புதன், 4 மே, 2022

லக்ஷ்மி ராமாயணம் - கிஷ்கிந்தா காண்டம் - பகுதி 1

 

                        கிஷ்கிந்தா காண்டம்

                           பம்பைப் படலம்

 

பம்பைப் பொய்கையில்

மீன்விழியாள் நினைவு வந்து வாட்டலாமோ! என்பதால்

தன்னுடலை தண்ணீருள் ஒளித்தனவாம் வாளைமீன்கள்.

‘திருமகளைத் தேடியளிக்க வல்லோம் அல்லோமே!’யெனத்

திருநடைக் காட்டினவாம் வெண்ணன்னப் பறவைகள்.

 

குமுதமும், கமலமும், அன்னமும், அல்லியும்

அமுத நாயகியின் வதனத்தை ஒத்ததுவாம்.

நீரோற்பல மலர்களெல்லாம் நீலநிற நாயகனை

நீரிற்றோய்த்த உலை இரும்பாய்த் தகித்ததுதாம்.

 

                     இரவுக்கால வருணனை

 

பூவும், பருந்தும், ஓய்ந்து படுத்தன.

மாவும், மரமும், சாய்ந்து ஒடுங்கின.

விண்ணும், மண்ணும் கண்ணுறங்கய பின்னும்

கண்ணகல விழித்திருந்தான் கார்முகில்வண்ணன்.

 

                              அநுமப் படலம்

 

விடிந்ததும்-

கடிது, நெடிது நடந்த காளைய ரடைந்தனர்

வேடமாது விளித்த மலையின் அடியினை.

‘வருபவர் எவரோ? எதிரியோ?’வென வியர்த்தான்

வானரத் தலைவன் ‘சுக்ரீவனெ’ன்பான்.

.

‘நீல மால்வரை போலிருந்த வரிசிலையார்

வாலி ஏவிட வந்த காளையரோ?’ இதை

‘நீதிநெறியுடன், உணர்ந்து தெளிந்து வா’வென

வாயுபுத்திரனை ஏவினான் ‘விரைந்து போ’வென.

 

‘பாற்கடல் கடைகையில் வெளிவந்த விடத்தைப்

பாராளும் பரமனே விழுங்கிக் காத்தான்’ அதுபோல

‘இவ்விடத்து இனிது இருமின்! அஞ்சலேன்’ என

இடையுதவி புரிந்த அநுமன் அவ்விடம் அகன்றான்.

 

பிரம்மச்சாரி மாணவனாய் வேடம் தரித்தான்,

மேருமலையன்ன புஜம்கொண்ட ஆஞ்சநேயன்.

வெஞ்சினத்தோடு இருந்த தவமெய்யர் இருவரையும்

அஞ்சிடாமல் வியந்து பார்த்தான் கால்வரையில்.

 

'தேவரோ இவரெ'ன்று ஐயுற்று ஆராய்ந்தான்.

மூவரன்றி இருவர்’ ஆதலால் தேவரல்லர்.

துயருற்று சோர்ந்துள்ள வரிசிலையர் இருவரும்,

நோவுற்று வருந்திக் கலங்கும் சிறியருமல்லர்.

 

இந்திரனை விஞ்சிடும் அழகுடையார். - இவர்

தருமனை மிஞ்சிடும் ஒழுக்க நெறியுடையார்

மன்மதனும் மருண்டிடும் பொலிவுடையார் - இவர்

யமனும் அஞ்சிடும் வீரமுடையார் – ஆதலால்

 

அந்தரத்து அமரர்தான் மானிடரின் வேடமிட்டார்.

சிந்தனைக்குரிய பொருளொன்றைத் தேடலுற்றார்.

அருமருந்தனையது இழந்தமை நிகழ்ந்ததால்,

இருமருங்கிலும் துலவியபடி அலைகின்றார்.

 

என்பவை யுணர்ந்த அஞ்சனை மைந்தன்

அன்பினால் உருகிடும் நெஞ்சம் கொண்டான்.

முன்னம் பிரிந்த அனையர் தம்மை

பின்னம் கண்டதும் மகிழ்வுடன் நின்றான்.

   

       அநுமன் இராம இலக்ஷ்மணர்களை அணுகிப் பேசுதல்

 

‘நல்வரவாகுக’ வென்று கரம்குவித்து அணுகினான்.

நல்வழியைப் பின்பற்றும் வாயுபெற்ற நன்மகன்.

‘எவ்வழி வந்தவன் நீ?’ யார் நீ?’ யென

இன்மொழியால் வினவினான் தசரதனின் நன்மகன்.

 

‘காற்றின் வேந்தனும், அஞ்சனா தேவியும்,

பெற்றெடுத்த மைந்தன், நாமமோ ‘அநுமன்’

பரிதிச்செல்வன் சுக்ரீவனின் காவலனாய்,

‘நீவீர் எவரெ’ன அறியவந்த ஏவலன் நான்’

 

‘புலமிக்கவரைப் புலமை தெரிதல்

புலமிக்கவர்க்கே புலனாம்’ அதுபோல்

‘ஆற்றல், அறிவு, அடக்கம் அனைத்தையும்

ஏற்றவன் இவனென்பது பரந்தாமனுக்குப் புரிந்தது.

 

      இராமபிரான் அநுமனைப் பாராட்டி, இலக்குவனிடம் கூறுதல்

 

‘வில்லார்தோள் இளைய வீர! - தாம்

கல்லாத கலையும், வேதமும் இல்லையென

சொல்லாலே சொல்லவல்ல – இச்

‘சொல்லின் வேந்தன்’ யார்? பிரம்மனோ சிவனோ?

 

இளையோனே!

சாதாரண பிரம்மச்சர்யமன்று இவன் உருவம்.

அச்சாணி இவனென்று இவ்வுலகுக்குப் புரியும்.

சிக்குறத் தெளிந்தேன் நானின்று; இன்னமும்

காணுதி மெய்ம்மை’ என்றுரைத்தான் கண்ணன்.

 

பின்னர் வினவினான்

எவ்வழி உள்ளான் வானரத் தலைவன்?

அவ்வழி யவனை யணுகிடவே வந்தோம்.

இவ்வழி எம்மை யெதிர்கொண்ட ழைத்த நீ

செவ்வழி மனத்தான் சுக்ரீவனைக் காட்டுதி’

 

  அநுமன் இராம இலக்ஷ்மணர்களிடம் கூறிய உபசார மொழிகள்

 

‘ஆதரித்து எமைக் காண அணுகினீ ரென்றால்

தீதகன்ற யாம் செய்த தவப்பேறன்றி வேறென்ன?

வரிசிலை வீரர்காள்! எம் தலைவன் இந்நாளில்

ருசியமலைக் குகையில் மறைந்தபடி வாழுகின்றான்.

 

இந்திரப் புதல்வனாம் இரக்கமற்ற வாலியென்பான்,

இரவிதன் புதல்வனாம் சுக்ரீவனைப் பகைத்தான்.

மும்மை உலகையும் காத்திடும் மூத்தோரே!

உம்மைச் சரணடைந்தோம் நீ யெம்மைக் காத்தருள்க!

 

மஞ்சுநாதனே!

எம்குலத் தலைவர்க்கும்மை யாரென்று விளம்புகேன்?’

விளக்கிடுவீரென வினவினான் சொல்லின் செல்வன்.

இராமனின் தோற்றமுதல் இராவண வஞ்சம் வரை

மாற்றமின்றி விவரித்தான் வார்க்கழல் இளையவீரன்.

 

ஒளிவின்றி இளவல் உரைத்ததும், நெடும்புகழினான்

நெடிது உவந்து திருவடியில் சிரம் தாழ்ந்தான்.

‘மறைவல்ல அந்தணர் மடிவீழ்ந்து பணிவது

மரபன்று, தருமமன்று’ பதறினான் புருஷோத்தமன்.

 

சங்குச்சக்கரம் தரித்த திருமாலை யொத்தவனே!

கற்றுத் தெளிந்த அந்தணர்க் குலமல்ல நான்.

சற்றுப் பருத்த தாடையுடை வாநரர் குலத்தவனெ’

குற்றமற குரங்கு வுருகொண்டு எதிர் நின்றான்.

 

வியந்தான் அண்ணல்

நாள்படா மறைகளும், நவைபடா ஞானமும்,

கோள்படா நிலையுமே ‘குரங்காக’ உள்ளதெனின், - இவன்

காவலனாய் பணியாற்றும் கவிக்குலத் தரசனின்

கேண்மையை நாம் என்னென்று சொல்ல?’

 

அகமலர்ந்து இவ்விதம் சொன்ன குன்றின் சிகரத்தை

முகமலந்து நோக்கினான் வாநரச் சிங்கம்.

சென்று எம்தலைவனைக் கொணர்கிறேன் வென்றியீர்!’

என்று சொல்லி விடைபெற்றவன் விரைந்து சென்றான்.

(தொடர்கிறது)

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் நிறைவுப் பகுதி 14.

                                     கவுந்தன் செய்த பேருதவி

 

‘ஐயனே!

தெப்பம் இன்றி பெருங்கடல் கடப்பதை ஒக்கும்

பக்கத்துணையின்றி பகைவரை யழிக்க முயல்வது.

தீயவர் சேர்கிலாது நல்லோரைச் சேர்ந்து வாழ்ந்து

தாயினும் உதவிடும் ‘சவரி’யை அணுகிடுவீர்.

(தீயவர் – வாலி:  நல்லோர் – சுக்ரீவன், அநுமன்.)

சவரி – சபரி என்ற வடசொல்லின் திரிபு)

 

கனகவாள் நிறம் கொண்ட சுக்ரீவன் இருப்பிடத்தை

அறிந்திடுவாள் இவ் வேடர்க்குலத் தவமாது. – அவள்

செப்பிடும் வழிகளை ஏற்றிடுவீர்!

குன்றமாம் ‘ருசியமுகம்’ ஏறிடுவீர்.

(ருசியமுகம் – ருசிய பர்வதம் – சிருங்ககிரி என்று கூறுவாரும் உண்டு. ஆனால்

இது கிட்கிந்தைக்கு அருகில் உள்ள ஒரு குன்று)

 

வானரத் தலைவன் சுக்ரீவன் துணையேற்று

மானனைய பிராட்டியின் மறைவிடத்தைத் தேடுவீரெ’

வானுலகு சென்று வாழ்த்தினான் கவுந்தன். – மதங்க

முனிமலையை யடைந்தான் காகுந்தன்.


               சவரி பிறப்பு நீங்கு படலம்

 

எண்ணிய இன்பமன்றி, துன்பங்கள் ஏதுமற்று,

புண்ணியம் புரிந்தோர் வாழும் ‘மதங்காஸ்ரமம்’ தன்னில்,

தன்னையே நினைத்துவாழும் ‘சவரி’யைக் கண்டுகொண்டான்

‘இன்னது’ என்று இல்லா ஆதிமூலமாம் இராமபிரான்.

(சவரி – வேடர் குல தவமகள். மதங்காஸ்ரமத்தில் சீடர்க்கு உபசாரம் செய்பவள்)

 

அன்பின் மிகுதியினால் அருவிபோல் நீரொழுக,

பூண்டமாதவத்தால் நீங்கியதென் ஈழ்பிறவி’யென

வேண்டிக் கனி கொணர்ந்து விருந்து செய்தாளை

‘தீதின்றிருந்தனை போலுமெ’ன நலம் வினவினான்.

(சவரி விருந்து செய்த தன்மையைப் பற்றி, ‘அவள் உண்டு மீதி வைத்தவற்றை இராமபிரான் உண்டருளினான்’ என்று சிலர் கூறுவர். அதற்கு வான்மீகத்திலோ, அத்யந்த இராமாயனத்திலோ ஆதாரம் இல்லை. கம்ப நாடாருடைய நோக்குக்கும் அது ஏற்றதாகது)

 

  சவரி இராமனைப் புகழ்தலும், இராமன் உபசாரம் கூறுதலும்

 

‘எந்தையே! என்றைக்கு வருவாய் யென்றிருந்தேன்.

இன்றுதான் பூத்ததோ அப்புண்ணியம்’ வியந்தாள்.

‘அன்னையே! வழிநடை தந்த வருத்தம் தீர்த்தாய்

வாழி நீ’யென்று இருகரம் குவித்தான்.

 

சூரியன் மைந்தன் சுக்ரீவன் இருப்பிடமென

‘ருசிய முகமென்னும்’ அசைவற்ற மலைதன்னை,

ஆசிரியைபோல் அன்னவள் விரித்துச் சொன்னாள்.

தாசனாய் இராமனும் இசைந்து தெளிந்தான்.

 

தவநெறியால் தாமடைந்த யோகத்தின் சிறப்பினால்,

உடல் துறந்து மோட்சத்தை அணுகினாள்..

அன்னது கண்ட வீரர்கள் அதிசயப்பட்டனர். - அவள்

சொன்னபடியே ‘பம்பை’ பொய்கையினை யடைந்தனர்.

             (ஆரண்ய காண்டம் முற்றும்)


லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி 12

 

                                              அயோமுகி படலம்

(இரும்பு போல் வலிமையும், கருமை நிறமும் கொண்ட அரக்கி அயோமுகி பற்றிய விவரங்களை சுருங்கச் சொன்னார் வால்மீகி. கம்பரோ சகோதர பாசம் வெளிப்படும்படி விரித்துச் சொல்லியுள்ளார்)


அந்தி மாலையும் அணுகிய வேளையில்

சிவந்த மலையினை அடைந்தனர் இருவரும்.

வருத்தமும், துயரமும், இருளெனச் சூழ்ந்தது.

இரவுப் பொழுதோ விழிப்புடன் கழிந்தது.

 

வதனத்தாள் பொன்முகம்தான்  வானத்திடை பொலிந்தது.

ஒளிவிட்ட வெண்மதியோ கடுங்கனலாய் எரிந்தது.

இதமாய் வீசும்  தென்றலும் அரவமாய்த் தெரிந்தது.

இதயத்தின் வலியெல்லாம் உடலெங்கும் படர்ந்தது.

 

‘நாண்பூட்டி வளைத்த வில்லெடுத்து வந்து

நாயகன் தன்னை மீட்பான்’ என்பாளோ?

வெஞ்சின அரக்கரின் வீரத்தைக் கண்டு

அஞ்சினனோ’வென ஐயுறுவாளோ?’ கலங்கினான்.

 

அர்த்தராத்திரியில் நீர்வேட்கை கொண்டான் தமையன்.

தீர்க்கதரிசியின் வேட்கை தீர்க்கத் தீர்மானித்தான் இளையன்.

காரிருளில் தீர்த்தம்தேடி கானகத்துள் அலைந்தவன்மேல்

காதல் கொண்டாள் கடுமரக்கி ‘அயோமுகி’யென்பாள்.

 

‘புழுங்கும் காமநோய்க்கெட தழுவிடுவேன். - அன்றி

விழுங்கிடுவேன்’ என்று விம்மலுடன் எதிர்ப்பட்டாள்.

யாளிகளைத் தொடுத்துத் தாலியாக அணிந்தவள்.

புலிகளை முடிந்து மாலைகளாய்ப் புனைந்தவள்.

 

‘கடிதான இருள் கவியும் இராப்பொழுதில்

கொடிதான மோகினியாம் யாரடீ நீ?’யென்றான்.

‘நின்பால் ஆசைகொண்ட கன்னி ‘அயோமுகி’

நின்னைப் புணர வந்த ‘காமுகி’யென்றாள்.

 

‘இவ்வுரை தன்னை மீண்டும் நீ கூறிடின்

வார்க்கணை நின்னுடலைத் தாக்கிக் கூறிடும்’ சினந்தான்.

‘நீர்தேடி வந்த நீர் எனை விட்டு நீங்கேல்.

ஊர்த்தேடி கங்கைநீர் நான் கொணர்வேன் விரைந்தே’.

 

‘காதோடு, நாசியினைக் கூறாக்கி எடுப்பதற்குள்,

காததூரம் ஓடிடெ’ன இவன் முடிப்பதற்குள்,

பாதகியாம் அயோமுகியோ மன்மதனைப் பற்றினாள்.

மாயையினால் சுமந்தபடி வான்வழியே சுற்றினாள்.

(மன்மதன் – இலக்குவன்)

 

மந்திரகிரி கொண்ட மாபெரும் கடல்போலும்

இந்திரன் ஊர்ந்து போகும் வானத்து மேகம்போலும்

அந்தரத்தில் பறந்துசென்ற அயோமுகியின் கைகளுக்குள்

பந்துபோல் அடங்கிப்போனான் பரந்தாமனின் பின்னவன்.

 

‘விரைந்து வருவேன் நீருடன்’ என்று சென்றவனின்

விதியறியாத வில்லானோ விதிர்த்துப் போனான்.

சதிசெய்த அரக்கரோடு சல்லாபம் செய்தானோ? - அன்றி

மதிகூர்மை கொண்டவனை வில்லங்கம் செய்தாரோ?

 

அன்பான தந்தையுடன் அன்னையர் மூவரையும்

பொன்னான தையலையும் பிரிந்துவிட்ட பின்னாலும்

பொய்யான இவ்வுலகில் பொலிவுடன் நான் உலவுவது,

கண்ணான நின்னைப் பின்னவனாய்க் கொண்டதுதான்.

 

அசைந்தாடும் களிறொத்த கார்வண்ண எம்பிரான்

திசையறியா வனத்திடையே குரலெழுப்பி விம்மினான்,

‘அறமும், குணமும் அகிலத்தில் உளதென்றால்

அரிதான இலக்குவனே தமையனாய் பிறக்கட்டும்.’யென்றபடி,

 

கூரிய வாளால் குத்திக்கொள்ளத் துணிந்தவன்,

அரற்றியதோர் அரக்கியின் அலறலால் நிமிர்ந்தான்.

இலக்குவன் அறுத்தெரிந்த நாசியினால் ஊறுபட்டு

சோர்வுற்ற அயோமுகியின் பேரொலியென அறிந்தான்.

 

பிரஸ்தாபித்தான் ‘ஆக்நேயாஸ்திரம்’ எனும் மந்திரத்தை.

பிரயோகித்தான் தன் அம்பெனும் எந்திரத்தை.

அற்றை இரவகன்று பகலாக மலர்ந்தது. - அம்பு

அப்பாலுள்ள உலகில் சென்று விழுந்தது.

 

பெரும் மலைகள் பொடிபட; உயர்ந்த மரங்களும் ஒடிபட,

குரல்வந்த திசைநோக்கி, ‘சடசட’வென ஓடினான்.

‘வருந்தாதே! வந்தனென் அடியனன்’யென்றபடி

சார்ந்தனன் பின்னவன் தமையனை அணைத்தபடி.

 

ஊற்றென சொரிந்தன கண்கள் நான்கும்.

ஈற்று இளங்கன்றினைப் பிரிந்த ஏக்கத்தை

ஆற்றாது வாய்விட்டுக் கதறியழுதிடும்

பால் நிறைந்த பசுவானான் பட்டாபிராமன்.

 

‘அமரர் மூவரும், மூவுலகும் எதிர்ப்பினும்,

குமரன் நீயிருக்க எமை வெல்வார் யாருள்ளார்?’ என்ற

அண்ணனைப் பலமுறை அன்போடு தழுவினான்;- அவன்

கனகமேனியைக் கண்ணீர் கொண்டு கழுவினான்.

 

உவகையும், இன்னலும் ஒருசேர எய்திட,

இயம்பினான் தம்பி, நிகழ்ந்த தனைத்தையும்.

‘கடலிடை யகப்பட்டால் அலைகண்டு அஞ்சுவதா? – பிறவிக்

கடலிடை ஏற்படும் மலைகண்டு துஞ்சுவதா?’

 

அரக்கியை வென்ற பின் மீண்டேனென்றாய்.

கொன்றிலையோ அவளை நீ கூறெ’ன்றான்.

‘மூக்கோடு, செவியையும், வாயையும் எந்தன்

வாளால் அறுத்து விரட்டியடித்தேன்’ பதிலளித்தான்..

 

பளிங்கு மறைவுக்குத் திரும்பிய பின்னால்,

உறங்க முடியாமல் தவித்தார் அண்ணார்.

விரும்பியவள் உருவம்தான் விரிந்தது கண்ணில்.

கிரணங்களுடன் கதிரவன் உதித்தது விண்ணில்.

 

                 கவந்தன் வதைப் படலம்

 

ஐம்பது யோசனை தூரங்கள் அக்கானகத்தில்

தம்பியுடன் இணந்து எம்பெருமான் அலைந்தார்.

தவமுனி சபித்ததால் அரக்கனாய் உருவடைந்த

‘கவுந்தனி’ன் வனத்திடை பகல்பொழுதில் அடைந்தார்.

 

கவுந்தன்-

சிரமற்ற உடலுடன் அவலக்ஷண மானவன்.

கரங்கள் பல யோசனை நீண்டிடும் தன்மையன்.

வயிற்றிடையே வாய், மூக்கு கண்களெனும்

அவயங்கள் அனைத்தும் அமையப் பெற்றவன்.

 

அவன் வரவால்-

எறும்பு முதல் யானை வரையிலான

உறுப்புள்ள உயிர்களெல்லாம் உலைந்து குலைந்தன.

உருண்டு பிரண்டன மலைகளும், குகைகளும்.

சுருண்டு விழுந்தன மரங்களும், மேகங்களும்.

 

சக்ரவாள மலையே நெருக்கி அமுக்கினாற்போல்

வக்ரமான நீள்கையில் அகப்பட்டனர் சோதரர்கள்.

‘வளைத்தது அரக்கரின் பெரும்படையோ’வென

மலைப்புடன் திகைத்தனர் தசரத புதல்வர்கள்.

 

நடந்தனர் கரத்தினில் சில யோசனை தூரங்கள்.

நின்று நோக்கினர் ‘கவுந்தனி’ன் நேரெதிரினில் – அவன்

பஞ்ச பூதங்களால் அமைந்தவ னல்லன்.

பஞ்ச பாதகங்களால் அமைந்திடப் பெற்றவன்.

           

           இராம, இலக்குவர் ‘கவுந்தனை’க் கண்டு வியத்தல்

 

கனலையும், புகையையும் கக்கிடும் மூக்குடன்

குகையென வாயுடன், விழிகளும் சுழன்றிடும்

பிறையென இருபுறம் கூராய் ஒளிர்ந்திடும்

கோரைப்பல்லுடன் இருந்தான் கவுந்தன்.

 

சிகரமற்ற மேருமலைபோல் சிரமற்று இருந்தான்

கரம் நீட்டிப் பிராணிகளைக் கவர்ந்து பிடிப்பான். -பிடித்ததை

கொல்லனின் உலை துருத்திபோல், கனலினைக்

கக்கிடும் வாய்க்குள் இட்டு நிரப்பி முடிப்பான்.

 

தந்தையும் இறந்திட, தோகையும் பிரிந்திட,

துக்கத்தின் பெரும்பிடியில் சிக்கிய சீதாராமன்

பூதத்திற்கு இரையாகி இறக்க விழைந்தான்.

‘திரும்பி நீ செல்லெ’ன தம்பியை மொழிந்தான்.

 

வனத்திடை உன்பின் பணிசெய்து வருகையில்

மூண்ட இடர்கண்டு மீண்டு நான் செல்வதா?

வென்றவர் அன்றோ வீரர்கள் என்பர்.

சென்றவர் என்றும் வீரர்கள் அல்லர்.’ தொடர்ந்தான்.

 

‘இன்னல் வருங்கால் அண்ணனை நீ காத்திடு

இறக்கும் நிலை வந்தால் முன்னம் நீ இறந்திடு’வென

என்தாய் விடுத்திருந்த கட்டளையை

மெய்யாக்க முயலுவேன்’ யென்றபடி,

 

முன்னம் விரைந்து சென்றான் பின்னவன்.

முன்னவனோ அவனை முந்திச் சென்றான்.

‘வினையில் எய்திய வீரர் நீர் யாவர்?’ கவுந்தன் வினவ

வினாவுக்குப் பதிலாய் விழித்தனர் இருவரும்.

 

அழிந்தவர் அல்லராய்த் தம்மை இகழ்ந்தவர் நோக்கி,

விழி வழி வழிந்த சினத்தைக் கனன்று,

‘விழுங்கிடுவேன் உமை’யென எழுந்த கவுந்தனின்

தோள்களை வாளால் அறுத்தான் காகுந்தன்.

 

ஆளும் நாயகனின் அருள் கரம் பட்டதும்,

மூளும் சாபத்தின் முந்தைய வினை முடித்தான்.

துண்டான தோளுடைய பாவ உடல் துறந்து,

விண்மீது வெளிப்பட்டான் திவ்ய உருகொண்டு.

 

‘அண்டசராசரங்களின் ஆட்சி நாயகனே!

நல்ல தர்மத்தின் சாட்சி யானவனே!

என்னெதிர் தோன்றி நீ சாபத்துயர் துடைத்தனை.

இவ்வருளை நான் ஏற்க எவ்வருளைப் புரிந்தேனோ?’

  (தொடர்ந்து வரும்)

செவ்வாய், 3 மே, 2022

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி 12

 

        அசோகவனத்தில் சீதையை சிறைவைத்தல்

 

வஞ்சியைத் தீண்டிட அஞ்சிய நிருதனும்,

நஞ்சியல் அரக்கியர் சூழ் அசோகவனத்தினுள்,

சிஞ்சுப மரத்திடை சிறைவைத்தான்!. -  நாமினி

சின்னவன் நிலை யினை நோக்கிடுவோம்.

(சிஞ்சுப மரம் : இரவெரி மரம், தோதகத்தி மரம், நூக்கமரம் என்றும் கூறுவர்)

 

அண்ணியிட்ட ஆணைப்படி கானகத்தில் அலைந்தவன்.

அண்ணன் குரல்வந்த திக்கில் தவித்தபடி விரைந்தனன்.

கண்டுவிட்ட தமையனையும் களிப்புடனே அணைத்தனன்.

எம்பிரானும் பிரியத்துடன் தம்பியோடு பிணைந்தனன்.

 

தழுவியவனை வினவினான், ‘இவ்விடம் வந்தது ஏனோ?’

‘அழைத்த நும்குரலால் அன்னையவள் கலங்கினள்.

‘வல்வாய் அரக்கனின் உரையிது’யென்பதை விலக்கினள்.

“செல்வாய் விவரமறிந்துவர நில்லாது” துரத்தினள்.

 

போகாதிருந்தால் தீயிடை வீழ்ந்திட துணிந்தனள்.

இருதலைக் கொள்ளி எறும்பாய் துடித்த நான்,

மறுத்தலை விடுத்து இவ்விடத்திடை நடந்தேன்.

உருக்கமாய் உரைத்து,  இறுக்கமாய் அணைத்தான்.

 

             இராம இலக்குவர் பண்ணசாலை திரும்பல்

 

ஆசையாய்க் கேட்டமான் அரக்கர்களின் மாயமான். - அது

மோசமாய் குரல்கொடுத்து மறைந்தது மாயமாய்.

நேசமிகு நங்கையோ நெடுநேரமாய்த் தனித்திருப்பாள்.

பாசமிகு மங்கையாய் நாயகனை நினைத்திருப்பாள்.

 

கூடு பிரிந்த உயிராம் பொற்கொடியாளைத்

தேடி வந்தவர்கள் திகைத்துப் போயினர்.

கோடிப்பொன்னாம் பிராட்டியுடன், அவளிருந்த

பண்ணசாலையே காணாமல் பதைத்தனர்..

 

மண் சுழன்றது; மலை சுழன்றது.

விண் சுழன்றது; வேதமுஞ் சுழன்றது.

கண் சுழன்றது; கதிரொடு, மதியும் சுழன்றது.

எண்ணம் சுழன்றது; ஏழ் கடலும் சுழன்றது.

 

தீண்டுதல் தவிர்த்து நிலத்தோடு பெயர்த்ததைக்

கண்டுபிடித்து விட்ட  இளையவன் இலக்குவன்,

‘அன்னவன் சென்றிடும் முன் பின்தொடர வேணும்’ என்ன

‘ஆமெ’ன இளவலை ஆமோத்தித்தான் ராமனும்.

 

மண்மேல் ஓடிப் பின் நீங்கிய தேர்ச்சுவடு

விண்ணின் ஓங்கியதைப் பார்த்த பிற்பாடு,

‘திண்தேர் சென்றிருக்கும் தென்திசை’ யென்று

பின்னவன் புகன்றான் மண்மிசை நின்று..

 

காணக்கிடைக்காது அலைகையில் அவ்விடத்தே

வீணைக் கொடியொன்று கிடந்ததைக் கண்டார்.

சந்திரனின் எட்டாம் நாள்பிறை விழுந்தாற்போல்

குத்திட்டிருந்த கூர் வில்லையும் கடந்தார்.

 

தேவருக்குக் கொடியோருடன் கடும்போரோ’வென

வியந்து, ஐயங்கொண்ட அமலானிடம்,

‘பட்சிராஜன் போராடிப் பிய்த்தக் கொடியிது’வென

நயந்தான் நயமுடன் நல்லான் இளையான்.

 

முத்தலை சூலமும், அம்புப் புட்டிலும்,.

வித்தக அரக்கனின் நெஞ்சக் கவசமும்,

இறந்து விழுந்த குதிரைகள் குவியலும்,

இறைந்து கிடந்தன கானகம் முழுவதும்.

 

சூரிய மண்டலமே புவிமேல் விழுந்தாற்போல்

சிதறியிருந்தன இரத்தினமும், குண்டலமும்.

இரத்தமும், சதையும் பீய்ந்து வழிந்திட

இறந்து கிடந்தான் இரதத்தின் சாரதியும்.

 

‘யாளிபோல் பகைவர் ஆயிரமாய்த் தோன்றினும்,

தோள்கள் இருபதுடன், பத்துத் தலைகள் கொண்ட

தென்னிலங்கை வேந்தன்தான் போர்புரிந்தவனெ’

தெளிவாக விளக்கினான் சுமித்திரைப் புதல்வன்.

 

கடலில் நிறுத்திய மந்திர மலையாய் - குருதியில்

கிடந்த சடாயு கண்டு அதிர்ந்தனர்.

‘எம்தந்தை என் பொருட்டாய் இறந்தாற்போல்

எந்தாய் சடாயுவே! நீயும் இறந்தனையோ!

 

சான்றோய்! எம்தாரம் காக்கவெண்ணி

ஏற்றாயோ இப்பெரும் பொறுப்பை? - உனைக்

கொன்றானும் உன் எதிரே நின்றானோ – நானும்

நின்றேனே நெடுமரமாய் என் விதியே!’

 

துணிவு கொண்ட சடாயு சிரம் அசைத்தான்.

உணர்வு பெற்று சற்றே உயிர்த்தெழுந்தான்.

‘பாக்கியத்தால் நானும்மைக் கண்ணுற்றேனெ’

மூக்கினால் முறைமுறையே உச்சிமோந்தான்.

 

‘ஆற்றலுடை இருவருமே அருந்ததியைத் தனித்துவிட்டு

அகன்றது எதனாலெ’ன முனகலுடன் வினவினான்.

வஞ்சக மானைத் தொடர்ந்தது முதலாக

நின்றது, நிகழ்ந்ததை நிரப்பினான் இளையான்.

 

நிலத்தோடு நிருதன் பெயர்த்தது முதல் தாம்

எதிர்த்துத் தடுத்ததுவரை இயம்பினான் சடாயு.

புருவங்கள் உயர்ந்தேற உதிரமும் சூடேற,

நெருப்புச் சுடர்கள் நிலைகெட்டன இராகவனுக்கு.

 

‘எட்டுத்திக்கினின்றும் எட்டிப்பார்த்த தேவரும் முனிவரும்

கட்டுண்டு வாளாயிருந்தனரே’யெனக் கடிந்துகொண்டான்..

‘நின்னால் வெல்வோம் அரக்கனை’ யென மகிழ்ந்த தேவர்,

எத்துணை கொண்டு வெல்வர் இனி’யென இகழ்ந்தான்.

 

‘மனையாளைத் வனத்திடையே தனியாகத் தவிக்கவிட்டு,

மானைப் பின்தொடர்ந்து மாறாப்பழி கொண்டீர்!

உம்பிழை என்பதல்லால் இது இவ்

உலகத்தின் பிழையா?' கடிந்தான் சடாயு.

 

கோபம் குறைந்த ஸ்ரீராமன் வினவினான்,

‘பாபம் புரிந்தவன் போன இடம் புகலுதி!’

ஓய்ந்து போன புள்ளின் வேந்தன்,

மெள்ள உரைத்து, பின் உயிரும் நீத்தான்.

 

‘இறந்தனனே நாம் உரிமை பெற்ற தாதை!

இருந்து உளேனே நான்! என் செய்வேன்?

துறந்தினி ஏற்பேனோ தவத்தினை! அன்றி

துறப்பேனோ என் உயிரை இளங்கோவே!’யென்றான்.

 

எந்தையே! இனி நின்று நினைவது என்னே!

நெருக்கி அவ்வரக்கர் தம்மை நொறுக்குவோம்.

நொறுக்கிப் பிடித்து உயிரையும் எடுப்போம்.

எடுத்தபின் கொடுந்துயர் கடப்போம்’தேற்றினான்.

 

‘சிறுவ! பெற்றெடுத்த தந்தைக்குப் பித்ருகடன் புரியவில்லை.

மறைந்த இப்பறவைக்குப் புரிபவர்யார் தெரியவில்லை'யென

பரந்த தன் கைகளால் பூதவுடலைத் தூக்கினான்.

ஈமத்தின் மேல் ஏற்றிவைத்து எரியூட்டினான்.

 

கனல் மூட்டியவன் காட்டாற்றில் குளித்து,

தருப்பைகளைத் திருத்தி, தருப்பணம் செய்தான்.

நேர்த்தியாய் பூர்த்தி செய்தான் நீர்க்கடனை.

சேர்ப்பித்தான் மோட்சத்தில் பட்சிராஜனை.

(தொடர்ந்து வரும்)

 

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி 11

 

                   இராவணன் தன் வேடம் நீங்கல்

 

கொப்பளித்த கோபத்துடன் கிழவனுரு களைந்தவன்.

பத்துத்தலையுடன் இருபது தோளுமாய் எதிர் நின்றான்.

இருபது கண்களும் இரத்தநிறத்தில் சிவந்து எரிந்தன.

திரண்தோள் இருபதும் பருத்துப் பெரிதாய் விரிந்தன.

 

‘விண்ணவரின் ஏவலேற்போர் வீரத்தை நீ ஏற்றிடாமல்,

மண்ணின் புழுவாம் மானிடரைப் போற்றுகின்றா’யென்று

வெகுண்டு யெழுந்தவன் பின் குழைந்து பேசினான்.

நடுக்க முற்றவள் பின் கலங்கிக் கூசினாள்.

.

‘முன்னம் எவரையும் கும்பிடக் குனியா

தங்கமகுடமாய் உனைத் தலைமேல் உயர்த்துவேன்.

இதயத்தில் உனை நான் இனிது இருத்துவேனெ’

கண்ணில் வழியும் காமத்துடன் சொன்னான்.

 

தளிர்க்கரங்களால் செவிப்பறைகளை அழுந்த அறைந்தாள்.

‘புவியொழுக்கம் அறிந்திடாத அரக்கரக் கரசனே!

காகுந்தனின் வெம்சரம் உன்மேல் வீழ்வதற்குள்

காக்கும் துணிவிருந்தால் ஓடி ஒளிந்திடெ’ன்றாள்.

 

‘வெம்சரம்’ என்றா சொன்னாய்?’ வெடித்துச் சிரித்தான்.

‘மலைமேல் தொடுக்கும் ‘பூம்கணை’ அது’வென்றான்.

'ஏற்றுக்கொள்வாயாயெனை' ஏங்கித் தொழுதான்.

திருவடி வணங்கிட மறுபடியும் விழுந்தான்.

 

‘பெருமானே! மானை வேண்டி நான் நாசமானேனோ?

இளையோனை விரட்டி நான் மோசமானேனோ?' என

பருந்தின் பிடியில் அகப்பட்ட குஞ்சுபோல்

வருத்தம் மிகுந்திட சுருங்கினாள் பஞ்சுபோல்.

 

‘விரும்பாத பெண்மீது உன் விரல்பட்டால்

சிரங்கள் பத்தும் சிதறி விழுந்திடும்’ என்று

முன்னம் பிரம்மன் விடுத்த சாபத்தால்

இப்பெண்ணைக் கரத்தால் தீண்டலைத் தவிர்த்தான்.

 

பெயர்த்தெடுத்தான் பண்ணசாலையை தரையோடு.

விரைந்தான் விண்வழி நிலம் வைத்த தேரோடு.

வியர்த்த பிராட்டியோ அயர்ந்தாள் வியப்போடு.

மயக்கமுற்று விழுந்தாள் பயத்தோடு.

 

'அறமே, தர்மமே, நியாயமே, நேர்மையே

அறிவீரோ எனக்கிழைத்த அவ நிலையை?

மேகமே, சோலையே, காடுறை தெய்வமே

ராகவனிடம் புகல்வீரோ என் கதையை?

 

மலையே, மரமே, மயிலே, குயிலே – என்

மன்னவனை அழைத்து வருவீரோ?’என

தண்ணீரைவிட்டு எடுத்த மீனாய்த் துடித்தாள்.

துடித்து எழுந்தவள் மீண்டும் விழுந்தாள்.

 

‘கள்வன் போலென்னைக் கவர்ந்து செல்கிறாயே!

வல்லவனாயின் என் மன்னவனின் வில்லுக்கு முன் நில்’என்ன

‘கொன்றென்னை அம்மானிடர் உன்னைக் கொள்வாராயின்

கொள்ளட்டும்’ என்று கொக்கரித்தான் அரக்கன்.

 

                சடாயு உயிர் நீத்த படலம்

 

                  சடாயுவின் வருகை

 

நிந்தித்த அவள் நெஞ்சம் நீரோடையாய் சலசலக்க,

‘நில்லடா! எங்கே நீ செல்கிறாய்? சொல்’என்றபடி,

பொன்மலையாம் மேருமலைபோல் பறந்து வந்தான்,

மின்னிடும் மூக்குடைய ‘சடாயு’யெனும் புள்.

 

பருத்த மரங்கள் பெயர்ந்து உடைந்தாற்போல்

பரந்த கடலும், பொங்கி யெழுந்தாற்போல்

பெருங்காற்று புயலாக வீசி யடித்தாற்போல்,

சிறகுகள் இரண்டையும் விரித்துப் பறந்தான்.

 

‘கேடுற்றவனே! என்ன தொடங்கினை நீ இன்று.

சுற்றத்தோடு நின் வாழ்வு சுட்டொழிந்திடும் திரும்பு.

பேதாய்! பேருலகப் பிராணிகளின் மாதா அனையாளை

யாதாக மனம் கொண்டு நினைந்தனை? இயம்பு.

 

உத்தமியைத் தந்திரமாய் நீ சிறையெடுத்தால்,

அத்தனை திசைகளையும் நான் மறைத்திடுவேன்.

பத்துத் தலைகளையும் பறித்து எடுப்பேன். - உன்

எந்திரத் தேரையும் எதிர்த்துத் தடுப்பேன்.

 

முத்தேவருள் மூலமுதற் பொருளாம் பரப்பிரும்மம்,

இத்தரை மேல் மானிடராய் பிறப்பெடுத்தது உன் கர்மம்.

பித்தான உன் சிந்தனையை சிதைப்பதே என் சித்தம்.

அப்பாவி அன்னையை நீ அபகரிப்பதா தர்மம்?' சீறினான்...

 

                       இராவணனின் சினம்

 

‘சுட்ட இரும்புண்ட நீர் கூட வெளிப்பட்டிடலாம்

கரும்புண்ட சொல்லுடையாள் கட்டாயம் மீள்கிலள்.

அடக்கிப் பேசி கடிது காட்டு அம்மானிடரை!’யென

சந்திரஹாச வாளினின்றும் நெருப்பு உக சிரித்தான்.

 

அன்னமன்ன அனையாளோ முன்னைவிட பயந்தாள்.

‘அஞ்சேல் அன்னையே! அரக்கரின் கருவுடல் முழுதும்

மிஞ்சாமல் பிய்ந்திடும்! வருந்தேல் இனிமேல்.’

வாஞ்சையுடன் பேசினான் தசரதனின் நண்பன்,

(இன்னும் இருக்கிறது)