சனி, 11 ஜூன், 2022

வானொலி நிலைய பாராட்டு

 இந்த அரங்கத்தில் குழுமியுள்ள ஆன்றோர்கள் அத்தனை பேருக்கும் லக்ஷ்மி ரவியின் இனிய மாலை வணக்கங்கள்.

தகவல் தொழில் நுட்பத்தின் முன்னோடியான திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தை தஞ்சைக்கு அழைத்து, அதன் 80 ஆண்டுகால சேவையினை பாராட்டுவதில் இந்த தியாக பிரும்ம சபை, (இவ்வருடம் தனது பவள விழாவினைக் கொண்டாடிவரும், தஞ்சாவூர் தியாக பிரும்ம சபை )அங்கத்தினர்கள் அனைவரும் பெருமையும், பெருமிதமும் அடைகிறோம். 

'ALL INDIA RADIO' திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்' என்ற அறிவிப்போடு ஒவ்வொரு நிகழ்ச்சியையும், அதற்கென்ற ஒலியிழையுடன் (SIGNATURE TUNE) ஒலிபரப்பும் இந்த நிலையம், 1939ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதியன்று அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சார்யார் அவர்களால் தொடங்கப்பட்டது. அப்போது உரையாற்றிய அவர்,'மின் கம்பித் தொடர்பு இல்லாமலேயே வெற்றிடத்தின் வழியாக நீங்கள் என் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்' என்று கூறினார். 

16.06.2018. 

ஸ்ரீ.பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்


இந்நிலையம், தமிழகத்தில் தொடங்கப்பட்ட இரண்டாவது வானொலி நிலையம் என்ற பெருமையைப் பெறுகிறது.

அலுவல் முறையில் ஆகாஷ்வாணி, இந்தியாவின் முதன்மையான ஒலிபரப்பு நிறுவனம் ஆகும்.

இப்போது இது தன்னாட்சி வழங்கப்பட்ட 'ப்ரசார் பாரதி'யின் அங்கமாக இருக்கிறது.

உலக வரலாற்று நிகழ்வுகள், இந்திய வரலாற்று நிகழ்வுகள், ஜவஹர்லால் நேருவின் புகழ்மிக்க நள்ளிரவு பார்லிமென்ட் உரை, மகாத்மாவின் படுகொலை, டிமெல்லோவின் குரலில் காந்தியின் சவ ஊர்வல நிகழ்வுகள் என்று அனைத்து செய்திகளையும், தமிழகமெங்கும் திருச்சி வானொலி நிலையம் கொண்டு சேர்த்திருக்கிறது. 

1969ம் ஆண்டு ஜூலை 21ம் நாளன்று நீல் ஆம்ஸ்ட்ராங் முதன் முதலில் நிலவில் காலடி வைத்ததை அமெரிக்கா ஒலிபரப்பிய போது, திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம், 'நில உலகில் இருந்து நிலா உலகிற்கு செல்லும் மனிதன்' என்று அச் செய்தியை தமிழில் உடனடியாக ஒலிபரப்பியது. 

இருப்பதியோராம் நூற்றாண்டின் இள வயதினர் வானொலி பற்றி அறிந்தது பண்பலை, இணையம் என்பனவற்றின் திரை இசை வழங்கும் நிலையங்களைத்தான்.

இந்த அகில இந்திய வானொலி நிலையம், மாணவர்கள், மகளிர், இல்லத்தரசிகள், விவசாயிகள், அலுவலர்கள், வியையாட்டு வீரார்கள், நோயாளிகள், உல்லாசப் பயணம் மேற்கொள்வோர், என சமுதாயத்தின் அத்தனை பிரிவினருக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பும்.

மார்க்கோனி கண்டுபிடித்த இந்த வானொலி ஆற்றிவரும் பசுமை புரட்சியை மறுக்க முடியுமா என்ன? காவிரி டெல்டா விவசாயிகளுக்கு  ஒரு வரப்பிரசாதம் திருச்சி வானொலி நிலையம் என்றால் அது மிகையில்லை. மேட்டூர் நீர் தேக்க அளவு, கல்லணை நீர் வரத்து, அரசு அறுவிக்கும் திட்டங்கள், மானியங்கள், அறிவிப்புகள் போன்றவற்றைத் தன் பண்ணை இல்ல ஒலிபரப்புகள் மூலம் ஒலிபரப்பி, விவசாயிகளின் தோழனாக இருக்கிறது. தனது 'வேளாண் அரங்கம்' 'உழவர் உலகம்' போன்ற நிகழ்ச்சிகளில், உரையாடல், நேர்முகம், நாடகம் போன்ற பல வழிகளில், விவசாய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம். பஞ்சாயத்து, டீக்கடை போன்ற இடங்களில் உரையாடல் நிகழ்வது போல அவர்கள் நிகழ்ச்சிகளை அமைத்திருப்பார்கள். அவை விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப்  பெற்றன.

விவசாயத் துறை மட்டுமல்ல. கால்நடை பராமரிப்புத் துறை, பட்டுப்புழு வளர்ச்சித் துறை மீன் வளத்துறை, என கிராமப்புற துறைகளின் திட்டங்கள் அனைத்தையும் ஒலிபரப்பும் திருச்சி வானொலி நிலையம்.

'சங்கீதம்' என்று எடுத்துக்கொண்டால், பாரம்பரிய கர்னாடக இசை, நாட்டுப்புற பாடல்கள், மெல்லிசை, வாத்திய இசை, திரை இசை என அனைத்து வகை இசை நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பும். வெள்ளிக்கிழமைகளீல் இரவு கர்னாடக சங்கீதம் கேட்க ஆவலுடன் காத்திருப்போர் ஏராளம்.

திருவையாறு தியாக பிரும்ம ஆராதனை நிகழ்வுகள், இசைக் கச்சேரிகள் இவற்றின் நேரடி ஒலிபரப்பை ரசித்துக் கேட்போர் எத்தனை எத்தனை பேர்? வர்ணனையாளர்கள், தங்களில் மொழிப் புலமை, சிறந்த உச்சரிப்பு ஆகியவற்றால் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் வல்லமை பெற்றவர்கள்.இசைப் பிரியர்களுக்கும் திருச்சி வானொலி ஒரு இனிய தோழன் தான். கர்னாடக சங்கீதம் மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்குப் பெயர்போன இத் தஞ்சை மாநகரிலிருந்து, திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் பாடி, பிற்காலத்தில் புகழ் பெற்றோர் பலருண்டு. திருவாவடுதுரை T.N.ராஜரத்தினம் பிள்ளை, நாமகிரிபேட்டை கிருஷ்ணன், சீர்காழி கோவிந்த ராஜன், தண்டபாணி தேசிகர், மதுரை மணி ஐயர், ஆகியோர் அவற்றுள் சிலர். 

இந்த நேரத்தில் நான் ஒரு விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். திருச்சி வானொலியில் நிலைய மிருதங்க வித்வானாக 1945ம் ஆண்டு முதல் இருந்தவராம் தஞ்சை ராமமூர்த்தி என்பவர். இவர் 'லயவின்யாசம்' என்ற நிகழ்ச்சியை வானொலியில் அறிமுகப் படுத்தியவராம். பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்ற இவருக்கு, இப்போது 95 வயது. இவர் நமது விழாவைக் கேள்விப்பட்டு, திருச்சியிலிருந்து தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் என்பதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். 

இசை நிகழ்ச்சிகள் தவிர, காரைக்குடி கம்பன் விழாவை, தமிழகம் கேட்க வைத்ததும் திருச்சி வானொலி நிலையம் தான். 'இன்று ஒரு தகவல்' தரும் தென்கச்சி சாமிநாதன, சமய சொற்பொழிவாளர் சுகி சிவம், எழுத்தாளர் மாயவி, இலக்கிய சொற்பொழிவாளர் அ.ச. ஞானசம்மந்தம் போன்றோரை வெளிச்சம் போட்டுக் காட்டியது திருச்சி வானொலி நிலையம் தான்.

திருச்சிராப்பள்ளி வானொலி நிலைய நிகழ்ச்சிகள் காலையில் மெல்லிசையை இழையவிட்டபடி துவங்கும். பின் பக்திமாலை, பக்திப் பாடல்களைக் கேட்டபடி ஒரு நாளை துவக்குவதே புத்துணர்ச்சி அளிப்பதாக இருக்கும்.

சேவைச் செய்திகள் என்று ஆங்காங்கே அன்று நிகழ் இருக்கும் விழாக்கள், கூட்டங்கள் பற்றி குறிப்பிடுவார்கள்.

'ரேடியோ டைம்' என்று 'டிங்க் டாங்க்' என்ற ஒலியுடன் சரியான மணியை வினாடிம் நொடியுடன் அவ்வப்போது வழங்குவார்கள். 

மாநிலச் செய்தியறிக்கை' இது சென்னையிலிருந்து அஞ்சலாகும். நான் 11ம் வகுப்பு படிக்கும் போது 6.50 மணிக்கு டைப் ரைட்டிங்க் கிளாஸ் சென்றுகொண்டிருப்பேன். அப்போது எல்லார் வீடுகளிலும், ஜெயா பாலாஜி, பத்மனாபன், அல்லது செல்வராஜின் குரலில் தெளிவான செய்திகள் என்னைப் பிந்தொடர்ந்து வரும். பள்ளியில் என்னை எழுந்து படிக்கச் சொன்னால், நான் என்னை ஜெயா பாலாஜி யாக கற்பனை செய்து கொள்வேன் என்று பெருமையடைகிறேன்.

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில். பொது வானொலி மேடை அமைத்திருப்பர். செய்தி கேட்பதற்காக அங்கே குழுமி இருப்பர்.

டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழில் செய்திகள் நமக்கு அறிமுகம் செய்த குரலுக்கு அரியவர்கள் சரோஜ் நாராயணசாமி, பூர்ணம் விஸ்வ நாதன் போன்றோர்.

'சூரிய காந்தி'  என்று குட்டி நாடகங்கள், 1 மணி நேர வரலாற்று நாடகங்கள், குடும்ப நாடகங்கள், ஒலிச்சித்திரம் என்று முழு நீள திரைப்படம் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் உண்டு.

ரேடியோ அண்ணா என்ற பெயர் குழந்தைகள் மத்தியில் மிகவும் கிரபலம்.

அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி போன்றோர் அவ்வப்போது தமிழில் கிரிக்கெட் கமென்ட்ரி கொடுப்பர்.கிரிக்கெட் ரசிகர்கள் மெய்மறந்து, கண்முன் வந்து போகும் ஆட்டத்தைக் கண்டு களிப்பர். வானொலியில் வரும் ஹிந்தி கமென்ட்ரி கேட்டு கிரிக்கெட் ஹிந்தி கற்றுக்கொண்டோரும் பலருண்டு.

இன்று இந்த திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் 3 அலைவரிசைகளில் தங்கள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது. இளைஞர்களுக்கான FM ரெயின்போ பண்பலை, 24 மணி நேர கர்னாடக சங்கீத ராகம் DTH, செய்திகள் மற்றும் தகவல் ஒலிபரப்பு இவற்றின் மூலம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி தொண்டாற்றி வருகிறது திருச்சி வானொலி நிலையம்.

எண்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திற்குப் பாராட்டு தெரிவிக்க தஞ்சை ஸ்ரீ தியாக பிரும்ம சபா முடிவெடுத்த போது பாரட்டத் தகுந்த தலைவர்களாக பூண்டி ஐயா, கல்விக்காவலர் கி.துளசி வாண்டையார் அவர்களும், டெல்டா பாசன விவசாயிகளுக்காக குரல் கொடுத்து போராடி வரும் மன்னார்குடி திரு.ரங்க நாதன் அவர்களும், தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் Dr.S.P.S. அருள்தாஸ் அவர்களும்தான் உடனடியாக நமது நினைவுக்கு வந்தனர். இந்த சிறப்பு விருந்தினர்களோடு இணைந்து தியாக பிரும்ம சபை அங்கத்தினர்களான நாங்கள் அனைவரும் இந்த அகில இந்திய வானொலி நிலையம் தனது 1000 ஆண்டு விழாவினை கொண்டாடும்படி வளரவேண்டும் என்றும், எங்கள் அழைப்பினை ஏற்று வருகை தந்திருக்கும் திருச்சி வானொலி நிலையத்தார் திரு.நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளின் சேவை மேன்மேலும் சிறக்க வேண்டும் என்றும் வாழ்த்தி மகிழ்கிறோம்.

நன்றி வணக்கம்.