செவ்வாய், 12 டிசம்பர், 2017

'ஊர் சுற்றிப் புராணம்'

'ஊர் சுற்றிப் புராணம்' படிப்பதற்கு அதி முக்கியமானது பயணம். பயணமாவது, ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்வது தான். நில வழி, நீர் வழி, ஆகாய வழி என்ற மூவழிகளிலும் பயணம் மேற்கொள்வதற்கு பல்வேறு சாதனங்களும், வாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், நில வழியாக,  இருப்புப்பாதை அமைக்கப்பட்டு அதன் மீது செல்லும் தொடர் வண்டிப் பயணம் தான் அனைவரின் மனதிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

கடலலை, யானை போல தொடர்வண்டியும் எக்காலத்திலும், எந்த வயதினரானலும், பார்த்தவுடன் அவர்கள் மனதில் ஒருவித களிப்பை உண்டாக்கும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத் தொடர்வண்டி, காலமும், அறிவியலும் வளரவளர வெகுவாக முன்னேறியுள்ளது.  இரண்டிரண்டு சக்கரங்களை இருப்புப்பாதை வடத்தின் மீது பதித்து, மரவட்டை போல ஊர்ந்து செல்வது ஒரு அசகாய கண்டுபிடிப்பு தான். புகையை கக்கியபடி, பெருங்குரலெடுத்து, ஒலியெழுப்பி, தன் வருகையை ஊர்ஜிதப்படுத்தியபடி, ஒரே தாள லயத்துடன் செல்லும் புகைவண்டி இன்று, புகை ஏதும் இல்லாததால் 'தொடர்வண்டி' என்று நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. . மின் வசதியைப் பயன் படுத்தி 'மின்சார தொடர் வண்டி' ஆகியுள்ளது. இருக்கை வசதி, படுக்கை வசதி,  குளிர் சாதன வசதி, கழிவறை, முன்பதிவு, தட்கல் வசதி போன்ற பலபல வசதிகளுடன் இயங்கி வரும் இந்த துறை போற்றுதற்குரியதே!

மூத்த குடிமகன்களுக்கும்  உடல் ஊனமுற்றோருக்கும்
வழங்கப் படும் சலுகைகள்,  ரயில் நிலைய அமைப்புகள், பயணிகளுக்கான தங்கும் அறை. உணவு சாலைகள், சரக்கு ரயில் வண்டிகள், விரைவு ரயில் வண்டிகள், CHAIR CARS, உணவு கிடைக்கும், 'PANTRY CARS', METRO TRAINS இவை எல்லாம் ரயில்  துறையினர் பயணிகளின் வசதிகளுக்காக உருவாக்கியவை.

இத் தொடர் வண்டி பயணம் ரம்மியமாகவும், ரசிக்கும்படியும், அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கும். சிறு வயது முதல்  மூத்த குடிமக்கள் வரை  ஜன்னலோர இருக்கைக்கு ஒருவித போட்டி நிலவுவது நிஜம். ஜன்னல் வழியே பின்னோக்கி நகரும் மரங்களும், கைக்காட்டி கம்பங்களும், வீடுகளும் கண்கொள்ளா காட்சியாய் அனைவரையும் வசீகரிக்கும்.  அருகில் அமர்ந்திருக்கும் சக பயணிகளுடன் ஏற்படும் தோழமை வித்தியாசமான அனுபவமாக இருக்கும். முன் பின் தெரியாத அந்த நபர் நம்முடன் பிரயாணிக்கும் அந்த சில மணித்துளிகள் நம்மில் ஒருவராக மாறி இருப்பார். அதிலும் அவர்  பெயர் நம் பெயராக இருந்தாலோ,  அவர் நம் ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலோ, நமக்குத் தெரிந்த எவரையாவது அவரும் அறிந்திருந்தாலோ, அவர் பால் நாம் கொண்டுள்ள அன்பின் அளவு பன்மடங்கு அதிகரித்துவிடும். ஆனால் இந்த உறவு, அதன்பின் தொடர்ந்ததாகவோ, வளர்ந்ததாகவோ பெரும்பாலும் இருப்பதில்லை.  ஆனாலும் ரயில் ஸ்நேகத்திற்கு ஒரு அழகு இருக்கத்தான் செய்கிறது.

24 மணி நேரங்களைக் கொண்ட ஒவ்வொரு நாளும் முற்பகல் 12 மணியாகவும், பிற்பகல் 12 மணியாகவும் பிரிக்கப்பட்டு AM என்றும் PM  என்றும்  வழங்கப்படுவது நாம் அறிந்ததே! ஆனால் இந்த ரயில்பெட்டித் துறையினர் ஒரு நாளை 24 மணி நேரமாகவே கணக்கிடுகின்றனர். இதனால் சில குழப்பங்கள் ஏற்படுவதும் உண்மை. உதாரணமாக, ராமேஸ்வரத்திலிருந்து கும்பகோணம் வழியாக சென்னை வரை செல்லும் ரமேஸ்வரம் விரைவு ரயில் வண்டி, நள்ளிரவு 12.06 மணிக்கு கும்பகோணத்திற்கு வருகிறது. ரயில் நிலைய வழக்கபடி ஒரு நாள் என்பது நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி, மதியம் 12 மணியிலிருந்து 13, 14 என்று தொடரப்பட்டு, 24 மணி நேரங்கள் அளக்கப்படுகிறது.  நாம் பயணச்சீட்டு வாங்கும்போது, பயணம் செய்யவிருக்கும் தேதியான 5ம் தேதி என்று குறிப்பிட்டுவிடுவோம். அதில் நேரம் என்ற ஒரு பகுதி இருப்பதில்லை. பயணச் சிட்டிலும் 5ம் தேதி என்று பதியப்பட்டுவிடும் ஆனால் அப் பயணச் சீட்டின் படி 4ம் தேதி நள்ளிரவு 12.06 மணிக்கு 5ம் தேதி தொடங்கிவிடுவதால் நாம் 4ம் தேதியே நம் பயணத்தைத் தொடங்க நேரிடும். இதை ஒரு அனுபவக் குறிப்பாகவே நான் இங்கு வழங்கியுள்ளேன். கும்பகோணத்தில் இரு தினங்கள் தங்கி பின் சென்னை திரும்புவதற்காக முன்பதிவு செய்திருந்த நான் இந்த தேதி தந்த குழப்பத்தால், ஒரு நாள் முன்னதாகவே திரும்ப வேண்டியதாகி விட்டது.

இத்தனை வசதிகள் செய்து தரும் இத் துறை இந்த தேதி விஷயத்தைக் கருத்தில் கொள்ளலாமே! அல்லது பொது மக்களாகிய நாமாவது ரயில் நேரத்தை நினைவு கொண்டு பயணச் சீட்டு வாங்கலாமே!

Image result for FREE IMAGE OF PASSENGERS IN THE TRAIN