வியாழன், 28 ஜூலை, 2016

தரங்கிணி நாத்தனார் தீபாவின் பையன்கள் வ்யோம், ரித்விக் பூணலுக்கு 'அழகே.. அழகு' மெட்டில் எழுதிய பாடல்.

அழகோ... அழகு...!
எல்லாம் அழகு..!
வ்யோமும், ரித்வியும்
அழகோ... அழகு...!
வேஷ்டி மட்டுமா பட்டில்...? - துண்டும்
பட்டில் இடையில் கட்டி...
நெற்றி நிறைய வெள்ளை - விபூதி
பட்டை பட்டையாய் தீட்டி....
புதுவிதமாகவே மேக்கப் போட்டு...
விதவிதமாகவே மாலைகள் சூட்டி...
பூணல் கல்யாண வைபோகம் இங்கே...
வ்யோமும், ரித்விக்கும் ஹீரோக்கள் இங்கே...!
கமதநிஸா.. கரிசா.....
கமதநிஸா... நிரிஸா ...

வேதமந்திரங்கள் ஒலித்திட....
ஹோமதூபமும் சூழ்ந்திட...
நாதஸ்வரமும் கேட்டிட...
மேளசத்தமும்  முழங்கிட....
சிறுவர்கள் கூடிக்களித்திட
அனைவரும் பேசி மகிழ்ந்திட
உறவினர்களும் கூடிட
பெரியோர்கள் ஆசி வழங்கிட
மகிழ்ச்சி வெள்ளம் எங்கும்
பெருகி பாய்ந்து ஓட....
ரித்விக் வ்யோமும் வாழ்க!
வாழ்க! வாழ்க! வாழ்க!

கமதநிஸா கரிஸா..
கமதநிஸா  நிரிஸா !
                    (அழகோ! அழகு!)

அபி - சித்தார்த், தங்கள் பையன்கள் ஸ்ரீவத்சனுக்கும், ஸ்ரீசரணுக்கும், மற்றும், சித்தார்த்தின் அண்ணா தன் பையன் ஸ்ரீநிகேதனுக்கும் ஜூன் 9, 10 தேதிகளில் நிகழ்த்திய உபநயனத்தில் பாடிய பாடல்.'மாலை சாற்றினார்' மெட்டு.

பூணல் கல்யாணம்! - மும்மூர்த்தி
பூணல் கல்யாணம்!
ஸ்ரீநிகேதன், ஸ்ரீவத்சன், ஸ்ரீசரணின் கல்யாணம்...
                                             (பூணல் கல்யாணம்)

வேத மந்த்ரமும், -சூழும்
ஹோம தூபமும்,
பாதுகாத்து, பேணிகாத்து
பக்கபலமாய் நின்றிடும்...(வேத)
மார்பினை சுற்றிவரும்
முப்புரிநூல் தாத்பர்யம்.
                                      (பூணல் கல்யாணம்)

காயத்ரி மந்த்ரம் - நித்ய
சந்தியாவந்தனம்!
பாரம்பரிய சின்னம் - இதை
பெருமையோடு நோக்கணும் (காயத்ரி)
தேவர்கள் ஆசியும்,
உறவுகளின் வாழ்த்துடனும்
                                     (பூணல் கல்யாணம்)



திங்கள், 4 ஜூலை, 2016

மகுடாபிஷேகத்திற்கு ஒரு மகிழமலர்ச்செண்டு. - திரு.வெ .கோபாலனின் 80 ம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் வாசித்தது.

அரங்கிலுள்ளோர் அனைவரையும்
அடக்கத்துடன் வணங்குகின்றேன்!  

கலைத்துறைகள் பலவற்றில்
காலூன்றி சேவையாற்றும்
மகத்தான மாமனிதனுக்கு -
மகுடம் சூட்டி மகிழ்ந்திருக்கும்
ஆன்றோர்கள் அவைதனிலே,
அணில்குஞ்சு நான் வந்து,
இயன்றவரை என் முதுகில்
மணல் சுமக்க விழைகின்றேன்!

தமிழ் பணிகள் செய்துவரும்
தலைசிறந்த குடிமகனின்
அறிமுகம் கிடைத்ததற்கே - நான்
முகம் மலர்ந்து போகின்றேன்! - அவரின்
தொண்டினைப் பற்றியெல்லாம் இதுகாறும்
துல்லியமாய் எடுத்துரைத்தீர் - நான் அவரின்
பண்பினைப் பற்றி மட்டும்
பணிவாகக் கூறுகின்றேன்!

பதவி ஓய்வு பெற்றபின்
சாய்வு, தொய்வு ஏதுமின்றி
கலைப்பணியே கடமையென
கண்ணியமாய் வாழுகின்றார்.
எழுத்துச் சரத்துக்குள் எண்ணிலடங்கா
எண்ணங்களை ஏற்றிவைத்து
வலைத்தளத்தை வடிகாலாய்
வடிவமைத்துக் கொண்டுள்ளார்.

அவரோடு உரையாடுகையில்,
கருத்துச் செறிவோடு
கணக்கற்ற செய்திகளும்,
வருடக் குறிப்போடு
வரலாற்று நிகழ்வுகளும்,
உணர்ச்சிப் பெருக்கோடு
உதிரும் கவிதைகளும் - என்
சிற்றறிவுக்குள்  செல்லமுடியாமல்
சிக்கித் தவித்ததே உண்மை!

எளிமையின் உருவமவர்!
எளிதில் பிறர்க்கு உதவுபவர்!
சிந்தனை செய்வதில் செம்மல்!
சமூக சீர்திருத்த ஆர்வலர்!
அறிவுச் சுரங்கம்!
அள்ளக் குறையா அட்சயபாத்திரம்!
கற்பனையின் உச்சம்!
காருண்யத்தின் விருட்சம்!

கதை, கட்டுரை, நாடகங்கள்
இலக்கியம், வரலாறு, நாட்டியங்கள்
இவையெல்லாம் அவரின் சுவாசங்கள்!
அவற்றிற்கெல்லாம் நேசமாய் என் வந்தனங்கள்!
விழா நாயகனாம் திரு.கோபாலனின்
வானுயர்ந்த செயல்திறனை,
கார்மேகம் சூழ்ந்துவந்து
நீர்துளியால் வாழ்த்தட்டும்!
வான் மீதிருந்து தேவர்கள்
வாழ்த்துப்பா பாடட்டும்!

ஒரு மலருக்குச் சிறப்பு - அதன்
நிறமும், மணமும்.
கடலுக்குச் சிறப்பு - அதன்
அலையும், ஆழமும்.
மலையின் சிறப்பு - அதன்
உயரமும், சிகரமும்.
தஞ்சையின்  சிறப்பு - அதன்
பெரியகோவிலும்,
வெ.கோபாலனின் அரும்பெரும் தோண்டும்! - ஆம்
தஞ்சையின்  சிறப்பு - அதன்
பெரியகோவிலும்,
வெ.கோபாலனின் அரும்பெரும் தோண்டும்!

வாழ்க அவரின் பணி!
வளர்க அவரின் தொண்டு!

நன்றி வணக்கம்!