செவ்வாய், 29 டிசம்பர், 2020

கொரோனா விக்டிம்

 


வந்ததுய்யா…… வந்தது……

‘எதிர் வீட்டுல இருக்கு… பக்கத்து வீட்டுல இருக்கு… உங்க வீட்டுல இருக்கா?’ ங்கற ஒரு விளம்பரம் மாதிரி ‘இங்க இருக்கு, அங்க இருக்குன்னு பாத்துட்டிருக்கும்போதே அது எங்க வீட்டுக்கு வந்துவிட்டது. சைனாலேர்ந்து கிளம்பி, அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் இத்துனூண்டு கிருமிக்கு எப்படி என் மேல ஒரு மோகம் வந்ததுன்னு தெரியலெ. விடாம காய்ச்சல் இருந்துட்டே இருந்தது. உடனேயே ஹோம் ஐசொலேஷனை நான் கடைபிடிக்க ஆர்ம்பிச்சேன். அப்ப கூட ‘இது அதுவா இருக்காது. இது வேறதான்னு பிளட் டெஸ்ட் குடுத்தேன். ‘டெங்கு’, ‘டைஃபாய்ட்’, எல்லாத்துக்கும் ‘நெகடிவ்’ ‘நெகடிவ்’னு வந்தபோதும். ‘கொரோனாவும் நெகடிவ்’ தான்னு பாஸிட்டிவ்வா தான் நான் நம்பினேன். அதனாலயோ என்னவோ அது என்னை ஏமாத்தலை. ஆமாம். ‘கொரோனா பாஸிட்டிவ்”

எப்படி…? நான் எங்குமே போகாமல் வீட்டிலேதான் இருந்தேன். எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தலையாய கடமையா கடைபிடிச்சுட்டுதான் இருந்தேன். அப்போதான் என் மாமியார் வயோதிகத்தின் காரணமா இறந்தாங்க. அப்போகூட எங்க ரிலேட்டிவ்ஸ் ரொம்ப பேர் வரலை. ஆனாலும் அக்கம்பக்கம். நண்பர்கள்னு கொஞ்ச பேர் வந்தாங்க. எப்படியோ, எங்கிருந்து வந்ததோ…. வந்துவிட்டது. ஜுரத்துடன், இருமலும் சேர்ந்துகொள்ள பயம் வந்துவிட்டது.

பங்களூரிலிருந்து எங்கள் மகள் இருவரும், வொர்க் ஃப்ரம் ஹோம்’ அடிப்படையில் வீட்டிற்கு வந்துள்ளனர். ஒரு வயது பேத்தியும் வீட்டில் இருந்ததால், அரசு ‘கொரோனா முகாம்’ல டெஸ்ட் குடுத்துட்டு வந்தோம். ரெண்டு நாள்ள முனிஸிபாலிட்டியிலிருந்து, ‘உடனே இங்க வாங்கம்மா. உங்களுக்கு ‘கொரோனா பாஸிட்டிவ்’ என்ற ஃபோன் வந்தது.  தீண்டத்தகாத ஒரு வஸ்து போல் ஆகிவிட்டது போன்ற உணர்வு தோன்றியது.

அரசு மருத்துவமனையில் வேகன்ஸி இல்லை. உடனே என் கணவர் ஒரு தனியார் மருத்தவமனைக்கு அழைத்துச் சென்றார். அவருடன் காரில் போகும் போது ‘அவருக்குத் தொற்று ஏற்பட்டு விடக்கூடாதே! வீட்டில் குழந்தைகள், பேத்தி எல்லோரும் நலமாக இருக்க்வேண்டுமே!’ இப்படி ஒரே கவலை மயம்.

இதில் என் மாமியார் இறந்து முதல் நாள் ஈமச்சடங்கும், இரண்டாம் நாள் காரியங்களும்தான் முடிந்திருக்கிறது. அப்படி அப்படியே எல்லாத்தையும் விட்டுவிட்டு நான் பாட்டிற்கு ஆஸ்பத்ரியில்.

சும்மா சொல்லக்கூடாது. அங்கு டாக்டர், ட்யூட்டி டாக்டர், ஸிஸ்டர்கள் எல்லோரும் எனக்கு தெய்வமாகத் தெரிந்தார்கள். டாக்டர், வீடியோ காலில் தினமும் பேசுவதோடு, ட்ரீட்மென்ட் பற்றியும், மருந்துகள் பற்றியும் விளக்கிச் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது.

‘நம் உடல் அமைப்பு ரொம்பவும் ஆச்சர்யமானது. என் உடம்புக்குள் ஒரு வைரஸ் நுழைந்திருக்கிறது. உடனே வெள்ளை அணுக்கள் சுறுசுறுப்பாகி, அதோடு சண்டை போட்டு துரத்த முயற்சிக்கிறது, இந்த புதுவித வைரஸும் வலிமையாக எதிர்சண்டை போடுகிறது. அதனால் வெள்ளை அணுக்கள் விடாமல் அதைத் துரத்த போராடும் போராட்டத்தில், சில உள்ளுறுப்புகளையும் அது தாக்குகிறது. அதனால் ‘ஸ்டீராய்ட்’ கொடுத்து முதலில் வெள்ளை அணுக்களின் வேலையை நிறுத்துகிறார்கள். அதற்குப் பிறகு, நமக்குத் தெரிந்த பாரஸிட்டமால் டைப் மருந்துகள் தாம். எனக்கு லங்க் டேமேஜ் ரொம்ப ஆகாததால் 7 நாட்களில் டிஸ்சார்ஜ்’

இந்த விஷயங்களையெல்லாம் டாக்டரே என்னிடம் வீடியோ காலில் கூறினார். ‘கொரோனா ஐசோலேட்டட் வார்டுக்கு உறவினர்கள் வர அனுமதியில்லை. ஆனாலும், நல்ல உணவு, நல்ல கவனிப்பு, ‘எப்படியோ போடா மாதவா…. ஒரு வாரம் சொகுசாத்தான் இருந்துட்டு வந்திருக்கேன்.

அதற்குள் என் வீட்டில் இருந்தவர்க்ளுக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்கிறது, அதில், என் கணவர், மாப்பிள்ளையைத் தவிர பெண்கள் இருவர், பேத்தி என்று மூன்று பேருக்கும் பாஸிட்டிவ். ஆனால் வயது, இன்ஃபெக்ஷன் ரேட் அடிப்படையில் அவர்களுக்கு ஹோம் க்வாரண்டைன் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘தூண்’ போல் நின்று என் கணவர் எங்கள் எல்லோரையும் கவனித்திருக்கிrறார்.

‘கொரோனா’ ‘கொரோனா’ ன்னு உலகமே முழங்கும் போது ‘என்னதான் அது?’ ன்னு, தெரிஞ்சுக்க ஒரு விக்டிம்மா இருந்தேனாக்கும்’ அப்படீன்னு பெருமை பட்டுக்கலாம்.

இப்படியே ஓஓஓஓஓஓடிப் போனது 2020. 2021 ஏ வருக வருக…. திடமான மனதுடனும், தெளிவான பார்வையுடனும் புன்னகைத்து உன்னை வரவேற்கிறோம்.

புதன், 23 டிசம்பர், 2020

ரூம் ரென்ட்


எங்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த பெண்ணுக்கு மணமாகிவிட்டது. அவளும் அவள் கணவனும் ஐ.டி.கம்பெனிகளில் பணியாற்றுகிறார்கள். அவர்கள், தங்கள் ஒருவயது குழந்தையுடன் பங்களூரில் வசிக்கிறார்கள். என் இரண்டாவது பெண்ணும் பங்களூரிலேயே ஒரு ஹாஸ்டலில் தங்கிக்கொண்டு ஐ.டி.கம்பெனி ஒன்றில் பணியாற்றிவருகிறாள். நான், என் கணவர் மற்றும் மாமியாருடன் தஞ்சாவூரில் வசிக்கிறேன்.

2020 மார்ச்சு மாதம் நாடு முழுவதும் டோடல் லாக்டவுன் என்று அறிவித்தவுடன், அலுவலகங்கள் எல்லாம் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ செய்யச்சொல்லி அறிவுறுத்திவிட்டனர். ஹாஸ்டலிலும் உணவு கிடைக்காது. இங்கிருந்து காலி செய்தோ செய்யாமலே கிளம்பிவிடவேண்டும். அவள் எங்களுக்கு ஃபோன் செய்துவிட்டு, தேவையான சில டிரஸ்கள், லாப் டாப், சார்ஜர், போன்றவற்றை மட்டும் பேக் செய்துகொண்டு, தன் அக்கா வீட்டிற்குப் போய்விட்டாள்.

இங்கே என் கணவர், “நாம் போய் அவளை இங்கே அழைத்துவந்து விடலாம்” என்றார்.

அப்போதுதான் ‘தப்லீ கி ஜமாத்’ பற்றிய செய்திகள் வேறு வந்த வண்ணம் இருந்தன. “இப்போ ஸ்டேட் விட்டு ஸ்டேட் நாம் போறது சரியா தெரியலியே. அவள்தான் ஸேஃபாக இருக்கிறாளே” என்று நான் கூறினேன்.

“இல்ல… இல்ல.. இப்போ உடனடியா அவ இங்க வந்துடறதுதான் நல்லது. இன்னும் என்ன மாதிரி தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுமோ” என்று இவர் கூறியதால், அடுத்த நாளே காரில் சென்று அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம்.

ஹாஸ்டலிலேயே அவள் சாமான்கள் மாட்டிக்கொண்டன. மார்ச் மாத ரென்ட்டை அக்கவுன்ட் ட்ரான்ஸ்ஃபர் செய்தாள். ஏப்ரல் வந்தது.. போனது ரென்ட் அனுப்பினாள். மே, ஜூன், ஜூலை யும் வந்துவிட்டது. அப்போது தான் ‘அனாவசியமாக ரென்ட்டை அனுப்பவேண்டியிருக்கிறதே’ என்று தோன்ற ஆரம்பித்தது. பெரிய பெண்ணிடம் ‘நீ போய் வகேட் செய்யமுடியுமா?’ என்று கேட்டாள். ‘சரி பார்க்கிறேன்.’ என்றாள்.

இதில் பலவித நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் ரூம் சாவி இங்கு உள்ளது. இரண்டாவது, சின்ன குழந்தையை வைத்துக்கொண்டு, அவள் ஹாஸ்டல் வரை போகமுடியுமா? என்பதே சந்தேகமாக இருந்தது. மாப்பிள்ளையை லேடீஸ் ஹாஸ்டலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். இருந்தாலும் அவள் சொன்னாள், ’மொதல்ல நீ சாவியை கொரியர் பண்ணு. நான் ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசிக்கிறேன்’  ‘சரி’யென்று சாவியை கொரியர் செய்தோம்.

அப்போது கர்னாடகாவில் கொரோனா கேஸ்கள் அதிகம் இருந்தது. அவளால் எந்த ஏற்பாடும் செய்யமுடியவில்லை. அப்போது ஃபேஸ் புக்கில் வந்த ஒரு விளம்பரம் கண்ணில்பட்டது. ‘ஈஸி மூவர்ஸ்’ என்ற கம்பெனி வகேட் செய்து சாமான்களை அனுப்புவதாகப் புரிந்தது.

எங்களுக்கு ஒரே குழப்பம். இது போன்ற கம்பெனிகளை நம்பலாமா? இது சரிதானா?’ என்று. விளம்பரத்தில் இருந்த ஃபோன் நம்பருக்கு கால் செய்தோம். பேசும்போதே புரிந்தது அவர்கள் தமிழர்களென்று. ‘வகேட் செய்து தஞ்சாவூருக்கு அனுப்புவதற்கு Rs.10,000 என்று கோட் செய்தனர். மீண்டும் குழப்பம். எல்லா சாமான்களும் இங்கு வந்தவுடன் நிலைமை சீராகி ஆஃபீஸ் வரச்சொல்லி ஆர்டர் வந்ததென்றால் சிரமமாயிருக்குமே என்று. பெரிய மகள் வீட்டிற்கு அனுப்பலாமா என்று கேட்டோம். அதற்கு 4,000 என்றனர். ‘அவர்கள் வீட்டிலிருக்கும் சாவியை வாங்கிக்கொண்டு போய் வகேட் செய்ய வேண்டும்’ என்றோம். ‘அதற்கு R.200’ என்றனர். பேரம் பேசாமல் சரியென்றோம்.

அதே போல் நடந்தது. பெண் வீட்டிலிருந்து சாவி வாங்கிக்கொண்டு ஹாஸ்டலுக்குப் போய் அங்கிருந்து வீடியோ கால் செய்து ரிஸ்ப்ஷனிஸ்ட்டோடு பேசச் செய்தனர். அவர்கள் பர்மிஷன் கிடைத்தது. ரூமுக்குள் போய் ஒவ்வொன்றையும் வீடியோவில் காட்டி, எங்கள் சாமான்களை கலெக்ட் செய்தனர். அவர்களுடன் ஹாஸ்டல் ஸ்வீப்பரும் உடன் இருந்தார். செப்பல் ஸ்டாண்டிலிருந்த ஷூஸ், பாத்ரூமிலிருந்த சோப், பிரஷ் போன்ற சாமான்கள், கப்போர்டிலிருந்த டிரஸ்கள், ஷெல்ஃபில் இருந்த தட்டு, ஸ்பூன், கப் போன்றவை…. இப்படி அத்தனையையும் அசெம்பிள் செய்து கொண்டனர். கதவுக்குப் பின்னாலிருந்த காலண்டர் வரை அனைத்தையும் பேக் செய்து பெரிய பெண் வீட்டிற்கு அனுப்பிவிட்டு. அகௌன்ட் நம்பர் கொடுத்தனர். சரியாக 4,200/- என்று குறிப்பிட்டதும் எங்களுக்குத் திருப்தியாக இருந்தது.

ஆகஸ்ட்டிலிருந்து இப்போது வரை ரென்ட் பணம் மிச்சமானது. இதில் நான் அதிகம் பாராட்ட விரும்புவது, அவர்களின் தொழில் நேர்த்தியை. உருவாகிவிட்ட ஒரு பாதகமான சூழ்நிலையையே சாதகமாக்கிக்கொண்ட அவர்களின் செயல் திறனை.

அதிகம் ஆச்சர்யப்பட்டது. வளர்ந்துள்ள தொழில் நுட்பத்தை. வலைத்தளங்கள், மொபைல் ஃபோன்கள், இன்டெர்னெட் ட்ரான்சாக்ஷன்ஸ். இப்படி இருப்பதனாலேயே இருந்த இடத்திலிருந்து ஒரு வேலை முடிந்திருக்கிறது.

வாழ்க அறிவியல்! வளர்க தொழில் நுட்பம்! பெருகக தொழிலும் உழைப்பும்!

திங்கள், 21 டிசம்பர், 2020

மருத்துவப் பணி - மகத்தான பணி

 


2020 புதுவருஷம் பிறந்து நல்லாத்தான் போயிட்டிருந்தது. வந்ததுப்பா மார்ச் மாசம். எங்கப் பார்த்தாலும் ‘கொரொனா’ங்கறாங்க. ‘லாக் டவுன்’ ங்கறாங்க. ‘சோஷியல் டிஸ்டன்ஸிங்க்’கறாங்க. ‘சானிடைசர்’ங்கறாங்க. ‘வணக்கம்’னு கைகூப்புங்க. ‘கை குலுக்காதீங்க’ங்கறாங்க.

கடையெல்லாம் மூடியாச்சு. ஆட்டோ, கார் எல்லாம் நிறுத்தியாச்சு, ஸ்கூல், காலேஜ்ஜெல்லாம் லீவு விட்டாச்சு. தியேட்டர், மால், ஹோட்டல், தனியார் துறை அலுவலகங்கள், தொழிற்சாலைகள் எல்லாம் திறக்க தடை விதிச்சாச்சு. வீட்டுலேயே எல்லாரும் முடங்கியாச்சு.

இதெல்லாம் நம்ம மனசுக்கே புரியாத புதிரா…. வினோதமான சூழ்நிலை உருவானதா தோணும்போது ஒடம்புல இருக்கற மத்த பார்ட்ஸ்க்குத் தெரியுமா? தெரியாதே! அதுபாட்டுக்கு தன்னோட வேலைய அப்பப்போ காட்ட ஆரம்பிச்சுடும். அப்படித்தான் ஒரு நாள்  நைட் சரியான பல்வலி வந்தது. பாரஸிட்டமால் போட்டுப் பார்த்தேன். கொறயவேயில்ல. டாக்டர்கிட்ட போகமுடியுமா, டென்டிஸ்ட் க்ளீனிக்குக்கு வருவாரா? இப்போ இருக்கற இந்த ‘கொரோனா’ கண்டிஷன்ல க்ளீனிக்குக்குப் போறது அட்வைசபிளா? இப்படி பல யோசனைகள் தோணினாலும் பல்லுக்குத் தெரியலியே…கொரோனா பத்தி, புரிஞ்சுக்கலியே லாக் டவுன் பத்தி. வேற வழியில்லாம டென்டிஸ்ட்கிட்ட போனேன். அவர் வெள்ளை கலர்ல பர்சனல் ப்ரொடெக்ஷன் எக்கூப்மென்ட் (PPE) போட்டு தலைலேர்ந்து, கால்வரை கவர் பண்ணியிருந்தது வித்தியாசமா இருந்தது. விண்வெளி வீரர்கள் போல இருந்தது அவரோட ஷூ. கண்ணைக்கூட கவர் பண்ணி கண்ணாடி போட்டிருந்தார். கைகள்ள க்ளௌஸ் போட்டிருந்தார். நம்ம டாக்டர்தானா அதுன்னே தெரியல. போனவுடனே டெம்பரேசர் செக் பண்ணி, சானிடைசர் கொடுத்து. ‘என் உடல் நிலை காரணமாகவே க்ளீனிக்குக்கு வந்துள்ளேன். கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் நானே ஏற்கிறேன்’ அப்படீன்னு ஒரு பேப்பர்ல சைன் வாங்கி, அப்புறம் ட்ரீட்மென்ட் செய்தார். அது ஒரு வித்தியாசமான நிகழ்வா இருந்தது.

அடுத்த படலம் ஆர்த்தோ க்ளீனிக். என் பெண்ணோட ஷட்டில் விளையாடும்போது ஷோல்டர்ல லெகுமென்ட் டிஸ்லொகேட் ஆகிவிட்டது. இம்முறையும் க்ளீனிக் போறதுக்குள்ள அதே குழப்பம். ஆனா கையத் தூக்கவே முடியாம சரியான வலி. போய்த்தான் ஆகணும். அப்பாயின்ட்மென்ட் வாங்கினேன். அந்த டாக்டரும் ஃபுல்லி எக்யூப்டாக இருந்தார். அவருக்கும் பேஷன்ட்டுக்கும் நடுவுல ஒரு ட்ரான்ஸ்பேரன்ட் ஸ்க்ரீன் இருந்தது. அது மட்டுமில்லாம…. இன்டர்வ்யூ எடுக்கறவங்க தலையோடு அட்டாச்டா இருக்கற ஒரு மைக் வச்சிருப்பாங்க இல்ல… அது போல தலையில் மாட்டி, மைக்கில் பேசி அங்கிருந்தபடியே ட்ரீட் செய்தார். நான் பேசினது அவருக்குக் கேட்கும் போலிருக்கு. அவர் மட்டும் மைக்கில் பேசினார். தொட்டு பார்க்கவில்லை. கையைத் தூக்கிப் பார்க்கவில்லை. எக்ஸ்ரேயைப் பார்த்து ஜஸ்ட் மெடிஸின்ஸும், கையை பொஸிஷன்ல வைக்கறமாதிரி ஒரு ஸ்லிங்கும் ப்ரிஸ்க்ரைப் செய்தார். ட்ரீட்மென்ட் முடிந்தது. அவ்ளோதானா? டாக்டர் எக்ஸாமின் பண்ணி பாக்கவேயில்லையேன்னு ஒரு குறை எனக்கு. ஆனாலும் நன்கு குணமாகிவிட்டது. இது எனக்கு ஏற்பட்ட அடுத்த வித்யாசமான நிகழ்வு.

அடுத்தது என் ஹஸ்பென்ட்டுக்கு. அவர் கண்ணில் ஏதோ உறுத்தல் ஏற்பட்டதால ஐ ட்ராப்ஸ் போட்டு பார்த்தோம். ஒண்ணும் சரியாகலை. ஆப்தமாலஜிஸ்ட் கிட்ட அடுத்த படையெடுப்பு. அவர்கிட்ட ஆன்லைன்ல மட்டும்தான் அப்பாயின்ட்மென்ட் என்றார்கள். நல்லவேளையாக அன்றே கிடைத்துவிட்டது. க்ளீனிக் மாடில. ஆனால் அண்டர்க்ரௌண்ட் கார் பார்க்கிங்கில் ஒரு நர்ஸிங்க் டீம் உட்கார்ந்துருந்தது.  எல்லாருமே ஃபுல்லி கவர்ட்டாக இருந்தனர். சானிடைசர், டெம்பரேசர் செக்கிங்க் எல்லாம் இருந்தது. அங்கேதான் ரெஜிஸ்ட்ரேஷன். அங்கேயே ப்ரஷர் செக் பண்ணி, கம்ப்ளெயின்ட் பத்தி கேட்டு, ட்ராப்ஸ் போட்டு…… சரிதான் டாக்டரே பாக்கமாட்டார் போலிருக்குன்னு நினைச்சோம். ஆனா கொஞ்ச நேரத்துல எங்க டர்ன் வந்தது. பேஷன்ட் மட்டும்தான் அல்லௌட்னாங்க. என் ஹஸ்பென்ட் போய்விட்டு வந்து சொன்னது. “இங்கும் டாக்டர் PPE போட்டிருந்தார். அவர் ஒரு மூலையிலும், நான் ஒரு மூலையிலும் இருந்தோம். என் கண்ணை ப்ரொஜெக்ட் செய்து அவர் முன்னால் இருந்த பெரிய ஸ்க்ரீனில் பார்த்து தூசியை லொகேட் செய்தார்.  அவர் கொடுத்த இன்ஸ்ட்ரெக்ஷன்படி ஒரு ஸிஸ்டர் மட்டும் பக்கத்தில் வந்து ஒரு செகன்ட்டில் எடுத்துவிட்டார். உறுத்தல் போயேபோச்… போயிந்தே… இட்ஸ் கான்” இது மூன்றாவது வித்தியாசமான நிகழ்வு.

டென்டிஸ்டிடம் நான் போன போது, “உங்க ப்ரொஃபஷன்ல இந்த கொரோனா பீரியட் பத்தி உங்களொட ஒபீனியன் என்ன டாக்டர்?”னு கேட்டேன்.

“இந்த டிரஸ்ஸை நாள்பூரா போடறதால ஸ்வெட்டிங்க் இருக்கும், அதனால தலைவலி வருது. ஒருவித டிஸ்கம்ஃபர்ட் ஆல்வேஸ் இருக்கும். வாய்க்குள்தான் எங்க வேலை இருக்கறதுனால இன்ஃபெக்ஷனுக்கு எப்பவேணா ஆளாகலாம் ங்கற கான்ஷியஸ் இருந்திட்டே இருக்கும்”னு அவர் சொன்னதும் ஒருவித பரிதாபத்துடன், அவர் மேல பெரிய மதிப்பும், மரியாதையும் தோன்றியது. டென்டிஸ்ட் மட்டுமில்ல. எல்லா டாக்டர்களும் மனித உருவில் PPE அணிந்த தெய்வமாகவே தெரிந்தனர்.

‘நாடி பிடித்து பார்த்தல்’ ங்கறதையே மெடிகல் சிலபஸ்லேர்ந்து எடுத்துடுவாங்க இனிமேன்னு விளையாட்டாய் நான் சொல்லி சிரித்தாலும், இந்த கொரோனா காலத்துல டாக்டர்கள் செய்த அளப்பதற்கரிய சேவையை மனப்பூர்வமாக பாராட்டறேன்.

.

பட்டம்முக்கண்ணு

 

பங்களூரில் ஐ.டி. நிறுவனங்களில் வேலையிலிருக்கும் என் இரண்டு மகள்களும் ‘work from home’ அடிப்படையில் வீட்டிற்கு வந்தது எதிர்பாராத மகிழ்ச்சியைக் கொடுத்தது. என் மூத்த பெண்ணிற்கு மணமாகி ஒரு பெண் குழந்தை உண்டு. அவளின் புகுந்த வீடும் எங்கள் ஊரானதால் அவர்களும் எங்கள் ஊருக்கு வந்துவிட்டனர்.

சென்ற ஆண்டு எங்கள் பேத்தி பிறந்து மகளை அவர்கள் வீட்டிற்குக் கோண்டு விடுவதற்கு முன்தான் எங்கள் புது வீட்டிற்கு கிரஹப்பிரவேசம் முடித்திருந்தோம். இப்போது பேத்தி, தவழ்ந்து கொண்டும், பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க முயற்சித்துக் கொண்டும் இருந்தாள். சொந்த ஊருக்கு வந்த அவர்கள் எங்கள் வீட்டில் 10 நாட்களும், அவர்கள் வீட்டில் 10 நாட்களுமாக இருந்தனர்.

அப்போது எங்கள் பேத்தி, வீடு முழுவதும் தவழ்ந்து சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

இறைவா… இறைவா… இறைவா….”

என்ற பாடல் பொங்கி பூரிக்கச்செய்தது.

‘உம், அம்’ என்ற ஒலிகளுக்கு மேல் ‘ம்ம்மா’ ‘ப்ப்பா’ ‘தத்தத்தத்த’ என்று த்வனி குட்டி பேச ஆரம்பித்தது லாக்டவுன் சமயத்தில் எங்கள் புது வீட்டில்தான்.

பங்களூரில் ஹாஸ்டலில் இருந்த எங்கள் சின்ன பெண்ணிற்கு, அக்காவுடன் சேர்ந்து எங்கள் வீட்டிலேயே இருக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததோடு, குட்டிப்பாப்பாவோடு சேர்ந்து விளையாடவும், அதன் ஒவ்வொரு அசைவிற்கும், வளர்ச்சிக்கும் ரசித்து மகிழ்வதற்கும் ஏதுவான காலமாயிற்று இந்த லாக்டவுன். ‘சித்தி’யென்றால் கொள்ளை இஷ்டம் எங்கள் பட்டம்முவுக்கு. ‘சித்தி’ சொல்லு…. என்றால் ‘த்தியா’ என்று சொல்லும் அழகே அழகு.

இந்த இரண்டு பெண்களையும், ஸ்கூலுக்கு, அனுப்பி, காலேஜ் அனுப்பி, இப்போது அவர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பதை பெருமிதமாய்ப் பார்ப்பேன். இவர்களோடு மாப்பிள்ளையும். ஆளுக்கு ஒரு தனியிடத்தில், மடிக்கணினி (lap top) யோடு அமர்ந்துவிடுவார்கள். மீட்டிங்க் என்று அறைக் கதவை மூடிக்கொள்வார்கள். சில நேரங்கள் காரசார மீட்டிங்கும் இருக்கும். த்வனி குட்டி என்னிடமே இருக்கும். நானே கதை சொல்லி சாதம் ஊட்டுவேன். புத்தகப் படங்கள் காட்டுவேன். தூளியில் போட்டு ஆட்டி தூங்கச் செய்வேன். இதையெல்லாம் செய்ய ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா? ‘பட்டம்மு’ ‘பட்டம்மு’ என்று நான் கூப்பிட்டால் அது ‘அம்மம்மா..’ அம்மம்மா..’ என்று என்னை அழைக்கும்.

தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை எழுந்து நின்று நடக்க ஆரம்பித்ததும் எங்கள் வீட்டில்தான். தத்தக்கா… பித்தக்கா… வென்று நடந்து ‘தொம்’ என்று உட்காரும். காண கண் கோடி வேண்டும்.

‘தளர் நடை இட்டு வாராய்’ என்று நான் பாடுவேன். பெண்ணும், மாப்பிள்ளையும் பார்த்து ரசிப்பார்கள். அவர்களுக்கும் கிடைத்த பெரும் பேறுதான் இந்த லாக்டவுன். ‘work from home’ இல்லையென்றால் காலையில் அலுவலகம் போய்விட்டு குழந்தை தூங்க ஆரம்பிக்கும் போது வருவார்களாயிருக்கும்.

அதே போல அவரவர் தங்கள் மீட்டிங்கை எப்படி கையாள்கிறார்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியும்படி ஆயிற்று. சில நேரங்கள், ‘இப்படி கூட சொல்லியிருக்கலாமே!’ என்றோ ‘You managed well’ என்றோ பேசிக்கொள்வார்கள்.

‘அத்தியாவசியப் பணி’யான E.Bயில் D.E.யாக இருக்கும் என் கணவர் தினமும் மாஸ்க் சகிதம் அலுவலகம் சென்று வந்தார். வந்ததும் சானிடைசர், குளியல் என்ற எல்லா தற்காப்பு நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டு குழந்தைக்கு மாடு காட்டுவார். அதுவும் ‘தாத்தா தாத்தா’ என்று கூப்பிட்டு அவரைக் கட்டிக்கொள்ளும். வீடு முழுவதும் ஜனக்கூட்டமும், சுறுசுறுப்புமாக இயங்குவதைப் பார்த்து மகிழ்ந்து போவார்.

மொத்தத்தில் அந்த காலக்கட்டம் எங்கள் எல்லோருக்குமே கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் தான். ‘சோஷியல் டிஸ்டென்ஸிங்க்’ ஐ உலகமே அறிவுறுத்தும் இந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் டிஸ்டென்ஸைக் குறைத்து, அனைவரையும் சேர்ந்து இருக்கச் செய்தது இந்த ‘கொரோனா’ தான்.

செவ்வாய், 8 டிசம்பர், 2020

ஒரு வட்டத்தின் உயரம்

 

                                                 ஒரு வட்டத்தின் உயரம்

 

‘Lak Textile Palace’  என்ற என் ஸ்தாபனத்தின் எஞ்சிய சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெருமானமுள்ள டிரஸ் மெட்டீரியல்களை என் கஸின் சிவாவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு, என் கணவருடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். சிவா, என் கஸின் மட்டுமல்ல என் தொழில் குருவும் கூட. ஒரு சிறிய புள்ளியில் தொடங்கிய என் தொழிற் பயணம், மீண்டும் அதே புள்ளியை அடைந்து முழுமையான வட்டமானதைப் போன்ற ஒரு உணர்வு என் மனதை ஆக்ரமித்தது. ‘Lak Textile Palace!’ திரும்ப திரும்ப என் மனம் அதை உச்சரித்துக்கொண்டே இருக்கிறது.

நான் ஒரு 10 ஆண்டு காலம் புடவை, டிரஸ் மெட்டீரியல்கள் பிஸினெஸ் செய்துகொண்டிருந்தேன். அந்த Lak Textile Palace இன்றோடு மூடப்பட்டுவிட்டது. சிவாதான் எனக்கு இந்தத் தொழிலை அறிமுகப்படுத்தியது. அவன் ரொம்ப நாட்களாக வீட்டிலிருந்தபடியே புடவைகள் வியாபாரம் செய்து வருகிறான். அவனிடம் நான், ‘வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்ததும், நிறைய நேரம் இருப்பது போல இருக்கு. ஏதாவது செய்யலாமா என்று யோசிக்கிறேன்’ என்று சொன்னதும் உடனேயே தன்னுடைய சில புடவைகளை எனக்குக் கொடுத்து, என் தோழிகளிடையே முயற்சித்துப் பார்க்கச் சொன்னான்.

பழைய நினைவுகளில் நான் மூழ்கியிருந்தேன். ‘இளநீர் குடிக்கலாமா?’ என்றபடி காரை நிறுத்தினார் என் கணவர். அந்த இளநீர் வண்டி முன் இன்னொரு காரில் வந்தவர்கள் இளநீர் குடித்துக்கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண் நிறை மாதத்தில் இருந்தார். அவருக்குத் தந்த இளநீருக்குப் பணம் வேண்டாம் என்றார் அந்த இளநீர்காரம்மா. என்ன ஒரு தொழில் நேர்த்தி! மனிதாபிமானம்!

 நானும் அப்படித்தான் என் தொழிலில் ஒருவித பக்தியையும் நேர்த்தியையும் காட்டினேன். இல்லாவிட்டால் இத்தனை கடைகள் இருக்கும் போது எனக்கு எப்படி அத்தனை வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்? எத்தனை கடைகள் இருந்தாலும் அங்கே ஒரு இயந்திரத்தனமாகத்தான் புடவை பர்சேஸ் இருக்கும். ‘கடைக்காரர் எதையெதையோ எடுத்துக் காண்பிப்பார். அந்த கூட்டத்தில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்துவிட வேண்டியிருக்கும்’ என்று என் வாடிக்கையாளர்கள் கூறுவது வழக்கம். என்னிடம் புடவை வாங்கும் போது தனக்கு இது நன்றாக இருக்கிறதா என்று என்னிடமே கேட்பர். நானும் அவர்களுடன் நட்பாகப் பழகி என் கருத்தைக் கூறுவேன். எப்போதுமே என்னிடம் புடவை வாங்குவதில் ஒரு சௌகர்யம் உண்டு. நான் அவர்கள் இத்தனை நாள் என்னிடம் வாங்கியதை நினைவில் வைத்துக்கொள்வேன். போன தடவைதானே இதே பச்சை கலர்ல புடவை வாங்கினீங்க.. பரவாயில்லையா?’ என்று குறிப்பிடுவேன். அவர்களே மறந்திருப்பர். ‘ஆமா… ஆமா… நல்லவேளை! நானே மறந்துவிட்டேன். நீங்க நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்க’ என்பர். அவர்கள் வேறு யாருக்காவது வாங்க வந்தால் ‘என்ன நிகழ்ச்சி? எந்த வயதினருக்குப் பரிசு’ என்பதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல கலரோ, டிசைனோ, மெட்டீரியலோ எடுத்துக்காண்பிப்பேன்.

என் வாடிக்கையாளர்களின் ரசனை எனக்கு அத்துப்படியாக இருந்தது. அவர்களுக்கான ஒரு முந்தைய செலக்ஷனை நான் செய்துவிடுவதால் அவர்களுக்கு வேலை எளிதாகும். நான் அவர்கள் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்று காண்பிக்கையில் அவர்கள் ‘வேறு ஏதாவது இருக்கிறதா?’ என்றால் உடனே மீண்டும் வீட்டிற்கு வந்து அத்தனையையும் அப்படியே வைத்துவிட்டு, அவர்களைக் காக்க வைக்காமல் தேவையானதை மீண்டும் எடுத்துச் சென்று காண்பிப்பேன்.

இளநீர் நன்றாக இருந்தது. குடித்துவிட்டு மீண்டும் எங்கள் பயணத்தை துவக்கினோம். வழியில் காப்பிப்பொடியின் கமகம வாசம் அடித்தது. இந்த காப்பிப் பொடி கடை கூட எனக்கு பலவிதத்துல இன்ஸ்பிரேஷன் தந்திருக்கு. ஒரு சின்ன காப்பிப்பொடி கடை. அதில், வத்தல், வடகம், ஊறுகாய், பொடி வகைகள், வெண்ணெய் எல்லாம் வியாபாரம் ஆகும். அதைப் பார்த்துவிட்டுதான் நான் என் Palace இன் ஐட்டங்களை அதிகரித்தேன். சிவா என்னிடம் முதலில் 20 புடவைகளை மட்டும்தான் கொடுத்து பிஸினெஸ் ஆரம்பிக்கச் செய்தான். தங்களுக்கு புடவை வாங்க வருபவர்கள், தங்கள் பெண்ணிற்கு ஏற்ற ரகங்கள் என் Palace ல் இருந்தால், ஃபர்ஸ்ட் ப்ரிஃபரென்ஸ் பெண்களுக்கு கொடுப்பார்கள் என்ற ஒருவித மனோதத்துவத்தை நான் கொஞ்ச காலத்திலேயே புரிந்து கொண்டேன். சிவாவுடனான எனது அக்ரிமென்ட் சரியாக போய்க்கொண்டிருந்தது. அவன் கொடுத்த புடவைகளுக்கு எனக்கு 5% கமிஷன் கொடுத்துக்கொண்டிருந்தான். அந்தத் தொகையை சிறுக சிறுக சேமித்து, மெதுவாக என் Palace ல் சில சூடிதார் மெட்டீரியல்கள் வாங்கினேன். அப்புறம் லெகின், டாப்ஸ், பிளவுஸ் பிட்ஸ், உள்பாவாடை, சாரி ஃபால்ஸ் போன்றவற்றை வாங்கி வைத்தேன். ஒரு ‘மினி சூப்பர் மார்கெட் என் Palace!’ என்று பெருமை கூட பட்டுள்ளேன். இந்த காப்பிப்பொடி கடை மட்டுமல்ல நான் போகும் எந்த ஒரு தொழில் நிறுவனமோ, கடையோ எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடும். ‘எப்படி இத்தனை ஆட்களை வைத்து நிர்வகிக்கிறார்கள், எப்படி சம்பளம் தருவார்கள்?’ போன்ற கேள்விகள் என் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும். அந்த எண்ணத்தின் விளைவுதான் நான் தேவியையும், வாணியையும் என் Palace உடன் இணைத்துக்கொண்டது. எங்கள் பக்கத்து வீடுகளில் இருந்த அவர்களுக்குத் தைக்கத் தெரியும். என்னிடம் புடவையும், புடவை ஃபால்ஸும் வாங்குபர்களுக்கு இலவசமாக ஃபால்ஸூம், புடவைக்கு ஓரமும் அடித்துக் கொடுப்பதற்காக அவர்களை நான் வேலைக்கு அமர்த்திக் கொண்டேன். அதே போல என்னிடம் வாங்கிய புடவைகளுக்கு பிளவுஸோ, அல்லது சூடிதாரோ தைப்பதற்கு குறைந்த தையல் கூலியை நிர்ணயித்திருந்தேன். முதலில் கையிலிருந்துதான் தேவிக்கும், வாணிக்கும் சம்பளம் கொடுக்கவேண்டியிருந்தது. ஆனால் அந்த வியாபார நுணுக்கமே  பலரை, நிரந்தர வாடிக்கையாளராக்கி, என் வருமானத்தைப் பெருக்கியது.

எங்கள் கார் காலேஜ் ஒன்றைக் கடந்து சென்றது. இன்று நான் பார்க்கும் ஒவ்வொன்றும், என் மனதில் கடந்த கால நினைவுகளை நிழற்படமாக்கிக் காட்டிக்கொண்டிருப்பதைப் போல இந்த காலேஜ் கட்டிடத்தைப் பார்த்ததும், என் மனதிற்குள் மூன்று நினைவுகள் போட்டி போட்டன.

முதலாவது என் காலேஜ் நாட்கள். அப்போது என் மனதில் என் எதிர்காலத்தைப் பற்றிய கற்பனை நிறைய இருந்தது. அதில் ஒன்றுதான், ‘வேலை எதற்கும் செல்லாமல் ஒரு முழு நேர குடும்பத்தலைவியாக, குழந்தைகள், கணவன் மற்றும் குடும்பத்திலுள்ளோரை கவனித்துக்கொள்ளவேண்டும்’ என்ற என் வைராக்கியம். ‘ஒருவரால் ஒரு துறையைத் தான் சிறப்பாக கவனிக்கமுடியும்’ என்ற எண்ணம் எனக்கு உறுதியாக இருந்தது.

அது சரியா, தவறா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், 2 குழந்தைகள் பிறந்து அவர்களின் காலேஜ் படிப்பும் முடியும் வரை எனக்கு என் முடிவு சரியென்றே பட்டது. அதற்குப் பிறகுதான் சற்று போரடிக்க ஆரம்பித்தது. அதைத் தவிர, நான் என் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக ஒன்றுமே செய்யவில்லை என்ற எண்ணமும் தலை தூக்கியது. என் கணவர் அரசாங்கத்தில் நல்ல பொறுப்பான பதவியில் இருந்தார். அதனால் எங்களுக்கு என்றுமே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதில்லை. இருந்தாலும் என் மன ஆழத்தில், நாமும் ஏதாவது செய்யவேண்டும், அது வருமானம் தரக்கூடியதாக இருக்கவேண்டும் என்ற உறுதியான உணர்வு ஏற்பட்டது. அப்போதுதான் சிவா மூலமாக பிஸினெஸ் செய்ய ஆரம்பித்தேன். நான் காலேஜ் மாணவியாக இருந்தபோது என் மனதில் இருந்த எண்ணமும் எனக்கு இல்லாமல் இல்லை.

இரண்டாவது நிகழ்ச்சி, பிஸினெஸ் ஆரம்பித்த புதிதில், எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த லேடீஸ் காலேஜ் பிரின்ஸிபலை நான் போய் பார்த்து என்னைப் பற்றியும், என் பிஸினெஸ் பற்றியும் அறிமுகப்படுத்திக்கொண்டது. ப்ரின்ஸிபல் இத்தனை தோழமையுடன் இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அவர் என்னை உற்சாகப்படுத்தி, ‘உங்களை நான் ரொம்ப பாராட்டறேன். இப்படித்தாம்மா ஒவ்வொரு பெண்ணும் முனையணும். எல்லா டிப்பார்ட்மென்ட் ஹெச்.ஓ.டி கிட்டையும் உங்க கார்ட் குடுத்துட்டு போங்க’ என்றதை இப்போது நினைக்கையில் கூட எனக்குப் புல்லரிக்கிறது. அதற்குப் பிறகு எத்தனை பேராசிரியர்கள் என் வீடு தேடி வந்து புடவைகள் வாங்கத் தொடங்கினர்! இதனால் என் பிஸினெஸ் நன்கு சூடுபிடித்தது!

என் மனதில் எழுந்த மூன்றாவது நிகழ்ச்சி,  ஒரு பள்ளி பற்றியது. அந்தப் பள்ளியின் கரஸ்பாண்டென்ட்,  புடவை பிஸினெஸ் செய்து வரும்  நான் ஒரு எம். ஆங்கில இலக்கிய பட்டதாரி என்று தெரிந்ததும், தன் பள்ளியில் ஆசிரியைப் பணியை எனக்குப் பரிந்துரைத்தார். ‘எனக்கு சொந்த தொழில் செய்வதில்தான் விருப்பம்’ என்று நான் சொன்னதும்,  அந்தப் பள்ளி ஆண்டுவிழாவில் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்து என்னைப் பற்றி , ஒரு முதுகலை பட்டதாரியான இவர்  வேறு எந்த வேலைக்கும் செல்ல பிரியப்படாமல் சுய தொழில் செய்து சொந்த காலில் நிற்கும்  தன்னம்பிக்கைப்  பெண்மணிஎன்று  பெருமையாகக், கூறினார்.

இப்படி அந்த கல்லூரி காம்பௌண்ட் சுவர் முடியும் வரை மூன்று நிகழ்ச்சிகளும் அலை மோதின.

அப்போது, சாலையில் ட்ராஃபிக் ஜாம் ஆகிவிட்டது. எங்கள் காரையும் என் கணவர் நிறுத்திவிட்டார்.  நடந்து வருவோரிடம் ‘என்ன ஆயிற்று?’ என்று கேட்டார். ‘கடை வாடகை தராமல் இழுக்கடித்ததால், கடையின் சொந்தக்காரருக்கும், கடையை வாடகைக்கு எடுத்தவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுவிட்டது. போலீஸ் வந்துருக்கிறது, கொஞ்ச நேரத்தில் வண்டிகளை சரிசெய்துவிடுவர்’ என்று கூறிச் சென்றார்.

‘ச்சு’ என்று சலித்துக்கொண்ட என் கணவர், ‘ட்ராஃபிக் சரியாகும்வரை ஒரு குட்டி தூக்கம் போடுறேன்’ என்றபடி, சீட்டைத் தளர்த்திகொண்டு சாய்ந்து கொண்டார்.

என் மனமோ இந்த வாடகை விவகாரம் போலவே, என்னிடம் புடவை வாங்கிய சிலர் எனக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றிய நிகழ்ச்சியை நினைத்துப்பார்த்தது. சிவா எனக்கு பிஸினெஸ் ஆரம்பித்துக் கொடுத்த அன்றே, ‘யாரும் ரெடி கேஷ் கொடுத்து வாங்க மாட்டார்கள் இன்ஸ்டால்மென்ட் தான். 3 இன்ஸ்டால்மென்ட்டில் முழு பணத்தையும் முடிக்கும்படி ஸ்ட்ராங்காகச் சொல்லிவிடு’ என்று கூறியிருந்தான். ஆனால் எத்தனை பேர் பணமே கொடுக்காமல் போயிருக்கிறார்கள்? நான் ஏதோ கடன் வாங்கியவள் போல் எத்தனை முறை பேலன்ஸ் பணத்திற்காக அலைந்திருக்கிறேன்? இந்த கடைக்காரர் போல நான் என்ன போலீஸிடமா கம்ப்ளென்ட் கொடுக்கமுடியும்?

அதேபோலத்தான் ஒருமுறை ஒருவர் என்னிடம் தனக்கு சில புடவைகளையும், தன் இரண்டு பெண்களுக்கும் சில சூடிதார் மெட்டீரியல்களையும் வாங்கிக்கொண்டு முதல் இன்ஸ்டால்மென்ட் கொடுத்துவிட்டுப் போனார். போனவர் என்னிடம் தெரிவிக்காமலேயே வீடு மாறிச் சென்றுவிட்டார். நான் அவரைத் தேடிக் கண்டுபிடித்து பணத்தை வசூல் செய்வதற்குள் திண்டாடித்தான் போனேன். அதெல்லாம் சில கசப்பான நிகழ்வுகள்.

ஒருமுறை ஒருவர் வந்து தனது இரண்டாவது மனைவியின் பெண்ணிற்கு ஒரு டாப்ஸ் வாங்கிச் சென்றார். எனக்குத் தெரியாது அவருக்கு இரண்டு மனைவிகள் என்று. மாலையில் அவரின் முதல் மனைவி தனது பெண்ணிற்கு ஒரு மெட்டீரியல் வாங்கும்போது நான் யதார்த்தமாய் ‘அந்த டாப்ஸ் அளவு சரியாக இருந்ததா?’ என்று கேட்டுவிட்டேன். அவர் கோபத்துடன், ‘டாப்ஸா..? டாப்ஸ் யார் வாங்கினது? இவர் வந்திருந்தாரா? யார் யாரெல்லாம் வந்திருந்தனர்? என்னென்னெல்லாம் வாங்கினர்?’ என்று கேட்கத்தொடங்கியதும் எனக்குப் புரிந்துவிட்டது. ‘இங்கப் பாருங்கம்மா.. உங்க குடும்ப சண்டையெல்லாம் வீட்டுலயே வச்சுக்கணும்’ என்று சொல்லி அனுப்பினேன். எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை.

சில நேரங்கள் ஒரு பைசா கூட வசூல் ஆகாமல் சில சரக்குகளை நான் இழக்கவேண்டியிருந்திருக்கிறது. இப்படி சின்ன சின்னதாக பல அனுபவங்கள் எனக்கு. இதனால் மன உளைச்சல் ஏற்படாமல் இல்லை. ‘வேண்டாம் இந்த பிஸினெஸ்ஸே’ என்று கூட நினைத்திருக்கிறேன். ஆனால் எனக்கும் என் பிஸினெஸ்ஸுக்கும் ஒரு பாந்தவ்யமான பந்தம் இருந்திருக்கிறது. ஏனென்றால், நான் அப்படி ஒரு ஸ்ட்ரெஸ்ஃபுல்லான மன நிலையில் இருக்கும் போதுதான், வேறு  ஒரு பெரிய பார்ட்டி வந்து நிறைய பர்சேஸ் செய்வர். இல்லையென்றால் நான் வராது என்று விட்டிருந்த பணம் எனக்குக் கிடைத்துவிடும்.  அது என் மனதிற்கு ஒரு தெம்பையும், புத்துணர்வையும் கொடுக்கும். நான் விடாமல் 10 வருடங்கள் இந்த பிஸினெஸ் செய்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது.

இப்படி ஒரு சிலர் பணத்திற்குப் பிரச்சனை செய்து எனக்கு ஒரு பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தினாலும், பல நல்ல நண்பர்களை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது இந்த பிஸினெஸ். பல பெரிய தியேட்டர் உரிமையாளர், டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உரிமையாளர், பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகளில் பணிபுரிவோர், என பலரையும் எனக்கு வாடிக்கையாளர் ஆக்கியிருக்கிறது. லேடி டாக்டர்கள் இரண்டு பேர் ‘வெரி என்டெர்ப்ரைசிங்க் அண்ட் ஸ்டூடியஸ்’ என்று என்னைப் புகழ்ந்து என்னிடம் தொடர்ந்து பர்சேஸ் செய்ததும் எனக்குப் பெருமையாக இருந்தது. இப்படி பல தரப்பு மக்களிடையே பழகப் பழக அது எனக்கு ஒரு எக்ஸ்போஷர் ஆனது.

எந்தத் தொழிலுமே வெளியிலிருந்து பார்ப்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தொழிலும் அதனதன் அளவில் கடினமானதுதான். சிறந்த உழைப்பு, முகம் கோணாமை மட்டுமல்லாமல், இந்த புடவை பிஸினெஸ்ஸில், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நாம் அவர்களுக்காகவே நமது சரக்குகளை வாங்கி வைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் மிகவும் முக்கியமானது.

ட்ராஃபிக் க்ளியர் ஆகத் தொடங்கியிருந்தது. எதிர் திசை வண்டிகள் வரத் துவங்கியிருந்தன. சற்று கண் அயர்ந்திருந்த என் கணவரும் காரைக் கிளப்புவதற்குத் தயார் ஆனார். பின் ‘என்ன சைலென்ட்டா இருக்க?’ என்றபடி என்னப் பார்த்தார். ‘இல்ல.. என் பிஸினெஸ சின்னதா வீட்டோட ஆரம்பிச்சதுலேர்ந்து எல்லா நிகழ்வுகளையும் அசை போட்டபடி இருக்கேன்’ என்றேன்.

‘என்ன அப்படி சொல்லிட்ட… உன் பிஸினெஸ் ஒண்ணும் சின்னது இல்லையே! என் திறமைசாலியான மனைவியின் அச்சீவ்மென்ட் இல்லையா அது’ என்றார் என் கணவர்.

‘அச்சச்சோ.. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை..உங்க சப்போர்ட் இல்லாம இ‘த்தனை நாள் அதை நான் நடத்தியிருக்க முடியுமா?  நீங்கதானே எனக்கு டி.வி.எஸ் 50 ஓட்ட சொல்லிக்குடுத்து, வாங்கியும் குடுத்தது. அதுக்கு முன்னாடி, சைக்கிள்ளதானே நான் பெரிய பையை காரியர்ல வச்சு எடுத்துப் போவேன். அப்புறம் நீங்க தானே என் பெயரில் விஸிட்டிங்க் ப்ரின்ட் பண்ணி எனக்கு பிரஸன்ட் பண்ணினது. அது மட்டுமா நாம எத்தன தடவ பிக்னிக் போற மாதிரி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சின்னு பல ஊர்களுக்குப் போய் ஹோல்சேல் கடைல பர்சேஸ் பண்ணியிருக்கோம்.’ என்றேன்.

‘என்ன நீ இதெல்லாம் பெருசா சொல்ர..? ஒரு குடும்பப் பொண்ணு பல சவால்கள ஃபேஸ் பண்ணி ஒரு பிஸினஸ் பண்ணும்போது அத என்கரேஜ் பண்ண வேண்டாமா? அதத் தவிர நீ எப்படிப்பட்ட உழைப்பாளி.’ என்றார் என் கணவர்.

‘என் உழைப்பு இருக்கட்டும்.. நம்ம ஃபேமலில எத்தனை பேர் என் கிட்ட ரெடிகேஷ் குடுத்து புடவை வாங்கி என்னை ஊக்கப்படுத்தியிருக்காங்க… என் தங்கை அவ ஊர்ல இருக்கற ஹோல்சேல் கடைக்கு என்னை கூட்டிட்டுப் போய் சில டாப்ஸ் வாங்கி என் Palace க்கு பரிசளித்தாளே! அத சொல்றதா? உங்க அக்கா முத்து செட்டுக்கள் வாங்கிக் கோடுத்து அதையும் பிஸினெஸ் பண்ணும்படி சொன்னார்களே அத சொல்றதா? என்னோட இன்னொரு தங்கை நான் செய்துவரும் பிஸினெஸ் பத்தி ஒரு ஆர்டிக்கிள் எழுதி அது ஒரு இங்க்லீஷ் மேகஸின்ல பப்ளிஷ் ஆச்சே அத சொல்றதா? என் அப்பாவும் பல முறை என்னோடு பர்சேஸ்க்கு வந்திருக்காரே அத சொல்றதா? எப்படியோ இத்தனை பேர் உற்சாகப்படுத்தினதுதான் என் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.’ என்றேன்.

‘நீ சொல்றதும் சரிதான். ஆனா நீ வீட்டோட மட்டும் உன் பிஸினஸை நிறுத்திடலையே! ஒரு வெப் சைட் தொடங்கி ஆன்லைன் ட்ரேடிங்க் வரை வளர்ந்தயே, இதெல்லாம் உன்னோட சாமர்த்தியம் தானே!’ என்றார் என் கணவர். அதற்குள் ட்ராஃபிக் ஜாம் க்ளியர் ஆகிவிட்டது. ‘அப்பாடா!’ என்றபடி காரை காரை முன்னோக்கிச் செலுத்தினார் என் கணவர். என் மனமோ பின்னோக்கி பாய்ந்தது

என் இரண்டு பெண்களுக்கும் நான் பிஸினெஸ் செய்துவருவதில் ரொம்ப பெருமை உண்டு. ‘அம்மா.. இப்படியே வீட்டோட உன் திறமைகள் முடங்கக்கூடாதும்மா. நான் ஃபேஸ் புக்ல Lak textile palace ங்கற பேர்ல ஒரு பேஜ் ஓபன் பண்ணித்தரேன்’ என்று சொல்லி அதற்கான ப்ரொஃபைல் பிக்சரை அப்லோட் பண்ணினாள் என் சின்னப் பெண். ‘நீ அப்பப்போ ஃபோட்டோ எடுத்து உன் பேஜ்ல போஸ்ட் பண்ணணும்’ என்று சொல்லியும் கொடுத்தாள். ‘அப்பப்பா… அதற்குத்தான் எத்தனை லைக்குகள், கமெண்ட்டுகள்!’ ‘ஒரு சின்ன கம்ப்யூட்டர் இப்படி நம்ம பிஸினெஸ் பத்தி உலகம் பூராவும் பரப்பிவிட்டதே’ என்று பூரித்துத்தான் போனேன். பலருக்கும் என் பிஸினெஸ் பற்றி தெரிய வந்தது. பலரும் விசாரிக்கத் தொடங்கினர்.

அந்த ஃபேஸ் புக் பேஜைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூரிலிருந்த ஒரு வெப் சைட் உருவாக்கும் கம்பெனியிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது ஒரு ஆச்சர்யமான உண்மை. அவர்கள் என்னிடம் ஆன்லைன் ட்ரேடிங்க் பற்றி விளக்கினர். முதலில் பயந்த நான் பின் என் மகளின் ஒத்துழைப்புடன் துணிந்து அவர்களுடன் இணைந்து www.laktextilepalace.in என்ற வெப் சைட்டைத் தொடங்கிவிட்டேன். அவர்களே அக்கௌன்ட் க்ரெடிட்டுக்கு ஒரு வங்கியுடனும், கொரியர் கம்பெனி ஒன்றுடனும் என்னை இணத்துவிட்டனர். நானும், டால் (மேனுகுயின்) வாங்கி அதில் மெட்டீரியலை போட்டு ஃபோட்டோ எடுத்து அப்லோட் செய்யத் தொடங்கினேன். என் வெப் சைட்டின் லிங்கை பலருக்கும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பினேன்.  ஆர்டர் ப்ளேஸ் ஆனதும், எனக்கும், கொரியர் கம்பெனிக்கும் மெயில் வந்துவிடும்.  உடனே கொரியர் கம்பெனிக்கு ஃபோன் செய்து அவர்கள் வரும் நேரத்திற்குள் கொரியர் கவரில் பேக் செய்து அவர்களிடம் கொடுத்து அனுப்புவேன். அமௌன்ட் எனது வங்கிக் கணக்கில் க்ரெடிட் ஆகிவிடும். என் சைட்டில், கேஷ் ஆன் டெலிவரியும் உண்டு. நிறைய ஆர்டர்கள் வந்தன’. எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையைக் கொடுத்த நாட்கள் அவை! தினம் தினம் மெயில் செக் பண்றதும், விற்றுப் போகப் போக, அதை நீக்கிவிட்டு புதிது புதிதாக ஐட்டங்களை டிஸ்ப்ளே செய்வதுமாக மிகவும் பிஸியாக இருந்தேன். எக்ஸ் எல் ஷீட்டில் அக்கௌன்ட்ஸ் மெயின்டைன் பண்ண ஆரம்பித்தேன். என் பெண்தான் எனக்கு சொல்லிக்கொடுத்தாள். டெக்னாலஜியை நான் என் கையில் எடுத்துக்கொண்டது போல இருக்கும் எனக்கு.

ஆன் லைன் ட்ரேடிங்கில் சில சிக்கலும் இருந்தது. நிறைய வெரைட்டிகளை வாங்கி டிஸ்ப்ளே செய்து கொண்டே இருக்கவேண்டும். ஃபோட்டோ விதவிதமாக எடுத்து டிஸ்ப்ளே செய்வதும் சற்று சிரமமாகத்தான் இருந்தது. மார்க்கெட்டில் நிறைய சைட்டுகள் ஆன்லைன் ட்ரேடிங்க் செய்துவரும்போது அவர்களோடு போட்டி போட என்னால் சற்று முடியாமல் போனது.

வீட்டிலிருந்தபடியே செய்தபோது, பர்சேஸ் செய்ய வருபர்களுக்கு எடுத்து காண்பித்தாலும் சரி, நானே எடுத்துச் சென்று காண்பித்தாலும் சரி, நிறைய நேரம் ஒதுக்கவேண்டியிருந்தது. மீண்டும் பொறுமையாக மடித்து எடுத்து வைக்கவேண்டும். அதுவும் கஷ்ட்டமாகத்தான் இருந்தது.

நான் ஒன்று செய்திருக்கலாம். உதவிக்கு வேற்று ஆட்களை நியமித்திருக்கலாம். வாணியையும், தேவியையும், தையலைத் தவிர்த்து என் பிஸினெஸோடு இணைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் தனியாகவே இத்தனை நாள் பிஸினெஸ் செய்தது ஒரு சாதனைதான் என்றாலும் உடல் ஒத்துழைப்பு குறையத் தொடங்கும்போது சிரமம் பெரிதாகத் தெரிந்தது. .

அதைத்தவிர, என் குடும்ப சூழலுக்கும் என் உதவி அதிகம் தேவைப்பட்டது. அந்த நேரம் பிஸினெஸா, குடும்பமா என்ற கேள்விக்கணை என்னை நோக்கிப் பாய்ந்தது, என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியது எல்லாம் ஒவ்வொரு நிகழ்வாக என் மனதில் முட்டி மோதியது.

‘வருத்தமா இருக்கியா என்ன?’ என்றார் என் கணவர்.

‘இல்ல இல்ல..மன ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியல அவ்வளவுதான். வருத்தம்னு சொல்லமுடியாது. வருத்தமில்லைனும் சொல்ல முடியாது. ஆனா எனக்கு எப்போதுமே குடும்பம்தான் முக்கியம். ஏதோ இடைப்பட்ட ஓய்வு காலத்துல ஒரு பிஸினெஸ் ஆரம்பிச்சேன். இப்போ எனக்கு வேற கடமைகள் இருக்கு. அதனால நான் சரியான நேரத்துல தான் என் பிஸினெஸை முடித்திருக்கேன்’ என்றேன்.

‘நீ தனி ஒருத்தியா இத்தனை நாள் உன் palace ஐ நடத்தினதே பெரிய விஷயம். நீ என்ன ஆசைப்பட்ட… குடும்பத்துக்கு நீயும் பணம் கான்ட்ரிப்யூட் பண்ணனும்னுதானே! நிறைய நீ பண்ணியாச்சு. குழந்தைகளுக்கு எவ்வளவு கோல்ட் காயின் வாங்கின.. நம்ப ஃபாமிலி ஃபங்ஷனுக்கு எல்லா ரிலேடிவ்ஸ்க்கும் எவ்வளவு புடவைகள் குடுத்திருக்க… உன்னால சுயமா உன் கால்ல நிக்க முடியும்னு நீ நிரூபிச்சுட்ட. இதெல்லாம் உனக்குப் பெருமைதானே!’  என்றார்.

‘ஆமா.. ஆமா.. பெருமை மட்டுமல்ல சந்தோஷமும்தான். அப்போ எல்லாம் பணத்த தினம் தினம் எண்ணிப் பாப்பேன் தெரியுமா? சிவா எனக்குக் குடுத்த 5% கமிஷன்ல சேர்ந்த முதல் 500 ரூபாயை உங்க பர்த்டேக்குதானே ப்ரசென்ட் பண்ணினேன்’ என்றேன்.

‘இப்போ மட்டும் என்ன… சிவாதானே உனக்கு தொழிலை ஆரம்பிச்சுக்கொடுத்தான். அவனுக்கே ஒரு லட்சம் வரை அன்பளிப்பா கொடுத்திருக்கியே! இது ஆச்சர்யம் இல்லையா?’ என்றார். பின் அவரே தொடர்ந்தார்.

‘ஒரு சின்ன வட்டமா உன் தொழில் பயணம் முடிந்தது போல் தெரிந்தாலும் அந்த வட்டத்தோட உயரம் அளக்கமுடியாதது மா. நான் உன் விடாமுயற்சியையும், சிரித்த முகத்தோடு நீ எல்லார்கிட்டயும் பேசி சேல்ஸ் பண்றதையும், பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். நீ எடுத்த வேலையை திறமையாத்தான் செஞ்சு முடிச்சிருக்க..  I am proud of my wife என்று கூறி அணைத்துக்கொண்டார். என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. எங்கள் கார் வீடு நோக்கி விரைந்தது முழு திருப்தியுடன்தான்.

 

 

 

'HISTORY OF 'LAK TEXTILE PALACE'

 

வீட்டை சுத்தம் செய்யும் போது பரணிலிருந்த அந்த பை கண்ணில் பட்டது.. எடுத்து திறந்து பார்த்தேன். பை முழுவதும் அக்கௌன்ட்ஸ் நோட்டுகள், ஒரு விஸிட்டிங்க் கார்ட் ஹோல்டெர், பேனா போன்றவை இருந்தன. கார்ட் ஹோல்டரில் 100 கார்டுகள் இருக்கும். ஒரு பக்கம் ஆங்கிலத்தில், மறு பக்கம் தமிழில், பெயர், விலாசம், ஃபோன் நம்பர் ஈ மெயில் ஐடி, வெப் ஸைட் ஐடி போன்ற விவரங்களுடன் Lak Textile Palace  என்று கொட்டை எழுத்தில் அச்சாகி இருந்தது. இதன் லோகோவை என் பெண்தான் டிசைன் செய்தாள். அதைப் பார்த்ததும் என் நினைவோட்டம் விரியத் தொடங்கியது.

முன்னெல்லாம்… முன் என்றால் ஒரு 2,3 வருடங்களுக்கு முன் யாரை சந்தித்தாலும், அந்த விஸிட்டிங்க் கார்டை கொடுப்பது என் வழக்கம். அவர்கள் புரியாமல், என்ன… என்று கேட்பார்கள். உடனே என் புராணத்தை ஆரம்பித்துவிடுவேன். சில நேரங்கள் நானும் இவரும் வாக் போகும் போது இவருடைய நண்பர்கள் மனைவியுடன் எதிர்ப்பட்டால், உடனே என் கை துறு துறுக்கும். அவர்களின் சம்பிரதாய பேச்சு முடிந்ததும், மெதுவாக என் கார்டை நீட்டி, வீட்டிலிருந்தபடியே புடவை சூடிதார் மெட்டீரியல், நைட்டிகள், போன்றவற்றை விற்பனை செய்வதாகக் கூறுவேன். சில நேரங்கள் என் கணவருக்கு அது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

“ஏன் இப்படி எல்லார்கிட்டயும் உன் பிஸினஸைப் பத்தி சொல்றதையே வழக்கமா பண்ற…” என்று கோபிப்பார்.

“அப்படித்தானே ப்ரமோட் பண்ணனும்… உங்க ஆஃபீஸ் இல்லையே அவர் உங்களின் நண்பர்தானே” என்று நானும் அவரிடம் சண்டை பிடிப்பேன்.

ஆனால் அந்த விஸிட்டிங்க் கார்டை பிரின்ட் பண்ணி எனக்கு பிரசண்ட் செய்ததே அவர்தான்.

நான் ஒரு பிஎஸ்ஸி பட்டதாரி. முதல் குழந்தை பிறந்து பள்ளிக்குப் போக ஆரம்பித்தவுடன் எம் ஏ. படித்தேன். ஹிந்தி பிரவீண், டைப் ரைட்டிங்க் ஹையர் எல்லாம் முடித்திருந்தாலும், வேலைக்குப் போகக்கூடாது என்ற கொள்கையை காலேஜ் படிக்கும் போதிலிருந்தே கொண்டிருந்தேன். குடும்பத்தை நாம்தான் பராமரிக்கவேண்டும். ஒருவரால் ஒரு வேலையைத் தான் சரியாக செய்யமுடியும் என்ற ஆணித்தரமான கருத்து எனக்கு இருந்தது. இருந்தாலும் வீட்டிலிருந்தபடியே ஹிந்தி ட்யூஷன் எடுத்துக்கொண்டிருந்தேன். இரண்டாவது குழந்தை பிறந்தது. இருவரையும் கவனிப்பதையும் பல க்ளாஸ்களுக்கு கூட்டிச்சென்று வருவதையும், போட்டிகளுக்குத் தயார் படுத்துவதையும் ஈடுபாட்டுடன் செய்துவந்தேன். பிள்ளைகள் வளர்ந்து தனித்துவமாக இயங்கத் தொடங்க… என் மனம் எதையோ தேடி அலந்தது. ஏதாவது செய்யவேண்டும்… என்ன செய்யலாம்? என்பதே என் மனத் தேடலாகிப் போனது. எதுவாக இருந்தாலும் அது பண வரவு தரக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.  

அப்போது என் உறவினர் ஒருவர் வீட்டிலிருந்தபடியே புடவை வியாபாரம் செய்து வந்தார். அவரிடம் பேச்சுக்குடுத்துப்பார்த்தேன். அவர்தான் என் பிஸினெஸின் வழிகாட்டி… எனது குரு…

“மொதல்ல இன்வெஸ்ட் பண்ணாத… என் புடவைகள் சிலதை உனக்குத் தரேன்.. உன் வட்டத்தில் முயற்சி செய்.”என்று அவர் கூறியது என் காதில் தேனாய்ப் பாய்ந்தது. அதோடு அவர், “ஒரு புடவைக்கு உனக்கு 5% தருகிறேன்” என்றது இன்னும் அதிகமாய் இனித்தது.

உடனே சுறுப்பானேன். புடவைகள் ஒன்றும் அதிக விலை கொண்டவை இல்லை. 250 லிருந்து 500 வரை இருந்தது. நோட்டில் கோடு போட்டு வாங்குபவர் பெயர், வாங்கும் தேதி, புடவையின் அடையாளம், விலை, பணம் தரும் நாள், 5% வரவு என்று எழுதிக்கொண்டேன். அதிகபட்சமாக ஒரு புடவைக்கு 25 ரூபாய் தான் எனக்கு லாபம் கிடைக்கும். அக்கம் பக்கம், நண்பர்கள், என் பிள்ளைகளின் நண்பர்களின் பெற்றோர் இப்படி எதிர்படுபவர்களிடம் எல்லாம் சொல்லத் தொடங்கினேன். அப்போது எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது சைக்கிள் தான். சைக்கிளில் பின்னால் பெரிய பையை வைத்துக்கொண்டு பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று காட்டத் தொடங்கினேன். பலரும் ஆர்வத்துடன் பார்த்தனர். சிலர், “வீட்டில் இன்னும் இருக்கிறதா? வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்’ என்று சொன்னதுடன் அன்று மாலையே வந்ததும் எனக்குப் பெரும் உற்சாகமளித்தது. உறவினர் முன்னமே எனக்கு சொல்லியிருந்தார். “யாரும் ரெடி கேஷ் கொடுத்து வாங்க மாட்டார்கள். இன்ஸ்டால்மெண்டுதான். 3 இன்ஸ்டால்மென்ட்டில் கொடு” என்று. நானும் அவர் சொல்படி, 3 இன்ஸ்டால்மென்ட்டில் கொடுப்பதை வழக்கமாகிக்கொண்டேன்.

எந்தத் தொழிலும் சொல்வதற்கும், பேசுவதற்கும் எளிதாய் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தொழிலும் அதனதன் அளவில் சிரமமானதுதான். சிறந்த உழைப்பு, முழு ஈடுபாடு, இவை தவிர இந்த புடவை வியாபாரத்தில், முகமலர்ச்சி, முகம்சுளிக்காமை, பொறுமை, வாடிக்கையாளர்கள் சொல்லும் பல கதைகளையும் காது கொடுத்துக் கேட்டல், அவர்களுக்காகவே  நாம் நமது சரக்குகளை வாங்கியதைப் போன்ற பிரமையை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துதல், இப்படி பல தகுதிகள் தேவை என்பதை நான் போகப்போகப் புரிந்து கொண்டேன்.

கொஞ்சம் கஷ்டமான வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டோமோ என்று உதறல் தோன்ற ஆரம்பித்தது. ஆனாலும் தொடர்ந்து, பார்க்கும் ஒவ்வொருவரிடமும் என் பிஸினெஸ் பற்றி பரப்பிக்கொண்டே இருந்தேன். அப்போது எங்கள் ஊரின் பெரிய தொழிலதிபர் வீட்டு மருமகள் என்னிடம் 4 புடவைகள் வங்கிக்கொண்டு ரெடி கேஷ் கொடுத்துச் சென்றது புத்துணர்வு அளித்தது. அப்போது அவர் பிளவுஸ் பிட்ஸ் இருக்கா என்றதும் ‘இருக்கே’ நாளைக்குத் தரட்டுமா என்றதுடன் உறவினரை ஒரு பண்டில் பிளௌஸ் பிட்ஸ் அனுப்பச் சொல்லி, அடுத்த நாளே அவருக்கு சப்ளை செய்ததும் என் பிஸினஸ் சற்று சூடு பிடிக்க ஆரம்பித்தது.

ஒரு வருடம் அந்த உறவினருடன் சேர்ந்து தொழில் செய்ததில் எனக்குக் கிடைத்த லாபத்தை தினம் தினம் எண்ணிப் பார்த்து பூரிப்பேன். முதல் ரூ.500 ஐ என் கணவருக்கு அவரின் பிறந்த நாளன்று பரிசாகக் கொடுத்ததை இன்று நினைத்தாலும் எனக்கு சிலிர்க்கிறது.

என் முதல் தொழில் அனிவர்சரிக்கு, என் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறிய பரிசு கொடுத்து மகிழ்ந்தேன்.

ஒரு வருடத்திலேயே என் கணவருக்குப் பணி நிமித்தமாய் மாற்றல் ஏற்பட்டுவிட்டது., பழகிய, சொந்த ஊரிலேயே பிஸினெஸ் சூடிபிடிக்க இத்தனை நாளானதால், புது ஊரில் தொடருவது சிரமமாக இருக்கும் என்ற எண்ணத்தில், மனமே இன்றி அத்தனை சரக்குகளையும் உறவினருக்கு கணக்குப் பார்த்து திருப்பிக் கொடுத்துவிட்டு, புது ஊருக்கு வந்தோம்.

புது ஊரில், வீட்டுக்கு எதிரில் ஆர்ட்ஸ் காலேஜ் இருந்தது. காலேஜ் பெண்கள் வாசலோடு போய்க்கொண்டிருப்பதை பார்த்து எனக்கு மீண்டும் ஆசை துளிர்விட்டது. உறவினரிடமே மீண்டும் பேசினேன். உடனே ஒரு செட் எடுத்து வந்து கொடுத்தார். வீடு வீடாக சென்று என்னை அறிமுகப் படுத்திக்கொள்ளும் சாக்கில் என் பிஸினஸ் பற்றிதான் அதிக நேரம் பேசிவிட்டு வந்தேன்.  “நேரே கல்லூரி முதல்வரைப் பார்த்து பேசிப் பாரேன்” என்று ஆலோசனை கூறினார் என் மாமனார். அந்த ஆலோசனைதான் என் முயற்சிக்கு கிடைத்த முதல் படிக்கட்டானது. நானே எதிர்பார்க்கவில்லை முதல்வர் மிகவும் தோழமையுடன், “ரொம்ப நல்லதுமா. இப்படித்தான் ஒவ்வொரு பெண்ணும் முனையணும் நான் உங்களை ரொம்ப பாராட்டறேன். எல்லா டிபார்ட்மென்ட் ஹெச்.ஓ.டி. கிட்டயும் உங்க கார்ட கொடுத்து, அறிமுகப்படுத்திக்குங்க!” என்றதும் ‘ஜிவ்’வென்று பறப்பது போல இருந்தது. அப்போது எனக்கு விஸிட்டிங்க் கார்ட் இல்லை. உடனே கடைக்குப் போய் ஷைனிங்க் சார்ட் வாங்கி வந்து காலேஜிலேயே உட்கார்ந்து, கைப்பட விஸிட்டிங்க் கார்ட் ரெடி பண்ணி எல்லா டிபார்ட்மென்ட்லயும் குடுத்துவிட்டு வந்ததற்க்கு கைமேல பலன் கிடைத்தது. பல பேராசிரியர்கள் வீடு தேடி வந்து வாங்கத் தொடங்கியது உற்சாகத்தைக் கொடுத்தது.

ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உரிமையாளரிடம் நான் கைப்பட எழுதிய கார்டைக் கொடுத்து பேசிவிட்டு வந்தேன். அன்று மதியமே அவர் காரில் என் வீட்டிற்கு வந்து 2 புடவைகள் வாங்கியது நம்பமுடியாத நிஜமானது.

மாமனார் ஆலோசனை சொல்லி உதவியது போல் என் அப்பா “நான் உன் கூட வரேன். ஹோல்சேல் கடைல நீயே கொள்முதல் செஞ்சு, வியாபாரத்தைப் பெருக்கு” என்றதுடன் ரூ.6,000க்கு புடவை மட்டுமல்லாது சூடிதார் மெட்டீரியலையும் வாங்கிக் கோடுத்தார். அதுதான் எனக்குக் கிடைத்த முதல் பண ஊக்கம் மற்றும் இரண்டாம் படிக்கட்டு. அதன் பின் என் கணவரும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை நாளானதால், அன்று என்னுடன் ஹோல்சேல் கடைக்கு வரத்துவங்கியதும், சைக்கிளில் சென்று கொண்டிருந்த எனக்கு டி.வி.எஸ் 50 ஓட்ட சொல்லிக்கொடுத்து வாங்கியும் கொடுத்தது எனக்குக் கிடைத்த மூன்றாவது படிக்கட்டானது. ஆனால் அவர் தனது அலுவலக கொலீக் அல்லது கொலீகின் மனைவியிடம் என் தொழிலை அறிமுகம் செய்ய அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு அது ஒரு கமிட்மென்ட் போல் ஆகிவிடும் அது போல தனக்கும் அவருக்குமிடையில் தேவையில்லாத ஒரு அணுகுமுறையை அது ஏற்படுத்திவிடும் என்பார். இதனால் எனக்கு கஸ்டமர்களைப் பிடிப்பதில் சிரமம் இருந்ததும் உண்மை.

எந்தவித விளம்பரமோ, தோதான சூழ்நிலையோ இல்லாதபோதும், ஒரு பெண் சுய தொழில் செய்வதற்கு மிகவும் முக்கியமானது உறவினர்களின் ஒத்துழைப்பும், முகம் கோணாமையும்தான். என் பல உறவினர்கள் என்னிடம் உடைகள் வாங்கி, ரெடி கேஷ் கொடுத்து ஊக்குவித்திருக்கின்றனர். என்  கணவரின் அக்கா, தங்கள் ஊரில் கிடைக்கும் முத்து செட்டுக்கள் வாங்கி எனக்குப் பரிசளித்து, அதையும் விற்பனை செய்ய முயற்சிக்கச் சொன்னது, என் சகோதரி, தங்கள் ஊரில் இருக்கும் ஹோல் சேல் கடைக்கு என்னை அழைத்துச் சென்றது மட்டுமின்றி, டாப்ஸ் வாங்கி எனக்குப் பரிசளித்து அவற்றையும் முயற்சிக்கச் சொன்னது இவற்றையெல்லாம் மறக்கவே முடியாது. 

இப்படி என் தொழில் வளர்ந்து வந்த நிலையில் சொந்த ஊருக்கே மாறுதல் கோரிய என் கணவருக்கு மாற்றல் கிடைத்துவிட்டது. என்னால்தான் சந்தோஷப்பட முடியவில்லை. எத்தனை எத்தனை பள்ளிகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் முதலாளி, தியேட்டர் முதலாளி, கல்லூரி என்று பெரும் புள்ளிகளாக வாடிக்கையாளர்களை நான் பெற்றிருந்தேன்! அத்தனையையும் விட்டுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கே வந்தோம்.

புறப்படும்முன் எனக்கு ஒரு நல்ல வாடிக்கையாளரை அறிமுகப்படுத்தி அனுப்பினார் இங்கிருந்த ஒரு தோழி. “கலையை நீங்க கண்டிப்பா போய் பாருங்க. அவங்க நல்லா வாங்குவாங்க” என்று கூறியிருந்தார். சரி என்று அவர் விலாசத்தைப் பார்த்தால் அது ஊருக்கு வெளியே சற்று தொலைவில் இருந்தது. நான் சற்று அசிரித்தையாக இருந்தேன். அப்போது ஃபோன் செய்த அந்த தோழி, நலம் விசாரித்துவிட்டு, “கலையை நீங்க இன்னும் போய் பாக்கலியா?” என்று கேட்டதை எனது நான்காம் படிக்கட்டாகக் கொள்ளலாம். கலை எனக்குக் கிடைத்த நல்ல வாடிக்கையாளர் மட்டுமல்ல நல்ல தோழியாகவும் ஆகிப்போனார்.

15 நாட்களுக்கு ஒரு முறை பர்சேசுக்கு நான் போய் வருவது, பார்சலைப் பிரித்து ரக வாரியாக அடுக்குவது என்று மிகவும் பிஸியாகிப் போனேன். ஒரு பீரோ இரண்டாகி, மூன்றாகி, நான்காகி, வீட்டின் ஒரு அறையை என் வியாபரத்திற்காக ஒதுக்கும்படி என் தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது. கல்யாணத்திற்காக, சேலம் வரை சென்ற நானும் என் கணவரும், அங்கிருந்து ‘இளம்பிள்ளை’ என்ற ஊர் வரை சென்று புடவை வாங்கினோம். ஈரோடு, கோயமுத்தூர், ஹைதராபாத் என்று பல ஊர்களிலிருந்து புடவை, சூடிதார் மெட்டீரியல், டிசைன் பிளவுஸ் பிட், நைட்டி, லெகின், டாப்ஸ், முத்து செட், போன்றவற்றை வாங்கி வந்தோம்.

இப்பொழுது இங்கே எனக்கு பல வாடிக்கையாளர்கள் தோழிகளாகிவிட்டனர். அப்பொதுதான் என் கணவர் என் பெயரில் விஸிட்டிங் கார்ட் அச்சடித்து பரிசளித்தார். அதற்கான டிஸைன் மற்றும் லோகோ வை வடிவமத்துக் கொடுத்தாள் என் இளைய பெண். அன்று முதல் கார்டை கையால் எழுதும் வேலை மிச்சம் ஆயிற்று.

ஒவ்வொரு முறையும் என் லாபத்திலிருந்து, அப்பா, அம்மா, மாமனார், மாமியார், மகள்களுக்கு ரூ.500 பரிசளிப்பதை பெருமையாக உணர்ந்தேன். வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு கண்டிப்பாக ஒரு புடவை பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டேன். இதெல்லாம் எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. எங்கள் வீட்டு பல மங்கல நிகழ்ச்சிகளுக்கு உறவினர்களுக்குப் புடவை பரிசளிக்க என் பேலஸ் புடவைகளை என்னால் கொடுக்கமுடிந்ததும் எனக்குக் கிடைத்த லாபமாகக் கருதுகிறேன். என் மகள்களுக்கு தங்க நாணயங்கள் வாங்கும் போது என் பங்கு என்று பெருமையுடனும் பூரிப்புடனும் ஒரு தொகையைக் கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

ஒரு வியாபாரம் என்பது இப்படியே நேர் கோட்டில் சென்று கொண்டிருக்குமா என்ன..? எத்தனை சருக்கல்கள்…. எத்தனை வருத்தங்கள்…!

இன்ஸ்டால்மென்ட்டில்தான் நான் புடவை தருகிறேன் என்று தெரிந்தும், சிலர் பணமே எடுத்துவராமல் வாங்க வருவார்கள். அத்தனை புடவைகளையும் பிரித்து, தலைப்பு, ப்ளவுஸ் என்று, விரித்து, விவரித்துக் காட்டினால் ரெண்டு புடவைகளை எடுத்துக்கொண்டு கொஞ்ச கொஞ்சமா பணம் குடுத்துடறேன் என்பர்.

‘ஏதாவது கையில் இருக்கறத இப்ப குடுங்க… மூணு இன்ஸ்டால்மென்ட்ல முடிச்சுக்குடுங்க’ என்று சொல்லி முடிப்பதற்குள் எனக்கு நான் ஏதோ தவறு செய்துவிட்டதைப் போல வியர்த்துக் கொட்ட ஆரம்பித்துவிடும்.  

சிலர் அத்தனை புடவைகளையும் பார்த்துவிட்டு, ‘இந்த புடவை நீலக்கலர்ல இருக்கா? எனக்கு நீலம்தான் வேணும்’ என்று கூறி சென்றுவிடுவர். கோபப்படாமல் அடுத்தமுறை எடுத்து வருவதாகக் கூறவேண்டும்.

விலையைக் குறைக்க சொல்வர். இதே புடவை அந்த கடைல கம்மி விலைல கிடைக்கறதா சொல்வர். 3 இன்ஸ்டால்மென்ட்ல தரவே மாட்டார். நாம் ஏதோ கடன் வாங்கியவர்கள் மாதிரி அவர்கள் எதிரில் நிற்கவேண்டும்.

பல வித்தியாசமான சேலஞ்ச்களையும் நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒருமுறை, ஒருவர் வந்து தன் பெண்ணிற்கு என்று ஒரு டாப்ஸ் வாங்கிக்கொண்டு மாலையில் மனைவியை அனுப்புவதாகக் கூறிச் சென்றார். மாலையில் மனைவியும் வந்தார். அவர் புடவையைப் பார்த்தார். பின் “ஓ.. லெகின் டாப்ஸெல்லாம் கூட வச்சிருக்கீங்களா?” என்றார். நான் ஒரு அப்பாவி. வெளி உலகம் புரியாதவள். “இருக்கே… காலைல உங்க ஹஸ்பெண்ட் ஒண்ணு வாங்கினாரே!” என்று சொல்லிவிட்டேன். ‘சடார்’என நிமிர்ந்த அவர், “எவ்வளவு வாங்கினார்? என்னென்னெல்லாம் வாங்கினார்? எவ்வளவு பணம் கொடுத்தார்?” என்று கேட்டதும் வெலவெலத்துப் போய்விட்டேன். “ஏங்க…. ஒரு டாப்ஸ்தான் வாங்கினார்” என்றேன். “எப்போ வந்தார்? யாரோட வந்தார்?” என்றெல்லாம் அவர் கேட்டதும் விழித்துக்கொண்டேன். ரெண்டு குடும்பக்காரர் போலிருக்கிறது. ‘இங்க பாருங்கம்மா… நான் ஜவுளி வியாபாரம் பண்றேன். அவ்வளவுதான். உங்க குடும்ப சண்டையெல்லாம் வீட்டிலயே வச்சுக்கங்க… இங்க வந்தெல்லாம் கேக்கக்கூடாது” என்று சொல்லி அவரை அனுப்புவதற்குள் திண்டாடித்தான் போனேன்.

அதே போல் என்னைவிட வயதில் சிறிய, நகைக்கடை முதலாளி ஒருவர், வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து 2, 3 புடவைகள் வாங்கி ரெடி கேஷ் கொடுத்துச் சென்றுவிடுவார். போனவாரம் வந்தபோது பார்த்த சரக்குககள்தான் இருக்கும், இருந்தாலும் வாங்குவார். இது எனக்கு சற்று பிடிக்காத நிகழ்வாக இருந்தது. பிஸினெஸ் என்றால் எல்லவற்றையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று எண்ணிக்கொள்வேன்.

பல பெரிய பணக்கார வீட்டு, படித்த பெண்மணிகள் எல்லாம் கூட, தன் கணவருக்குத் தெரியாமல் புடவை வாங்கி, சிறுக சிறுக எனக்குப் பணம் கொடுத்ததும் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம்தான். கணவர் இருக்கும்போது நான் அவர்கள் வீட்டிற்குப் போனால் அவர்களின் சுபாவமே மாறி இருப்பதைப் பார்க்க எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அவர்கள் பீரோவை நிரப்பிக்கொள்ள என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனரே என்று சற்று வருத்தமாக இருக்கும்.

பல நேரங்கள் ‘வேண்டாம் இந்த பிஸினெஸே!’ என்று நான் ஒருவித மன உளைச்சலுக்குச் செல்லும் போது, அன்றுதான் நீண்ட நாட்களாக வராத பணம் வந்து சேரும், யாராவது புது வாடிக்கையாளரோ, பழையவரோ வந்து பர்சேஸ் செய்வர். என் மன அழுத்தத்திற்கு அது சிறந்த மருந்தாகி, உற்சாகப்படுத்தும். 

ஒரு முறை என் தோழி ஒருவருக்காக அவர் வீட்டிற்குப் புடவைகள் எடுத்துக் காட்டும்போது, அவர்கள் வீட்டு வேலைக்காரம்மா ஒரு புடவை எடுத்துவிட்டு, பணமே தராமல் பல மாதங்கள் இழுக்கடித்து விட்டார். என் தோழி வீட்டு வேலையையும் விட்டுவிட்டார். அப்படியும் அவர் வீட்டைக் கண்டுபிடித்து போய் கேட்டேன். இருந்தும் என்னால் முழு தொகையையும் அவரிடமிருந்து வாங்க முடியவில்லை.

வீட்டின் எதிரிலிருந்த ஸ்கூல் ப்யூன் வந்து 2 புடவைகள் எடுத்துக்கொண்டு, ஒத்தை பைசா கூட தராமல் இருந்தார். ஸ்கூல் டீச்சரிடம் சொல்லி அவரின் மனைவியிடம் பேச அவரோ, “இப்படித்தாம்மா பண்றாரு” என்று கூறி முடித்துக்கொண்டு விட்டார்.

அதே போல் ஒரு பெண்மணி புடவையும், மெட்டீரியலும் வாங்கிக்கொண்டு வீடு காலி செய்து மாறிப் போய்விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது ஒரு நாள் அவரின் உறவினரின் வீட்டில் அவரைப் பார்த்துவிட்டு நேரே அங்கே போய்விட்டேன். போனது தவறாக இருக்கலாம். ஆனால் பணத்தைப் பற்றியே நான் பேசவில்லை. ஆனாலும் பணம் தராமலேயே சென்றதற்கு வருத்தம் தெரிவிக்காத அவர் அந்த இடத்திற்கு நான் வந்ததற்கு முகம் சுளித்தார். தீயால் சுட்டது போல் இருந்தது எனக்கு.  என்ன செய்வது இவற்றையெல்லாம் என்று தெரியாமல் மண்டை வெடித்தது.

பல தொழிலதிபர்களும், பெரும் பொறுப்பில் இருப்பவர்களும், ‘நான் “பிஸினெஸ்’ செய்கிறேன்’ என்று கூறினாலே ஒரு மதிப்போடு என்னைப் பார்த்ததை நான் உணர்ந்தேன். ஒருவித தன்னம்பிக்கையை அது எனக்குக் கொடுத்தது. கண்டிப்பாக சாதித்துவிட வேண்டும் என்று என்னை உற்சாகப்படுத்தும்.

அதே நேரம் எங்கள் ஊர் டாக்டர் ஒருவர், “உங்களை நான் வாச் பண்ணிட்டே இருக்கேன். வெரி என்டெர்ப்ரெஸிங் அண்ட் ஸ்டுடியஸ்” என்று கூறி, தான் விரும்பும் புடவை ரகங்களை எனக்கு உள்ளிருந்து எடுத்து வந்து கண்பித்து, அதுபோல் இருந்தால் தாம் எடுத்துக்கொள்வதாகக் கூறியதுடன் வாங்கவும் செய்தார். நானும் தேடிபிடித்து அவருக்கு ஏற்ற ரகங்களை வாங்கிவர மிகவும் பிரயத்தனப்படுவேன்.  மற்றொரு டாக்டரும் வீடு தேடி வந்து பர்சேஸ் செய்வார். இவை எனக்குப் பெருமையாக இருக்கும்.

ஒரு பள்ளித் தாளாளர் என் படிப்பைப் பற்றி விசாரித்தபோது M.A. ஆங்கிலம் என்றதும், தங்கள் பள்ளிக்கு ஆசிரியையாக எனக்கு அழைப்பு விடுத்தார். “மன்னிக்கவும் ஐயா.. இந்த சொந்த தொழில் செய்வது எனக்குப் பிடித்திருக்கிறது” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

என்னிடம் புடவை வாங்குவதில் ஒரு சௌகர்யம் உண்டு. நான் அவர்கள் இத்தனை நாள் என்னிடம் வாங்கியதை நினைவில் வைத்துக்கொள்வேன். “போன தடவைதானே இதே பச்சை வாங்கினீங்க.. பரவாயில்லையா? என்று குறிப்பிடுவேன். அவர்களே மறந்திருப்பர். “ஆமா… ஆமா… நல்லவேளை” என்பர். அவர்கள் வேறு யாருக்காவது வாங்க வந்தால் “என்ன நிகழ்ச்சி? எந்த வயதினருக்குப் பரிசு” என்பதைப் புரிந்துகொண்டு எடுத்துக்காண்பிப்பேன்.

என் வாடிக்கையாளர்களில் ஒரு பெண் மிகவும் குண்டாகவும், ஒரு பெண் மிகவும் ஒல்லியாகவும் இருப்பர்.  இருவருக்கும் அவர்கள் அம்மா அப்படி தேடி டிரஸ் வாங்க முயற்சிப்பாரோ என்னவோ… நான் எங்கு வாங்கினாலும் அவர்கள் இரண்டு பேருக்கும் சரியான அளவில் இருக்கிறதா என்று கணக்கிட்டு வாங்குவேன். அந்த இரண்டு பெண்களின் அம்மாக்களும் எனக்கு நல்ல தோழிகளாயினர். என் வாடிக்கையாளர்களின் ரசனை எனக்கு அத்துபடி. அவர்களுக்கான ஒரு முந்தைய செலக்ஷனை நான் செய்துவிடுவதால் அவர்களுக்கு வேலை எளிதாகும். நான் எடுத்துச் சென்று காண்பிக்கையில் அவர்கள் வேறு ஏதாவது இருக்கிறதா என்றால் உடனே மீண்டும் வீட்டிற்கு வந்து அத்தனையையும் அப்படியே வைத்துவிட்டு, அவர்களைக் காக்க வைக்காமல் தேவையானதை மீண்டும் எடுத்துச் சென்று காண்பிப்பேன். அப்படியும் வாங்காமல் விட்டவர்களும் உண்டு.

இத்தனை காலமும் வேறு நபர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளாமல், குடும்பத்தையும் நடத்திக்கொண்டு, செய்ததை இன்று நினைத்தால் சற்று மலைப்பாகத்தான் இருக்கிறது. ஐந்து வருடங்கள் இப்படி சென்று கொண்டிருந்த என் தொழிற் பயணத்தில் மீண்டும் ஒரு இடையூறு ஏற்பட்டது. ப்ரமோஷன் கிடைத்த என் கணவருக்கு மீண்டும் அந்த பழைய ஊருக்கே மாற்றலானது மகிழ்வைத் தந்தது. மீண்டும் பிரியா விடை பெற்று, இந்த ஊருக்கு வந்தோம். 5 வருடத்தில் நிறைய மாற்றங்கள். ஆனாலும் என் மாமி ஒருவர், அந்த ஊரில் இருக்கும் ஒரு தொழிலதிபர் மனைவி தனக்குத் தோழியென்றும் அவரை சென்று பார்க்க அறிவுறுத்தினார். நானும் சென்று பார்க்க அவர் வீடு தேடி வந்து புடவைகள் எடுத்துக்கொண்டதுடன், வரவிருக்கும் புரட்டசி மாதம் அவர்களின் பணியாளர்களுக்கு ஒரு 30 புடவைகள் தேவைப்படும். வாங்கித்தரமுடியுமா என்றதும் எனக்குக் கிடைத்த  அதிஷ்ட்டம்தான். உடனே ஹோல்சேல் கடைக்குச் சென்று அங்கிருந்து, வாட்ஸ் ஆப்பில் அவருக்கு புடவைகளைக் காட்டி அவரை விட்டே தேர்ந்தெடுக்கச் செய்து அடுத்த நாளே தருவித்துக் கொடுத்தேன்.

அப்போதுதான் என் பெண்கள் இருவரும் எனக்கு XL ஷீட்டில் அக்கௌன்ட்கள் எழுத சொல்லிக்கொடுத்தனர். “எவ்வளவு சமத்துடா இந்த க்ம்ப்யூட்டர்’ என்று புகழ்ந்தபடி என்ட்ரி செய்வேன். ஃபேஸ் புக்கில் ஒரு பேஜ் உருவாக்கி அதற்கான முகப்புப்படங்களை சேர்த்தனர். இருவருமாக ஒரு கடைக்குப் போய் ஜவுளிக்கடை பொம்மை (மேனுக்யுன்) எங்கு கிடைக்கும் என்று கேட்க, அவர் தங்கள் கடை பொம்மையையே எடுத்துக் கொடுத்தது ஒரு ஆச்சர்யம்தான். அந்த பொம்மைக்கு டாப்ஸ் போட்டு, புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக் பேஜில் போட்டனர். நிறைய லைக்குகளும், கமெண்ட்களும் வரத் துவங்கின. அந்த பேஜைப் பார்த்த வெப் சைட் உருவாக்கும் கம்பெனியிடமிருந்து ஆன்லைன் பிஸினெஸ் செய்யும்படி அழைப்புவந்தது. துணிந்து இறங்கிவிட்டோம். அவர்கள் ஒரு கொரியர் கம்பெனியுடன் எங்கள் பேலஸை இணைத்துவிட்டனர். ஆர்டர்கள் குவியத் தொடங்கின. ஆர்டர் வந்ததும் எனக்கும், கொரியர் கம்பெனிக்கும் ஒரு மெயில் வந்துவிடும். நானே கொரியர் கவர் வாங்கி வந்து பேக் செய்வேன். அந்த கொரியர் கம்பெனிக்கு நான் மெயில் அனுப்ப அடுத்த நாள் கலெக்ட் செய்து கொண்டு செல்வர். என் அக்கௌன்ட்டில் கஸ்டமர்கள் செலுத்தும் தொகை சேர்ந்துவிடும். கேஷ் ஆன் டெலிவெரியும் உண்டு. அப்பொழுதும் நான் வேறு ஆள் வைத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் என் இளைய சகோதரி, என்னைப்பற்றியும், நான் செய்யும் பிஸினெஸ் பற்றியும் ஒரு ஆர்டிக்கிள் எழுதி அது ஒரு ஆங்கில நாளிதழில் ப்ரசுரம் ஆனது.  

எனது வெப் சைட் கம்பெனி என்னை பேட்டி கண்டு நானும் என் மகளும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது.

இப்படியாக ஒரு வருடம் சென்றது. இந்நிலையில் என் குடும்ப சூழ்நிலை பிஸினெஸில் நான் ஈடுபட முடியாமல் செய்தது. வயதான மாமியாரை நான் கவனித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. என் மகளின் திருமணம், இளைய மகளின் கல்லூரிப் படிப்பு இப்படியாக என் தேவை வேறுவிதமாகத் திரும்பியது. என்னதான் பிஸினெஸெல்லாம் வெற்றிகரமாக செய்தாலும், குடும்பம்தான் எனக்கு முக்கியமாகப்பட்டது. பெரிய பதவியில் என் கணவர் இருந்ததால் பொருளாதாரப் பிரச்சனை ஏதும் இல்லாத போதும், என் காலில் என்னாலும் தனியாக நிற்க முடியும் என்று நிரூபித்துவிட்டதைப் போன்ற பெருமிதம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.

நல்ல நிலையில், வெற்றிப்படிக்கட்டைத் தொட்டுவிட்டதாக உணரும் அந்த நேரத்தல், என் பிஸினெஸை முடித்துக்கொள்வதாக திடமாக முடிவெடுத்தேன்.  என்னிடமிருந்த சரக்குகளையெல்லாம் என் வழிகாட்டி, என் தொழில் குருவான அந்த உறவினருக்கே அன்பளிப்பாகக் கொடுத்தேன். ஒரு சிறிய புள்ளியில் தொடங்கிய எனது தொழில் பயணம், மீண்டும் அதே புள்ளியில் வந்து சேர்ந்ததை ஒரு முழுமையான – வெற்றிகரமான வட்டமாக நான் உணர்கிறேன்.

முனையுங்கள் தோழிகளே! நம்மாலும் எல்லாத் துறையிலும் சாதிக்கமுடியும்.

(பி.கு) நான் தொழிலை விட்டு விலகிய அதே நேரம், ‘தியாக பிரும்ம சபை’ ஒன்றுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. எனக்கு எழுதுவதிலும், பேசுவதிலும் கூட ஈடுபாடு உண்டு. இப்போது, அந்த சபையின் எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி மெம்பராகி, மாதம் ஒருமுறை சொற்பொழிவுகளாற்றி வருவதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.