வியாழன், 20 டிசம்பர், 2018

பு(தை)யல்

நவம்பர் 15ம் நாள்....
நள்ளிரவு நேரம்!
மெல்ல வருடிடும் காற்று அன்று
மெள்ளத் துள்ளலைக் கூட்டியதால்
‘கஜா’ என்ற நாமகரணத்துடன்.
கரையைக் கடந்தது கர்வத்துடன்,
பேய்க்காற்று வீசியதால்                                           
படுத்து எழுந்தன தென்னை மரங்கள்.
பக்கம் சாய்ந்தன பலா மரங்கள்.
பறந்து விழுந்தன பற்பல கூரைகள்,
பயந்து மிரண்டனர் பதுங்கிய மக்கள்.
சூறாவளியாய் வீசிய கஜா,
சூறையாடிச் சென்றதால்,
தோப்பும், துரவுமென்றும்,
காடும் கழனியென்றும்
கண்ணியமாய் வாழ்ந்தோரெல்லாம்
கண்ணீர் மயமாய் வீழ்ந்தனர்.
உக்கிரதாண்டவமாடி
உருக்குலைத்த கஜா புயல்,
உழைக்கும் வர்க்கத்தின்
பிழைப்பைப் பிடுங்கிவிட்டுக்
கழுத்தினில் கத்திவைத்துக்
காலனாய் மாறியது.
அடித்து வீசிய பெருங்காற்று,
அப்பாவி மக்களுடன்,
ஆடு மாடென
அனைத்தையும்,
நசுக்கி, துவைத்தெடுத்து,
நடைபிணமாய் ஆக்கியது.
நிர்கதியானோருக்கு
நிவாரணங்கள் வழங்கி,
நாற்புறமும் செயல்பட்டு,
இயல்பாக்க முயன்றது அரசு.
இருப்பினும்…
மனித நேயம் இன்னும்
மரித்துப் போகவில்லை.
கருணையுள்ளம் இன்றும்
காணாமல் போகவில்லை.
எல்லா வயதினருக்கும்,
வயிற்றுப் பசியகற்றி,
மறைக்கத் துணி வழங்கி,
மருத்துவம் கொடுத்துதவி,
மகத்தான பணிபுரிந்த
மாமனிதர் பலருண்டு.
அதற்கான பொருட்களை
அள்ளி அளித்தனர் ஏராளமாய்
உள்ள உவகையுடன்
உதவிட முனைந்தனர் தாராளமாய்..
மயில் கண்ட வானவில் போல்
புயல் கண்ட பு(தை)யல்களாய்,
எத்தனை எத்தனை நல்லுள்ளங்கள்
எத்தனித்தன. ‘நானுள்ளேன்’ என!
அத்தகையோர் அனைவரின்
அடிபற்றித் தொழுகின்றேன்.
தொடரட்டும் அவர்களின்.
தொண்டாற்றல் விண்வரைக்கும்!
படரட்டும் அவர் செய்யும்
பணி முழக்கம் திக்கெங்கும்!

Image result for IMAGE OF GAJA

செவ்வாய், 4 டிசம்பர், 2018

பாரதியாரின் இறுதி நாட்கள்


Image result for image of bharathiyar


முன்னுரை:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வாழ்ந்து வந்த சின்னசாமி ஐயர் மற்றும் லக்ஷ்மி அம்மையாருக்கு 1882ம் வருடம் டிசம்பர் மாதம் 11 ம் நாளன்று பிறந்தவர் தான், பிற்காலத்தில், பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கப்பட்ட சுப்ரமணிய பாரதியார்.  தமிழில் ஆர்வமும், புலமையும் பெற்றிருந்த  இவர், தேசிய உணர்வு மிக்க கவிதைகள் மட்டுமின்றி, கட்டுரைகள், கதைகள், வசனக் கவிதைகள், நாடகங்கள் போன்றவற்றால், நாட்டுப்பற்றையும், சமூக சீர்திருத்த எழுச்சியையும் உண்டாக்கி, ‘தேசிய கவியாக’ போற்றப்பட்டவர். குறுகிய வாழ் நாட்களே கொண்டிருந்த பாரதியாரின் இறுதி நாட்கள் எவ்விதம் இருந்தன என்று இக் கட்டுரையில் காண்போம்.
பாரதியின் மரணம்:
‘நிமிர்ந்த நன்னடை; நேர்கொண்ட பார்வை;; முண்டாசுத் தலை; நெருப்பு விழிகள், முறுக்கு மீசை; விறைப்பான மேனி; வீரியமிக்க முகம்; எலுமிச்சை நிறம்; எடுப்பான உடை, இடியென குரல், துடிப்பான செயல்; இப்படிப்பட்ட அடையாளச் சின்னங்களைக் கொண்டிருந்த பாரதியார் 1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் நாள் தனது 39ம் வயதில் இயற்கை எய்தினார்.
மரணம் குறித்த செய்தியும், நிகழ்ந்ததும்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை, அவரைத் தன் துதிக்கையால் தூக்கிப் போட்டு காலால் மிதித்ததால் இறந்தார் என்ற செய்தி பரவலாக எல்லோராலும் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால் இச் செய்தி முற்றிலும் தவறானது.
1921ம் ஆண்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியது உண்மைதான். ஆனால் பாரதியார் அப்போது உயிரிழக்கவில்லை. ஜூலை மாதத்தில் யானை தாக்கியபோது, அவர் தலையிலும், மார்பிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன அதிலிருந்து மீண்ட அவர் கடும் வயிற்றுக்கடுப்பு ஏற்பட்டதனால், 2 மாதங்கள் கழித்து, செப்டம்பர் மாதம்தான் இறந்தார்.
கடைசி மூன்று வருடங்கள்:
1949ம் ஆண்டு அவரது படைப்புகள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்கியது தமிழ்நாடு அரசு. இந்தியாவிலேயே முதன் முதலில் நாட்டுடமையான இலக்கியவாதி என்ற பெருமையைப் பெற்ற பாரதியாரின் இறுதி மூன்று வருடங்கள் துயரமும், சோதனைகளும், ஏமாற்றங்களும், அவமானங்களும் நிறைந்ததாகவே இருந்தது. தூற்றுவார் தூற்றட்டும் என்ற மன உறுதியுடன், தன் கருத்தினின்றும், கொள்கையினின்றும், சிறிதும் வழுவாமல் அனைத்தையும் எதிர்கொண்டார்.
கடையத்தில் பாரதியார்:
இறுதி மூன்றாண்டுகளில் முதல் இரண்டாண்டுகள் தன் மனைவி செல்லம்மாவின் ஊரான கடையத்திற்கு குடிபெயர்ந்தார். என்றென்றும் தாம் ஒரு ‘கவிஞன்’ என்ற தன்னம்பிக்கையுடன்  தலை நிமிர்ந்து வாழ்ந்தார். கடையத்தில் இருந்தபடியே ‘சுதேசமித்ரன்’ பத்திரைகைக்குக் கட்டுரைகள் எழுதுவார். தன் கருத்தில் உறுதியுடன் சீர்திருத்த பணிகளை அவர் செய்து வந்ததை கடையம் மக்கள் வரவேற்கவில்லை. அவரை சரிவர புரிந்துகொள்ளாமல், எதிர்த்தபடி இருந்தனர். அங்கிருந்தபடியே ‘கலா நிலையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் தமிழ்பணிகள் புரியத் தொடங்கினார். அதைத் தவிர, தனிமனித உரிமை, சமதர்மம், பெண்கல்வி, பெண்விடுதலை, ஆணுக்குப் பெண் சமம் போன்ற தனது முற்போக்கான சிந்தனைகளை மக்கள் புரிந்து கொள்ளவும், அதை நடைமுறைப்படுத்தவும் முயன்றார். ஆனால் கடையம் மக்கள் அவரை ஏற்காமல் தூற்றினர். இதனால் மிகவும் மனவேதனைப்பட்டார்.
பாரதி எழுதிய சீட்டுக்கவி:
கடையத்தில் வறுமையும், மன சலிப்பும் வாட்டியதால் அங்கேயே தொடர்ந்து இருக்க அவர் விரும்பவில்லை. அதனால், திருவனந்தபுரம், எட்டயபுரம் ஆகிய ஊர்களுக்குச் சென்று வாழ்ந்தார். பணமின்மையால், பல நாட்கள் பட்டினி கிடந்தார். அப்போது அவருடைய தம்பி சு.விஸ்வநாதன் போன்றோர் வற்புறுத்தியதால் 1919ம் ஆண்டு மே மாதம் 2 ம் நாளன்று வெங்கடேச எட்டப்ப பூபதி ஜமீன்தாருக்கு சீட்டுக்கவி அனுப்பியிருக்கிறார்.
சீட்டுக்கவி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். இது, ஒரு கவியரசர்,  தனக்கோ அல்லது பிறருக்கோ உதவி செய்யுமாறு கேட்டு முடியரசர் அல்லது வள்ளல்ஒருவருக்கு அனுப்பும் விண்ணப்பக்கவி ஆகும். இதில் கவிஞர் அந்த முடியரசரையோ அல்லது வள்ளலையோ வானளாவ புகழுவார்கள். அதற்கிடையில் தங்களின் பெருமையையும் சிறிதளவு காட்டி எழுதியிருப்பர்.
ஆனால் பாரதியின் சீட்டுக்கவி முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அவர் எட்டயபுர மன்னரைப் பாராட்டுவதை விட, தன்னைப் பற்றிய அறிமுக செய்திகளுக்கே முதலிடம் கொடுத்திருந்தார். இந்த அளவு மன்னனையும், தன்னையும் சமமாக வைத்து எந்த புலவரும் இதுவரை சீட்டுக்கவி எழுதியதில்லை.
அதில், ‘கவியரசனை, புவியரசன் தக்கபடி ஆதரிக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜமீந்தாரிடமிருந்து பாரதியாருக்கு உதவி எதுவும் கிடைக்கவில்லை. சோதனைகள் தொடர்ந்து வந்தன. சமய சொற்பொழிவு ஆற்றவும், கவிதைகள் பாடவும், சந்தர்ப்பம் கிடைத்ததால், அதில் தனது மனதை ஈடுபடுத்தி, கவலைகளை மறக்க முயற்சித்தார்.
மீண்டும் சென்னைவாசம்:
இரண்டாண்டுகளுக்குப் பிறகு கடையத்திலிருந்து, சென்னைக்கே வந்து குடியமர்ந்த பாரதியார், ராஜாஜி இல்லத்தில், காந்தியடிகளை சந்தித்து, அவரின் இயக்கத்திற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துகொண்டதுடன், அன்று மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில் தாம் ஆற்றிய சொற்பொழிவில் ‘வாழ்க நீ எம்மான்’ என்று காந்தியடிகள் மேல் ஒரு பாட்டெழுதிப் பாடினார்.
1920ம் ஆண்டு முதல் மீண்டும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பணியாற்றவருமாறு, ரெங்கசாமி ஐயங்கார் அழைப்பு விடுத்ததை ஏற்று, அதன் துணையாசிரியராகப் பணியில் அமர்ந்தார். அப்போது தன் இயற்பெயரில் மட்டுமல்லாது, ‘சக்திதாசன்’ ‘காளிதாசன்’ போன்ற புனைப்பெயர்களில் நிறைய எழுதியுள்ளார்.
1920 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் நாள் பொட்டல்புதூரில் 'இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை' என்ற பொருள் பற்றி உரையாற்றினார்
சென்னையில் பாரதியார் முதலில் தம்புச்செட்டித் தெருவிலும் பின்னர் திருவல்லிக்கேணியில் துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவிலும் வாழ்ந்து வந்தார். இக்காலகட்டத்தில் பாரதியாருக்கு வ.வே.சுப்பிரமணிய ஐயர், குவளைக் கிருஷ்ணமாச்சாரியார், சுரேந்திர நாத் ஆர்யா, துரைசாமி ஐயர், ஆகியோருடன் மீண்டும் கலந்து உறவாடும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களுடன் உரையாடிப் பொழுது போக்குவது பாரதியாரின் அன்றாடத் தொழில் ஆயிற்று. பத்திரிகையில் பணியாற்றிய நேரம் போக, மீதியுள்ள நேரத்தில் அவர் வெளியீர்களுக்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றினார். கூட்டங்களில் உணர்ச்சி மிக்க குரலில் பாடினார். 1921ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் நாள் அவர் கடலூர் சென்று பேசினார். 


கோயில் யானையால் நிகழ்ந்த கோரம்:

பாரதியார் சென்னையில் வாழ்ந்த காலகட்டத்தில் இறை வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். நாள்தோறும் பார்த்தசாரதி கோயில் சென்று வழிபாடு செய்துவந்தார். அக்கோயில் யானையுடன் மிக நெருங்கிப் பழகினார்; யானைக்குத் தேங்காய், பழம் முதலியன கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டார். அந்த யானைக்கு ஒரு நாள் திடீரென்று மதம் பிடித்துக் கொண்டது. வழக்கம்போல் பாரதியார் யானையிடம் சென்றார்; அங்கே இருந்தவர்கள் எச்சரித்தும் கேளாமல் அதற்குத் தின்பண்டம் அளித்தார். கோயில் யானை பாரதியாரைத் துதிக்கையால் தூக்கிப் போட்டுவிட்டது. காயமுற்று, உணர்விழந்த நிலையில் யானைக்குச் சற்றுத் தொலைவிலேயே விழுந்த பாரதியாரை, குவளையூர் கிருஷ்ணமாச்சாரியாரே துணிவுடன் வந்து காப்பாற்றினார்.
பாரதியாருக்குத் தலையிலும் உடம்பிலும் காயம் ஏற்பட்டதால், உடனடியாக இராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பெற்றது.

சிகிச்சைக்குப் பின் பாரதியார்
சில நாட்களில் பாரதியார் உடல்நலம் தேறினார்.  என்றாலும், முன்பு போல் உடம்பு அவ்வளவு தெம்பாக இல்லை. வழக்கம் போல் 'சுதேசமித்திரன்' அலுவலகம் சென்று அவர் தமது பத்திரிகைப் பணிகளைக் கவனித்து வந்தார்; வெளியூர்களுக்குச்சென்று அவ்வப்போது சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் வந்தார்.

பாரதியின் இறுதி சொற்பொழிவு:
1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  1ம் நாள்  ஈரோட்டை அடுத்த கருங்கல்பாளையத்தில் இருந்த வாசகசாலை ஆண்டு விழாவில், பாரதியார் பேசிய சொற்பொழிவின் தலைப்பு என்ன தெரியுமா? 'மனிதனுக்கு மரணமில்லை' இதுவே அவரின் கடைசி சொற்பொழிவு ஆயிற்று.
அக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர் அப்போதைய காங்கிரஸ்காரர் ஒருவர். அவர் ஒரு வழக்கறிஞர். சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வரும் பாரதியை அழைத்து வருவதற்கு, அந்த வழக்கறிஞர் ஒரு இளைஞரை ரயில் நிலையத்திற்கு அனுப்பினார். நெடு நேரம் காத்திருந்த அந்த இளைஞர், பாரதியை அந்த ரயிலில் காணாமல், அவர் வரவில்லை என்று நினைத்து வக்கீல் வீட்டிற்கு திரும்பிவிட்டார்.
அங்கே அப்போது வக்கீலுடன் வேறு ஒருவரும் அமர்ந்திருந்தார். ‘பாரதி ரயிலில் வரவில்லை’ என்று அந்த இளைஞர் சொன்னதும், ‘அப்படியா! இவரை கூர்ந்து பாருங்கள். யாரென்று தெரிகிறதா?’ என்று கேட்டதும்தான் அவருக்கு பாரதி முன்னமே அங்கு வந்து சேர்ந்தது தெரிந்தது. தம்மை அழைக்க ஒருவர் வந்திருப்பர் என்றே உணராமல் ஒரு வண்டி பிடித்து கருங்கல்பாளையம் வந்து சேர்ந்துவிட்டர் பாரதி. பாரதி என்றாலே கருப்பு கோட்டும், முண்டாசும்தான் அனைவரின் நினைவுக்கும் வரும். உடல் நலம் சற்றே தேறியிருந்த நிலையிலிருந்த பாரதியார், தனது வழக்கமான கருப்பு கோட்டையும், முண்டாசையும் தவிர்த்திருந்தார். அதனால்தான் அந்த இளைஞருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.
ஆகஸ்ட் 2ம் நாள் அதே ஈரோட்டில் 'இந்தியாவின் எதிகால நிலை' என்பது பற்றி உரையாற்றினார். முதல் நாள் 'மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவு, அடுத்த நாள் அரசியல் சொற்பொழிவு. ஆன்மீகத்தையும், அரசியலையும் உயிர் மூச்சாகக் கொண்டிருந்த பாரதியாரின் இறுதி சொற்பொழிவுகள் இவை இரண்டும் தான். 


மகாகவியின் மரணம்
யானையால் தாக்குண்ட அதிர்ச்சியினின்றும் பாரதியார் ஓரளவு நலம் பெற்றார் என்றாலும், உடல் மட்டும் முழுவதும் தேறவில்லை. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் அவரது உடல்நிலை சீர்கெட்டது; வயிற்றுக் கடுப்பு நோய் அவரை வாட்டியது. ஏற்கனவே உடல் நலிவுற்றிருந்த நிலையில் நோயை எதிர்த்து நிற்பதற்கு உரிய ஆற்றல் பாரதியாரின் உடலில் இல்லை. மருந்து உண்ணுமாறு நண்பர்களும் உறவினர்களும் வற்புறுத்திக் கூறியதைப் பாரதியார் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் நோயின் கடுமையால் பாரதியார் பெரிதும் துன்புற்றார்; அன்று நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில், அவர் உயிர் பிரிந்தது ஆம்; தமது முப்பத்தொன்பதாம் வயது முடியும் முன்னரே மரணமடைந்தார்.
அந்த மகாகவி மரணித்திருக்கலாம். ஆனால் அவர் எழுத்தின் வீரியம் இன்னும் கனன்று கொண்டேதான் இருக்கிறது.
வாழ்க பாரதி! வாழ்க அவர் புகழ்!

பாரதியும், மொழிப்புலமையும்


                                
                                                        Image result for image of bharathiyar

1882ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் நாள் பிறந்த, சுப்ரமணிய பாரதியார் தமிழுக்கும், தமிழருக்கும் கிடைத்த ஒரு புதையல். மொழி என்பது, ஒருவரோடு ஒருவர் உரையாடப் பிறந்ததுதான். அம் மொழியை லாகவமாகக் கையாண்டு, மாபெரும் சமூகப் புரட்சியை உருவாக்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டானவர் சுப்ரமணிய பாரதியார். அவருடைய வாழ்க்கைக் காலம் முடிந்து, ஒரு நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில் அவருடைய மொழிப் புலமையின் பெருமையைப் பற்றி அவ்வப்போது நினைவு கூர்ந்தால்தான் இன்றைய தலைமுறையினர் ஒரு உத்வேகம் பெறுவர்.
முன்னுரை:
சுப்ரமணியன் என்ற இயற்பெயரோடு சுப்பையா என்று அழைக்கப்பட்ட இவர் மிகவும் குறுகிய காலம்தான் உயிர் வாழ்ந்தார். அதற்குள் ஆழ்கடலாம் தமிழுக்குள் மூழ்கித் திளைத்து முத்துக்களெடுத்து நமக்குக் கொடுத்திருக்கிறார். முண்டாசுக் கவிஞன் என்று அழைக்கப்பட்ட அவர்,தனது முண்டாசுக்குள் மூளையின் அளவை மறைத்து வைத்திருந்தாரோ என்னவோ? 39 ஆண்டுக்காலமே வாழ்ந்த அவரால் எண்ணற்ற படைப்புகளை எவ்விதம் படைக்கமுடிந்தது? தமிழ் மொழியின் விடிவெள்ளியாம் அவரின் மொழிப்புலமை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளமையில் சாதனை:
ஏழு வயதிலேயே தமிழில் பாடல்கள் புனையும்  ஆற்றல் பெற்றிருந்தார் சுப்பையா.  பதினொன்று வயது இருக்கும்போது, எட்டயபுர மன்னர் வைத்த போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதனால், இவருடைய கவிப்புலமையைப் பாராட்டிய மன்னர் இவருக்கு ‘பாரதி’  என்று பட்டத்தை வழங்கினார். பாரதி என்றால்சரஸ்வதி’ என்பது பொருள். அன்றிலிருந்து சுப்ரமணிய பாரதி என்று அழைக்கப்பட்டார்.
எட்டயபுரம் ஜமீன் அரண்மனையில் பல புலவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் சுப்பையாவுக்குக் கிடைத்தது. அங்கு இவர் இயற்கையாகக் கவி இயற்றி, அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டார். அப்போது, காந்திமதிநாதன் என்பவர் பாரதியின் கவிபாடும் ஆற்றலைச் சோதிக்க எண்ணி, "பாரதி சின்னப்பயல்" எனும் ஈற்றடி கொடுத்து ஒரு வெண்பா பாடச் சொன்னார். இவரும் "காந்திமதி நாதனைப் பார், அதி சின்னப்பயல்" எனும் பொருள்படும்படியாக வெண்பா பாடி அவரைத் தலை குனியச் செய்தார்
பன்மொழி பாவலர்.
தாய் மொழியாம் தமிழ் மொழி தவிர, பல மொழிகள் அறிந்த பன்மொழிப் பாவலர் பாரதியார்.  
அவரின் தந்தை கொண்டிருந்த ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி பயின்றார். அதனால் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர்.
காசிக்குச் சென்றதனால், சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஆகிய மொழிகளைக் கற்றிருக்கிறார்.
புதுவையில் சிலகாலம் இருந்ததினால், ஃப்ரஞ்ச், வங்காளம் ஆகிய மொழிகளையும், முதல் உலக யுத்தம் தொடங்கியதும், ஜெர்மன், லத்தீன், உருது ஆகிய மொழிகளையும், சென்னையில் இருந்த போது, தெலுங்கு மொழியையும் கற்றிருக்கிறார். இவருக்கு அரபி, மலையாளம் போன்ற மொழிகள் என 12 மொழிகளின் பரிச்சியம் இருந்திருக்கிறது. இவற்றுள் எழுதப் படிக்கத் தெரிந்தவை 7 மொழிகள் என்றும், மற்றவை பேசினால் அறிந்து கொள்ளக் கூடியவை என்றும் தெரிகிறது.
பைரன், கீட்ஸ், ஷெல்லி போன்றோரின் ஆங்கிலக் கவிதைகளையும் ரசித்து படிப்பார்.. முதன் முதலில், ‘ஷெல்லி’ என்னும் ஆங்கிலக் கவிஞனின் கவிதைகளில் வழியும் சுதந்திர வேட்கையால் தாமும் விடுதலை உணர்வை உணர்ந்தார்.
இத்தனை மொழிகளின் புலமை இருப்பினும்,
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்” என்று பாடியுள்ளது நமக்கெல்லாம் பெருமை அளிப்பதாய் உள்ளது.
தெலுங்கு பாரதிக்கு மிகவும் பிடித்தமான மொழியாய் இருந்திருக்கிறது.
அதனால்தான் ,’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று, தாம் எழுதிய ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற பாடலில் கூறியுள்ளார்.
‘சந்திரிகையின் கதை’ என்ற அவருடைய கதை ஒன்றில், வீரேசலிங்கம் பந்துலுவும், சந்திரிகையும் தெலுங்கில் பேசிக்கொள்ளும் பகுதியில் தெலுங்கிலேயே வசனங்கள் எழுதியுள்ளார் பாரதியார். இது அவர் அம் மொழியில் கொண்டிருந்த அபிமானத்தை மட்டுமல்ல, அவரின் மொழிப் புலமையையும் எடுத்துரைக்கிறது. ஆனால் இக்கதை நிறைவு பெறாமல் உள்ளது.
மொழி பெயர்ப்பு:
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ்செய்தல் வேண்டும்.

என்ற அறிவுறுத்தலோடு கவிதை எழுதியுள்ள பாரதியார் 1904ம் ஆண்டு மொழிபெயர்ப்பாளராக சுதேசமித்திரன் இதழில் வேலைக்கு அமர்ந்துள்ளார். அதைத் தவிர தனிப்பட்ட முறையில் பல நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 

இவர் சம்ஸ்கிருதத்திலிருந்து, பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்திரம், வியாச பாரதம் ஆகியவற்றை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
ஜான்ஸ்கர், ஷெர்மன் போன்றோரின் ஆங்கிலக் கவிதைகளையும், விவேகானந்தரின் ஆங்கில சொற்பொழிவுகள், கடிதங்கள் போன்றவற்றையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.  
பாண்டிச்சேரியில் இருந்த போது, ஃப்ரஞ்சு தேசிய கீதத்தைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
வங்காள மொழியிலிருந்த தாகூரின் சிறுகதைகளையும், கவிதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இவற்றை தவிர, ஒரு மொழி தெரியாவிட்டாலும், அம் மொழியின், வழி நூலிலிருந்து அந்த மொழியிலிருக்கும் நல்ல படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் வழக்கத்தையும் பாரதி கொண்டிருக்கிறார். அவருக்கு ஜப்பானிய மொழியும் சீன மொழியும் தெரியாது ஆனாலும், ஜப்பானிய மொழியிலிருக்கும், ஹைக்கூ கவிதைகளையும், சியூசூனி என்ற சீனக் கவிஞரின் படைப்புகளையும், தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

தமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு:
நம்மாழ்வார் பாசுரங்கள், நாச்சியார் பாசுரங்கள், திருப்புகழ் போன்ற சிறந்த தமிழ் இலக்கியங்களையும், ‘காங்கிரஸ் மகாசபை சரித்திரம்’ என்ற நூலையும் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். 
  ‘பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரமெல்லாம்
  தமிழ் மொழியில் மொழி பெயர்த்தல் வேண்டும்’ என்று
கேட்டுக்கொண்டுள்ளார் பாரதியார்.
பாரதியின் சொல்லாட்சி:
அவருடைய கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கப் பெற்ற ஒரு திரைப்பட இயக்குனர் அதைத் தான் வாசிக்க நேர்ந்த விவரத்தை குறிப்பிடும்போது, ‘அடித்தல் திருத்தலே அந்த கையெழுத்து பிரதியில் இல்லை. வெகு நேர தேடலுக்குப் பிறகு ‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாடலில் ‘முதலில் வல்லமை தாராயோ இந்த மாநிலம் புகழ்ந்திட வாழ்வதற்கே’ என்று எழுதியிருக்கிறார். பின்னர் ‘புகழ்ந்திட’ என்பதை அடித்து விட்டு ‘மாநிலம் பயனுற’ என்று மாற்றியுள்ளார்’. என்று கூறியுள்ளார். அதைத் தவிர வேறு அடித்தலே இல்லை என்பதை மிகவும் சிலாகித்து கூறியிருக்கிறார். பாரதியின் மொழியறிவையும், சொல்லாட்சியையும், இச் செய்தி விளக்குகிறது.
போட்டியும், பரிசும்:
‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ என்ற பாடல் இன்று வரை எல்லா பள்ளிகளிலும் பாடப்பட்டு வரும் ஒரு தேச பக்திப் பாடல். அப்பாடல் பிறந்த கதையைப் பற்றி சில மாறுபட்ட கருத்துக்கள் இருந்த போதிலும், பரவலாக எல்லோராலும் பேசப்படுவது யாதெனில், போட்டிக்காக எழுதப்பட்ட அப் பாட்டிற்கு மூன்றாம் பரிசுதான் கிடைத்திருக்கிறது. ஆனால் முதல், இரண்டாம் இடத்தைப் பிடித்த பாடல்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கையில் மக்கள் மனதில் முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது இப் பாடல். இச்செய்தி இன்றைய மாணவர்களுக்கு ஒரு அறிவுரையாக உள்ளது. ‘போட்டி’ என்றால் அதில் பங்களிப்புக்குத்தான் முதலிடம் தரவேண்டும் ‘பரிசு’ என்பது இரண்டாம் பட்சமாகத்தான் எண்ணவேண்டும்.
வளரும் பிள்ளைகளுக்கு பாரதியின் அறிவுரை:
தாம் பாடிய ‘பாப்பா பாட்டு’ என்னும் பாட்டில் பாரதியார், எதிர்காலத் தூண்களாம் இன்றைய மாணவச் செல்வங்களுக்குப் பலவிதமான அறிவுரைகள் கூறியுள்ளார்.
அதில், தாய் நாட்டின் பெருமை, தாய் மொழியின் பெருமை ஆகியவற்றை அறிவுறுத்தும் போது, தமிழ் சொற்களின் பெருமையினை எடுத்துரைத்துள்ளார்.
‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா’ என்றும்,
‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற பாட்டில்
‘தேமதுர தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்’
‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்றும் பாடியுள்ளார்.
போகின்ற பாரதமும், வருகின்ற பாரதமும்’ என்ற தேசிய கவிதையில் நம் நாட்டிற்குத் தேவையானவற்றை வா, வா என்றும் தேவையில்லாத வற்றை போ போ என்றும் பாடி மாணவர்களை வழி நடத்துகிறார். தமிழ் மொழி இனிமை உணராமல் அந்நிய மொழி மோகம் கொண்டுள்ள இளைஞர்களிடம்,
‘வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ, போ’ என்ற பாரதியின் வரிகள் இக்காலத்திற்கு மிகவும் தேவையானது.
இதைத் தவிர,
‘மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’ என இன்றைய இளம் மாணவச் செல்வங்களுக்கு அறைக்கூவல் விடுத்திருக்கிறார் பாரதி.
புதுக்கவிதைக்குப் புத்துயிர்:
‘பாட்டுக்கொரு தலைவன்’ என்று கவிமணியால் போற்றப்பட்ட பாரதியார் ‘நாட்டுக்கொரு தலைவன்’ ஆக வீறு நடை போட்டவர். தொல்காப்பியத் தமிழில் கவிதைகள் எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்து, எளிய மொழியில், எதுகையும், மோனையும் மின்னிட, ராகமும், தாளமும் கொடுத்துப் பாட்டெடுத்த பாட்டாளர். தமிழ்க் கவிதகளை பாமரனும் எளிதில் படித்து இன்புறும் வகையில் செய்த மாமேதை.
பாரதியின் முதலும், கடைசியுமான படைப்புகள்:
1902ம் ஆண்டு பாரதியார் எழுதிய ‘தனிமை இரக்கம்’ என்ற கவிதை ‘விவேக பாநு’ என்ற இதழில் முதன்முதலில் அச்சேறி வெளிவந்தது. அப்போது அவருக்கு வயது 20.
‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்ற கவிதைதான் அவர் எழுதிய கடைசி கவிதை. இதற்கிடையில் அவர் எழுதிய கவிதைகள் எத்தனை  என்பதை எண்ணிச் சாத்தியமில்லை.
‘ஸ்வதேச கீதங்கள்’ என்ற புத்தகத்தைத் தான் இவர் முதன் முதலில் வெளியிட்டுள்ளார்.
முடிவுரை:
சமூக சிந்தனை மிக்க சீர்திருத்தவாதியான இவர் உலகத்தைக் கூர்ந்து  நோக்கியவர். மனித குலத்தின் அத்தனை வயதினருக்கும் ஆண்,பெண் பேதமின்றி, ஏற்றத் தாழ்வுகளின்றி, ஜாதி பாகுபாடின்றி கவிதைகள் புனைந்தவர். தம் எழுத்தின் வாயிலாக புரட்சி செய்த புரட்சியாளர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, போன்ற பற்பல விஷயங்களைக் கையிலெடுத்து, தன் வார்த்தை ஜாலத்தால், கவிதை, கட்டுரை, கதை, வசனக் கவிதை, நாடகம் போன்றவற்றால், அவற்றிற்கெல்லாம் தீர்வு காண முயன்றவர். தீர்வு கண்டவர். அவர் படைப்புகளை படித்து, உலகெங்கும் பரப்பி, இன்புறுவோமாக!