செவ்வாய், 4 அக்டோபர், 2022

நாட்டரசன் கோட்டை கரிகால சோழீஸ்வரர் கோவில்

 

        

சமீபத்தில் ‘சிவகங்கை’க்கு அருகில் இருக்கும் நாட்டரசன் கோட்டை சிவன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். இந்தக் கோவிலின் தெய்வம் ‘சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர்’. ‘கரிகால சோழீஸ்வரர்’ என்பது எனக்குப் புதுமையாக இருந்ததால் அக் கோவில் குருக்களிடம் இதைப் பற்றி விசாரித்தேன்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் காவிரியில் கல்லணை கட்டி, ‘சோழநாடு சோறுடைத்து’ என்று பெருமைப் பட வைத்த கரிகால் சோழனைத் தான் நமக்குத் தெரியும். இது என்ன இக் கோவிலில் ஒரு கரிகாலர் இருக்கிறார்? இவருக்கும், அவருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? என்று நான் வியந்ததை குருக்கள் ஊர்ஜிதப்படுத்தினார்.

அதாவது, இக் கோவில் நம் கரிகால் சோழன் பூஜித்த இடமாம். அதனால் இந்த கோவிலின் சிவன் ‘கரிகால் சோழீஸ்வரர்’ என்றே அருள்பாலிக்கிறாராம்.

இந்தச் செய்தி எனக்கு சற்று வினோதமாக இருந்தது. ‘கொஞ்சம் விளக்கமாகக் கூறமுடியுமா?’ என்றன். அவரும் பக்தி சிரத்தையுடன் அக் கோவிலின் ஸ்தல வரலாறைக் கூறினார். அதைத்தான் இப்போது உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

கரிகால் சோழன் சிறந்த சிவ பக்தனாம். தினமும் சிவபூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாரம். அவர், குறு நில அரசாக இருந்த சோழ நாட்டை, காஞ்சி முதல் காவிரி வரை விரிவு படுத்தி பேரரசாக மாற்றியவர். அவர் ஒருமுறை  வேட்டையாட தெற்கு நோக்கிப் புறப்பட்டாராம். நெடு நேரம் ஆனதால் அன்றிரவு அரண்மனைக்குத் திரும்பமுடியாமல் அக்காட்டில் ஒரு குடில் அமைத்துத் தங்கும்படியானதாம். அன்று சிவபூஜை செய்யமுடியவில்லையே என்று வருத்தத்துடன் உறங்கியிருக்கிறார். அவரது கனவில் சிவன் தோன்றி, ‘தாம் அருகிலேயே இருப்பதாகக்’ கூறி மறைந்தாராம்.

உடனே, தன் வீரர்களை அழைத்து ‘சிவபிரான் இருக்கும் இடம் அருகில் ஏதாவது இருக்கிறதா’ என்று தேடிப்பார்க்க உத்தரவிட்டுள்ளார். தேடிச்சென்ற வீரர்கள் ஒரு தாமரைக் குளத்தின் அருகில் ஒரு லிங்கம் இருப்பதைப் பார்த்து அரசனிடம் அறிவித்தனராம். மகிழ்ந்த அரசன் அந்த இடத்திலேயே லிங்கத்திற்கு பூஜை செய்திருக்கிறார்.

அரசன் பிரதிஷ்ட்டை செய்த லிங்கமாதலால், அன்றிலிருந்து ‘கரிகால் சோழீஸ்வரர்’ என்றே அழைக்கப்படுகிறாராம். அந்த வீரர்கள் பார்த்த குளமும் இப்போது ‘வீரகண்டான் குளம்’ என்றே அழைக்கப்படுகிறதாம். அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட இந்தப் பழமையான கோவிலின் திருப்பணிகளை நாட்டரசன் கோட்டை நகரத்தார் செய்துவருகின்றனராம்.

‘கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்ற முதலாம் இராஜராஜ சோழன் தாம் உருவாக்கிய ‘கங்கை கொண்ட சோழபுரத்’தில் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவிலைக் கட்டியுள்ளார்,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சோழீஸ்வரர் ஆலயம் ஒன்று உள்ளது.

இதுபோல் இன்னும் சில சோழீஸ்வரர் ஆலயங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரிகிறது. அக்கோவில்களும் ஏதாவது ஒரு சோழ அரசரைக் குறிக்கிறதா என்பது தெரியவில்லை.