திங்கள், 18 ஏப்ரல், 2022

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி 10.

 

               இராவணனின் துறவி வேடம்

 

மைத்துனன் அகன்றதும் மூப்பினைத் தரித்த இராவணன்,

பத்துத்தலை துறந்து, ஒற்றைத் தலை ஏற்றான்.

இளைத்த உடலுடன், இடுங்கிய கண்ணுடன்,

பூணூல் மார்புடன், கூனனாய்த் தோன்றினான்.

 

பண்ணசாலையின் முன்வாயில் வந்தான் முதியவன்.

உள் உறைவார் யாரெ’ன் றழைத்தான் இப்புதியவன்.

‘எழுந்தருள்க’ யென்றபடி எதிர்ப்பட்ட வடிவினள்,

பிரம்பு ஆசனத்தில் ‘இருந்தீரெ’ன வணங்கினள்.

 

அழகுக்கு அணிகலனாய், புகழுக்குப் பிறப்பிடமாய்,

கற்புக்குப் பொருளுரையாய், கற்பனையின் முகவுரையாய்

விழிகளுக்கு விருந்தான எழிலரசியைக் கண்டதும் - அவன்

வீரத்தோள்கள் இரண்டும் வீங்கி விறைத்தன.

 

கட்டவிழ்த்த சிலையான கலைப்பெட்டகம் ஒன்றினைக்

கண்டுபிடித்துத் தந்த இளையவளுக்கு ‘நன்றி’யென்றான்.

‘திரிதண்டமெ’னும் முக்கோலை அப்பால் வைத்தவன்

பண்ணசாலைக்குள் குனிந்து பணிந்து நுழைந்தான்.

(திரிதண்டம் : இது மூன்று மூங்கிற் கம்புகளை ஒன்றாக இணைத்துக் கட்டப்பெற்ற தண்டு. காமம், வெகுளி, மயக்கம் என்னும் முப்பகைகளை அடக்கியதற்கு அடையாளமாக இத் திரிதண்டை, துறவிகள் கொள்வர்.)

 

கடுந்தொழி லரக்கனின் வஞ்சக வருகையல்

நடுங்கி, நின்றன மலைகளும், மரங்களும் – கூவாது

அடங்கி அமர்ந்தன பறவைகளும் குருவிகளும்

படத்தை ஒடுக்கின பாம்புகளும், நாகர்களும்.

 

          இராவணன் பிராட்டியை வினாவுதல்

 

‘இருப்பவர் யார்? இங்கு தவத்தோர் யாரென?’

விருத்தனாய் வந்த அரக்கன் வினவினான்;

விருந்தினராய் வந்த இவர் விகல்பம் அற்றவரென

விவரங்களை விளக்கமாய்க் கூறினாள் வைதேகி

 

‘மன்னவனாம் என்னவனை அறிவீர் அன்றோ?’ என்ன

‘கேட்டனன் காதுகளால், கண்டிலன் கண்களால்’ என்றவன்,

‘காட்டிடை இரவு பகல் அரிது இருக்கின்றீரே!

யாருடை மகள்?’ என்ன, ‘ஜனகன் மகள் ஜானகி’யென்றாள்.

 

‘எவ்விடமிருந்து இவ்விடம் எய்தினீர்?’ கேட்டாள்,

‘முக்காலமும் தவம்செய்து, வனத்தில் வசித்த நான்

வல்லவ வேந்தன் ஆளும் இலங்காபுரி சென்று,

நல்லுபதேசங்கள் நல்கியபடி இருந்ததும் நன்று.

 

பத்துத் தலைகள் கொண்ட இராவணேஸ்வரன் புகழ்

எட்டுத் திக்கும், பாதாளம், வானுலகும் எதிரொலிக்கும்.

நாற்கடல் சூழ் இலங்கை தீவுக்கு அவன் அதிபதி. - அவனுடை

பெருமை இயம்பிடும் சொற்களோ தமிழில் குறைமதி.

 

பிரம்மனின் வழிவந்தவன்; மூவுலகையும் ஆள்பவன்.

இந்திரனின் தலைவனவன்; எழுதவொண்ணா ஆணழகன்.

வேதமிசைக்கும் நாவான்; கயிலை மலையெடுத்த தோளான்.

இதமான துணைதேடி இளைத்துவிட்ட வாளான்’ என்றான்.

 

‘தவச்செயல் புரிந்த நீவீர், வேதியருடன் வசிக்காமல்,

அவச்செயல் புரியும் அரக்கருடன் வசிக்கிறீரே?’ என்ன

‘தேவரைப்போல் கொடியவரல்லர் நிருதர்கள்’

தவசியரை விட நிருதரே நல்லார் போலும்’ என்றான்.

 

‘கேடுகெட்ட அரக்கரெல்லாம் வேண்டுமுரு எடுக்கவல்லார்.

பாடுபட்ட பயனையெல்லாம் மாயையினால் தடுக்கவல்லார்.

காடுதனில் தவமுனிக்குக் காலனாக இருந்திடுவார்.

‘கெட்டாரைச் சேர்ந்த நல்லாரும் கெட்டாரே’ யென்றவள்.,

 

‘அறம்தரும் வள்ளலாம் எம்பெருமான் இவ்வனத்துள்ளே

அரும்தவம் புரிந்தவண்ணம் இருக்கின்ற தினத்துள்ளே

அல்லல்கள் பல செய்து, அதர்மங்கள் புரிகின்ற

அரக்கர்கள், தம் வருக்கத்தோடு இறப்பர்’ என்றாள்.

 

அவளுரை கேட்டு இருளடைந்த இராவணன்

‘யானையின் இனத்தை இளமுயல் கொல்லுமா?

ஆண்சிங்கங்களை அழித்திடுமா புள்ளிமான்?

வைக்கோல்கள் வாட்களாவது அதிசயம்தான்’ சினந்தான்.

(தொடர்ந்து வரும்)

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி 9

 

          இலக்குவன் கூற்றும், இராமன் மறுப்பும்

 

'பொன்னுடலும், கால், செவி, வால் என

மாணிக்க மயமாய் இருக்கும் இம்மான்,

பாயும் மானல்ல; பகைவர்களின் மாயமானெ'ன

ஐயமற ஐயனுக்கு இயம்பினான் இளையான்.

 

‘பல்லாயிரம் கோடி மன்னுயிர்கள் பரந்துள்ளதால்

‘இல்லாதன’வென்று எதுவுமில்லை இளங்குமரா’யென்றவன்,

இல்லாளை அழைத்து ‘எங்குள்ளது மான்? சொல்’லென்றதும்,

‘கடக்கவொண்ணா வினையாக’ விழித்தது போலிமான்.

 

          இராம இலக்குவர்க்கிடையே நிகழ்ந்த உரையாடல்

 

‘இளையவ! மனம் கொண்டு நோக்குவாய் இம்மானை.

பொன்னினை ஒத்திருக்கும் சிவந்திருக்கும் மேனி.

முத்துக்கு ஒப்பாகும் இதன் வெண்மைப் பற்கள்.

வெள்ளியை ஒத்திடும் மின்னிடும் புள்ளிகளெ’ன்றான்.

 

‘பொன்மானால் ஆகும் காரியம்தான் என்ன?

மேன்மையது மீள்வதுதானெ’ன இளையவன் முடிக்குமுன்னம்

‘கொற்றவமைந்த! தர்க்கம் நீடித்தால் தப்பிப் போய்விடுமே!

பற்றித்தந்திடுவீர்! பெற்று வளர்ப்பேன் அயோத்தியிலெ’ன்றாள்.

 

‘பாம்புப் படுக்கையைத் தாம் நீங்கிப் பிறந்தது

பாக்கியம் உடைய தேவரின் உடைமை. – அன்னது

பயன்படாது பழுது போக விடலாமோ?’ என்பதாகப்

‘பற்றுவேன் நானெ’ன்றான் சீர் தூக்கிப் பாராமல்.

 

‘தமையனே! வஞ்சகம் விரும்பிடும் நயவஞ்சக அரக்கரின்

வினையிற் விளைந்த தீவினை மானிது’ எச்சரித்தான்.

‘மாயமான் ஆகுமேல் முடிப்பேன் என் அம்பால்.

தூயமான் ஆகுமேல் பிடிப்பேன் என் அன்பால்’ நிச்சயித்தான்.

 

பின்னின்று பாயும் பகைவர் யாரென்றறிகிலோம்’ என்ன

‘பகைவரென்றால் போரிடுதல் சரிதானே! கோமான் சொன்னதும்,

‘அம்பினைத் தொடுத்து நான்,  பகைவரை முடிப்பேன்.

அன்றெனில் அன்புடன் பிடித்துவருவேனெ'ன்றான் பின்னவன்.

 

சிவந்த வாயினால் கொஞ்சுமொழி பேசியவள்,

‘நாயக! நீயே பற்றி நல்கலை போலுமெ’னப் பிணங்கினாள்

நீலோற்பல மலொரொத்த மான் விழியிரண்டில்

நீர் முத்துக்கள் கோர்த்தபடி சிணுங்கினாள்.

 

இளையவன் சொல்வதை மனதுள் கொள்ளாமல்.

வதனத்தாள் சினத்தை சிரம்மேல் கொண்டான்.

‘மானதை பற்றி நான் கொணரும் வரையில்,

மயிலாளின் மானத்தைக் காத்திடு நீ’யென விரைந்தான்.

 

அம்மான் மெல்ல நடந்தது; வெறித்துக் குதித்தது.

அப்பால் சென்று அகன்றது; ஓட்டம் பிடித்தது.

நின்றது போலே இருந்தது; நீங்கிப் போனது.

குன்றிடை தோன்றி மறைந்து. மேகமாய் ஆனது.

 

கூடச் சென்றிடில், தூரமாய்ச் சென்றது.

தாமதித்து நின்றால், தீண்டும் நிலையில் நின்றது.

‘பற்றுவன் அல்லன் இவன்; இனி அம்புகொண்டு

கொல்வான்’ என உணர்ந்து ஓட்டம் பிடித்தது.

 

‘சக்ராயுதத்திற்கு’ ஒப்பான சிவந்த ‘சுதர்சனம்’ அம்பினை

தப்பிப்பாயும் மான்மேல் ஐயன் தப்பாமல் தொடுத்ததும்,

‘ஹே சீதா.! ஹே லக்ஷ்மணா’வென்று அண்ணலின் குரலில்

ஓங்கியழைத்த மான், தன்னுருவெடுத்துத் துவண்டு மடிந்தது.

 

‘இழைத்த மாயையால் என் குரலெடுத்த இம்மான்,

அழைத்தது கேட்டதும் அரற்றுவாளே அப்பெண்மான் – ஆயினும்

எனதாற்றல் அறிந்திடும் இளையான் அவளைத்

தேற்றுவான்' என்றெண்ணித் தேறினான் தமையன்.

 

மாள்வதற்காக மட்டும் வந்தவனல்ல இம்மாரீசன்.

உள்ளது சூழ்ச்சியென்பதை உணர்த்திய காரியஸ்த்தன்.

மூள உள்ள கொடும் செயல் சூழ்வதற்கு முன்னம்

மீள்வதுதான் மேலென்று எழுந்தது மனத் திண்ணம்

 

கொற்றவனின் குரலெடுத்து மாரீசன் கூப்பிட்ட

சொற்செவியில் பாய்ந்ததும், பீதியுற்றாள் பிராட்டி.

குயிலொன்று விழுந்து துடிப்பதைப் போல்

மயக்கம் வருமளவு அழுது அரற்றினாள்.

 

                   இலக்குவனை வெறுத்துக் கூறலும்,

                         இலக்குவன் தேற்றலும்

 

குற்றமற்ற குணத்தினனாம் தம்முயிர் நாயகன்,

மற்றைய அரக்கரின் அளப்பரிய மாயையினால்

இற்று வீழ்ந்தனன் எனத் தெரிந்தும், தன்னயல்

நிற்கும் இலக்குவனைக், கடிந்து நோக்கினாள்.

 

‘மண்ணிலும், விண்ணிலும் இராமனுக் கிணையான

திண்மையார் உளரென்ற எண்ணம்தான் வேண்டுமோ?

பெண்மையின் தன்மையால் உரைசெய்து சொன்னீரோ?'

என்றவன் மேலும் உரைத்தான் உண்மையை உணர்த்திட.

 

‘நீருண்ட மேகமன்ன வீரனை யாரென்று எண்ணினீர்?

மாயம்கொண்ட அரக்கன்மேல் இராமபாணம் பட்டதும்,

அரற்றி அழைத்துள்ளான் அண்ணனின் குரலெடுத்து

இரக்கமுற்று இரங்கலீரெ’ன அடக்கமாய்த் தேற்றினான்.

 

‘தோன்றலின் தீனக்குரல் ஒலித்த பின்னாலும் – நீ

நின்ற நிலையெந்த நீதிமுறையிலும் இல்லை’யென

தேற்றிய இளையானை சீற்றத்துடன் தூற்றியவள்,

எரியிடை புகுந்து இறந்திடத் துணிந்தாள்.

 

நெடுநிலம் வீழ்ந்தவளை தடுத்தவன் சொன்னான்,

‘மறுக்கிலேன் அம்மா. யான் உன் ஆணையை

யான் புறம் செல்லுங்கால் புறத்திருந்து பொறுமையுடன்,

அறம்போல் அரவணைப்பார் சடாயு’வென அகன்றான்.

(அடுத்து வரும்)

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி 8

 

                         மாரீசன் வதைப் படலம்

(சுகேது என்ற யக்ஷணின் பெண்ணான தடைகைக்கும், சுந்தன் என்னும் யக்ஷர் தலைவனுக்கும் பிறந்தவர்கள் சுவாகுவும், மாரீசனும், அகத்தியர் சாபத்தால் தாடகையும், அவள் மக்களும் அரக்கர்களாகி இராவணனின் தாய்வழிப் பாட்டனான சுமாலியால் போற்றப்பட்டதால் இவர்கள் இராவணனுக்கு மாமன்மார்கள் என்பதை பாலகாண்டத்தில் பார்த்தோம்.)

 

தவமியற்றி தகவாய் வாழும் மாரீசன் முன்

தனியனாக வந்து நின்றான் தசமுகன். - அவனை

வணங்கித் தொழுதவன் பயத்துடன் வினவினான்;

‘வனத்திடை வருகையின் காரியம் யாது? சொல்லுதி’

 

‘நின் மருமகளின் நாசியறுத்த மானிடர் இருவர்.

உன் மருகர்கள் கர தூடணனையும் கொன்று அழித்தார்.

வன்மைமிக்கவர் தண்டகாரண்யத்தில் தவசியாய் இருக்கிறார்.

என்மரபுக்கும், நின்மரபுக்கும் இழுக்கன்றோ இவையெல்லாம்?

 

ஒப்பில்லா மாந்தருடன் போர்புரிய தன்மானம் ஒப்பவில்லை.

செப்புமொழி கொஞ்சிப்பேசும் வஞ்சியைவிடவும் மனமில்லை.   

உடனவளைக் கவர்ந்துவர முடிவெடுத்த பிற்பாடு

கடத்திவர உனைநாடி கானகத்துள் வந்தேன். நீ புறப்படு’

        

                     மாரீசன் நல்லுரைக் கூறல்

எரிகின்ற நெருப்பினில் இரும்பினை உருக்கித்தான்

செவிப்பறைவரை ஊற்றினாற்போல் உடல்சிலிர்த்தான் மாரீசன்.

‘அறத்திறனால் தவஞ்செய்து பெருஞ்செல்வம் பெற்றாயே

புறத்திறனால் பெற்றவற்றை இழந்திடத்தான் புகுவியோ?

 

அகலிகைபால் மோகம் கொண்ட தேவேந்திரன்

அகம்திருந்த, அவன் அழிவுற்றதை அறிந்திலையோ நீ?

நீரையும், நாட்டையும், பிறர் தாரத்தையும் கவர்கின்ற

யாரையும் தருமமழிப்பதை மறந்தனையோ நீ?

 

என்னையும், தம்பியையும், தாடகைத் தாயையும்

தண்டித்த வில்லான் இன்றுனக்கு விரோதியானானோ!

நன்று உண்டெனில் இழிசெயலை நீ மறப்பதுதான்’

என்று நல்கினான் பல்விதமாய் நல்லுரைகள்.

 

                    இராவணன் கொண்ட சினம்

‘நங்கை முகமெங்கும் அகழ்ந்தவனைப் புகழ்ந்தனை! – என்

நெஞ்சின் நிலையையும் அஞ்சாமல் இகழ்ந்தனை!

கொஞ்சமும் உனக்கு உரைக்கவில்லையோ நிகழ்ந்தவை! – என

வெம்கண் இருபதும் புருவங்களும் உயர விடைத்தான்.

 

                        மாரீசனின் உபதேசம்

‘எடுத்தேன் கயிலை மலையையென இயம்பினையே! – ஈசன்

வடித்த மாமலையையே வளைத்தவனன்றோ இராமன்?

விடம் உண்கின்றாய் என்பதையறிந்தும் உன்னைத்

தடுக்காமல் விடுவது தர்மமாகுமா சொல்?’

 

                        இராவணன் மேலும் சினந்து கூறல்

 

'காமபாணத்தால் மடிவதை நான் விரும்பிலேன்.

ராமபாணத்தை எதிர்த்திடத்தான் விழைகிறேன்.

மானிடரை எதிர்க்கொள்ள சேனைதான் வேண்டுமோ - என்

பெருங்கரத்து ‘சந்திரஹாஸ வாளொ’ன்றே போதுமே!

 

அன்னையினைக் கொன்றவனை அஞ்சி நீ உறையலாமோ?

உன்னை ஒரு வீரனென மதித்திடல்தாம் சிறப்பாமோ?

ஆணை வழி ஏவல் செய்து அனுசரித்துப் போவாய்!

வீணான விளக்கத்தால் முடித்திடுவேன் என் வாளால்.

 

                       மாரீசன் உடன்பாடு

‘நன்மையும் தீமையன்றோ நாசம் வந்த நாளில்’

என்றவன் கேட்டான் ‘செய்வது புகலுதி’

'காமக்கனலால் எரித்துவாட்டும் சீதையெனும் தென்றலை

கவர்ந்து கொணருதி மாயையினாலே’ யென்றான்.

 

விதிவிளைவை முன்னறிய வல்லார் எவருமில்லை.

ஏவிய செய்தலல்லால் வழியேதும் இங்கில்லை. - அதனால்

‘இயம்புக! என்ன மாயம் நான் இயற்றுவதெ’ன்றதும்,

‘பொன்மானாகிப் போய் அப்பெண்மானைக் கவரெ’ன்றான்.

 

விடம் கலந்த நீரில் விழுந்த மீனாகத் துடித்தவன்.

அவமானம் கருதாமல் பொன்மானின் உருவெடுத்தான்.

நன்மானொத்த நங்கையை நாடிச் சென்றவனைக்

கலைமான்கள் களிப்புடன் நெருங்கி, விருப்புடன் பார்த்தன.

 

கொய்யாமலர்களைக் கொய்யும் தையலாள் முன்

பைய நடைபயின்று பதுங்கி வந்தது இப்பொய்மான்.

மாயமானைக் கண்டு மயங்கிய மான்விழியாள்.

எம்மானிடம் இறைஞ்சினாள். தன்மானத்துடன் கெஞ்சினாள்.

 

‘மாணிக்கம் பொதிந்த அக்கானகத்துக் கனகமானை

காணத்தகுமெ'ன்றாள்; ‘வேண்டுமெ’ன்று கைதொழுதாள்.

‘இம்மாநிலத்தில் எங்கும் இல்லை இம்மானெ’ன யாசித்தாள்.

‘எம்மான் இது’ வென்று எம்பெருமான் யோசித்தார்.

 

மானிடப் பிறவியெடுத்த மாலின் மனையாளுக்கு

மானிடம் ஏற்பட்டது மங்காத மனக்கிறக்கம்.

ஜனகமான் சொன்ன சொல்லால் சொக்கிப்போய்

விசித்திர மானைப் பிடிக்கப் புறப்பட்டார் சீமான்.

(வரும் இன்னும்)

புதன், 13 ஏப்ரல், 2022

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி 7

 

                சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம்

‘விசுவகர்மனெ’னும் தெய்வத்தச்சன் படைத்த இலங்கையில்,

தசமுக இராவணன் அதிபதியாய் ஆண்டுவந்தான். - அவன்

தோள்கள் இருபதிலும் அணிகலன்கள் அணிந்தவன்

கோள்கள் அனைத்தையும் பணியாற்றப் பணித்தவன்.

(விசுவகருமன் மனதில் நினைத்தவாறே படைக்குமாற்றல் அமைந்தவன். அதனால் தெய்வத் தச்சன் எனப்பட்டான்)

 

‘திக்கயங்களெ’னும் யானைகளைப் பிடித்த வீரன்!

கயிலை மலையைப் பெயர்த்த அசகாய சூரன்!

இந்திரனை வென்று வானுலகை அடக்கிய தீரன்! - இன்று

இரத்தினம் பதித்த கொலுமண்டபத்தில் வீற்றிருந்தான்

 

கொங்கைகள் இரண்டும், மூக்கும், காதும் இழந்த

தங்கையாம் ‘சூர்ப்பணகை’ வெறிகொண்ட வேங்கையாய்

செங் கைகளைத் தலையில் தாங்கிய வண்ணம்

வடதிசை வாயிலில் வந்து தோன்றினாள்.

 

மூவுலகையும் ஆள்பவனின் ஆருயிர் தங்கையின்

மூக்கறுந்ததை யறிந்த அரக்கரும், மகளிரும்

தரிக்கவல்லாமல் தவித்துக் குழம்பினர். – இதைப்

புரிந்தவர் எவரென புரியாமல் பொருமினர்.

 

‘போரிலானாகி ஏவல்கள் புரியும் இந்திரன் அல்லன்.

தோற்றுப்போய் நீர்புகுந்த திருமாலும் அல்லன்.

எதிர்நில்லாது மலைமீது நின்ற சிவனும் அல்லன்’.

இவ்வாறெல்லாம் எண்ணிச் சோர்ந்தனர் நிருதர்கள்.

 

குன்றெனத் திகழும் இலங்கேஸ்வரனின் வீரக்கழலை

நன்றென நினைத்து, நைந்து கதறினாள் சூர்ப்பணகை.

நிகழ்ந்ததொன்றும் விளங்கிடாமல் நெஞ்சம் பதைத்தவன்

வழிந்து ஓடும் குருதி கண்டு வாயடைத்து நின்றான்.

 

மடித்த வாய்கள் பத்தும் கோபப்புகை கக்க

துடித்த தொடர் மீசைகள் தீப்பற்றி உயிர்ப்ப,

கடித்த பற்கள் இடியென ஒலி யெழுப்ப,

வெடித்தான், ‘யாவர் செயல் இஃதென்று’

 

‘காட்டிடை வந்து புவி காவல் புரிகின்றார்.

மீனுடைக் கொடிகொண்ட மன்மதனை ஒத்தார்.

ஊனுடை உடம்பு கொண்டார்; உவமையில்லா

மானிடர் இருவர், வாளுருவித் துண்டித்தார்’ என்றாள்.

 

கிள்ளியெறிந்தவர் ‘மானிடர்’ என்பதை ஏற்காமல்,

எள்ளி நகையாடி ஏளனத்துடன் சொன்னான்,

‘பிள்ளாய்! உன் கூற்றுக்குப் பொருந்தார் மானிடர்,

பொய் தவிர், பயத்தையொழி, நடந்ததைக் கூறிடு.

 

‘மரவுரி தரித்து, பிரிசடை பூண்ட அழகர்கள்.

முப்புரி நூலினை மார்பினில் அணிந்த குமரர்கள்.

அரக்கர் குலம் அழித்திட சூளுரைத்த சீலர்கள்

தசரத மைந்தர்கள் இராம, இலக்குவர்கள்.’என்றாள்.

 

‘அரிதான என் தங்கையின் நாசிகளை வாட்கொண்டு

அரிந்துவிட்ட மானுடர் வாழ்கின்றாரா இப்புவியில்?

ஆளும் உள; வாளும் உள; வாழ்நாளும் உள;

தோளும் உள; அண்ணனாம் நானும் உளனன்றோ?’ என்றவன்,

 

‘குன்றுடைக் காட்டினில் காவலாய் உனக்கிருந்த

கரன் முதலானோர் கொன்றிலரோ மானிடரை?’ வினவினான்.

‘சுற்றமுற்றமும் தொலைந்து மடிந்தது எளிதிலெ’

உற்றது உற்றபடி உரைக்கலுற்றாள் சூர்ப்பணகை.

 

வாயிடை இதழும், மூக்கும், கொங்கைகளும்

வலிந்து கொய்து, குருதி பெருக்கிடும் வண்ணம்

நீயிடை இழைத்த குற்றம்தான் என்ன?’ வென்று

தீயிடை புகுந்த நெய்யாகச் சீறினான்.

 

‘சித்திரக் கலை வல்லுனரும் வடிக்கவொண்ணா

அத்தனை அழகும் அமையப்பெற்ற இராமனோடு

முத்திரை பதிக்கவல்ல முகவடிவு கொண்டிருந்த

உத்தமப் பாவையால் நிகழ்ந்தது ஈதெ’ன்றாள்.

 

‘பெண்ணினால் நிகழ்ந்த பாதகமா?’ வினவியவன்

‘புதிரவிழ்த்துப் புரியவை யார் அவளென?’ சினந்தான்.

‘தேன்சுவையுடன் கனிந்த கனியாம் அவளுக்கு

யாமுரை வழங்கல் அறிவின்மை சார்வதாகும்.

 

பூமித்தாய் பெற்றளித்த தனிப்பெருமை பெற்றவள்.

மூத்தவனாம் இராமனின் மனம் கவர்ந்த பெண்ணவள்.

தன்னிருப்பிடமாம் தாமரையை விட்டுவந்த தன்மையள்.

‘சீதை’யெனும் பெயர் கொண்ட கோலமயிலவள் - அப்

 

பெண்ணை உன்பால் உய்ப்ப அணுகிய என்னை

முன்னை மூக்கரிந்து முடித்தான் இவன் தம்பி.

மானொத்த அப்பெண்ணை நீ கொண்டு கொண்டாடு

யான்கொண்டு ஊடாட இராமனையே தந்துவிடு’ என்றாள்

 

சினம், வீரம், மானமெனும் ஆடவர் குணமெலாம்

காமம் மிகுந்திட காணாமல் போயினவாம்,

மயிலுடைய சாயலாளை மனதுள்ளே சிறை வைத்தான்.

வெய்யிலிலே வைக்கப்பட்ட வெண்ணையாக உருகினான்.

 

சிங்காதனம் விட்டு எழுந்தான் சிந்தனைவயப்பட்டவன்.

சங்கம் முழக்கினர் அங்கிருந்த அவையோர்

சிதைந்த அவன்மனம் சஞ்சல மிகப்பட்டதால் - பொன்

பொதிந்த அரண்மனைக்குள் விரகத்துடன் நுழைந்தான்.

 

காதலால் அவனுடல் வெந்து எரிந்தது.

காமத்தால் மனமுழுதும் காய்ந்து கருகியது.

கொல்லனின் வலிய உலைத் துருத்தியைப்போலே

மேல்மூச்சும், கீழ்மூச்சுமாய் பெருமூச்சு விட்டான்.

 

இன்னவாறு செய்வதென்று எண்ணமற்று உடல்தளர்ந்தான்.

வண்ணமிகு சோலையினுள் அங்குமிங்கும் நடைபயின்றான்.

மண்டபத்தின் மஞ்சத்தில் மல்லாந்து கிடந்தவனின் - விரகப்

புண்மீது குத்தித் துளைத்துப் படுத்தியதாம் பின்பனி.

 

‘என்ன பருவமடா இது?’வென பெருங்குரலில் கத்தினான்.

பின்பனி பின்னடைந்து வேனில் வந்து நின்றது.

வேனிலும் வெதுப்பியதும் கூதிரைக் கூவியழைத்தான்.

கூதிரின் குளிர்காற்றால் இருபது தோள்களும் மருகின.

 (பின் பனி – மாசி, பங்குனி - சிசிர ருது.

வேனில் – சித்திரை, வைகாசி – வசந்த ருது.

கூதிர் - ஐப்பசி கார்த்திகை - ஷரத் ருது)

 

பருவங்கள் அனைத்துமே பகையாய்த் தோன்றிட

அகன்றிடு அத்தனையும்; உதித்திடு நிலவென்றான்

வான்வெள்ளி வெம்மையைக் கக்கியதும் ‘போ’வென்றான்.

கதிரையும் தாளாமல் இளம்பிறையை ‘வா’வென்றான்.

 

முன்செய்த தவப்பயனால் கோள்க ளெல்லாம்

முன்வந்தன அவனிட்ட ஏவல்களைப் புரிவதற்கு

பத்துத் தலையோனைப் பதம்பார்த்தது ஒருதலைக் காதல்

பித்துப் பிடித்தவனாய் பிம்பத்தை வடித்தான் மனக்கண்ணில்.

 

‘உலகுக்குக் கோமான் நீ! சிறுமையுடன் வருந்தலாமோ?

மலரணிந்த குழலாளை அபகரிக்கத் தயங்கலாமோ?’

நிலைதடுமாறிய அண்ணனைத் தூண்டினாள் சூர்ப்பணகை.

கலைவடிவான மண்டபம் கட்டிட ஏவினான் காவலரை.

 

சிந்தையில் விளைந்ததைச் செய்திடும் செய்கையாய்

மந்திரி மார்களுடன் கலந்துரையாடினான் தந்திரமாய்

அந்தரத்தில் பறக்கும் புஷ்பகவிமானத்தில் ஏறியபடி

இந்தியம் அடக்கி வாழும் மாரீசன் வசம் வந்தான்.

(தொடர்ந்து வரும்)

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி -6

 

மானிடனின் மகத்துவம் அறிந்திடா கரனரக்கன்,

‘யானே வாகை கொண்டனனெ’ன கர்ச்சித்தான்.

‘தற்சமயம் நிமித்தம் தீயதாய் உள்ளதே’யென

அச்சத்துடன் இயம்பினான் அகம்பனெனும் நிமித்தன்.

 

உரைத்த அகம்பனின் அறிவுரைதனை அவன்,

உரத்துச் சிரித்தே, உதறித் தள்ளினான்.

‘ஈயினைக் கொல்ல ஈட்டி எதற்கெ’ன நகைத்தவன்

தீயெரி விழியுடன் போரிட முனைந்தான்.

 

பிடரி மயிர் கொண்ட ஒற்றை சிங்கத்தை

நெருக்கி வளைத்தன எறிபடை யானைகள்.

செருக்கும், இடக்குமே சிந்தையாய் ஆன

சேனைக்குப் பறந்தன பற்பல ஆணைகள்.

 

வளைந்த கைவிரி வில்லினால் அவ்விடம்

விளைந்த போரினை விளம்புவது எவ்விதம்?

புரண்டு விழுந்தன பாய்ந்து செல்லும் பரிகள்

மருண்டு மாய்ந்தன பேருரு கொண்ட கரிகள்

 

சூலமும், வாளும், தூரமாய்ப் பறந்தன.

தலைகளும் உடல்களைத் துரிதமாய் துறந்தன.

குருதியும் அருவிபோல் பாய்ந்து படர்ந்தன.

நிருதர்கள் தரையினில் புரண்டு இறந்தனர்.

 

அத்தருணம்-

முத்தலைகள் கொண்ட அரக்கன் திரிசிரா

எத்தனித்தான் இராமனை எதிர்த்துப் போரிட

தனியனாய் நின்ற தன்னிகரற்ற வீரனோ

சேனைகளை சிதைத்தான் பிணக் குவியலாய்.

 

அரக்கர்கள் உடல் சுமந்த குருதியாறு

அலங்கல்வேல் இராவணனுக்கு அறிவிக்குமாறு

இலங்கைவரை பாய்ந்து சென்று உய்க்கையிலே

ஆழ்ந்திருந்த தேரேறி ஆகாயத்தில் பறந்தான் திரிசிரா.

 

வான்தொடர் மழையென தோன்றல் மேலவன்,

வெம்கணை சரங்களைத் தொடுக்கத் தொடங்கினான்.

அம்பினை விடுத்த எம்பிரான், துண்டாக்கித் தேரழித்தான்

இருதலை கொய்து, ‘திரிசிரா’ என்னும் பேரழித்தான்.

 

கால்களை ஒடித்து, தோள்களை அரிந்து,

துல்லியமாய் மூன்றாம் தலையையும் அறுத்து,

வெஞ்சின அரக்கர் சிகரத்தை அழித்ததும்

அஞ்சி ஓடினர் எஞ்சிய நிருதர்கள்.

 

‘நிச்சயம்’ யெனும் கவசமணிந்த தூடணன்

‘கொச்சை மாந்தரைக் கண்டா கூச்சமடைந்தீர்?

நின்று காண்பீரென் நெடுஞ்சிலை வலிமையை’ என்று

சென்று தாக்கினான் கருநீல வண்ணனை.

 (நிச்சயம் - துணிவு) 'உடல் நிச்சயம்' என்னும் அரக்கர்களின் எண்ணமே இங்கு கவசமாக உருவகக்கப்பட்டது


கணக்கிடமுடியா பிணம் நிறை காட்டினில்

ஒலிக்கின்ற தேரினை செலுத்திய தூடணனின்

குரைகடல் சேனையோ வறள்பட குறைந்தது.

குறையுடல் அரக்கரின் அரற்றலால் நிறைந்தது.

 

குன்றெனத் தேரினில் வில்லேந்தி வந்த தூடணன்

மூன்று அம்புகளை முறையாகத் தொடுத்தான்.

மூன்றையும் ஒற்றை அம்பால் தகர்த்த வில்லான்.

நெடுந்தலை பிளந்தவன் உயிரையும் மாய்த்தான்

 

‘தலையிழந்தான் தம்பி’யென்பதை அறிந்து

கொலைவெறி கொண்டான் கொடியவன் கரன்.

சந்திரனை மேகக்கூட்டம் வளைத்திருப்பதைப்  போல்

அந்தகனும் அஞ்சும்படி அரங்கனை வளைத்தான்.

(அந்தகன் – யமன்)

 

கடுங்கரனெனும் பெயர்படைத்த கழல் வீரன்

நெடுங்கடலின் இடையே பெருமலையாய் நின்றான். – அவனின்

வாள்படையையும், வேற்படையையும், விற்படையையும் தன்

தோள்பலத்தால் துவைத்தெடுத்தான் தசரத இராமன்.

 

கள்ளமாய்த் தாம்கற்ற கல்வியை செலுத்திய கரன்

வள்ளலின் தோற்றத்தை அம்புகளால் மறைத்தான்.

உள்ளம் வருந்தினர் வானவரும், தேவரும் – வைகுந்தனோ

வெள்ளைப் பற்களைக் கடித்து வெகுண்டான்.

 

‘முடிப்பேனின்று வலிய கணையாலெ’ன்றபடி வில்லான்

தொடுத்திட வில் நுனி தோளுற வளைத்தான்.

பிடித்த திண்சிலையோ அகன்ற ஆகாயத்திடை

இடி முழக்கமாய் இடித்துக் கடிது ஒடிந்துபோனது.

 

மாற்று வெஞ்சிலை இல்லாமை கண்டு

ஏக்கமுற்றுத் தவித்தனர் வானவர் ஆனவர்.

மன்னர் மன்னனோ முன்னம் நிகழ்ந்த மரபொன்றால்

பின்புறமாய்த் தனது பெரும்கரத்தை நீட்டினான்.

(பாலகாண்டம்; பரசுராமப் படலத்தில், 'மழு என்னும் கோடாலியைக் கைக்கொண்டு ஆள்பவனான பரசுராமனிடமிருந்து 'விஷ்ணுவில்'லொன்றை இராமன் கைக்கொண்டு, அதை வருணனிடம் ஒப்புவித்திருந்தான்.)

 

வருணனிடம் இருந்த பரசுராமன் விஷ்ணுவில்லை

நீண்டகரத்தினில் ஒப்படைத்தான் வாயுத் தேவன்

பிடித்த வில்லினை இடக்கையால் எடுத்தவுடன்,

துடித்தன அரக்கரின் இடக்கையும், இடத்தோளும்.

 

நாணேற்றியதும் கரனின் எந்திரத்தடந் தேர்

நுண்ணிய பொடியாய் உதிர்ந்து வீழ்ந்ததும் அவன்

சுந்தர வில்லுடை இராமனின் தோளெனும்

மந்திரமலைமேல் பொழிந்தான் அம்பினை.

 

சரங்களை எதிர்த்து குமரன் வீசிய

சிவந்த சரத்தால், கரனின் வலக்கரம்

வீங்கு தோளொடு பாரிடை வீழ்ந்ததும் – கரன்

ஓங்கி வீசினான் உலக்கையை இடக்கையால்

 

விலக்கினான் இராமனதை வெங்கதிர் வாளினால்.

உலுக்கிப் பெயர்த்தடித்தான் கரன் ஆச்சாமரத்தால்.

ஏவினான் இராமன் ஒப்பற்ற கணைதனை – அது

கூறாக்கிப் பிளந்தது கரனெனும் அரக்கனை,

 

ஆர்த்தெழுந்த வானவர் ஆடினர், பாடினர்.

தூர்த்து மகிழ்ந்தனர் தூவிய மலர்களால்

போர்முடித்த தசரத மைந்தன் புறப்பட்டான்

கார்க்குழல் நங்கையின் குடிலை நோக்கி.

 

இறந்த கரனின் பெருவுடல் தழுவியே

குருதிப் புரண்டாள் கொடியவள் சூர்ப்பணகை.

'இராமனிடம் கொண்ட மோகத்தால் மூக்கிழந்தேன் நான்

‘போக்கினேனே உன் வாழ்க்கையை’யெனப் புலம்பினாள்.

 

ஆழ்ந்த கடலிடை அகப்பட்ட மரக்கலத்தை,

சூழ்ந்த சுழற்காற்று வீசி யழித்திடும் – அதுபோல

அலங்கல் குலமே அழிந்திடும் பயத்தால்

இலங்கை மாநகர் நோக்கி விரைந்தாள்.

(அலங்கல் குலம் – அரக்கர் குலம்)

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி - 5

 

          சூர்ப்பணகை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டல்

 

‘மூக்கு அறுபட்டாள் நும் தங்கை’ எனச் சொல்வாரின்

நாக்கையும், நரம்பையும் அறுப்பான் தசமுகன். – உன்

ஊனையும் உயிரையும் காப்பவர் எவருமில்லை- என்

இச்சைக் காக்கின் யான் உன் மூச்சைக் காப்பேன்.

 

போரென்றால் நானுன் புறம் இருப்பேன். – உனை

தோள்மீது சுமந்து செல்ல வல்லேன்.

வாள் வீசி உனக்கு வேண்டியதைத் தருவேன். – இப்

பவளப் பெண்ணாலே பயன் யாதும் உளதோ!

 

வேலேந்திய இராட்சதர்கள் வெகுண்டு வந்தால்

பூலோகம் உன்பொருட்டால் அழிந்து பொகும்.

உயர்குலத்தில் பிறந்து வளர்ந்த நாயகனே - என்னை

உவந்து ஏற்று இனிது இருப்பீர்’ என இறைஞ்சினாள்.

 

                                                 இராமன் மறுத்தல்

 

‘இராட்சதர் எதிரினில் தேவர்கள் தோற்றதால்

இளக்காரமா பெண்ணே யாமிருவர் மானுடரென?

இயக்கரையும், அரக்கரையும் கொணருதி இவ்விடம்

கொன்று குவித்துக் கொடுத்திடுவோம் உன்னிடம்’. என்றான்.

 

                                        சூர்ப்பணகை விடுத்த சூள்

 

‘கொடிமூக்கும், இருகாதும், முலையிரண்டும்

அறுபட்ட பின்னாலும் வாழ்ந்திடத்தான் பொறுப்பேனோ?

காற்றையும், கனலையும் காட்டிலும் கொடியவனாம்

கரனாகிய யமனைக் கொணர்ந்திடுவேன் நானெ’ன்றாள்.

 

                                                      கரன் வதைப் படலம்

 

‘ஜனஸ்தானம்’ என்ற சமஸ்தானத்தின் தலைவன்!

கும்பீனிஸிக்கும், விஸ்வரஸுக்கும் மகனான அரக்கன்!

தூடணனுக்கும், தனக்கும் தமையனான கரன் என்பானின்

கரம்பற்றி கதறி அழுதாள் அரக்கி சூர்ப்பணகை.

 

வழிந்த குருதியைப் பார்த்ததும் நெஞ்சம் துடித்தான்

இழிந்த நிலையைக் கண்டதும் நஞ்சென உமிழ்ந்தான்.

‘பழிச்செயல் இதனை துணிவுடன் புரிந்தவன் எவனெ’

கருவிழி இரண்டும் சிவந்திட உருமிச் சினம் கொண்டான்.

 

‘தவ நியமத்திலிருக்கும் மானிடர் இருவர்

தரும நெறிப்படி நடக்கும் தசரத குமரர்

வரிவில் வாள் கொண்ட வீரக்கையினர்

வடிவினில் மன்மத னையொத்த மேனியர்.

 

சிறிதும் உன் வலிமை நோக்காதார்

அரக்கரை அழித் தொழிக்கும் நோக்கத்தார் - அவரோடு

நேர்கிலா பெண்ணின் நோக்கு உடையவளை

நோக்கினேன் நான் என்னிரு கண்களால்.

 

இலட்சணம் பொருந்திய இலக்ஷ்மியைப் பார்த்ததும்

இலங்கை வேந்தன் இராவணனுக் கென

எடுத்துச் சென்றிட இலட்சியம் கொண்டேன் – அதைத்

தடுத்தென் மூக்கினை அறுத்தான் இலக்குவனெ’ன்றாள்.

 

தோண்டிய பனை நுங்கின் துளைகள் போல்

துண்டான மூக்கினைக் கண்டு ஆத்திரப்பட்டவன்,

‘கேடு செய்தவரை காட்டிடெ’ன ஆவேசப்பட்டான்.

‘எடுத்திடு தேரெ’ன வீறுகொண் டெழுந்தான்.

 

மலையினும் வலிய படைத்தலைவர் பதினால்வரும்,

‘தேவரோடு போரென்றால் வாளினை நீவீர் எடுக்கலாம்.

மாந்தரோடு மோதுதற்கு மதயானை கிளம்பலாமோ?

தருக இப்பணி; தகர்த்திடுவோம் நாங்களினி’ யென்றார்’

 

‘நன்று சொன்னீர்; நானிச் சிறார் மேல்

சென்று போர் செய்தால் தேவரும் நகைப்பர்.

கொன்று நீர் அவரின் குருதியைக் குடிப்பீர்.

வென்று மீள்வீர் மெல்லிடையாளோடெ’ன்றான் கரன்.

 

வெட்கமற்ற சூர்ப்பணகை சுட்டிக்காட்டினாள் பரந்தாமனை!

‘முற்றுவிப்போம் தலைவன் சொல்லிய முறைப்படி’யென

எட்டிப்பிடிக்கும் பந்துபோல் எள்ளிநகையாடிய அசுரர்கள்

வட்டமிட்டு சூழ்ந்தனர் கொசுக்கூட்டமாய் அம்மாமலையை

 

‘தையலைக் காத்தி’யென இளவலை ஏவிய ராமன்,

கயிற்றை அவிழ்த்து, பெருநாண் வாங்கினான்.

எய்தான் அம்புகளை; பாய்ந்தன பதினால்வர் மேல்

கொய்தன கரங்களை; சிதைத்தன அவரின் சிரங்களை.

 

படைத்தலைவர் பதினால்வரும் மடிந்தமை கண்டு

அதிர்ந்து போனாள் தீயவள் சூர்ப்பணகை.

ஒளிரும் வேலேந்திய கரனுக்குத் தெரிவிக்கப்

பிளிறிய படி ஓடினாள் அரண்மனையைப் பார்க்க

 

‘அழையுங்கள் என் தேரை விரைந்து!

முழக்குங்கள் போர் முரசை அதிர்ந்து

‘எழுக சேனை! வருக போர்ப்படை!’ யென

ஏழுலகும் அதிரும்படி வெகுண்டான் அரக்கன்.

 

காலாட்படைகள் கடல் போல் முன்வர

வாட்களும், வேல்களும் சுமந்த வீரரின்

தேர்கள், ரதங்கள், கூட்டமாய் பின்வர

‘புறப்பட்டது பெரும் படை’யென்பது புலப்பட்டது ஐயனுக்கு.

 

அம்புப் புட்டிலை முதுகினில் தரித்து

போர்புரிய ஸ்ரீராமன் ஆயத்த மாகையில்

தாம் போர் புரிய விழைந்த இலக்குவன்

‘யான் செய்நிலை காண்டி இன்றெ’ன்றான்.

.

‘அரக்கர்கள் ஆவியைப் பிடுங்கி எறிவதாய்,

பெருந்தவ முனியிடம் வாக்கினை அளித்ததால்

பொறுப்பேற்று யான் செல்வதே முறைமை

பிராட்டியைக் கனிவுடன் காப்பதுன் கடமை’ யென்றான்.

 

அண்ணல் ஆணையை மறுக்கிலா தம்பியும்,

கண்ணீர் சொரியும் அன்னையின் அருகினில்

உள்ளங் கைகளைக் குவித்துத் துதித்து

குன்றென காவலில் நின்றனன் நம்பியாய்.

(சொல்கிறேன் இன்னும்)