செவ்வாய், 31 மே, 2016

'மாற்றம்' ஒரு குற்றமா.....?

       நானா இது...? எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லையே! என்ன ஆயிற்று எனக்கு? நான் ஏன் இப்படி மாறிவிட்டேன்?

     அச்சச்சோ ! விஜி...... எனக்கு உன் ஞாபகம் வருகிறதே! நீ என்னைப் பார்த்துவிட்டாயா  என்று தெரியவில்லை! என்னைப் பார்த்தால் நீ என்ன நினைப்பாய்? என்ன செய்வாய் என்ற எண்ணமே எனக்கு உதறலாக இருக்கிறதே!.

     'விஜி, என்னை வெறுத்துவிடதே! நான் உனக்கே சொந்தம். என்னை நம்பு விஜி. இது என் தவறல்ல.' என்று உள்ளம் உரத்துக் கூவுகிறது.

    சுற்றுமுற்றும் பார்க்கிறேன். என்னைச் சுற்றி உள்ளவர்கள் எல்லோருமே எப்பொழுதும் போலவே இருக்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்? நான் என்ன செய்வேன்?

      எத்தனை அழகானவள் விஜி! தன அழகின் மேல்தான் அவளுக்கு எத்தனை கர்வம்.! 'விஜி...! விஜி....! எனக்கு துக்கம் பீறிடுகிறது.

      அவள் இன்னும் என்னைப் பார்க்கவில்லை. பார்த்தபின்...... அப்படியே என்னை ஏற்றுக்கொள்வாளா ? அல்லது என் இந்த மாற்றத்தை சரி செய்ய முயற்சி செய்வாளா..? என்று எனக்குத் தெரியவில்லை.

      இப்படி நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது, கண்ணாடி முன் நின்று தன்  அழகை ரசிக்கத் தொடங்கிய விஜியின் பார்வை என் மீது பட்டது. ஆம்... நான் எந்த தருணத்தைப் பீதியுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேனோ அந்த தருணம் நிகழ்ந்துவிட்டது.

      அதிர்ச்சி அவளை ஆட்கொண்டது!
      கண்களை அகல விரித்து - பதற்றமாய் என்னைப் பார்த்தாள்.
     முகம் பேயறைந்ததைப் போல ஆனது.

கார் மேகம் போன்ற அவளின் அடர்ந்த கூந்தலில் வெள்ளி கம்பி போல், காதருகில் உருமாறிவிட்ட - என்னை - ஒற்றை நரை முடியை தன்  விரல்களால் உயர்த்திப் பார்த்தாள் .

      அவள் இதயம் விம்மத் தொடங்கியது.

      உடனே சுதாரித்துக்கொண்டு , சட்டென எழுந்து கத்திரிக்கோல் கொண்டுவந்து என்னை - என்னை அடியோடு கத்தரித்து அப்படியே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டாள்.

       நீங்களே சொல்லுங்கள்! அவள் செய்தது சரியா...? இந்த மாற்றம் என் குற்றமா என்ன...? எவ்வளவு வழி முறைகள் உள்ளன உலகத்தில்! இப்படி வெட்டி எடுத்து விலக்கலாமா..? யாராவது சொல்லுங்களேன்...!




நானும், ஹெல்மெட்டுடன் என் முதல் பயணமும் - 'சௌரபி' - என் இரண்டாவது பெண் எழுதிய கதை.

           தமிழ்நாட்டில் உள்ள சின்ன நகரமான கும்பகோணத்தில்தான் இரு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டேன். வண்டி ஓட்டக் கற்றுக்கொள்வதற்குள் ஒரு வாட்டியாவது கீழே விழுவது இயற்கை என்று பெரியவர்கள் கூறினர். இதை மாற்றி, வண்டி ஓட்டுபவர்களின் இலக்கணத்திற்ககே விதிவிலக்காய் இருக்க விரும்பினேன். அதைப் போலவே ஒரு கீறல் கூட என் மேலேயும் சரி, என் வண்டி மீதும் சரி இல்லாமல் மூன்று ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டேன்.

       ஜூலை 1,  2015 முதல் ஹெல்மெட் அவசியம் அணியவேண்டும் என்ற கட்டளையை அரசாங்கம் அறிவித்த பின்னர். என் கற்பனைக்கு அளவே இல்லை. அனுஷ்கா ஷர்மா ஒரு விளம்பரத்தில் அணிந்த மாதிரி என் ஹெல்மெட் இருக்குமா...? அல்லது நண்பன் படத்தில் இலியானா அணிந்த ஹெல்மெட் மாதிரி இருக்குமா என்று  கனவு கண்டபடியே, ஒன்றாம் தேதி காலையில் என் வண்டியோடு ஹெல்மெட் கிடைக்கும் கடைக்குச் சென்றேன்.

       கடையின் வெளியே  ' HELLMATE AVAILABLE' என்ற போர்டைப் பார்த்து 'HELMET' க்கு ஸ்பெல்லிங் கூட தெரியவில்லை என்று சிரித்தபடி, ஒரு ஹெல்மெட்டை வாங்கிக்கொண்டேன். அதை அணிந்தபடி, என் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன்.

       ஹெல்மெட் கொஞ்சம் கூட சௌகர்யமாக இல்லை. மண்டை முழுக்க ஒரே வியர்வை. பின்னே வரும் வண்டி அடிக்கும் ஹார்ன் சத்தம் சரியாகக் கேட்கவில்லை. சாலையை கடப்பதற்கு முன், அருகில் வேறு வண்டி வருகிறதா என்று கடைக்கண்ணால் பார்ப்பது என் வழக்கம். குதிரைக்குக் கடிவாளம் போட்ட மாதிரி என் தலை கவசம் இருந்ததால், கடைக்கண்ணால் எவ்வளவுதான் எக்கி எக்கி பார்த்தாலும், ஹெல்மெட்டைத் தாண்டி ஒன்றும் தெரியவில்லை.

        அதனால் என் கழுத்து ஒரு 'U' TURN போட்டு திரும்பிப் பார்த்தது. எனக்குப் பின்னால் ஒன்றும் வரவில்லைதான். ஆனால் முன்னால் வந்த ஆட்டோவை நான் பார்க்கவில்லை.

        ஆட்டோ ஓட்டுனர் அடித்த ஹார்ன் எனக்குக் கேட்கவில்லை. நேராகப் போய், வேகத்தோடு ஆட்டோ மீது இடித்தேன். நான் அடித்த வேகத்தில் ஆட்டோவே கவிழ்ந்து விட்டது.   நானும் என் வண்டியோடு கீழே விழுந்து விட்டேன்.

       சவாரி எதுவுமின்றி வந்த அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு கண்ணாடி உடைந்து தலையில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. எனக்கு கை, காலில் சரியான அடி.

      நான் ஹெல்மெட் அணிந்திருந்ததால் என் தலை தப்பித்தது. ஹெல்மெட் அணியாத ஆட்டோ ஓட்டுனருக்கு தலையில் அடி!   பாவம்.!

       ஹெல்மெட் கடையில் எழுதியிருந்த 'HELLMATE' என்ற பலகை  இப்போது என் நினைவில் வந்தது.. ஆனால் அது எனக்கு சிரிப்பாகத் தெரியவில்லை.
Image result for free image of a helmet

திங்கள், 30 மே, 2016

என் 'கதைக்குள்' என் கதை.

நான்....!
ஆம்! என்னைப் பற்றி முதலில்  கூறப்போகிறேன்.
நான் அழகாகப் பேசுகிறேன் என்று கூறியவர்களும் உண்டு! சரியான அறுவை! என்று அலுத்துக்கொண்டவர்களும் உண்டு.
எந்த ஒரு விஷயத்தையும், ஆரம்பம் முதல் இறுதி வரை  ஒரு சிறிய குறிப்பைக் கூட விடாமல் முழுவதுமாகக் கூறுவேன்.
இடைச் செருகலாக அவ்விஷயம் நடந்தபோது சுற்றி நடந்த பலவற்றையும் கூறி சம்பவத்தைக் காட்சி போல காட்ட முற்படுவேன்.

அதோடு கூட, அவ்விஷயம் சம்மந்தமாக  நான் நினைத்தது..... நடந்தது......
இப்படியாக சீரியல் போல் வளர்த்துக்கொண்டே போவேன்.

எத்தனை அழகாக வர்ணிக்கிறாய்...! விவரிக்கிறாய் ....! என்று அதிசயித்துப் போவர் பலர்.

நான் பேசுகையில் கண் பேசும், கை அபிநயிக்கும், குரலோ....அழும் -  சிரிக்கும்,
வருந்தும் - நகைக்கும்,
 நக்கலாய், கோபமாய், சிநேகமாய்,..... என்று பல்வேறாய் வேறுபட்டு ஒலிக்கும்.

என் பேச்சை ரசிக்கும் கும்பல் ஒருபுறம் இருக்க - நான் பேச ஆரம்பிக்கும் முன்னே பயந்து, பாய்ந்து ஓடியவரும் அநேகம் பேர்.

"நான் இன்னிக்கி ஆறு மணிக்கு கோவிலுக்குப் போனேனா......" என்று ஆரம்பித்ததும், "சரி...! கீழ விழுந்தியா....? "எது மேல மோதினே....?" "விஷயத்துக்கு வா.." என்றெல்லாம் கூறி, குறுக்கிட்டுப் போறுமையிழந்தோரும் பலர் உண்டு.

எது எப்படியோ நான் இருந்தாலே அந்த இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும்.

"மிகச் சரியான வார்த்தைப் பிரயோகத்தால் சொல்லும் விஷயத்தை அழகாகக் கண் முன் நிறுத்துகிறாய்" என்றெல்லாம் கூறி பாராட்டுபவர்கள் நேரிடையாய்க் கூறிவிடுவதால் நானும் புளகாங்கிதம் அடைவேன்.

இப்படி இருக்கையில் திடீரென்று என் தொண்டையில் ஏதோ ஒரு ஒவ்வாமை ஏற்பட்டு, குரல் கம்மிப்  போயிற்று. புழுதியினாலா, தண்ணீரினாலா, பாக்டீரியா, வைரஸ் இவற்றின் தாக்குதலினாலா என்று வகைப்படுத்த முடியாமல் மருத்துவர் மாற்றி மருத்துவர், மருந்து, மாற்றி மருந்து, என்று உட்கொண்டும் குரல் எழும்ப மறுத்து சண்டி செய்தது.

"குரலுக்கு ஓய்வுதான் தீர்வு" என்று மருத்துவர்கள் ஒருமனதாகக் கூற, அதிர்ந்துதான் போனேன். சுய பச்சாதாபம் வேறு தலைதூக்கிக் கண்ணீரை வரவழைத்தது.

தவித்துத்தான் போனேன்.

பற்பல விஷயங்கள் தொண்டை வரை பொங்கி வந்து அடங்கிப் போகும்.
விழிகள் படபடத்து ஓய்ந்து போகும்.
சைகை பாஷையால் விரல்கள்தான்  வீக்கம் கண்டன .
அலை ஓசை இன்றி அமைதியானது  எங்கள் இல்லம் எனும் ஆழி.

பெருகிவரும் எண்ணங்களுக்கு சைகை மொழி போதவில்லை.

என்ன செய்யலாம்? ஏது செய்யலாம்?

நெஞ்சில் நிறைந்திருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்த வாய் ஒன்றை மட்டுமா இறைவன் படைத்துள்ளான்?

இருக்காது! மாற்று வழி ஒன்றை வைத்திருப்பான்  என்றெண்ணியபடி எடுத்தேன் என் பேனாவை.
'என் "கதைக்குள்" என் கதை' என்று தலைப்பிட்டு கொட்டினேன் என்னைப் பற்றிய எண்ணங்களை.! படித்துப் பார்த்தேன்.

'அட! நன்றாகத்தான் உள்ளது! நல்ல கதை ஒன்று உருவாகிஉள்ளதே !

'சரி சரி! புலம்பிக்கொண்டிருத்தல் இனி கூடாது!
சுய பச்சாதாபத்தைத் தூக்கிப்போட்டேன்.
நம்பிக்கை துளிர் விட்டது என் மனதில்.

வாழ்க்கைக் கவிதை

கட்டிய புடவையுடன்
கரம் பிடித்துச் செல்லுங்கள்.
கஞ்சிதான் உணவென்றாலும்,
கூரைதான் நிழலென்றாலும் ,
கலங்கிடவேண்டாம்.
கவிதையாய் வாழ்ந்திருக்க
காசு மட்டுமா அவசியம்?
அல்ல! அல்ல!
காதல்தான் பொக்கிஷம்!
நன்றி! வணக்கம்!
என்று கூறி இருக்கையில் சிவநேசன் அமர்ந்ததும்,.கரகோஷம் வானைப் பிளந்தது. "கைகொடுங்க சிவா! வரதக்ஷணை வந்காதீங்கன்னு நீங்க சொல்லும் முறையே தனிதான்." "அருமை சிவநேசன்" இப்படியாக பாராட்டு மழையில் நனைந்தபடி தன வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அடித்தான். கதவைத் திறந்த அவன் அன்பு மனைவி லதா, "விழா நல்லா  நடந்ததாங்க....?"
என்று கேட்டாள்.
       அவளது கேள்விக்கு பதிலேதும் கூறாமல்,  உங்க அப்பாகிட்டேயிருந்து  தகவல் ஏதாவது உண்டா..? என்று கேட்டு அவள் முகத்தைப் பார்த்தான். "ஒண்ணும் இல்லீங்க" பயந்தபடி கூறினாள் லதா.
"பொங்கலுக்கு இன்னும் 3 நாள் தானே இருக்கு? இந்த வருஷாமாவது முன்கூட்டியே பொங்கல் சீர் செய்யலாம்னு தோணுதா உங்கப்பனுக்கு? என்ன நெனைச்சிட்டிருக்கரு மனசுல? என்று சரமாரியாக சாடத் தொடங்கினான் சிவநேசன்.
    "கவிதைக்குப் பொய் அழகு' என்பது இதுதானோ....!



ஞாயிறு, 29 மே, 2016

கிளியம்மா.... என் கிளியம்மா

மணிமணியாய் பொறுக்கி உண்டு
மணிநேரம் ஆக்கிடுவாள்.
காய்கறியைப் புறங்கையால்
ஒதுக்கியே தள்ளிடுவாள்.
வகை வகையாய் செய்தாலும்
தோசையேவா தினமும் என்பாள்.
சோம்பலின் காரணத்தால்
சாப்பிட மறுத்திடுவாள் .

மாலையோ, இரவோ மறந்துவிட்டு
மறுநாளின் காலை வந்து
நோட்டுக்கு அட்டையென்பாள்.
சட்டைக்கு பட்டன் என்பாள்.
கணக்கு புக்கைக் காணோம்
தேடித்தா என அழுவாள்.
பேனாவில் இங்க இல்லை
போட்டுத்தா என அழைப்பாள் .

குளியலறையிலிருந்தபடியே
குரல் கொடுப்பாள் 'ஷிம்மி ' என்று
பூச்சி ஒன்றைப் பார்த்தாலோ
 கத்திடுவாள் "வீச்" என்று
காயம், வலி, வந்துவிட்டால்
காயமே நடுநடுங்கும்
பசி சொல்லத் தெரியாமல்
அழுகை ஒன்று வெடித்துவரும்

இவை எல்லாம் என் மகளின்
அட்டகாசங்கள்,
என் கடந்த கால பிம்பத்தின்
பிரதிபலிப்புகள்
அடடா!
காலம் கடந்து நான் கற்ற
கருத்தான பாடங்கள்
நடைமுறையாவது எப்படி?
எங்கனம்? எப்போது?

ஏ ! காலச்சக்கரமே!
சற்றே பின்னோக்கி சுழலேன்!
என்னில் சில திருத்தங்கள்
செய்துவிட்டு
பின் இவளைத் திருத்துகிறேன்.




மகாத்மாவிற்கு ஒரு கவிதாஞ்சலி.

தேசம் காக்க-
தேகம் தந்து - உயிர்த்
தியாகம் செய்த
உயர்ந்தோனே...!

நாடும் வீடும்
உனக்களித்த
வீரவணக்கம்
வந்து சேர்ந்ததா...?

பெற்றோரும், உற்றோரும்
கதறிய கதறல் - உன்
காதில் விழுந்ததா...?

பனி மழையில்,
குகை இருளில்,
மலைச் சரிவில்,
புதர் மறைவில் - என
எத்தனை முறை
போராடியிருப்பாய்....?

இன்றும் கூட
புற முதுகிட்டு ஓடவில்லை நீ!
போர்க்களத்திலே,
மார்பிலே குண்டு பாய்ந்து
வீரமாய் அன்றோ
மாண்டு போனாய்!

நாட்டுக்காக பலர் செய்த
நற்செயல் பற்றியெல்லாம்
ஏட்டினில் மட்டுமே
கண்டதுண்டு! - அதை நம்
வீட்டினில் கண்டதும்
இறுமாந்து போகிறோம்
இதயத்து வேதனையை
இயல்பாக மறைத்துவிட்டு!

பெற்ற தாய் தந்தை
பற்றற்று பரிதவிக்க,
கட்டிய இளம் மனைவி
கண்ணீரில் தத்தளிக்க,
பால் மணம் மாறா
பச்சிளம் பிஞ்சு
பரிதாபமாய் தனித்திருக்க,
நீயோ....
கடமையை கருத்துடனே
கண்ணியமாய் செய்துவிட்டு,
கற்பூரமாய் காற்றில் கலந்து
காலமாகிப் போனாயே...!

அன்று...!
ஆங்கிலேயன் போட்ட விலங்கை
அகற்றி எறிந்துவிட
தன் நலனைத் தள்ளி வைத்து
தள்ளாத வயதிலும்
துவளாமல் போராடி
'மகாத்மா' ஆனார்
பொக்கைவாய் காந்தி!

இன்றோ....
வாழ்ந்து களிக்க
வயதும், வருடமும்
ஏராளம் எஞ்சியிருக்க-
சின்னஞ்சிறு வயதில்
தீவிரவாதியுடன்
போராடி மறைந்த
 'ஷ்யாம் சுந்தர்'
நீயும் ஒரு மகாத்மா தான்!
ஆம்!
நீயும் ஒரு மகாத்மாதான்!


'என்னைக் காதலி!'

என்னைக் காதலிப்பதாகக்
கூறிக்கொள்ளும் நீ- அதை
வெளிப்படுத்தத் தவறுகிறாய்.
அல்லது மறந்து போகிறாய்.

உன் சாப்பாட்டு மேஜையின்      
உணவு முழுதுக்கும்
பொறுப்பாளி நான்தானே...!

உன் குடும்பத்தினர்
உடுக்கும் உடை முதல் - அவர்களின்
உடல் நலம் பேணல் வரை
நான்தானே பொறுப்பாளி!

பொறுப்பாளியான நான்
பொறுமையுடன் காத்திருக்கிறேன்.
எந்த அளவுக்கு நானுனக்கு அவசியம்?
என்றந்த உண்மையையை
என்றாவது நீ உணருவாயா  என!

என்ன செய்யவேண்டும் நீ...?
'என் நலனே உன் நலன்' என்றுணர வேண்டும்.
என்னை மகிழ்வித்து திருப்தி செய்தால்
உன் திருப்தி உனக்கே சொந்தமாகும்!

நான் யாரென்று தெரிகிறது அல்லவா...?
நான்தான் ....
உன் வருமானத்திற்குக்
காரணமாய் இருக்கும்
நீ செய்துவரும்
'தொழில்' அல்லது 'பணி'!



நல்லதோர் வீணை செய்தே!

மூட்டைத் தூக்கி, பொதியும் சுமந்து
முன்னுக்கு வந்தவன் முனியப்பன்.!
தன்  போல் பிள்ளையும் தவிக்கா திருக்கப்
பள்ளியில் சேர்த்திட முடிவு செய்தான்.

நோட்டுப் புத்தகம், பேனா என்று,
 பார்த்துப் பார்த்து வாங்கித் தந்தான்!
'புத்தக மூட்டை' தூக்கிய மகனை,
பார்த்தே ரத்தக் கண்ணீர் விட்டான்.

'நல்லதொரு வீணை செய்ய எண்ணி
நலங்கெட புழுதியில் எறிந்தேனோ...?
புலம்பித் திரிந்தான்! வருந்தி அழுதான்!
படிப்பறிவில்லா அறிவிலி முனியன்!.  

சனி, 28 மே, 2016

அவள் - என் அவள்

    இரண்டு நாட்களாக அவள் ஞாபகமாகவே இருக்கிறது. இதே போன்ற பிரிவு சமீப காலமாக பல முறை ஏற்பட்ட போதிலும், இம்முறை மனம் அலை பாய்கிறது. அதே நேரம் அவளும் என்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பாளா ..? அல்லது என் நினைவே அவளுக்குத் தோன்றாததுபோல் நடந்து கொள்வாளா..? தெரியவில்லை.
  ஆனால் நான் ஒவ்வொரு நிமிடமும் , இப்போது அவள் என்ன செய்துகொண்டிருப்பாள்? என்ன நிற உடை உடுத்திக்கொண்டிருப்பாள், என்ன சாப்பிட்டிருப்பாள், என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.
தொலைபேசியோ, கைபேசியோ ஒலித்தால், அவளோ, அவளோ என்று ஆவலுடன் பார்க்கிறேன். இதோ.... இதோ.... என் கைபேசி ஒலிக்கிறது. 'ஹலோ' என்று படபடப்புடன் கூறும் என்னை இவர் கேலியாகப் பார்க்கிறார்.
"ஹலோ அம்மா, சாரி மா ரெண்டு நாளா போன் பண்ணவேயில்ல. ரூம்ல திங்க்ஸ்லாம் அடிக்கிவேச்சுட்டேன்.  ம்ம் அம்மா எங்க மெஸ்ல கேடரர்ஸ் மாறியாச்சும்மா. சாப்பாடு செம டேஸ்டியா இருக்கு.. என்னம்மா பேசவே மாட்டேங்கறே .அழறியா என்ன....?" பேசிக்கொண்டேயிருந்தாள்  என் செல்ல மகள்.

எறும்பியல்

      "கணேஷ் டியூஷன் க்கு டைம் ஆச்சு பாரு.... எழுந்திரு கண்ணா"!
கணேஷின் அம்மா உரக்கக் குரல் கொடுத்தாள் .

கண்களைக் கசக்கிக் கொண்டு புரண்டு படுத்தான் கணேஷ். அவனால் கண்களைத்  திறக்கவே முடியவில்லை.தூக்கம் அழுத்தியது.

ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் அவன்.
"தங்கம்..... அஞ்சேமுக்கால் ஆயிடுச்சுப்பா ...எழுந்திரு ராஜா" மீண்டும் அம்மா.

'பச்!' அவனுக்குப் பிடிக்கவேயில்லை. தினமும் இதே கதைதான். பாரதியார் கவிதைக்கு நேர் மாறாக, காலை எழுந்தவுடன் டியூஷன்.... பின்பு கனிவு கொடுக்காத பள்ளி...... மாலை முழுதும் ஹோம் ஒர்க்....! என்பது அன்றாட நிகழ்வானது. பாடம்..... பாடம்.... பாடம்.... டெஸ்ட்... டெஸ்ட்... டெஸ்ட்.....
'ஆ............வ்' கொட்டாவி விட்டபடியே எழுந்தான் கணேஷ்.

அரைத் தூக்கத்துடனேயே பல் தேய்த்தான். முகம் கழுவி துண்டால் துடைத்தான். இன்னும் தூக்கம் தூக்கமாக வந்தது. ஹாலுக்கு வந்து காலை நீட்டியபடி தரையில் உட்கார்ந்தான்.

அப்போதுதான் கவனித்தான்.....
எறும்பு சாரை ஒன்று அவனுக்கு மிக சமீபமாக வந்து கொண்டிருந்தது.
'அட' குட்டி குட்டி எறும்புகள்! எத்தனை சுறுசுறுப்புடன் 'குடு குடு' வென்று ஓடுகின்றன...


அவன் கண்கள் சட்டென்று விரிந்தன.  "ஒரே சமூகமாகத் திரண்டு எங்கே கிளம்பியுள்ளன....? அவன் உள்ளத்தில் ஒருவித உற்சாகம் பிறந்தது. தூக்கம் முற்றிலுமாகக் கலைந்து போனது. கால்களை மடித்து முட்டிக்காலில் அமர்ந்து, குனிந்து எறும்புகளைக் கவனிக்கத் தொடங்கினான்.

"யார் இவர்கள்? உறவினர்களா..? நண்பர்களா...? சுற்றுலா செல்லும் பள்ளி மாணவர்களா...? அல்லது ஏதாவது கிளப் உறுப்பினர்களா....?" போன்ற கேள்விகள் கணேஷின் மனதில் தோன்றின்.

சின்ன சின்ன கால்களை நகர்த்தி - நகர்த்தி முன்னேறிக்கொண்டிருந்த முன்வரிசை எறும்புகளை மற்ற எறும்புகள் பின் தொடர்ந்தது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மெல்ல அவன் அந்த எறும்பு வரிசையின் அருகிலேயே, கன்னத்தைத் தரையில் பதித்தபடி குப்புறப்படுத்து, அவற்றின் அசைவை ஆராயத் தொடங்கினான்.

இதற்குள் அவன் அம்மா மூன்றாவது முறையாக "கணேஷ்" என்று குரல் கொடுத்தாள்.

அவன் எண்ணமெல்லாம் எறும்பைப் பற்றியதாகவே இருந்ததால் அம்மாவின் குரல் அவன் காதில் விழவேயில்லை.

"எங்கே செல்கின்றன இவை?
ஏதோ ஒரு உணவு பதார்த்தத்தின் வாசனையை நுகர்ந்தபடிதான் இவை படையெடுத்துள்ளன. ஆனால் கணேஷின் கண்களுக்கோ, நாசிக்கோ, எதுவுமே புலப்படவில்லை.

எறும்பு சாரி ஒரே சீராக ஓடிக்கொண்டிருந்தது.

"எறும்புகள் ஒலி  எழுப்புமா? தங்களுக்குள் கதை பேசியபடி செல்கின்றனவா...? அல்லது மௌனமாகவா.....? தங்கள் உற்றாரையும், சுற்றாரையும் எப்படி ஒன்றாகத் திரட்டியிருக்கும்?"

இவ்வாறு யோசித்தபடி கணேஷ் கால் விரல்களை சற்று உந்தி, இன்னும் கொஞ்சம் மேலே நகர்ந்து படுத்தபடி எறும்புகளைப் பார்வையிட்டன.

பின் ஒரு மெல்லிய தாளைக் கொண்டுவந்து எறும்பு சாரிக்கு முன்னால் மெதுவாக வைத்தான். அவை அந்த தாளை லட்சியம் செய்யாமல் அதன் மேல் ஏறி தனது அணிவகுப்பைத் தொடர்ந்தன.

உடனே ஓர் ஈர்க்குச்சியை எடுத்து வந்து முதல் வரிசை எறும்புகளின் கால்களில் படுமாறு வைத்தான்.

" "டக்".... எறும்புகள் திடுக்கிட்டன போலும்.
அவற்றின் ஓட்டம் தடைபட்டது.
"தங்களின் முன் விருட்சம் ஒன்று .விழுந்ததைப் போல உணர்ந்திருக்கும்" என்று கணேஷிற்குத் .தோன்றியது.

பின்னால் வந்து கொண்டிருந்த எறும்புகளின் மேல் அவன் பார்வை சென்றது. அவை 'கிச்சு கிச்சு' என்று ஒன்றன்மேல் ஒன்று முட்டி மோதிக்கொண்டு நின்றுவிட்டன.

கணேஷிற்க்கு ஆர்வம் கொப்பளித்தது. உடனே முதல் வரிசை எறும்புகளின் செயல்பாட்டை ஆராயத் தொடங்கினான்.

'அட' முதல் வரிசை எறும்புகள் புரிந்துகொண்டன போலும். இந்த குச்சி நம்மை ஒன்றும் செய்யாது' என்று. எனவே அவை தாங்கள் போய்க்கொண்டிருந்த தடத்தை சற்றே மாற்றி ஈர்க்குச்சியை ஒட்டியபடியே சென்று குச்சி முடிந்ததும் தன தடத்தை மீண்டும் மாற்றி நேராகச் செல்லத் தொடங்கின.

'அப்பப்பா.... இவ்வளவு சிறிய எறும்புக்கு எவ்வளவு அறிவு?" என்று வியந்தான்.

"கணேஷ்... என்னம்மா பண்ற? கிளம்பிட்டியா ட்யுஷனுக்கு?" அம்மா பரபரத்தாள்.

"அம்மம்மா..... இதோ இதோமா  கிளம்பிடறேன்" பதில் கூறியபடி மெல்லத் தன ஆள்காட்டி விரலை எறும்புகளின் முன் நீட்டமாகப் படுக்கவைத்தான்.

"டக்டக்' என்று அவற்றின் கால்கள் விரலில் இடித்தன. குறுகுறுவென்று இருந்தது கணேஷிற்கு. விரலை அசைக்காமல் இருக்கும் வரை முட்டிப்பார்த்தன. லேசாக விரலை அசைத்துப்பார்த்தான். ' எதிரி இது' என்று எண்ணியோ என்னவோ 'சுருக் சுருக்' கென்று கடித்தன. சட்டென விரலை விலக்கினான். விரைந்து தன இலக்கை நோக்கி நகர்ந்தன. மிகவும் ஆச்சர்யப்பட்டான் கணேஷ்.

எறும்புகளைப் பற்றி ஓராயிரம் வினாக்கள் அவன் நெஞ்சில் எழுந்தன. எறும்புகளின் வகை, வாழ்நாள் எண்ணிக்கை, வாழ்க்கை முறை பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று அவன் மனம் திட்டமிட்டது.

'ஒற்றுமை, ஒழுங்கு, பகிர்ந்து உண்ணுதல், சுறுசுறுப்பு...... இப்படி எத்தனைப் பாடங்கள் எறும்பிடமிருந்து கற்றுக்கொள்ள...?' என்று வியந்தான்.

"கணேஷ்....! என்னடா பண்ற? இங்க நான் கரடியா  கத்தறது காதுல விழல...? பாடம் ஏதோ படிக்கறேன்னு நினைச்சேன். என்ன பண்ணிட்டிருக்கே நீ...? கேட்டுக்கொண்டே ஹாலுக்கு வந்த அம்மா, கணேஷ் படுத்திருந்த நிலையையும், அருகில் செல்லும் எறும்புகளையும் பார்த்துவிட்டு, "எண்டா.....? கவனமமே கிடையாதா உனக்கு,,,? பக்கத்துலே எவ்ளோ எறும்பு....? கடிக்குமே அப்படீங்கற எண்ணம் இருக்கா இல்லையா....? எல்லா பசங்களும் ட்யுஷனுக்குப் போய்.....என்னவெல்லாமோ படிக்கறது, புத்திசாலியா இருக்கு....எதையுமே கவனிக்காம இப்பிடி தண்டமா இருக்கறது தப்புன்னு உனக்கு எப்பதான் தோணுமோ....?

கத்தியபடி உள்ளே சென்ற அம்மா, சாக்பீஸ் போன்ற ஒன்றை  எடுத்து வந்து எறும்பு வரிசையின் மீது 'சரக்  சரக் ' என்று கோடு போட்டாள்.

'அய்யய்யோ ...!
எறும்புகள் எல்லாம் திக்கு திசை தெரியாமல் இங்கொன்றும் அங்கொன்றுமாய் கலைந்து ஓடத்தொடங்கின.

இத்தனை நேரம் ஒரு ஒழுங்குடன் சீராக வந்து கொண்டிருந்த எறும்புகள் விலகி விலகி ஓடுவதையே திக்பிரமை பிடித்தாற் போல பார்த்தான் கணேஷ்.
காப்பாற்றவோ, தடுக்கவோ வழி தெரியாமல் இதயம் கனத்தது. திரும்பி திரும்பி பார்த்தபடி குளிக்கச் சென்றான். பாடம் படிக்க ட்யுஷனுக்கு கிளம்ப வேண்டுமே......!


வெள்ளி, 27 மே, 2016

10 நொடி கதைகள்


                10 நொடி கதைகள் - ஆனந்த விகடன்                    

தந்தை பாசம்  

மாமனார் வீட்டோடு சென்றுவிட்ட மகன் வாங்கிவந்த ஜாங்கிரியை ஆசையோடு சாப்பிட்டார் அப்பா, போன வாரம் சுகர் அதிகரித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதை சொல்லாமலேயே.



மாமியார் 


ஏழெட்டு தரம் புருசனிடம் மன்னாடி, கூத்தாடி, அத்தைக்கு, இந்த தீவளிக்கு  ஒரு பட்டுப் புடவை எடுக்க வச்சா.
'எம் புள்ள வங்கியாந்ததுன்னு பீற்றிக்கொண்டாளாம் அவள் அத்தை. 



ஸ்டேடஸ்  

கடத்தப்பட்ட காவ்யாவின் கண்ணில் பட்டது காவலாளியின் கைபேசி.
பாய்ந்து சென்று பிடுங்கியவள் facebook  இல் status  தந்தாள் 'GOT KIDNAPPED. EXCITTED '  என்று. LIKES நிறைய வரும். ஆனந்தப்பட்டாள் காவ்யா.



இடைவெளி 


பொடிப்பய  அவனுக்கு என்ன தெரியும்?
என்றது அந்தக்கால பெருசு.
பெருசுக்கு சொன்னாலும் புரியாது,
தானாவும் தெரியாது என்றது
இந்தக் கால இளசு. 

வெள்ளி, 6 மே, 2016

அம்மா என்றொரு அட்சய பாத்திரம்

மான் கூட்டம்  ஒன்றை
நோட்டம்விட்ட வேடன்,
மறைந்து நின்று அம்புவிட
மருண்டு ஓடின மான்கள்

குறி சிறிதும் தப்பாமல்
குட்டி மானை அம்பு தாக்க....
மற்ற மான்கள் ஓடுகையில்
பெற்ற மான் பின்னடைந்ததாம்
கண்ணீருடன்!

அம்மா...!
அன்பைப் பொழிபவள்
அரவணைத்துச் செல்பவள்!
புத்திமதி சொல்பவள்
பொத்தி பொத்தி  வளர்ப்பவள்!


கருவறையில் சுமந்தவள்!
குருதி தந்து வளர்த்தவள்.
பாசத்தைச் சொரிபவள்
பாராட்டி மகிழ்பவள்.

இவை மட்டும் போதுமா என்ன...?
'அட்சய பாத்திரம் ' அவள் என்ன..!
சான்றுக் கதையொன்று கூறுகின்றேன்
கட்டுக் கதையல்ல உணர்வீர்.

பெற்றவளின் இதயத்தைப்
பகீரங்கமாய் பிய்த்தெடுத்து
படையலாய்த்  தரச்சொன்னாள்
பேய் மனம் கொண்ட காதலிஒருத்தி

இனியவளைத் திருப்திக்க - பெற்றவள்
இதயத்தைப் பெயர்த்தெடுத்தான்
இரு கரங்களில் ஏந்திய  அவன் - அதை
இயல்பாக எடுத்துவந்தான்

வருகின்ற வழிதனிலே
கருங்கல்லில் கால்பட்டுத்
தெரியாமல் இடறியதால்
தடுமாறி விழப்போனான்

'பார்த்துப் போப்பா மகனே'- என்ற
வார்த்தைகள் விம்மி விழ,
பரிதவித்துப் போனதாம்
விதிர் விதிர்த்துப் போனதாம்
'தாயிதயம்'

அள்ள அள்ளக் குறையாதாம் 'அட்சயபாத்திரம்'
கிள்ளி  எறிந்தாலும், தள்ளி வைத்தாலும்
வெள்ளை மனத்தினளாம் அம்மா
முல்லை மணத்தினளாம் அம்மா

ஆம்! உண்மை!
அம்மா ஒரு அட்சயபாத்திரம்.

ஞாயிறு, 1 மே, 2016

வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு - 'நெஞ்சுக்கு நீதியும் ' மெட்டு.

STUDENTS - ஏ  கேளுங்க! PARENTS -ஏ  கேளுங்க!
ஏன் இந்த FOREIGN மோகம்?
தாயக உணர்வினைத் தாரையே வார்த்திட்டு 
அயலகம் செல்லும் தாகம்?
அறிவையும், திறனையும் வளர்த்த நம் தேசத்தை
உயர்த்திட மறுப்பது சரிதானா...?
வாய்ப்புகள் வகையாய் இருக்குது  இங்கு   
உணர்வீர்!உணர்வீர்! உணர்வீர்!


கல்வியைக் கொடுத்திட GOVERNMENT SPEND 
                                                                      பண்ணுது 
பல்லாயிரம் ரூபாய் 
EARNINGS - ஐ DOLLER -இல் செய்திடத் துடிப்பது 
தோன்றலியா CHEAP  - ஆய் ?
கை கட்டி சேவகம் செய்வதை விடுத்து 
கட்டளையிடத் துவங்கு...
உற்பத்தித் துறையை வளர்த்திடச் செய்து 
ஊதியம் தரவும் துவங்கு.

மூளையை அடகு வைத்தபின் வசதியாய் 
வாழ்கிறீர் முறைதானா...?
நாசாவை இயக்குது இந்திய மூளைதான்
நமக்கிது பெருமைதானா ...?
corruption -ம் pollution -ம்  மிகுதிதான் இங்கென..
மறுக்கலை, மறுக்கவில்லை 
உனையன்றி வேறு யார் இதை மீட்பர் 
நீதான்! நீதான்! நீதான்!

உனக்கென அடித்தளம் நிறையவே இருக்குது  
உனக்கது புரியலியா..?                                                    
சி.வி.ராமனும், அப்துல் கலாமும்  
சாதனை  நிகழ்தலியா..?                                                      சுயநலப் போர்வையைச் 'சுதந்திரம்' என நீ 
சொல்வது உறைக்கலியா...?
உலகினில் இந்தியா முதல் இடம் என்றே 
முழங்கு! முழங்கு! முழங்கு!

தாய் திரு நாட்டின்  citizen  ஆய்  வாழவே  
கர்வப்படல் வேண்டும்.
அந்நிய நாட்டினில் third rate citizen ஆய் 
தாழ்ந்திடவா  வேண்டும்....?
பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்வது 
அமெரிக்கன் தானென்றால்
Golden Cage -இல் அடைபட்ட tigers நாம் 
விழிப்போம்! எழுவோம்! உழைப்போம்!



Star, Abstract, Colorful, Fireworks


Image result for free image of indian patriotism