புதன், 24 ஜனவரி, 2018

ஆழியொத்த அழகு மொழி

உயிரினங்களைப் படைக்கையில் ஒலியெழுப்பும் சக்தியையும் சேர்த்துதான் இறைவன் படைத்துள்ளான். ஐந்தறவு கொண்ட ஜீவராசிகளெல்லாம் இறைவன் தமக்குக் கொடுத்த ஒலியை எழுப்பியபடி வாழ்ந்து கொண்டிருக்கையில், ஆறறிவு கொண்ட மனிதன் மட்டும் ஒலிக்கு உயிரும், உணர்வும், பொருளும், கருவும் கொடுத்து, அவ்வொலியையே மொழியாக ஆக்கியுள்ளான்.

எண்ணற்ற மொழிகள் இவ்வுலகில்  இருந்தாலும், நம் தமிழ் மொழி பல கோடி ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டு, இலக்கணங்கள் வகுக்கப்பட்ட தொன்மையான ஒரு செம்மொழி என்பதை மறுப்பதற்கில்லை. எழுத்துக்களை இணைத்து வார்த்தைகளாக்கி, வார்த்தைகளை சேர்த்து வாக்கியமாக்கி, வாக்கியங்களை அடுக்கி, கட்டுரை ஆக்கி, வார்த்தை ஜாலங்கள் காட்டி கவிதையாக்கி, இசையை கலந்து, பாடல்களாக்கி மொழியில் புலமை பெற்ற பேறு பெற்றவர்கள் தமிழர்கள்.

'இரண்டு கேள்விகளுக்கு ஒரே பதில்' என்ற வகையில் மொழியை வைத்துக்கொண்டு விளையாடியுள்ளனர். உதாரணமாக,.

1. இந்து மறைவதேன்?
2. இலங்கை அழிந்ததேன்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும். 'ராமந்தாரத்தால்' என்பது பதில். அதாவது, முதல் கேள்வியில் இந்து எனில் சூரியன். சூரியன் மறைவதேன் என்ற கேள்விக்கு, 'ரா மந்தாரத்தால்' என்பது பதில்.

இரண்டாவது கேள்விக்கு  'ராமன் தாரத்தால்' என்பது பதில். அதாவது ராமனின் தாரமான சீதையால்! என்று பதில் கொள்ள வேண்டும்.

அதே போல்,

1.யானை தந்தச் சிமிழ் கடைவதேன்?
2. ஹரிச்சந்திர ராஜா காட்டுக்குப் போனதேன்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும், ஒரே பதில் 'சாதிச்சவாதத்துக்காக'.
அதாவது, யானையின் தந்தத்தைக் கொண்டு சிமிழ் கடைவது எதற்காக? என்ற கேள்விக்கு, 'ஜாதி சவ்வாதிற்க்காக'  என்பது பதில்.

இரண்டாவது கேள்விக்கு, 'சாதிச்ச வாதத்துக்காக' என்பது பதில்.

என்ன அழகான கற்பனை!

தமிழ் மொழியை விருப்பத்துடன் படிக்கத் துவங்கினால், அதில் ஒரு ஈடுபாடு ஏற்பட்டுவிடும்.
ஆழமும், அகலமும் கொண்ட ஆழி போன்ற இம்மொழியில் அமிழ்ந்து  தேடினால் ஆயிரமாயிரம், ஆணிமுத்துக்கள் ஆங்காங்கே அகப்படுவது உறுதி.

Image result for free image of an ocean

புதன், 10 ஜனவரி, 2018

மாட்டுவண்டிப் பயணம்

  நாங்கள் ஒவ்வொரு விடுமுறைக்கும் கரூர் மாவட்டத்தில், காவிரி கரையில் இருக்கும் எங்கள் தாத்தா பாட்டி ஊருக்கு செல்வது வழக்கம். அது ஒரு பசுமை பொங்கும் அழகிய கிராமம். நாங்கள் ரயிலிலும், பஸ்ஸிலும், ஏன் ஆகாய விமானத்திலும் கூட பயணம் செய்திருந்தாலும், எங்கள் தாத்தா வீட்டு ரெட்டை மாட்டு வண்டியில் பயணம் செய்ததை மறக்கவே முடியாது. என் அம்மாவின் பெற்றோர் வீடு அது. என்னையும் என் தங்கையையும் என் பெற்றோர் பல முறை தனியே அனுப்பியிருக்கிறார்கள். நாங்கள் இருவரும் வருகிறோம் என்றாலே, என் தாத்தா, பாட்டிக்கு ஒரே ஆனந்தமாயிருக்கும். எங்களை ரயில் நிலையத்திலிருந்தோ, பேருந்து நிறுத்தத்திலிருந்தோ அழைத்துச் செல்ல வரும் பெரியசாமிக்கோ அதைவிட பேரானந்தமாயிருக்கும். அவர் எப்பொழுதும் தாத்தா வீட்டு ரெட்டை மாட்டு வண்டியை எடுத்துவருவார். மாடுகள் இரண்டும் நன்கு குளிப்பாட்டப் பட்டு கொம்புகள் சீவப்பட்டு வர்ணம் அடிக்கப்பட்டிருக்கும். அம் மாடுகளின் கழுத்தில் சலங்கை கட்டப்பட்டிருக்கும். அவை தலையை அசைத்து ஓடுகையில் 'ஜல். ஜல்' என்ற ஒலி எழும்பும்.  ஓட்டுனரான பெரியசாமி அமர முன்புறம் ஒரு பலகை ஆசனம் இருக்கும். கூண்டு வண்டியில் மெத்தை போல் குஷன் விரிக்கப்பட்டிருக்கும். முதுகுப் பகுதியில் சாய்ந்து கொள்ள குஷன் பதிக்கப்பட்டிருக்கும். கால் வைத்து ஏறுவதற்கு ஒற்றைப் படி இருக்கும். அதில் கால் வைத்து இடுப்பை வளைத்து கூண்டு வண்டிக்குள் நுழைய வேண்டும். உள்ளே நன்கு சாய்ந்து கொண்டு அமரலாம். இறுதியில் ஏறுபவர் வெளிப்புறம் காலை தொங்கப்போட்டுக்கொண்டு காலை அந்த ஒற்றைப் படியில் காலை வைத்துக் கொண்டு உட்காரலாம். 'ஹாய்' ;ஹாய்'  என்றபடி கையில் சாட்டை ஒன்றை வைத்துகொண்டு மாடுகளை விரட்டுவார் பெரியசாமி. 'ஜல்ஜல் என்று ஒரே சீராக ஓடும் இரண்டு மாடுகளும்.  அம்மாடுகள் பழக்கப்பட்ட பாதையில் தானாகவே ஸ்வாதீனமாக ஓடும். சில சமயம் நாம் வேறு எங்காவது போவதாய் இருக்கும்போது அது தான் வழக்கமாய் செல்லும் சாலையில் திரும்பும். அப்போது பெரியசாமி அதன் மூக்கணாம் கயிற்றை இறுக பற்றியபடி 'பா பா....'  என்றபடி மாற்றுப்பாதைக்கு திருப்ப முனைவார். எங்களுக்கு அது மட்டும் மிகவும் பயமாய் இருக்கும். 'அது ஒண்ணுமில்ல பாப்பா.... ரெண்டு இழு இழு இழுத்தா ஒடியாந்துரும்' என்பார் பெரியசாமி.  மற்றபடி அந்த மாட்டுவண்டி பயணம் மிகவும் ரம்மியமாகவே இருக்கும். நானும், என் தங்கையும் பாட்டுக்கள் பாடிக்கொண்டே அதில் சவாரி செய்வோம்.

ஒருமுறை கிருஸ்த்துமஸ் விடுமுறைக்கு  நாங்கள் அப்பா, அம்மாவுடன் கிராமத்துக்கு வந்தோம். வழக்கம் போலவே பெரியசாமி மாட்டுவண்டியுடன் எங்களை அழைத்துச் செல்ல ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார்.  வெடியற்காலை நேரம்.  அது மார்கழி மாதமாதலால் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் தெருவை அடைத்தபடி பெரிய பெரிய கலர் கோலங்கள் போட்டுக்கொண்டிருந்தனர். என் அம்மாவுக்கு தன் கடந்த கால நிகழ்வுகள் மனக் கண்ணில் விரிய ஆரம்பித்துவிட்டது. அப்போது ஊர் பயன்கள் கையில் ஜால்ராவைத் தட்டிக்கொண்டு பஜனை பாடியபடி வந்துகொண்டிருந்தனர். என் அம்மாவின் சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. 'நாம் வீட்டிற்கு சென்று, பல் தேய்த்து, முகம் கழுவி, இந்த பஜனை குழுவினருடன் பெருமாள் கோவிலுக்குப் போய் வருவோம்' என்றார். எங்களுடன் பாட்டியும் கிளம்பினார். நாங்கள் ஒவ்வொரு வீட்டிலும் போடப்பட்டிருந்த புள்ளிக்கோலம், பூக் கோலம், சுழி கோலம், கலர் கோலம் ஆகியவற்றை ரசித்துக்கொண்டே கோவிலை சென்று அடைந்தோம். அதற்குள் பஜனை குழுவும் எல்லா தெருவிலும் பாடியபடி கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். பட்டாச்சார்யார் எங்களிடம் குசலம் விசாரித்தார்.பின் பெருமாளுக்குப் பூஜை செய்து, பொங்கல் நைவேத்யம் செய்து, தீபாராதனை காட்டினார். பின் அனைவருக்கும், ஒரு தொன்னையில் பொங்கலை விநியோகம் செய்தார். அட.. அட.. அட... அந்த குளிரில் சூடான அப் பொங்கல் தேவாமிர்தமாய் இருந்தது. 

ஊர்ப் பயணம் என்றாலே எங்கள் அனைவரின் கண்முன் இந்த காட்சிகள்தான் விரியும். இன்று இதுபோன்ற கிராமங்களும் இல்லை, ரெட்டை மாட்டு வண்டிகளும் இல்லை. 
Image result for image of bullock cart