செவ்வாய், 27 செப்டம்பர், 2022

கொலுப்படியும் அட்வான்ஸ் பணமும்

 


                            சிறுகதை

நம்ம கதையோட கதாநாயகி அப்படி ஒண்ணும் ரொம்ப நாட்டுப்புறமில்ல. தாம் முற்போக்குக் கருத்துக்கள் கொண்டவள்ங்கறதுதான் அவளோட எண்ணம். அதோட வெளிப்பாடா, ‘கணவனை பேர் சொல்லித் தான் கூப்பிடணும். பேர்ங்கறது எதுக்கு இருக்கு?’ ன்னு அவள் காலேஜ்ல படிக்கும்போது ஃப்ரெண்ட்ஸ் கூட வாதிடுவாள். ஆனா இப்போ அப்படி கூப்பிடறாளா ன்னா… அதுதான் இல்ல.

‘கல்லானாலும் கணவன் புல்லானுலும் புருஷன்’ங்கறதையும் பழித்துப் பேசுவாள். ‘அதெப்படி? அவன் சொல்ற எல்லாத்துகும் என்னால ஆமாம் சாமி போடமுடியாது. எனக்குப் பிடிச்சிருக்கணும். எனக்குன்னு கருத்து இருக்கு’ அப்படீம்பாள். ஆனா இப்போ அப்படி இருக்காளா ன்னா அதுவும் இல்ல. இத்தனைக்கும் அவள் கணவன் அப்படி ஒண்ணும் அவளைக் கட்டிப்போடலை. இவதான் கட்டுப்பெட்டி மாதிரி அவர் சொல்றதை வேதவாக்கா நினைச்சு அப்படியே, அதன்படியே நடக்கறா.

இத்தனை நாள் கழிச்சு இப்பெல்லாம் அவளுக்குத் தோண்றது… ‘சிலதை நாமே ஏன் முடிவெடுக்கக்கூடாது?’ன்னு. நல்ல மாற்றம்தானே! ஆனா அதோட விளைவு என்ன ஆச்சு தெரியுமா? இந்தக் கதையா உருவாகியிருக்கு.

போன வாரம், நவராத்திரி கொலுப்படி வாங்கப் போனா ரெண்டு பேரும். இதுல ‘கொலுப்படி வேணும் வாங்கலாமா?’ ன்னு அவ கேக்கவேயில்ல. அந்த நல்ல மனுஷன் தான் அவாத்து கொலுப்படி துருபுடிச்சு போயி அத போட்டாச்சுங்கறதையும், இவளுக்கோ கொலு வைக்கப் பிடிக்குமே’ங்கறதையும் மனசுல வச்சு ‘கொலுப்படி வாங்கலாமா?’ன்னு கேட்டிருக்கார். இவளும் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிண்டு அவரோட கடைக்குப் போயிருக்கா.

5 படியுள்ள கொலுப்படி 5,500 ன்னும், ரூ.500 அட்வான்ஸ் கொடுத்துட்டா நாளைக்கு வீட்டுக்கு வந்துடும்னும் கடைக்காரர் சொன்னதும், அவரும் அட்வான்ஸ் குடுத்தார். ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்துட்டா. எல்லாம் நன்னாதானே போயிண்டிருக்கு……!! இருங்கோ… இனிமேதானே ட்விஸ்ட் இருக்கு!!

அடுத்த நாள் கொலுப்படி வந்தது. ரூ500 அட்வான்ஸ் குடுத்துருக்காரு. 5000 வாங்கிட்டு வரச்சொன்னாரு..’ அப்படீன்னு அந்த கடையாள் சொன்னதும்தான் அவளின் இன்றைய மனமும், நேற்றைய மனமும் முட்டி மோதிண்டுது. வழக்கமாய் அவ அவரைக் கேட்காமல் பணம் குடுக்க மாட்டாள். ஒன்று ஆஃபீஸுக்கே ஃபோன் செய்து விஷயத்தை சொல்லிவிடுவாள். இல்லை அவரைப் பிடிக்க முடியவில்லைனா… சாயங்காலம் கடைக்கு வந்து தரோம்’ன்னு சொல்லிடுவாள்.

இன்னிக்குத்தான் அவள் மனசுல ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கே! அதனால தன் பர்ஸில் அவ்வளவு பணம் இல்லாததால், பீரோலேர்ந்து எடுத்து ரூ5000 கொடுத்துட்டாள். அவளுக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. எல்லார் வீட்டிலேயும் இப்படித்தானே நடக்கும். நமக்குத்தான் இவ்வளவு நாள் கழிச்சு ஞானோதயம் வந்திருக்கு’ன்னு நினைச்சுண்டாள்.

வீட்டுக்கு மத்யானம் சாப்பிட வந்தவர் கிட்ட ‘கொலுப்படி வந்து இறங்கிடுத்து. பணம் குடுத்துட்டேன்’ என்றாள் ‘எவ்வளவு குடுத்த?’ என்றதும் ‘சுருசுரு’ன்னு ஆனது அவளுக்கு.’அதான் நீங்க ரூ500 அட்வான்ஸ் கொடுத்ததால ரூ5000 கேட்டார். கொடுத்தேன்’ என்றாள். ‘நான் ரூ.1000 ன்னா குடுத்தேன்’ என்றாரே பாக்கலாம் சப்த நாடியும் ஒடிங்கிப்போச்சு அவளுக்கு.  

என்னடா இது இப்படி ஒரு சோதனை?ன்னு கடைக்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொன்னா ‘இல்லையே! நான் குறிச்சு வச்சிருக்கேனே. 500 தான் உங்க வீட்டுக்காரர் குடுத்தார்.’ அப்படீங்கறார் கடைக்காரர். அட நாராயணா….இப்போ என்ன பண்றது? ‘சரிசார்.. நான் சாயங்காலம் நேரில் வந்து பாக்கறேன்’ன்னு சொல்றா. அதெல்லாம் செம ஸ்மார்ட்டா ஒரு கான்ஃபிடென்ஸோட பேசுவா…

‘நீங்க நெஜம்மாதான் 1000ரூ குடுத்தேளா’ன்னு அழாக்குறையா அவர்கிட்ட கேட்டா. ‘ஆமா…. விடு விடு…. சாயங்காலம் கடைக்குப்போயி நேரில் பாக்கலாம்’னு கூலா அவர் சொன்னார். ‘நான் உங்க கிட்ட ஃபோன் பண்ணி கேட்டுட்டே குடுத்திருக்கலாமோ’ன்னு அவ கேக்க… ‘ஏன் அதனால என்ன… எங்கேயும் போயிடாது நம்ம பணம். நேரில் போயி நாம கேப்போம்’ னு அவர் ரொம்ப சாதாரணமா சொன்னார்.

கொஞ்ச நேரத்துல பாருங்கோ… காலிங் பெல் அடிக்கறது. அதே கடை பையன். ‘அம்மா.. மன்னிக்கணும். கோபிக்கக்கூடாது. சின்ன தப்பு நடந்து போச்சு. நீங்க ஃபோன் பண்ணின உடன எங்க ஐயா எல்லா கணக்கையும் செக் பண்ணிப் பார்த்தார். எக்ஸஸ் 500ரூ இருந்ததும் சிசிடிவி கேமரா ல பார்த்தார். எங்க ஐயா 500ரூ தான் தரச் சொல்றாரு. உங்க சார் முதல்ல ஒரு 500 நோட்டைக் குடுத்துட்டு, இந்தாங்க இன்னொரு 500ரூ ஐயும் அட்வான்ஸா வச்சுக்கங்க’ன்னு இன்னொரு நோட்டைக் குடுக்கறாரும்மா’ மன்னிச்சுக்கங்க’ன்னு சொன்னார்.

.‘நாமும்தானே அவருடன் கடைக்குப் போனோம். அவர் 500 குடுத்தாரா…. 1000 குடுத்தாரா’ன்னு கவனிக்கத் தவறியது மட்டும்தான் இந்தக் கதையில் நடந்த தப்பு..’ கையில் வாங்கிய 500ரூபாய் நோட்டு அவளுக்கு இதை உணர்த்தியது.