வெள்ளி, 20 அக்டோபர், 2017

சில்லறையால் சிதைந்த மனம்

       ஒரு வாரமாக ராமசாமி மில்லுக்கு வாடிக்கையாளர்கள் வருவதும் ஏதாவது அரைத்துக்கொண்டு போவதுமாக இருந்தனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது.
  "அண்ணே! ஈர அரிசி ரெண்டு கிலோ அதிரசத்துக்குண்ணே! கொஞ்சம் சீக்கிரண்ணே! பசங்க ஸ்கூல்லேர்ந்து வந்துடுவாங்க"

   "ஏம்பா.... முறுக்குக்கு அரைக்கணும்!

    "ஏங்க.... எவ்ளோ நேரமா நிக்கறேன்... சாம்பார் பொடிக்கு!"
இப்படி அங்கங்கிருந்து குரல்கள் வந்து கொண்டிருந்தன.

    ராமசாமி பம்பரமாக சுழன்று, ஈர அரிசி மிஷினை ஓட விட்டு அரைப்பார். "கொஞ்சம் இருங்க மாமி....ஈர மாவு அரைச்சுட்டு முறுக்குக்கு அரைச்சு தரேன்" என்பார். "ஏங்க... தீபாவளி பலகார மாவு அரைக்க எவ்ளோ பேர் வந்திருக்காங்க.. சாம்பார் பொடியெ வைச்சுட்டு போங்க.. கடைசியா அரைச்சு வைக்கறேன்" என்று அவரவர்களுக்கு பதில் கூறிவிட்டு சுறுசுறுப்பாக வேலை பார்த்தபடி இருந்தார்.

     தீபாவளி நேரமானதால் அவரின் மருமகளும் இந்த பத்து நாட்களாக  மில்லுக்கு வந்து, அரைகூலி வாங்கி வைத்து, அரவையை,  வருசைப்படுத்தி, அவருக்கு உதவியாக இருந்தாள். இன்று சனிக்கிழமை. பள்ளிக்கூடம் லீவானதால் பேத்தி சரசா, தாத்தாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தாள்.

      மிஷின் ஓடும் 'கடக் கடக்' சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. ராமசாமி அரைக்க வந்த சாமான்களைத் தூக்கி,  அதன் வாய்ப் பகுதியில் கொட்டினார். மாவு அரைபட்டு வெளியே கொட்டும் குழாயின் வாயை நீளமான வெள்ளைத் துணியால் குழாய் போலவே உருளை வடிவில் கட்டியிருந்தார். அதிலிருந்து கொட்டும் மாவை பிடிக்க வைத்திருந்த வேறொரு  டின்னில் பாதி அரைபட்டிருந்த மாவைப் பிடித்து, மீண்டும் அதை வாய்ப் பகுதியில் கொட்டினார். இம்முறை  நன்கு அரைபட்ட மாவை அரைக்கக் கொண்டுவந்திருந்த தூக்கில் கொட்டி வைத்தார். சரசா சம்மந்தப்பட்டவருக்கு தூக்கைக் கொடுத்து அரை கூலி வாங்கி, சில்லறை தந்து.. என்று வேலை  பார்த்துக்கொண்டிருந்தாள்.

     அப்போது ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு மூன்று டப்பாக்களை எடுத்துக் கொண்டு ஒரு பெண்மணி இறங்கிக் கொண்டிருந்தார். அவர் வாடிக்கையாக இந்த மிஷினில் அரைத்துப் போவார். வாடிக்கையாளர்களிடம் அதிக மதிப்பும், மரியாதையும் தாத்தா வைத்திருப்பது சரசாவுக்குத் தெரியும். அதனால் அவளும் தன் அம்மாவைப் போலவே தாத்தா விரும்பும்படியே நடந்து கொள்வாள்.

'அக்கா! வாங்கக்கா! " என்றபடி ஆட்டோவை நோக்கி ஓடி "நீங்க இருங்க அக்கா.. நான் சம்படத்தையெல்லம் எடுத்துக்கறேன்" என்றி கூறிய அவள்,  முதலில் ஒரு தூக்கையும், ஒரு டப்பாவையும் அரை மிஷினுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு மீண்டும் ஓடி, மூன்றாவது டப்பாவையும், தானே எடுத்துவந்தாள்.

'தாத்தா! அக்கா வந்திருக்காங்க பாருங்க!' என்று சத்தமாகக் கூறினாள். ராமசாமியும் புன்னகை முகத்துடன் தலையை அசைத்து வரவேற்றார். மிஷின் 'கடக், கடக்' என்று ஓடிக்கொண்டிருந்தது.

சரசா அந்த அக்காவுக்கு உட்கார தன் நாற்காலியை விட்டுக்கொடுத்தாள். "என்னம்மா அரைக்கணும்" என்றபடி அவளின் டப்பா மற்றும் தூக்கை உள்ளே எடுத்துச் சென்றார் ராமசாமி.

மூன்று வித மாவையும் ஒன்றன்பின் ஒன்றாக அரைத்து அந்தந்த பாத்திரங்களில் போட்டுவிட்டு, 'அம்மாடி! மூணையும் அரைச்சுட்டேன். சரசா... அக்காகிட்ட கணக்கு சொல்லு" என்றபடி மீண்டும் மிஷினை ஓடவிட்டார்.

"அக்கா! இது ரெண்டுக்கும் பத்து பத்து ரூவா.. ஈர அரிசிக்கு பதினஞ்சு ரூவா அக்கா" என்றாள் சரசா.

பர்சைத் திறந்த அந்தப் பெண்மணி, போன தடவ அரைச்சப்ப பாக்கி தரலியாமேமா. அத கழிச்சுக்கலாமா?' என்றாள்.

'இல்லையே அக்கா... பாக்கி எதுவும் இல்லயே"

'இல்ல சரசா! போன தடவ எம் பொண்ணை அனுப்பியிருந்தேன்.   60 ரூபா ஆச்சாம்.  100ரூபா கொடுத்தாளாம். பாக்கி  நாப்பது ரூபா அடுத்தவாட்டி கழிச்சுக்கறேன்' னு சொன்னியாமேமா.

இல்ல அக்கா.. அது மாதிரி எதுவுமே நடக்கலியே!'

'பின்ன நான் என்ன பொய்யா சொல்றேன்! முளச்சு மூணு இல விடலெ... உனக்கு இருக்கற திமிரப் பாரு! உங்க தாத்தவ கூப்பிடு' உரக்கக் கத்தினாள் அந்தப் பெண்.

'அது இல்லக்கா...! அம்மா சொல்லியிருப்பாங்களோ...!"

' மரியாதயா இப்ப பாக்கிய  கழிக்கப்போறியா இல்லயா!"

அதற்குள் சத்தம் கேட்ட ராமசாமியும் மிஷினை ஆஃப் செய்துவிட்டு' 'என்னம்மா! என்ன ஆச்சு?' என்றபடி வெளியில் வந்தார்.

'இங்க பாருங்க... உங்க பேத்தியெ கண்டிச்சு வைங்க! போன தடவ அரைச்சபோது சில்லறை இல்லனு சொன்னாளாம்.. இப்போ அதெ கழிச்சுக்கறியான்னா..... என்னவோ அப்படி எதுவுமே நடக்கலெங்கறா'

அரைக்க வந்திருந்தவர்களுக்கு இந்த நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக இருந்தது. வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.

ராமசாமிக்கு என்னவோபோல் ஆகிவிட்டது.

"அவ்வளவுதானே! மறந்துபோயிருப்பா.. இப்போ கழிச்சிட்டா போவுது"
'கண்ணு சரசா இப்போ எவ்வளவு ஆச்சு?"

'தாத்தா... போன தடவ மீதி எதுவுமில்ல தாத்தா;

"இந்தா.. அது போனா போவுது கண்ணு... இப்போ 35ரூபாயெ எடுத்திட்டு அஞ்சு ரூபா குடுத்து அனுப்பு தாயி'

"இல்ல தாத்தா.." என்று ஆரம்பித்த சரசாவை 'இத பாரு நான் சொன்னா கேக்கணும்' என்றுகூறி, ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு ,;நீ போய் வா அம்மணி' என்று கையெடுத்து கும்பிட்டார் ராமசாமி.

கண் கலங்கியது சரசாவுக்கு.....

அரைத்த மாவு சம்படங்களை இம்முறை சரசா ஆட்டோவரை கொண்டு தரவில்லை. அந்த அம்மா ஒரு டப்பாவை எடுத்துக்கொண்டு போய் ஆட்டோவில் வைத்துவிட்டு ஆட்டோ ட்ரைவரை மீதி இரண்டையும் எடுத்துவரச் சொன்னாள்.

அவமானத்தால் சுருங்கிய சரசாவின் கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டு வந்தது.

"தாத்தா....நான் பொய் சொல்லலெ. மீதி எதுவும் இல்ல தாத்தா..."

"அட.... நீ பொய் சொன்னனு நான் சொல்லவேயில்லயே கண்ணு.... போ! அடுத்து எத அரைக்கணும்னு பாரு"  என்ற ராமசாமியின் முகமும் சிந்தனை வயப்பட்டு சிறுத்துப் போனது.

கூடியிருந்தவர்கள் வியப்பாய் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது சைக்கிளில் ஒரு பெண் வந்து இறங்கினாள்.

"மன்னிச்சுக்கோங்க... அம்மா இந்த 35 ரூபாய கொடுத்துட்டு வரச் சொன்னாங்க.. பாக்கி இங்க இல்ல மளிகைக் கடையில! என்றபடி சரசாவின் கைகளில் நீட்டினாள்.

"இப்படி வைச்சுட்டு போங்க..."

அந்த சில்லறையை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சரசா.  அவற்றை கல்லாவில் போட கூட அவளுக்கு மனம் வரவில்லை.

 சில்லறையாலோ, சில்லறைத் தனமான பேச்சாலோ, அந்த  சின்ன மனது  சிதைந்து போய்விட்டது. சிதைந்தது அவள் மன்ம் மட்டுமல்ல.. அந்த உறவும் தான்.


Image result for FREE IMAGE OF COINS






திங்கள், 9 அக்டோபர், 2017

கோணம்

ரமேஷ் கல்யாணம் முடிந்துவிட்டது.

பொண்ணாத்துக்காரா,  நன்னா, நிறைவா  கல்யாணத்தை பண்ணினா. வந்தவா எல்லோரும் சந்தோஷமா வாழ்த்திட்டுப் போனா.

கல்யாணி மாமிக்குப் பெருமை பிடிபடலை. ஒரே பையன்! கண்ணுக்கு அழகா, மாட்டுப் பொண்ணு வந்தாச்சு. ஆத்துக்காரர் ஃபோட்டோக்கு முன்னாடி நின்னுண்டு கண் கலங்க அவர்கிட்ட நடந்த விவரத்தையெல்லாம் சொல்றா.

'நீங்க இல்லாமலேயே ரமேஷ் கல்யாணம் நடந்துடுத்து. நம்ம மாட்டுபொண்ணு பேரு என்ன தெரியுமோ? விமலா! அழகா சமத்தா இருக்கா.நன்னா சிரிச்சு பேசறா.
ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இன்னிக்கு நான் ஒரு மாமியார்! மாமியார்னாலே கொடுமைக்காரின்னுதானே எல்லாரும் நினைக்கறா. நான் பாருங்கோ! அத மாத்தி காமிக்கப்போறேன். என்ன! நம்மாத்துக்கு ஒரு பொண்ணு வரப்போறா! அவள உக்காத்தி வச்சு நான் சமச்சு சாப்பாடு போடப் போறேன் 'வேலை நிறைய பண்ணச் சொல்றா'ங்கறதுதான எல்லா மாட்டுப் பொண்களோட கொறையா இருக்கும்? அவள வேலை எதுவும் செய்யவிடாம மகாராணி மாதிரி பாத்துக்கப்போறேன்.
அதேமாதிரி.... எப்பவும் ரமேஷோடவே இரு, பேசு'ன்னு நானே சந்தோஷமா சொல்லப்போறேன். 'அவரோட பேசவே விட மாட்டேங்கறா... அவரோட நான் வெளில போனாலே பிடிக்க மாட்டேங்கறது...' ன்னுதானே எல்லாராத்து மாட்டுப் பொண்களும் புலம்புவா... ஏன்? எனக்கேகூட இந்த குறையெல்லாம் இருந்ததே! எவ்வளவு உடம்புன்னாலும்.. எங்க வெளில போயிட்டு எப்போ வந்தாலும் நானேதானே சமையல் வேலை, பாத்திரம் அலம்பறதுன்னு எல்லா வேலயும் பண்ணணும்! உடம்பு எத்தனை நாள் ஆடிப்போயிருக்கு! இந்த குறை நம்ம விமலாவுக்கு வரக் கூடாது!
நாம கொஞ்சம் சிரிச்சு பேசினாலே உங்கம்மாவுக்கு கோபம் வந்துடுமே! அது மாதிரியெல்லாம் நான் நடந்துக்காம, 'நல்ல மாமியார்'ன்னு  நிச்சயம் பேர் எடுக்கணும்'

கணவன் முன் சபதம் எடுத்துண்டு கண்ணைத் துடச்சுக்கறா கல்யாணி மாமி.

சபதத்துக்கு ஏத்தமாதிரியே, 'நீ போய் டீ.வி பாரும்மா, புக்ஸ் ஏதாவது படி, கைவேலை பண்ணு' ன்னு சொல்லி தானே சமையலை கவனித்தாள்.

ரமேஷ் வந்தவுடனும், 'ஏண்டா.. இன்னிக்கு விமலாவ சினிமாவுக்கு கூட்டிண்டு போயேன்... வெளில நல்ல ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுங்கோ. புடவை அல்லது சூடிதார் வாங்கிக் குடேண்டா விமலாவுக்கு' இப்படி எதாவது சொல்லி இருவரையும் ஒன்றாக வெளியே போக வைத்து ஆனந்தப்பட்டாள்.

தான் ஒரு நல்ல மாமியாராக செயல்படறதுல தனக்குத்தானே சந்தோஷப்பட்டு ஆத்துக்காரரிடமும் அவ்வப்போது கூறி தன் சந்தோஷத்த பரிமாறிக்கறா.

ஒரு நாள், 'கோவிலுக்குப் போய்ட்டு வரேன்மா.. கதவ தாழ்ப்பாள் போட்டுக்கோ' ன்னு விமலாகிட்ட சொல்லிட்டுப் போறா மாமி. கொஞ்ச தூரம் போனதும் செருப்பு அறுந்துபோச்சு. நடக்க முடியலெ. சரி ஆத்துக்கே போயிடலாம்னு திரும்பி வந்தா. ஆத்துக்கிட்ட வந்த உடனே, விமலா யாரிடமோ பேசிண்டிருந்தது ஜன்னல் வழியா காதுல விழறது.

அறுந்த செருப்புடன் வேகமா நடக்க முடியாம கால தேச்சு தேச்சு மெதுவா நடக்கறா மாமி. விமலா அவ அம்மா கூடதான் ஃபோன்ல பேசிண்டிருந்தா.

"என்னம்மா இது!  என்னக் கிச்சனுக்குள்ளயே விடலைன்னா என்னம்மா? என்னம்மா அர்த்தம்? நிர்வாகப் பொறுப்ப விட மனசில்லைதானேம்மா! எனக்கு ஏதாவது புதுசா என் கையால பண்ணி அவருக்கு சர்பிரைஸ் குடுக்கணும்னு ஆசையா இருக்காதா!! நான் இந்த வீட்டுல என்ன பண்ணட்டும்? எப்போ பாத்தாலும் இவர் கிட்ட இங்க கூட்டிண்டு போ1 அங்க கூட்டிண்டு போ! ன்னு ஒரு ப்ரொக்ராம் லிஸ்ட்டே ஒப்பிச்சுடறா! இவரும் 'பூம்பூம் மாடு' மாதிரி தலய ஆட்டறார்மா! ஏன் நாங்களே ஏதாவது டிசைட் பண்ணி எங்கயாவது போறோம்... இதெல்லாம் இவாளுக்கு எதுக்கும்மா.... போயிட்டு வந்த உடனேயே அது எப்படி இருந்தது, இது பிடிச்சுதான்னு ஒரே கேள்விதான்........

சொல்லிக்கொண்டிருந்தாள் விமலா! பிய்ந்த செருப்பால் அடி வாங்கியது போல் துடி துடித்துப் போனாள் கல்யாணி மாமி. இப்படி ஒரு 'கோணமா'? செய்வதறியாது நின்றாள்.

Image result for FREE IMAGE OF A tAMIL BRAHMIN COUPLE WITH THE MOTHER IN LAW