புதன், 3 மார்ச், 2021

ரெட்டை மாமரத்தான் (21.2.2015 ம் ஆண்டு தினமலர் வாரமலரில் வெளியானது)

 செல்ஃபோன் அடித்தது. அம்மாதான்.

'சொல்லுமா?" என்றேன்.

'வேணி.... ரோடு அகலப்படுத்தறதுக்காக நம்ப ரெட்டை மாமரத்தனை வேற எடத்துக்கு மாத்தப் போறாங்களாம்மா' படபடப்போடு சொனாள் அம்மா.

"நீ ஒரு தடவை ஊருக்கு வந்துட்டுப் போயிடறியா?' எதிர்பார்ப்போடு கேட்டாள்.

என் எண்ண ஓட்டம் நாற்பது, நாற்பத்தியிரண்டு வருடங்கள் பின்னோக்கிச் சென்றது.

எங்கள் ஊரில் இருக்கும் காவல் தெய்வம் தான் 'ரெட்டை மாமரத்தான்'. காவல் தெய்வம் என்றெல்லாம் நான் பின்னாட்களில் தெரிந்து கொண்ட ஒரு வார்த்தை அவ்வளவே!

இரண்டு மா மரங்களுக்கு இடையில் ஒரு செவ்வக வடிவ கருங்கல் ஊன்றப்பட்டிருக்கும். உடல் முழுவதும் கருப்பாகவும், நெற்றியில் சந்தனப் பொட்டும், குங்குமப்பொட்டும் சார்த்தப்பட்டிருக்கும்.

எனக்கு மூன்று வயதாக இருக்கும் போதிலிருந்தே ரெட்டை மா மரத்தானைத் தெரியும். 

'பொய் சொல்லாதே...! ரெட்டை மாமரத்தான் பார்த்துகிட்டிருப்பார்' என்று சொல்லிதான் அம்மா எனக்கு உண்மையையே பேசப்பழக்கினார்.

இடி இடிக்கும்போது பயம் வந்தாலோ, ஃப்ரெண்ட்ஸ்கூட சண்டை வந்தாலோ எனக்குத் துணை ரெட்டை மாமரத்தான் தான்.

'பாட்டுப் போட்டிக்குச் செல்லும் போது, 'ரெட்டை மாமரத்தானே! நான் நல்லா பாடறேன். ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைக்க வழி பண்ணு' என்று வேண்டிக்கொள்வேன்.

பிரைஸ் கிடைத்தால் 'நன்றி ரெட்டை மாமரத்தானே நன்றி' என்று உருகுவேன்.

பிரைஸ் கிடைக்கவில்லையென்றால் 'லதா என்னைவிட நல்லா பாடிட்டாள்' என்று கூறிகொள்வேன்.

நான் தப்பே பண்ணாத போது யாராவது என்னை ஏதாவது சொல்லிவிட்டால் ரெட்டை மாமரத்தான் கிட்ட, 'நீ பாத்துகிட்டுதானே இருக்க...?' என்று கேட்பேன். சண்டை போடுவேன். அழுவேன். அப்புறம் எங்களுக்குள் சமாதானம் நடக்கும்.

என் வேண்டுதலில் காணிக்கையோ, நேர்த்திக்கடனோ கிடையவே கிடையாது.

இப்பொது திருமணமாகி இங்கு வந்துவிட்டாலும், ரெட்டை மாமரத்தானே என் கண்கண்ட தெய்வம். எந்தக் கோவிலுக்குப் போனாலும் சரி, எந்த சாமிக்குப் பூஜையானாலும் சரி     அதது செய்யும் முறைப்படி செய்தாலும், என் மனம் மட்டும் 'ரெட்டை மாமரத்தானே' என்றுதான் வேண்டிக்கொள்ளும்.

"வேணி... வேணி.... லைன்ல இருக்கியா?' அம்மா குரல் காதில் கேட்டவுடன் நிகழ்காலத்துக்கு வந்தேன்.

'ரெண்டு மாமரத்தையும் வெட்டிட்டு சாமியை வேற இடத்துல பிரதிஷ்டை பண்ணப் போறாங்களாம். அதுக்குள்ள நீ வந்து பார்த்துட்டுப் போறியா?' அம்மா கேட்டாள்.

"இல்லை மா நான் இப்போ ஊருக்கு வரலை. ரெட்டை மாமரத்தான் எங்கையும் போயிடலமா.. என் கூடவேதான் இருக்கார். இருப்பார். உங்களையெல்லாம் பாக்க அடுத்த மாசம் வர முயற்சி பண்றேம்மா" தீர்மானமாகக் கூறினேன் நான். 




செவ்வாய், 2 மார்ச், 2021

காளமேகப் புலவரின் சொற்சிலம்பம் (2017ம் ஆண்டு கண்டீபம்)

காண்டீபம் தேசிய விழிப்புணர்வு இதழ்  2017 ம் ஆண்டு இதழில் பிரசுரமான கட்டுரை.

எண்ணங்களை வெளிப்படுத்த உருவானதே மொழி. இன்று சர்வதேச  அளவில் முன்னணியில் இருக்கும் பல நாடுகளில் மொழியே உருவாகியிராத போது நாம், நம் தாய்மொழியான தமிழ் மொழியில் புலமைபெற்று கவிபாடி இனிமை சேர்த்துக்கொண்டிருந்தோம்.

எழுத்து, அசை, சீர், தளை, சொல், தொடர் என்பதாக விரிவுபடுத்தப்பட்டு, இலக்கணம் என்ற வரைமுறையோடு வளர்ச்சியடைந்துள்ளது தமிழ் மொழி. ஆனால் நாட்டின் தென் கோடியில் இருக்கும் நாம் இன்று, வடமொழி அறிய வாய்பு இன்றி, ஆங்கில அறிவும் போதுமானதாக இன்றி, நாட்டின் ஏனைய மொழிகளின் அறிமுகமும் இன்றி, தமிழ் மொழியின் அழகை அனுபவிக்க மனமும் இன்றி, ஒருவித திரிசங்கு நிலையில் தான் உள்ளோம். குறைந்த பட்சம்,  நமது தாய்மொழியின் அழைகையேனும் அனுபவிக்கலாமே!

தமிழ் மொழி, ஆழமும், அகலமும் கொண்ட ஆழி போன்றது. அதில் அமிழ்ந்து தேடினால், ஏராளமான ஆணிமுத்துக்கள் ஆங்காங்கே தென்படும். தமிழ் மொழியை விருப்பத்தோடு படிக்கத் துவங்கினால் அதில் ஒரு ஏடுபாடு ஏற்படுவது உறுதி. அதற்கான ஒரு சிறு முயற்சியாக, 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப்புலவரின் சில செய்யுள்களை இங்கு காணலாம். இரட்டுற மொழிதல் எனப்படும்
சிலேடைக்கு காளமேகப் புலவர்தான் ஆதர்ஷம்.

செவிவழிக் கதை:
காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன். இவர் திருவரங்கத்தில் சமையல் வேலை செய்தவரின் மகன். சமண சமயத்தைச் சேர்ந்த இவர், திருவானைக்கா கோவிலில் சிவத்தொண்டு செய்துவந்த மோகனாங்கி என்ற நாட்டியக்காரியின் மேல் மையல் கொண்டு சைவ மதத்திற்கு மாறினார். ஒருமுறை இத் தாசியின் வரவிற்காக 
இக்கோவிலில் காத்திருந்த வரதன் உறங்கிவிட்டான்.

அதே நேரம் ஓர் அந்தணர் இக் கோவிலில் சரஸ்வதி தேவியின் அருளைப் பெற தவம் இருந்திருக்கிறார். அவரது தவத்தை மெச்சும் பொருட்டு, சிறுமி உருக்கொண்டு, தாம்பூலத்தை வாயில் குதப்பியபடி வந்த சரஸ்வதி அந்தணரை எழுப்பியிருக்கிறாள். அவர் கண் விழித்தவுடன், தன் வாயில் உள்ள தாம்பூலச் சாற்றைத் துப்ப அவர் வாயைத் திறக்கும்படி கூறியிருக்கிறாள். ஆனால் அந்தணன் கோபம் அடைந்துவிட்டார். உடனே சரஸ்வதி அருகில் உறங்கிக்கொண்டிருந்த வரதனை எழுப்பி, வாயை திறக்கச் சொல்லியிருக்கிறாள். தாசியை எதிர்பார்த்தபடி இருந்த வரதன், அவள்தான் என்று எண்ணி, வாயத் திறக்க, அவர் வாயில் தாம்பூலச்சாற்றை உமிழ்ந்திருக்கிறாள் சரஸ்வதி.
அன்றுமுதல், தேவியின் அனுக்கிரஹம் கிடைக்கப் பெற்றவராக, கல்லாமலேயே கவிமழை பொழியத் தொடங்கிய வரதன் காளமேகம்
என்று அழைக்கப்பட்டிருக்கிறார் என்பது செவிவழி கதை.

தமிழ்மொழிமேல் ஆதிக்கம் செலுத்திய இப்புலவரின் சிலேடைப் பாடல்களும், நகைச்சுவைப் பாடல்களும், படிப்பவரின் உள்ளத்தில் தமிழ் மீது காதலை உண்டு பண்ணும் என்பது திண்ணம்.

இரட்டுற மொழிதல்: சிலேடை என்பது இரட்டுற மொழிதல் அணி என்ப்படுகிறது. எந்த  மொழியிலும் ஒருசில வார்த்தைகள் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் கொண்டிருக்கும். அதைக் கொண்டு ஒரு சொல்லோ, சொற்றொடரோ, இருபொருள் தரும்படி அழுதுவது சிலேடையாகும்.

 தமிழில் ஒருசொற் பன்மொழி பல உண்டு என்பதால், சிலேடை எழுதுவது ஒரு கலையாகவே வழ்ங்கியுள்ளது. காளமேகப் புலவர் அநேக செய்யுள்களை சிலேடையில் எழுதியுள்ளார்.

ஓர் உதாரணம்: தேங்காயையும், நாயையும் சிலேடையாக்கி எழுதியுள்ள செய்யுள் இது.

மூலச் செய்யுள்:

ஓடு மிருக்குமதனுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது சேடியே
தீங்காய தில்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயு நாயுமிணைச் செப்பு.

பிரித்துப் படிக்க:

ஓடும் இருக்கும்: அதன் உள்வாய் வெளித்திருக்கும்.
நாடும் குலை தனக்கு நாணாது சேடியே
தீங்கு ஆயது இல்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயும், நாயும் இணை செப்பு.


விளக்கம்:   
நாய், சில நேரம் ஓடும். பின் சில நேரம் நின்று இருக்கும்.
தேங்காய்க்கு ஓடும் இருக்கும்.

நாயின் உள் நாக்கு  வெளுத்திருக்கும்.
தேங்காயின் உள்புறம் வெள்ளையாய் இருக்கும்.

நாய் குலைப்பதற்கு வெட்கப்படுவதேயில்லை. (நாணம்)
தேங்காய் குலையில் தொங்குவதால் வளைவதில்லை (நாணாது)

சேடி - தோழி!
தீமையில்லாத திருமலைராயன் வாழும் மலைப்பகுதியில் தேங்காயும் நாயும் ஒன்று.

என்ன அழகான ஒப்புமை! வார்த்தை ஜாலத்தால் படிப்பவரை வசியம் செய்கிறார் காளமேகப் புலவர்.

மற்றொரு உதாரணம்:

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் 
ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை 
மங்காத சீரகத்தை தந்தீரேல் 
வேண்டேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியா ரே!

இந்தப் பாடலை மேலோட்டமாகப் பார்த்தால், ஏரகத்துச் செட்டியாரிடம், வெங்காயம், சுக்கு போல் சுருங்கிவிட்டால் வெந்தயத்தால் எதுவும் ஆகாது. இந்த சரக்கைக் கொண்டு என்ன செய்ய முடியும்? கெட்டுப்போகாத சீரகம் தந்தால், பெருங்காயம் வேண்டாம் என்று பலசரக்கு வாங்குவது போலத் தோன்றும்.

ஆனால், இதில் பொதிந்துள்ள உட்கருத்து வேறு! 
காயம் என்றால் உடம்பு.
வெங்காயம் என்றால் வெற்றுடம்பு.
இந்த உடம்பு சுக்கு போல் சுருங்கும் எனும் போது, வெந்தயம் என்பது உயிரைத் தக்க வைத்துக்கொள்வதற்கான அயச் செந்தூரம்! அந்த வெந்தயத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?  இங்கு இந்த பூமியில் இவ்வுடலை சுமந்திருப்பதால் என்ன பயன்?

அதற்குப் பதிலாக சீரகம். அகம் எனில் உள்ளம். சீரான உள்ளம் தந்துவிட்டால் ... அல்லது அகம்  எனில் வீடு.  சிறந்த வீடு பேற்றைத் தந்துவிட்டால் இந்தப் பெருங்காயம் வேண்டாமே!

பெரிய உடல் வேண்டாமே என்று திருநீறு மலையான சுவாமிமலையில் குடி கொண்டுள்ள முருகப் பெருமானிடம் வேண்டுவது போல் எழுதியுள்ளார் காளமேகப் புலவர்.

இத்தனை நயமிக்க பாடல் வரிகளைப் படிக்கப் படிக்க, நமக்குள்ளும் ஒரு ரசனை உற்பத்தியாவது உறுதி. தமிழ்த் தேன் பருகிய உணர்வு தோன்றுவதும் உறுதி. நமது தாய்மொழியின் சிறப்பை உணர்ந்து அதைப் பயன்படுத்துவோம்.


செவ்வாய், 26 ஜனவரி, 2021

பிறந்தகத்தில் இரண்டு நாட்கள்

 




பிறந்தகத்தில் இரண்டு நாட்கள்.

அப்பா அம்மாவைப் பார்த்து நாளாறது. போய் பார்த்துட்டு ஒரு நாள் இருந்துட்டு வரலாம்னு கிளம்பினேன். அப்பாவுக்கு பிடிக்கும்னு வெஜ் பிரியாணி, இட்லி மாவு, நாடா, Apple cake எல்லாம் எடுத்துண்டதோட, அடுத்த வாரம் எனக்கு இருந்த சம்ஸ்கிருத exam க்கான books ஐயும் எடுத்துண்டேன்.

அப்பா அம்மாவோட சேர்ந்து சாப்பிட்டு, பல பழங்கதைகள், புதுக் கதைகளை பேசினது ரொம்ப சந்தோஷமா இருந்ததுன்னா, நடுநடுவே சம்ஸ்க்ருதம் படிச்சது பரமானந்தத்தைக் கொடுத்தது. காபி, சமையல் எல்லாமே நான் தான் பண்ணுவேன் என்று சொல்லிவிட்டு ரேழி ரூமில் படிச்சிண்டிருக்கும்போது,  அப்பா, “அவ படிக்கட்டும். நாம பண்ணுவோம்’ என்று சொன்னதும், ‘நான் இன்னிக்கு படிக்க நினச்சத படிச்சுட்டேம்பா’ ன்னு சொன்னப்புறம்தான் என்னை கிச்சனுக்கே அனுப்பினா. 7வது படிக்கற பெண் போல மனது இளமையால் சிலிர்த்து சிறகடித்தது.

நான் எழுதற ‘ப்ரவேஷா’ பரிக்ஷையை அம்மா ஒரு வருஷம் முன்னாடியே எழுதி first class ல பாஸ் பண்ணிட்டா.(ஆமா….) அதனால் ராத்திரி கொஞ்ச நேரம் நான் எழுதி காண்பிச்ச ‘அப்யாஸஹ’ வை correction பண்ணிக் கொடுத்தா.

இதெல்லாம் ஒரு வித்தியாசமான மன நிலையை எனக்கு உண்டு பண்ணி நெகிழ்த்தியிருந்தது.. அப்போதான் அந்த notification வந்தது. ‘அடுத்த வாரம் நடக்கப்போற online examக்கான model test நாளை காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை’ யென்று.

‘அடாடாடா…. !!!!!!!! அந்த அனுபவம் யாருக்குக் கிடைக்கும்? ‘பிறந்தகத்தில் ரெண்டு நாள்’ என்பதோட ‘பிறந்தகத்தில் எழுதிய பரிக்ஷை‘…. எப்பேர்பட்ட தருணம் அது? google form’ ல் test என்றதும், ‘mobile data’ இருக்கா? ‘நெட்’ நன்னா கிடைக்கறதா? எங்க உக்காந்து டெஸ்ட் எழுதற? வெளிச்சம் நன்னா இருக்கற இடத்துல உக்காந்துக்கோ. Mobile charge 100% இருக்கா?” இப்படி ஏகப்பட்ட கேள்விகளோட அப்பா என்னை பரிக்ஷைக்கு அனுப்ப தயாராகிட்டான்னா,

அம்மாவும் தன் பங்குக்கு ‘நாளைக்கு நீ கிச்சனுக்கே வரக்கூடாது. நான் உனக்குப் பிடிச்ச பச்சமாப்பொடி உப்புமா பண்ணப்போறேன். சமையலும் நான் தான் பண்ணுவேன்’ என்று சொன்னதுடன், கார்த்தால, தான் 5.45க்கு எழுந்து என்னை 6மணிக்கு எழுப்பி…….(சொல்லும்போதே கண் கலங்குகிறது.) காபி கலந்து கொடுத்து second dose காபி கொடுத்து, சாமி படங்களுக்குத் தான் தொடுத்த பூக்களை சாற்றி, விளக்கேற்றி, குங்குமம், வீபூதி இட்டுவிட்டு, நமஸ்காரம் செய்யச்சொல்லி, என்னை EXAM HALL க்கு அனுப்பினா.

ரெண்டுபேருமா வந்து என்னை Suitable place ல உட்கார்த்திட்டு fan போட்டுட்டு போனா. அப்பா ரூமுக்கு வெளியிலேயே sofaல 3 மணி நேரமும் உட்கார்ந்திண்டிருந்தா.  ‘net கிடைக்கறதா?’ paper easy யா? ன்னு கேட்டுட்டு நான் எழுதறத ஒரு video எடுத்து என்னோட தங்கைகளுக்கு அனுப்பியிருக்கா.

‘அச்சசோ…….. இந்த model exam க்கு இப்படி ஒரு கௌரவம் கிடைச்சிருக்கே!ன்னு பெருமையாவும் பூரிப்பாவும் இருந்தது. என்ன இருந்தாலும் அப்பா அம்மான்னா….. அப்பா அம்மாதான்.

ஒரு school going girl ஓட மன நிலையோட ஊருக்குத் திரும்பி வந்தேன்.