வெள்ளி, 24 ஜூலை, 2020

படத்துக்கு ஏற்ற கதை.

                                          பிறந்த நாள் கொண்டாட்டம்         
வைஷாலி பர்த்டேக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. ரகுவும், சாதனாவும் ப்ளான் போட ஆரம்பித்தனர்.
'இன்னிக்குக் குழந்தையைக் கூட்டிட்டுப் போய் அவளுக்குப் பிடிச்ச டிரஸ் வாங்கிக்குடு. நான் நாளைக்கு பேக்கரில கேக் ஆர்டர் குடுக்கறேன். வேற என்ன வாங்கணும்?'
'அவ ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ், டீச்சர்களுக்கு சாக்லேட் வாங்கணும்.' என்றாள்.
ரகு, தன் ஆஃபீஸிலிருந்து, சாதனா ஆஃபீஸுக்கு வந்து பிக் செய்துகொண்டு வரும் போதுதான் பேசிக்கொண்டு வந்தார்கள்.
இவர்கள் வீடு வந்து சேர்வதற்கும், வைஷாலியின் ஸ்கூல் வேன் வருவதற்கும் சரியாக இருந்தது. ஆறாவது படித்துக்கொண்டிருந்தாள் வைஷாலி.
'கண்ணம்மா... இன்னிக்கு நானும் நீயும் கடைக்குப் போப்போறோம். என்ன டிரஸ் வாங்கலாம் குட்டிக் கண்ணனுக்கு?' என்றாள் சாதனா.
'அம்மா... இந்த தடவை எனக்கு பர்த்டே டிரஸ் வேண்டாம்மா....எங்க ஸ்கூல் வேன் வர்ர வழில ஒரு அனாதை ஆஸ்ரமம் இருக்கு. அவங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்மா' என்றாள்.
டிரஸ் வேண்டாம் என்று வைஷாலி சொன்னதும் அதிர்ந்த இருவரும் அவள் அடுத்ததாகக் கேட்ட விஷயத்தை அறிந்ததும் மகிழ்ந்தனர்.
அவள் அம்மாவிடம் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வந்த ரகு, 'கண்டிப்பா செய்வோம்டா கண்ணா. டிரஸ்ஸும் வாங்கலாம்' என்றார்.
உடனே ரகு, அந்த கருணை இல்லத்தின் ஃபோன் நம்பரைப் பிடித்து விவரங்களைத் தெரிந்துகொண்டார்.
'அன்பு கருணை இல்லமாம் அது. அனாதைக் குழந்தைகளைத் தவிர மனம் நலம் குன்றிய குழந்தகளைக்கூட அவங்க பராமரிக்கறாங்களாம். லஞ்ச்க்கு 2,000 ன்னாங்க நான் டேட் குடுத்துட்டேன்' என்றார்.
'தாங்க்யூப்பா' என்று கட்டிக்கொண்டது வைஷாலி.
பர்த்டேயும் வந்தது.
'ஹாப்பி பர்த்டே வைஷூ' ஹாப்பி பர்த்டே கண்ணா' அப்பா அம்மாவின் முத்த மழையில் நனைந்தாள் வைஷாலி.
'லஞ்ச் டைத்துல நான் உங்க ஸ்கூலுக்கு அம்மாவோட வரேன். அன்பு கருணை இல்லத்துக்குப் போய் எல்லாருக்கும் சாக்லேட் குடுத்துட்டு வரலாம்' என்றார் ரகு.
'ஓகே அப்பா' என்றபடி ஸ்கூல் வேனில் ஏறினாள்.
மத்யானம் மூவரும் கருணை இல்லத்துக்குப் போனார்கள். அங்கே பல வயது பிள்ளைகள் இருந்தனர். ஒரு ஆசிரியர் அவர்களை வரிசையாக அமரச் செய்தார். உணவுகள் அவர்கள் எதிரில் வைக்கப்பட்டது.
'இன்று பிறந்த நாள் கொண்டாடும் வைஷாலி அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்று அந்த ஆசிரியர் கூறக் கூற அந்தப் பிள்ளைகளும் பின் தொடர்ந்து வாழ்த்தினர்.
'இன்று எங்களுக்கு மதிய உணவு அளித்த வைஷாலி அவர்களுக்கு நன்றி' என்று ஆசிரியருடன் அனைவரும் பின் தொடர்ந்து கூறினர்.
'நன்றி... நன்றி' என்று மூவரும் சொல்லும்போது அவர்களுக்குப் புல்லரித்தது. சாக்லேட் கவரை அந்த ஆசிரியரிடம் கொடுத்து எல்லோருக்கும் கொடுக்கும்படி சொல்லிவிட்டு மூவரும் கருணை இல்லத்தை விட்டு வெளியே வந்தனர்.
ஒரு கனத்த மௌனம் நிலவியது.
ரகுதான் பேச்சை ஆரம்பித்தார்.
'நல்ல ஐடியா பண்ணினடா கண்ணம்மா... ஒவ்வொரு வருஷமும் இதே மாதிரி கொண்டாடலாம்'
'அப்பா... லஞ்ச் மட்டும் குடுக்கலாம். நாம வரவேண்டாம்பா... அவங்களுக்கெல்லாம் பர்த்டேயும் தெரியாது... அப்பா, அம்மாவும் கிடையாது. அவங்க முன்னாடி சப்பாடெல்லாம் கூட வந்தாச்சு. அந்த நேரத்துல அவங்க எனக்கு வாழ்த்து சொன்னது எனக்குக் கஷ்டமா இருந்ததுப்பா. நாம மட்டும் பர்த்டே கொண்டாடறோம் அவங்களுக்கு அந்த கொண்டாட்டமே இல்லையேப்பா' என்று கூறி அழுத வைஷாலியைக் கட்டிக்கொண்டு, 'ஆமாடா செல்லம். நீ சொல்றது ரொம்ப சரி' என்று சொன்னார் ரகு. ரகுவுக்கும், சாதனாவுக்கும் கண்கள் கலங்கின.
Chandrasekaran Jayaraman and 5 others
6 Comments
Like
Comment

ஞாயிறு, 19 ஜூலை, 2020

சுந்தரும், வாசுகியும்

'நேத்திக்குக் கூட ஒரு சின்ன சண்டை. ஏன் தான் இப்பெல்லாம் சுந்தர் மேல கோபம் வர்ரதுன்னு தெரியல. ' வாசுகியின் மனதுக்குள் இந்த கேள்வி எழுந்து தன் மேலயே வருத்தம் வந்தது.

'நான் சொல்றதுக்கெல்லாம்  இப்பெல்லாம் உடனே மறுப்பு சொல்றா....எப்படி இருப்பா முன்னாடியெல்லாம்'  மனதுள் புழுங்கினான் சுந்தர். 
 'இனிமே சண்டையே போடக்கூடாது'  'வாசுகி.... வா வெளில போய் ஏதாவது பழம் வாங்கிட்டு வரலாம்' என்றான்.
உடனே சுறுசுறுப்பாக  வாசுகியும் கிளம்பினாள்.
டூ வீலரில்  புறப்பட்டனர்.
'இந்த வண்டீல பழம் நல்லாயிருக்கு... இங்க நிறுத்துங்க'

'இங்க வேண்டாம். அந்த கடையில வாங்கலாம்' என்றான்.

வாசுகிக்கு புறு புறு என்று கோபம் பொத்துக்கொண்டு வந்தது. நான் சொன்னா அத கேக்கக் கூடாது'.. 'உம்மென்று பேசாமல் வந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் சுந்தர் மேல் பாய்ந்தாள். 'உங்களுக்கு கொய்யாப்பழம் பிடிக்குமே... அந்த வண்டீல இருந்தது நல்ல பெரிசு பெரிசா இருந்ததுன்னு தானே அங்க நிறுத்த சொன்னேன்! ஏன் நான் சொன்ன இடத்துல நிறுத்தினா என்ன... ஏன் வேற கடைக்குப் போனீங்க'

'ஏய்.. சும்மா நிறுத்தறியா..  நீ சொன்ன பழ வண்டிக்குப் பக்கத்துல ரெண்டு நாய் படுத்திருந்தது.நீ நாய் னா பயப்படுவியேன்னு வேற கடைக்குப் போனா.... சும்மா பேசிகிட்டே போறியே!' சுந்தரும் கத்தினான்.






வெள்ளி, 17 ஜூலை, 2020

அக்கூ குருவி


17.07.2020. மத்தியமர்
அக்கூ….. அக்கூ…… ன்னு குரல் கொடுக்கும் குருவியப் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? கரெக்டா ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் பாதி வரை ஒரு குருவி காலையிலும், மாலையிலும் மட்டும் அக்கூ…. அக்கூ…..ன்னு கத்தும். மகாதானபுரத்தில் என்னோட ஸ்கூல் வயசுல நாங்க கேட்டு ரசித்து, வியந்திருக்கிறோம். அங்கெல்லாம் ‘அக்கூ’ கத்த ஆரம்பிச்சுடுத்து… காவிரில தண்ணி வந்துடும்’னு’ சொல்வார்கள், அதே மாதிரி ஜூன்12ம் தேதி மேட்டூர் அணை திறப்பார்கள். அந்த குருவியோட அக்கா ஆத்தோட அடிச்சுண்டு போனதுனால ‘அக்கூ… அக்கூ..’ ன்னு கூப்பிடறதுன்னு அதுக்கு ஒரு கதை கூட சொல்லுவாங்க. மகாதானபுரத்துல சின்ன காவேரி, பெரிய காவேரி ன்னு ரெண்டு காவேரி இருக்கும். பெரிய காவேரி தான் அகண்ட காவேரி. அதுதான் மெயின் நதி சின்ன காவேரி ங்கறது மாயனூர் பெட்ரெகுலேட்டர் லேர்ந்து விவசாயத்த்துக்காக திறந்துவிடப்படற தண்ணீர். சின்ன காவேரியும் ஓரளவு அகலமாவே இருக்கும்.
கும்பகோணத்துலயும் காவிரி உண்டு அக்கூ குருவி இங்கயும் அதே மாசத்துல எங்கேயிருந்தோ வந்துடும் ‘அக்கூ’ அக்கூ’ னு கூவும். சரி காவேரில அக்கா அடிச்சுண்டு போன கதைதான் போலயிருக்கு இங்கயும்னு நினைச்சிப்பேன். இப்ப தஞ்சாவூர்லயும் அதே மாசத்துல கத்தறது. இங்க காவிரியின் கிளை நதியான வெட்டாறுதான் உண்டு.
எனக்கு இந்த குருவியைப் பத்தின ஆர்வம் அதிகமாயிருக்கு. இந்த குருவி எங்கிருந்து இந்தப் பகுதிகளுக்கு மைக்ரேட் ஆகி வர்ரது? ஒரு சமயத்துல, ஒரு குருவியோட குரல்தான் கேக்கும். நிறைய குருவிகள் ஒரே சமயத்துல கத்தி நான் கேட்டதில்ல. மத்யானம் அந்த குரல் கேட்கறதில்ல. கார்த்தாலயும், சாயங்காலமும் கேக்கறது. சில சமயம் குரல் வர்ர மரத்த கூர்ந்து பாத்தா குயில் போல தோணும். ஆனா நிச்சயமா தெரியல. யாராவது இந்த குருவி பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? உங்களுக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லுங்களேன்.

வியாழன், 16 ஜூலை, 2020

ஆடி மாதத்தின் சிறப்புகள்


15.07.2020 to Madhyamar
நம் முன்னோர்கள் இயற்கையை சார்ந்து வாழ்ந்து, அதன்படி காலத்தைக் கணித்திருக்கிறார்கள். 60 ஆண்டுகள், ஆண்டுக்கு 12 மாதங்கள், நாள் ஒன்றுக்கு 24 மணி நேரங்கள் இப்படி மிகத் துல்லியமாக வான சாஸ்த்திரத்தின் படி வரையறுத்திருக்கிறார்கள்.
ஒரு ஆண்டுக்கு ஆங்கில மாதங்கள் 12 இருப்பது போல் தமிழ் மாதங்களும் 12 இருக்கின்றன. இந்த 12 மாதங்களில் 4வது மாதம் ஆடி. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதுபோல நாளை பிறக்க இருக்கும் இந்த ஆடி மாதத்திற்கும் பெரும் சிறப்பு இருக்கிறது.
ஆடி மாதத்தைப் பற்றி பல பழமொழிகள் உள்ளன.
ஆடிப்பட்டம் தேடி விதை
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்: ஆடிக் காற்றால் அம்மையும் பறக்கும்.
ஆடி செவ்வாய் தேடிக்குளி: அரைச்ச மஞ்சள் பூசிக்குளி
ஆடி அழைக்கும்; தை துடைக்கும்
ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் அடை மழைதான்
ஆடிக்கூழ் அமிர்தமாகும்.
ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையைத் தேடிப்பிடி.
ஆடியில் அவரை போட்டால், கார்த்திகையில் காய் காய்க்கும்.
ஆடிப்பிறை தேடிப்பார்.
ஆடியில் போடாத விதையும், அடித்து வளர்க்காத பிள்ளையும் பிரயோஜனமில்லை
இந்த பழமொழிகள் எல்லாம் ஆடியின் விசேஷத்தைக் கூறுகின்றன..
இம்மாதம்,
தக்ஷிணாயணத்தின் துவக்கம்:
தேவர்களின் சாயங்காலம்;
அண்டத்தில் ஆக்ஸிஜனின் உச்சம்;
ஆறுகளில் தண்ணீர் பிரவாகம்.
அம்மனுக்கு நித்திய அலங்காரம்;
ஆடிக்கூழ், கஞ்சியெனும் நைவேத்தியம்;
விதை விதைத்திட உத்வேகம்;
விலைக் குறைப்பல் உற்சாகம்.
இந்த எட்டு வரிகளும் ஆடி மாதத்தின் சிறப்பை அற்புதமாக விளக்கிடும்.
நமக்கு தக்ஷிணாயணம், உத்தராயணம் பற்றித் தெரிந்திருக்கும்.
இருந்தாலும் சொல்கிறேனே!
சூரியனின் தேர் திசை நிலையைக் கொண்டே தமிழ் மாதங்கள் 12 ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு வருடம் என்பது இரண்டு அயணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயணம்.
தை முதல் ஆனி வரை உத்ராயணம்.
உத்ராயணத்தில் சூரியன் உதிக்கும் திசை
முதலில் கிழக்கிலிருக்கும். பின் படிப்படியாக வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மீண்டும் கிழக்கு திசைக்கே திரும்பும்.
தக்ஷிணாயணத்தில் கிழக்கில் உதிக்கும் சூரியன் படிபடியாக தென் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து பின் மீண்டும் கிழக்கு திசைக்கே திரும்பும்,
பள்ளிப் பாடங்களில் வருவது போல் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு மட்டும் அல்ல.
கிழக்கு - வடகிழக்கு.
கிழக்கு - தென்கிழக்கு
இப்படி சூரியன் உதிக்கும் திசை மாறுபடுகிறது.
உத்ராயணம் வெய்யில் காலத்தையும், தக்ஷிணாயணம் குளிர் காலத்தையும் குறிக்கிறது.
ஆடி மாதத்தில் தான், இந்த தக்ஷிணாயண புண்ணிய காலம் துவங்குகிறது அதுதான் முதல் வாக்கியம் தக்ஷிணாயணத்தின் துவக்கம்.
சரி, இரண்டாவது வாக்கியம்: தேவர்களின் சாயங்காலம்.
இதற்கு என்ன அர்த்தம் என்றால், மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாக உள்ளது. அதன்படி பார்த்தால் இந்த ஆடி மாதம்தான் தேவர்களுக்கு சாயங்காலமாக உள்ளது. அதனால்தான் ஆடி மாதம் முழுவதும் பூஜைகளும், ஆராதனைகளும் மிகுந்திருக்கின்றன.
அண்டத்தில் ஆக்ஸிஜணின் உச்சம். இது மூன்றாவது வாக்கியம்.
வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
வானத்திலிருந்து பல உந்து சக்திகள் இந்த ஆடி மாதத்தில் வெளிப்படும் என்றும் கூறப்படுகிறது.
(இன்னும் பல விவரங்கள், விஷயங்கள் இருக்கின்றன இந்த ஆடி மாதத்தில். அதனை அடுத்த பதிவில் தருகிறேன்)


R.C.நடராஜன் அவர்கள் இரண்டு கேள்விகள் எழுப்பியிருந்தார். அதற்கான பதிலை முதலில் அளித்துவிட்டு அதற்குப் பின் என் பதிவை தொடர்கின்றேன்.
‘ஆடிப் பட்டம் தேடி விதை’
இது குறிப்பாக நெல்லுக்கும், கறிகாய், செடிகளுக்கும் தான் பொருந்தும். மரப் பயிர்களுக்குப் பொருந்தாது.
அடி முதல் தை வரையிலுள்ள 6 மாதங்கள்தான் ‘நீர்பாய்ச்சும் மாதங்கள்.
தென் மேற்குப் பருவக்காற்றால் ஆடி மாதத்தில் கர்னாடகாவில் மழை பெய்து காவிரியில் நீர் வரத்து அதிகமாகும். அதனால்தான் மேட்டூர் அணை ஜூன் 12 ம் தேதி ஒவ்வொரு வருடமும் திறக்கப்படுகிறது.
ஆடி மாதத்தில் நெல் விதைத்தால், ஆவணி இறுதியில் நாற்று நடுவார்கள். ஐப்பசியில் நெல் நாற்று 2 அடி வளர்ந்திருக்கும். அதனால் அடை மழை பெய்தாலும் சாய்ந்து விடாமல் நிற்கும்.
கார்த்திகை என்பது ‘கால் காய்ச்சல்’ என்பர். வெய்யில் அடிக்கும். அதனால் ஐப்பசி மழை நீர் வடிந்துவிடும்.
மார்கழியில் பகலில் வெய்யிலும் இரவில் பனியும் பெய்யும். பனி பெய்ய பெய்ய நெல் மணிகள் உறுதியாகும். நீர் பாய்ச்சுதல் குறையும். மார்கழி இறுதியில் அறுவடை ஆகும். தை முதல் நாள் புது அரிசியில் பொங்கல் செய்து படைக்கப்படும்.
நெல் என்பது 6 மாதப் பயிர். அதனால் இதுதான் முன் காலத்தில் இருந்த நடைமுறை. இப்பொழுது குறுகிய காலப் பயிர்கள் வந்துவிட்டன.
அதனால்தான் ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழி வந்தது.
அடுத்த கேள்வி: ஆடிக் கூழ் ஏன்? எந்த இடம்?
சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் கடுமையான வெய்யிலால் அம்மை நோய்கள் தாக்கும். ஆடிக்காற்று அடிக்க ஆரம்பித்ததும் அந்த நோயின் வீரியம் குறையும். நோயிலிருந்து விடுபட்டதற்கு அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டும், நீர் வரத்து இருப்பதால் விவசாய வேலைகளைத் தொடங்குவதற்கும், அம்மனை குறிப்பாக மாரியம்மனை வழிபட்டு ஆடியை வரவேற்கிறார்கள்.. அதனால்தான் ஆடிக்கூழ் விசேஷமாக சொல்லப்படுகிறது.
16.07.2020.
ஆடி மாதத்தின் சிறப்பு (நேற்றைய பதிவின் தொடர்ச்சி)
அம்மனுக்கு உகந்த மாதம் இந்த ஆடி மாதம். அதனால் மாதம் முழுவதும் அம்மனுக்கு வழிபாடு நடைபெறுகிறது. பண்டிகைகளின் வாயில் திறந்த மாதம் ஆடி மாதம். ‘ஆடி அழைக்கும் தை துடைக்கும்’ என்ற பழமொழி வழங்கப்படுவது இதனால் தான். தை மாதம் பொங்கல் பண்டிகை வரும் அதற்குப் பிறகு சித்திரை வருடப் பிறப்பு. இவற்றைத் தவிர வேறு எந்தப் பண்டிகையும் ஆடி மாதம் வரை வருவதில்லை. ஆடிப் பண்டிகைதான் மற்ற பண்டிகைகளுக்கும் ஆரம்பமாக இருக்கிறது.
ஆடி ஒன்று ஆடிப் பண்டிகை.
எல்லா வெள்ளிக்கிழமையும் ஆடி வெள்ளி என்று விசேஷமாக கருதப்படுகிறது.
ஆடி அமாவாசை,
ஆடிப்பூரம்
ஆடிப்பூசம்
ஆடிப் பதினெட்டு
வரலக்ஷ்மி விரதம்
ஆடிக் கிருத்திகை
இப்படி ஆடி முழுவதும் வழிபாடும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கிறது.
தலை தீபாவளியைப் போல தலை ஆடியும் விமரிசையான ஒன்றுதான்.
புது மண தம்பதிகளை வீட்டிற்கு அழைத்து. புத்தடைகள் வழங்கி, மாப்பிள்ளைக்கு வெள்ளி டம்பளரில் தேங்காய்ப்பால் பாயசம் கொடுப்பது சம்பிரதாயமாக உள்ளது.
‘ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் ‘ என்ற சொல் வழக்கு ‘அபூர்வமானது’ என்ற அர்த்தத்தில் புழக்கத்தில் உள்ளது. அத்தகைய ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது விசேஷமாக சொல்லப்படுகிறது.
ஆடி அமாவாசையன்று தான் திருவையாறில் சிவபெருமான், திருநாவுக்கரசருக்குக் கயிலை காட்சியளித்ததாக இன்றும் திருவையாறில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
ஆடிப் பதினட்டு! – பதினெட்டாம் பெருக்கு!
இது தொன்றுதொட்டு கொண்டாடப்படுகிறது.
அது என்ன பதினெட்டு..?
தமிழ்ப் பண்டிகைகள் பொதுவாக நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டே அமையும். ஆனால் இந்த ஆடி மாதத்தில் 18ம் தேதியன்று இவ்விழா கொண்டாடப்படுவதன் காரணம் என்ன தெரியுமா?
தர்ம யுத்தமான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் முதல் நாள் துவங்கி, 18 நாட்கள் வரை நடந்து ஆடிப் பதினெட்டு அன்று தான் நிறைவுக்கு வந்தது.
போர் வீரர்கள் பொங்கி வந்த ஆற்று நீரில் தங்கள் ஆயுதங்களைக் கழுவிக் கொண்டனராம்.
யுத்தம் முடிவுக்கு வந்த நாளானதால்தான் ஆடிப் பதினெட்டு அன்று தாலி பிரித்துக் கட்டுதல் என்ற சடங்கு சில சமூகத்தினரால் இன்றும் அனுசரிக்கப்படுகிறது.
இந்த 18 என்ற எண்ணிற்கு ஒரு சிறப்பு இருக்கிறது.
மகாபாரத போர் 18 நாட்கள்.
பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள்
சபரிமலையில் 18 படிகள்.
இந்த ஆடிப் பதினட்டு அன்று நாம் நம்முடைய வீடுகளில் பலவித கலந்த சாதங்களை செய்து நேவாத்தியம் செய்து உண்பது வழக்கமாக உள்ளது.
காவிரியில் புதுப்புனல் பொங்கி வரும். நுங்கும் நுரையுமாக காவிரித்தாய் நடைபயின்று வருவாள். என் பிறந்த ஊரான மகாதானபுரத்தில் அகண்ட காவிரி. இரு கரை தொட்டு ஓடும் அழகான காவிரி. எங்கள் ஊரிலுள்ளவர்கள் எல்லோரும் அவரவர் வீடுகளில் செய்த கலந்த சாதங்கள், அவியல் அல்லது மோர்க்குழம்பு, அப்பளம் வடாம், மோர் மிளகாய் போன்றவற்றை காவிரிக்கரைக்கு எடுத்து வந்து சாப்பிடுவது வழக்கம். பேச்சும், சிரிப்பும் எங்கெங்கும் எதிரொலிக்கும்.
என் புகுந்த ஊரான கும்பகோணத்தில் வீட்டின் பின்புறம் காவிரி ஆறு. ஆடி மாதத்தில் சலசல்க்கும் நீரோசை காதுகளில் மோதிய வண்ணம் இருக்கும். (இதெல்லாம் 30 வருடங்களுக்கு முன்னால்.)
கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சப்பரங்கள் பிரபலம். மரக்கட்டையால் செய்யப்பட்ட சிறிய தேர் போன்று இருக்கும். ஆடி மாதம் பிறப்பதற்கு முன்பிருந்தே சப்பரம் செய்யும் தொழில் சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும். கலர், கலர், ஜரிகை காகிதங்கள், காகிதப் பூக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பலவிதமான உயரங்களில் சப்பரங்கள் விற்பனைக்கு வரும். எல்லோரும் அவரவர் வீட்டுக் குழந்தைகளுக்கு வாங்கிச் செல்வர். அதில் கயிறு இணைக்கப்பட்டிருக்கும். அதனை பிடித்து இழுத்துக்கொண்டு சிறுவர்களும், சிறுமிகளும் செல்லும் ‘கட கடா’ ஓசை வீதியெங்கும் வியாபித்திருக்கும். தேர் போன்ற சப்பரத்தில் காவிரி அம்மன் படத்தை வைத்து காவிரி கரைவரை இழுத்துச் செல்வது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
மகாதானபுரத்தில் ஒரு மகாலக்ஷ்மி அம்மன் கோவில் ஊள்ளது. அக்கோவில் அந்த ஊரில் இருக்கும் எந்தக் குடும்பத்துக்கும் குல தெய்வம் இல்லை. ஆனால் தமிழகத்தின் பல ஊர்களிலிருக்கும் பலருக்கும் குல தெய்வமாக உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த ஆடிப் பதினட்டு அன்று ஒரு வேண்டுதலுடன் வருகிறார்கள். ‘தலையை மொட்டை அடித்துக் கொண்டு அந்த மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்துக் கொள்வதாக வேண்டியிருப்பார்கள். பூசாரி ஒவ்வொருவர் தலையிலும் தேங்காயை உடைப்பார். சிலருக்கு பொத்தல் விழுந்து ரத்தம் பீறிடும் அதில் வீபூதியை வைத்து அடைத்து அனுப்பிவிடுவார். அப்படி ரத்தல் வந்தாலோ, தேங்காய் சரியாக உடையாமல் போனாலோ, ‘சாமி குத்தம்’ என்று எண்ணி அடுத்த வருடம் மீண்டும் உடைத்துக் கொள்வர். முட நம்பிக்கை போல தோன்றலாம். ஆனால் அரசாங்கம் விதித்த சில விதிமுறைகளுடன் இன்னமும் அந்த வழக்கம் நடந்துகொண்டிருக்கிறது.
ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபப் படித்துறையில் இந்த ஆடிப் பதினெட்டு அன்று எம்பெருமான் எழுந்தருளி தனது சகோதரி காவிரிக்கு, சகல மரியாதையுடன், யானை மீது சீர்வரிசை கொண்டுவந்து கொடுக்கும் வைபவம் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.
ஆடி வெள்ளியில் வீடுகளில் ‘மாவிளக்கு’ போடுதல் ‘விளக்கு பூஜை’ செய்தல் கோவில்களில் அம்மனுக்கு வலையல் சாற்றுதல்’ பூ அலங்காரம், சந்தனக் காப்பு போன்றவையும் விசேஷமாக நடைபெறும்.
இத்தனை சிறப்பு மிக்க இந்த மாதத்தில் மற்றொரு சிறப்பு ‘ஆடித் தள்ளிபடி’
மரச்சாமான்கள் முதல் மோட்டார் வாகனங்கள் வரை…
ஆடைத் துணிமணிகள் முதல் ஆபரணத் தங்கம் வரை
அனைத்திற்கும் தள்ளுபடி கிடைக்கும் இந்த ஆடி மாதத்தில். இந்தக் கொரோனா காலத்திற்கு ஏற்றாற்போல் பல பெரிய கடைகளிலிருந்து ஆடித் தள்ளுபடி சம்மந்தமான appகள் வரத்துவங்கிவிட்டன.
இப்படி பல சுவாரசியங்கள் நிறைந்த இந்த ஆடி மாதத்தில்,
அம்பிகையைத் தொழுதபடி; அர்ச்சனைகள் பலவும் படி.
சோர்வும், சூடும் அகலும் படி, கம்பங்கூழினை அள்ளிக்குடி.
தொற்று நோய்கள் விலகும் படி; எலுமிச்சை, வேப்பிலை கையில் பிடி;
பீடை மாதமல்ல ஆடி: மனப் பீடத்தில் அமர்த்தவேண்டும் கூத்தாடி
ஆடி, பாடி, கூடி, வேண்டி…. மனப் பீடத்தில் அமர்த்தவேண்டும் கூத்தாடி.