டான் தசரத மன்னன்.                                   323

ஈரடி வைத்து மூவுல களந்த
திருமால் செயலினை ‘சாம்புவனும்’
சுற்றித் திரிந்து சாற்றினார் போலே
முரசினைக் கொட்டி அறி வித்தார்.                                      324

                          முரசொலி கேட்டார் மகிழ்ச்சி

சாற்றிய முரசொலி செவியில் பட்டதும்,
காற்றினில் மோதிய கடலலைப் போலவே
களிப்பினில் ஓங்கினர் மகளிர் அனைவரும்
களியாட்டம் போட்டனர் காளைகள் பலரும்.                             325

                          சேனையின் எழுச்சி

சூரியத் தேரென பொலிந்திடும் தேர்களும்,
வானவில் ஒளிரும் மேகமாய் வேழங்களும்.
பொங்கும் பெரும்புறக் கடலது போலே
பெரும்படைக் கூட்டமாய் புறப் பட்டதாம்!                                326

குடைகளும், கொடிகளும் நிறைந்து பறந்திட,
கருநிற முடைய வேழக் கூட்டத்தை
கருங்கட லெனவே கருதிய வெண்முகில்
பருகிட விழைந்து தாழ்வதாய் தெரிந்ததாம்.                              327

பேரிகை பேரொலி முழக்கத்துக் கிடையில்
பெருந்திரள் மக்களும், நால்வகைப் படையுடன்,
நெறிமுறைப் படிமுன் விரைவினில் செல்ல
சிவிகையில் தொடர்ந்தனர் தேவியர் மூவரும்.                           330

இராமன்பால் பேரன்பு கொண்டிருந்த கைகேயி,
இரத்தினங்கள் பொதிந்திருந்த சிவிகை யிலும்,
மின்னற்கொடி போன்றவளாம் சுமித்திரையும் – நீல
மணிபதித்த சிவிகையிலே பின் தொடர,                                 331

பல்வகை மணியனைய ஊர்தி யொன்றில்
வள்ளலைப் பயந்த நங்கையாம் கௌசலையும்,
வெள்ளைச் சிவிகையில் வசிட்ட முனிவரும்,
வில்லுடை பரத-சத்ருக்னர், இராம-இலக்குவனாய் தேரேற,                332

மறைவல்ல அந்தணர்க்கு அளவற்ற தானஞ்செய்து,
அரங்கனின் திருவடியைத்தன் சிரசிலே சூடிக்கொண்டு,
அறுகுநீர் தெளிக்க, அரியவேத மொலிக்க,
புறப்பட்டனராம் சக்ரவர்த்தி மிதிலை நோக்கி.                            333

கொற்றவேள் மன்னர், மற்றொரு சூரியனாய்
சுற்றிலும் கமலம்பூத்த தொடுகடல் திரையின்மீது
வெண்புரவி அலைகளென வேகமாய் ஓடுகையில்,
மணிநெடுந் தேரில் மிடுக்கோடு மிளிர்ந்தனராம்.                          334

பூமிபாரம் தீர்க்கக் காக்கும் தசரதனின்
சேனைபாரம் தங்க பூமி தவித்துப்போனதாம்.
இருயோசனை கடந்த பின்னர் சேனைக்கூட்டமும்
சந்திரசைல மலையடியில் தங்கிச்சென்றதாம்.                           335

களிறொடும், தேரொடும், பரியொடும், பெரும்படை
மலையடி வாரத்தில் தங்கிய வர்ணனை
‘வரை காட்சிப் படலத்தில்’ வரைந்துள்ளார், - கம்பர்
கற்பனை வளத்தினை விரித் துள் ளார்.                                  336

சோணை யாற்றங் கரையினை யடுத்த
சோலை புகுந்ததை ’பூக்கொய் படலமாய்,
கள்ளுண்டு, நீராடி, களித்து, மகிழ்ந்ததை – ‘நீர்
விளையாட்டுப் படலமா’ய் கொடுத் துள்ளார்.                             337

நான்கு தினங்கள் பயணம் முடித்த
கோ மகனின் சேனை முற்றும்
கங்கையாற்றின் நீரையள்ளி பருகியபின்
ஐந்தாம்நாள் காலையிலே மிதிலை யடைந்ததாம்.                        338

                                                   

                         (இன்னும் வரும்)

"லக்ஷ்மி ராமாயணம்" பால காண்டம் part II

 


TUESDAY, JULY 18, 2017


"லக்ஷ்மி ராமாயணம்" part II

"லக்ஷ்மி ராமாயணம்"

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர்.  நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்.)

திருவவதாரப் படலம்.

சிகரமாயிருந்த தசரதனின்
சித்தத்திலே ஒர் கவலை!
சந்ததி இல்லையே தமக்கடுத்து
சிம்மாசனத்திலே அமர்வதற்கு!                 24

வேதமுனி வசிஷ்ட்டரைத்தான்
வேந்தன் தன் அவைக்கழைத்தான் – மன
வேதனையை வெளிப்படுத்தி
‘யாது செய்தல் நலம்?’ என்றான்.                25

அவ்வமையம்…-
முக்காலமு முணர்ந்த
பிரும்ம புத்ரன் வசிஷ்ட்டருக்கு
அக்காலத்திய ஓர் நிகழ்வு
அகக்கண்ணில் தெரிந்ததுவாம்.                  26

"முன்பொருநாள் தேவர் வந்துத்
திருமாலின் தாள்பணிந்து,
அவதி தரும் அரக்கர் தம்மை
அழித்தருள வேண்டி நின்றார்.                   27

தசரதனின் புத்திரனாய்
தரணியிலே உதிப்பதாய்
திருமாலும் மனமுவந்து
தந்திருந்தார் உறுதிமொழி!                      28

இலக்குவனாய் ஆதி சேடனும்,
சங்கு பரதனாய், சக்கரம் சத்ருக்னனாய்
மண் மீது பிறப்பெடுத்து
மற்றோரைக் காப்போமென்று."                   29

நினைவினின்று மீண்ட மாமுனிவர்,
அஸ்வமேத யாகமும், புத்திர
காமேஷ்ட்டி யாகமும் செய்யுங்கால்,
புதல்வர் பிறக்கும் வாய்ப்புண்டென்றார்.          30

‘அன்னதற் கடியவன் செய்வன யாதெ’ன
அரசனுக்கரசன் ஆவலாய் வினவிட
அதற்கான நியமத்தை அவை முனிவர்
அடுத்தடுத்து விளக்க லானார்.                   31

விபாண்டக முனியின் குமாரராய்
மான் கொம்புடன், மான் வயிற்றில் பிறந்த,
'கலைக்கோட்டுமாமுனி' வந்திட
பலன் கிட்டிடும்' எனப் பகன்றார்..                32

(கலைக்கோட்டு மாமுனி – ரிஷ்ய ஸ்ருங்கர்)

தவத்தில் சிறந்த தன் தகப்பனுக்குத்
திருப்பணி செய்வதே சித்தமென்ற
பெண்ணுரு பார்த்திரா முனிவனின் கால்பட
பெருமழை பெய்யும்' என்பது ஐதீகம்             33

பஞ்சம் வாட்டிய 'உரோம பாதர்'
தஞ்சமென்றிவர் தாள் பணிந்து,
'அங்கம்' அழைத்து வந்ததினால்
கொட்டிய மழையால் பஞ்சமழிந்ததாம்           34

(உரோம பாதர் - அங்க தேசத்து அரசர்)

நாட்டின் சுபிக்ஷம் திரும்பியதால்,
'சாந்தை' யென்ற தம் மகளை – கலைக்
கோட்டு முனியுடன் மணம் செய்து - மரு                        
மகனாய்க் கொண்டான் அம் மன்னன்".            35

வசிட்டரின் உரையினால் தசரதனும்
வாட்ட மகன்று அங்கமடைந்தான்.  – கலைக்
கோட்டு மாமுனி யிடத்தில் தன்
நாட்டு நிலவரம் நயமுடன் நல்கினான்.           36

'இரங்கேல் அரசே! யாம் வந்திருப்போம்! 
வருத்தம் களைந்து இயற்றிடுவீர் யாகங்களை!
ஈரேழுலகையும் ஆண்டிடும் புதல்வரை
ஈன்றிடுவீர்! என்றுரைத்தார் அம்முனிவர்       37

ஏவலர்கள் அமைத்தனராம் யாக சாலையை!
வேதியர்கள் மூட்டினராம் வேள்வித் தீயினை!
மகவுஅருள் ஆகுதியை முறையாய் வழங்கியே                
வருடம் ஒன்றானதுவாம் அருள் வேண்டியே!  38       

தீயிடை மீண்ட பூதமொன்று
தூயபொன் தட்டிலே வைத்த – சுவை
மேவிய அமிர்தம் தன்னை
தருவித்து மறைந்ததுவாம்!                   39

அமிர்தத்தில் ஓர் பங்கை கௌசலைக்கும்,
அடுத்தவள் கைகேயிக்கு ஒரு பங்கும்,
எஞ்சிய இரு பங்கினையும் சுமித்திரைக்கும்
ஈந்தனராம் தசரதமா சக்ரவர்த்தி!              40

யாகநியம நிமித்தமாய், கடவுளர்க்குப் பூசையும்,
அந்தணர்க்குப் பொன்னையும், பொருளையும்,
அரசற்குப் பரியையும், தேரையும் ஈந்துவிட்டு
சரயுநதி நீரமிழ்ந்தார் சக்ரவர்த்தி திருமகனார்!  41

ஒருசில நாள் சென்றதும்,
கருவைச் சுமந்தனர் தேவியர் மூவரும்
மசக்கை நோயோடு வருத்தம் துய்த்தனர்.
திருமுக வடிவோடு மதியினை ஒத்தனர்.      42                                                 
புனர்பூசம், கடகத்துடனிணைந்து - பரி
பூரணமாய் பரிமளித்த பகற்பொழுதில்
அரிதான ஆண்மகவை ஸ்ரீ ராமனாய்
அவனிக்குப் பெற்றெடுத்தாள் கௌசல்யை!     43

அரியநல் வேதமே அறிதற் கரியனாய்
கரியமுகில் போன்ற மேனிக் கரியனாய்
திருமாலின் மறுபிறப்பிற் குரியனாய்
அவதரித்தான் அருள்நிறைந்த இராமபிரான்.    44

கைகேயி பரதனையும், சுமித்திரை
லட்சுமணன், சத்ருக்னன் இருவரையும்
புதல்வர்களாய்ப் பெற்றெடுக்க
பெருமகிழ்ச்சி பெருகிற்றாம்.                   45                                                                        
நாட்டினர் அனைவரும் ஆடினர் – கூத்தாடினர்
கூடினர் முனிவரும் ஆசி கூறினர் – பூ தூவினர்
மகிழ்ந்தனர் மன்னரும் வழங்கினர் – வாரி வழங்கினர்.
நீக்கினர் வரியெலாம் கொட்டியே – முரசுகொட்டியே!  46
             
கிளி கொஞ்சும் மொழி பேசித்,                      
தண்டளர் நடை பயின்று வந்து
அனு தினமும் வளர்ந்தனராம்
அரசிளங்குமரர்கள் நால்வரும்,                       47                                                                    
இராம – இலக்குவன், பரத – சத்ருக்னன் என
இணைகள் இரண்டெனவே இருந்தனராம்.
இருப்பினும் அண்ணன் இராமனுக்கே – முதல்
இருக்கையை இதயத்தில் ஈந்தனராம்.                48

யானை, குதிரை, இரதம் ஏனைய
ஏற்றம் பயின்று, வேதம் உணர்ந்து
யாதொரு கலையும் நீக்கல் இன்றி,
யாவினும் தேர்ந்தனர் தசரத புதல்வர்கள்.     49                                      
(இன்னமும் வரும்)

எளிய மொழியில் கம்பராமாயணம். பாலகண்டம் பகுதி VI

 

'ல‌க்ஷ்மி ராமாயணம்' பால காண்டம் பகுதி VI

ல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி VI


"ல‌க்ஷ்மி ராமாயணம்" 



(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர்.  நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்.)

கௌசிகன் வரலாறு

ஒருமுறை..
வேட்டை யாடவன் காட்டிடைச் செல்கையில்
வசிட்டமுனிவ னாச்ரம மடைந்தான்.- முனியும்
வேந்தனின் அருட்கடன் முறையின் சுற்றி,
விருந்து செய்விக்க ‘சுரபி’யைப் பணிந்தனன்.     193

திருப்பாற் கடலை கடைந்திட்ட பொழுது,
பொருந்திய தெய்வத் தன்மை யுடன்
தோன்றிய ‘சுரபி’ ஓர் பசுவாம் – அதற்கு
மறுபெயர் உண்டாம் காமதேனு வென           194


சுரபி அளித்திட்ட அறுசுவை உண்டு
உறுதுயர் தணிந்தபின் கௌசிகமன்னன்,
அறிந்தனன் சுரபி யின் திறமையினை – அதை
அரசற் குரியதாய் ஆக்குக’ வென்றான்.            195

‘மரவுரி தரித்திட்ட தவசி யாதலின்,
தருகின்ற தகுதி யற்றவன் அதனால்,
வருவ தாகில் கொள்ளுக!’ என்றதும்,
‘பெரும! கொடுத்தியோயென்னை? கேட்டதாம் சுரபி.196

‘கொடுத்திலேன்! கழலுடை அரசன் தானே,
பிடித் தகல வுள்ளான்’ என்ன,
‘முடித்திடுவேன் அவன்படை முழுதும்
முனியிடம் பணித்ததாம் அச் சுரபி!               197
                           
               காமதேனுவின் செய்கை

சிலிர்த்து நின்ற பசுவின டத்து
சோகையர், பப்பரர், சீனர் தோன்றினர்.
கைப்படையால் கௌசிகப்படை குவித்திட,
கோப மடைந்தனர் கௌசிகமைந்தர் நூற்றுவரும்! 198                   

‘சுரபியின் வலிமை யல்ல இது!
சுருதி நூலுணர் வசிட்ட முனி,,
வஞ்சனையால் எமை அழித்திட்டார்.
அஞ்சோம்! அவர் தலை அறுப்பதற்கு!’            199

நெருங்கிய புதல்வர்கள் நூற்று வரும்,
எரிந்தனர் வசிட்டனின் எரி விழியால்
எய்தனன் மன்னனும் அம்பினைத் தொடர்ந்து,
எதிர்த்திட தண்டினை ஏவினன் வசிட்டனும்!      200
    
                  கௌசிக மன்னன் செயல்

அறிந்த னைத்து அத்திரமும் விடவிட,
பிரமதண்ட மதனை விழுங்கி யதாம்!
மேருமலை ஈசனை மன்னன் வழிபட,
பெருவலி யுடைஅத்திர த்தை அருளினனாம்!     201

மன்னன் முனிமேல் அப்படை விட்டனன்!
விண்ணு லகோரும் அஞ்சி நடுங்கினர் – ஆனால்
அணுகிய படையையும் முனிவன் விழுங்கிட,
முரணது முடிவுற ஒளிர்ந்தனன் முனிவனும்!     202

                கௌசிகன் தவம்புரியச் செல்லல்

மறையுணர் அந்தணர் பெற்றி ருந்த
மனத்திட்பம், வலிமையும் கண்ணுற் றான்!
அரசர்கள் தோள்வலி, படைவலி பெரிதல்லவென
அருந்தவம் புரிந்திட கிழதிசைப் புறப்பட்டான்.     203

              இந்திரன் செயல்

அரசர்கோன் ஆற்றிய பெருந் தவத்தால்
அமரர்கோன் சற்றே துணுக் குற்றான்.
அரம்பைமார் பலருள் திலோத் தமையை
அவர்தம் தவத்தை கலைத்திட பணித்தான்.       204

மன்மத னம்புகள் பாய்ந்த தினால்,
தன்னுணர் விழந்து இன்பந் துய்த்தான் - பின்
நன்னெறி முறைகளை உணர்ந்தோ னாகி,
நஞ்சென உமிழ்ந்து நகைத் திட்டான்.             205

விண் ணரசன் இந்திரனின் வேலையென
வெகுண் டெழுந்துதி லோத்த மையை
மண்மீது பெண்ணா குகவென சபித்தபின் - தவஞ்செய
யமனின் திசையாம் தென்திசை யடைந்தான்.     206

                       திரிசங்குவின் செய்தி

சூரிய வம்சத்தில், அயோத்தி அரசனாய்
முற்பெரும் நாளில் பிறந்தவன் ‘சத்தியவிரதன்’ – அவன்
குற்றங்கள் மூன்று செய்ததி னால்
காரணப் பெயராய் ‘திரிசங்கு’ ஆனான்            207

தென்திசை யிருந்து கௌசிக மன்னன்
கடுந்தவம் செய் திட்ட அந்நாளில்
தன்னுடம்புடனே சுவர்க்கம் எய்த – இவன்
வேண்டினன் தன்குரு வசிட்ட னையே!           208

‘அதுயான் அறிந்திலேன்!’ பிரும்மபுத்திரன் கூற
‘நீள் நிலத்தில் எவரையும் நாடி
வேள்வி செய்குவேன்’ என்றவனை
‘நீசனாகுக’ சபித்த னராம் வசிட்டமுனி.           209

அருந்ததி கணவனின் சாபந் தன்னால்
வனப் பழிந்தனன் அரசர் கோமான்.
ஒளி யிழந்தசண் டாளவுரு கண்டோரும்
இகழ்ந்திட திகைத்து, வனமதை யடைந்தான்.     210

நீச வடிவுடன் வனத்தி லலைந்தவன்
கௌசிகன் தவஞ்செயும் சோலை யடைந்தான்.
‘ஈனன் நீயாவன்? இவ்விடம் வந்ததெதெற்கு?’ என்ன
நிகழ்ந்த தனைத்தியும் கூறினா னரசன்.           211

‘இத்தனைதானா?’ இடியென நகைத்த கௌசிகனும்,
‘உனக்கென வேள்விகள் இரண் டியற்றி,
உடம்பொடு சுவர்க்கம் ஏற்றிடுவேன்’ என்றபடி,
வேள்விக் கழைத்தான் மாதவர் பலரையும்.        212

‘சண் டாளனுக்கென யாகப்பலன் ஈவதை
கண்டிலேம் எவ்விடமும்! இணங்கிடேம் எவ்விதமும்’
என்று சொன்ன வசிட்டரின் குமரர்களை
‘புன்தொழில் வேடானாய் கடவுக’ வென்றார்.       213

வேடனாகி காட்டிலவர் அலைந் திருக்கையில்
ஊன்றிசெய்த யாகமது முற்று பெற்றதாம்.
அவிசுபெற வருகவென தேவர் பலரையும்
அழைத்தனனாம் கௌசிகன்தன் மந்திரபலத் தால்  214

விபரீதம் உணர்ந்திட்ட தேவர் பெருமக்கள்
நெடுநேரம் வாராமல் இருந்து விட்டனர்.
‘வேறொருவர் துணையொன்றும் தேவையேயில்லை! – இத்
தெய்வீக விமானத்தில் மேலெழுக!’ ஆணையிட்டான்.  215

சுவர்க்க மதை திரிசங்கு அடைந்திட்டான்.
கலவ ரத்துடன், சினந்தெ ழுந்தாரமரர்கள்.
‘நீசன் நீஈங்கு வந்த தநீதி
இருநிலத்தில் இழிக’ என்று தள்ள,                 216

தலைகீழாய், தாங்கலின்றி தடுமாறி வீழ்ந்தவன்,
‘தாபத சரணம்’ என்றபடி ஓலமிட்டான்.
‘’நில் நில் நில்’ என்றுரத் துரைத்து,
நகைத்திட்டான் கௌசிகன் நாநிலம் நடுங்க!        217

பரிகாசம் புரிந்திட்ட விண்ணோரின்
பெரும் பதவி அனைத்தி னையும்
வேறாக நான் படைத் திடுவேன்!
மற்றொரு சுவர்க்கமாய் மாற் றிடுவேன்!           218

அகங்காரமாய்ச் சொன்ன கௌசிகன் எதிரில்,
தேவேந்திரன், பிரம்மதேவன், உருத்திரன் கூடி,
‘பொறுத்தருள்வீர் முனிவ! நின் புகல்புகுந்தோன்
தாராகணத்திலே அமரனா யிருப்பான், (நக்ஷத்திரக் கூட்டம்) 219

கடவுளரும், தேவர்களும், கௌசி கனை
கடவினர்கள் ‘அரச மாதவன்’ ஆவதென.       (ராஜரிஷி)
‘அநுஷம்கேட்டை, மூலம்பூராடம், உத் திராடம்
ஐந்துதினங்கள் வடக்கிருந்து தென்புலம் வந்து     220

உந்தன் பெருமை உலகுக்கு விளக்கிடுமென்று’.
வரம்தந்து தத்தமிடம் திரும்பிச் சென்றதும்,  ,
வருண னுக்குகந்த மேற்திசை யடைந்தபின்
உறுதவம் தொடங்கினன் அந் நிரைதவன்.         221

(லக்ஷ்மி ராமாயணம் தொடர்ந்து வரும்)