வெள்ளி, 3 ஜூலை, 2020

ஜெய் ஆஞ்சனேயா


நேற்று நான் எழுப்பிய சந்தேகத்திற்கு விளக்கமளித்துள்ள பலருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
"என்ன திடு திப்புன்னு இப்படி கேட்டுப்புட்டீக! சும்மா எழுதித் தள்ளுங்க!"
இந்த விமர்சனம் எனக்குப் பிடித்திருந்தது.
இதோ... என் பதிவு.
சில வருடங்களுக்கு முன் என் கணவருக்கு சற்று உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அவரது அலுவலக நண்பர்கள், எங்கள் அப்பார்ட்மென்ட்டில் வசிப்போர் என்று பலரும் அவரைப் பார்த்து நலம் விசாரிக்க, வீட்டிற்கு வரும்போது ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களை வாங்கிக்கொண்டு வந்தனர். நிறைய பழங்களிருந்ததால் நானும், வாட்ச்மேன், மற்றும் வேலையாட்களுக்கு தினமும் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்படியும் ஒரு வாளி நிறைய ஆப்பிள், ஒரு அடுக்கு நிறைய ஆரஞ்சு பழங்கள் இருந்தன. அவற்றை டைனிங் ஹாலில் வைத்திருந்தேன்.
ஒரு நாள் டைனிங் ஹால் ஜன்னலில் கம்பியைப் பிடித்தபடி தொங்கிக்கொண்டு பல குரங்குகள், கிறீச் கிறீச் சென்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தன. குட்டி குரங்கு, அம்மா குரங்கு, மந்தி குரங்கு இப்படி பலவகை குரங்குகள். வெளிப்பக்கம் இருந்த குரங்குகளுக்கு முதலில் கண்ணில் பட்டது உள்ளேயிருந்த பழங்கள் தான். சத்தம் கேட்டு ஓடி வந்த நாங்கள் அத்தனை குரங்குகளை எதிர்பார்க்கவில்லை. பயந்து அலறி, 'ஷு, ஷு' என்று விரட்டி, கையில் கிடைத்த புத்தகத்தை ஜன்னல் மேல் தூக்கியெறிந்து அவற்றை விரட்டி கர்ட்டனை இழுத்துவிட்டோம். உயிரே அப்போதுதான் வந்தது எங்களுக்கு.
ஆனால்... மனம் மிகவும் வலித்தது. 'அச்சோ... இத்தனை பழங்கள் இருக்கே! அத பாத்து பாத்துதானே கத்தித்து. ஒண்ணுகூட அதுகளுக்குக் குடுக்கலியே! ஆஞ்சனேயா...'
மறுநாள் காலை 8 மணியிருக்கும் பாருங்கள்..நாங்கள் பெட்ரூமில் இருந்தோம். வாசல் கதவு திறந்திருக்கிறது. என்றைக்குமே திறந்து வைத்ததேயில்லை. அன்று தாழ்பாள் போடாமல் இருந்திருக்கிறது. எங்கள் வீடு 4வது மாடியில் உள்ளது. மேலே மொட்டைமாடி. மாடியிலிருந்து இறங்கிய ஒரு குரங்கு, மெல்ல கதவைத் தள்ளி ஹாலுக்கு வந்து எங்கள் ரூம் கதவைத்தாண்டி டைனிங் ஹாலுக்குச் சென்றது. நான் அதைப் பார்த்துவிட்டேன். 'அச்சச்சோ.... குரங்கு உள்ள போறது. எத்தனை குரங்கு வெளியில் இருக்கோ தெரியல,' என்றபடி ரூமைவிட்டு வெளியில் ஓடி வருகிறேன். இந்த குரங்கு ஒரே... ஒரு ஆப்பிளை மட்டும் எடுத்துக்கொண்டு, எங்கள் ரூமைத்தாண்டி வெளியில் சென்றது. போகும்போது என்னிடம் அந்தப் பழத்தைத் தூக்கிக்காண்பித்துவிட்டு சென்றது பாருங்கள்....... சிலிர்த்தது எனக்கு.
அங்கேயிருந்த மற்ற எதையும் தொடவேயில்லை. வாளியையோ, அடுக்கையோ கீழே தள்ளி, கலைத்துக் குதறவில்லை. அத்தனைப் பழங்கள் இருக்கும்போது அங்கேயே உட்கார்ந்து கடித்து சாப்பிடகூட இல்லை. என்னிடம் காட்டிவிட்டு வேறு போகிறது, இந்த விஷயம் எனக்கு ஆச்சர்யமான ஒன்றாக இருந்தது.
ஜெய் ஆஞ்சனேயா.....!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக