வியாழன், 30 ஜூன், 2016

வலையில் சிக்கி........ (sowrabhi's idea and written by me)

     நான் இப்போது எங்கோ ஒரு இருட்டு அறையில் அடைக்கப்பட்டுள்ளேன். கண் சிமிட்டும் நேரத்திற்குள் அந்தக் கடத்தல் நடந்து விட்டது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி நடந்தது..? 'ஸ்கூலிலிருந்து வீட்டிற்கு நடந்து போய்க் கொண்டிருந்தேன்.....! அருகில், மிக அருகில் அந்த கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய முரட்டு ஆள் ஒருவன் என்னை லாகவமாக காருக்குள் தள்ள..... மற்றொரு கடா மீசை ஆள் என் வாயைப் பொத்த...அப்பப்பா... இப்போது கூட என் இதயம் 'படபட' வென அடித்துக்கொண்டிருக்கிறது. என்னால் பிரமிப்பிலிருந்து மீள முடியவில்லை.
     அப்பா, அம்மாவுக்குத் தெரியுமா..? என் பிரண்ட்ஸ் பூஜா, சுமா, பிரேம், கௌஷிக், மாலினிக்கெல்லாம் நான் இங்கே வலையில் சிக்கிய மான் குட்டிபோல அடைத்துவைக்கப்பட்டுள்ளது தெரியுமா...?
    அய்யய்யோ..! என்ன செய்வேன்..? கடவுளே! ஒரு வழிகாட்ட மாட்டாயா...?என்று மனதிற்குள் புலம்பியபடி சுற்றும் முற்றும் பார்க்கிறேன். இப்போது இருட்டு கண்களுக்கு சற்று பழகிவிட்டது.
    நிழல் போல் ஒரு உருவம் நகர்வது அங்கிருந்த ஜன்னல் வழியே தெரிகிறது. மூச்சை அடக்கிக் கொண்டு ஜன்னலையே பார்க்கிறேன். ஆம்! யாரோ ஒருவன் இப்படியும், அப்படியும் நடந்து கொண்டிருக்கிறான். எனக்கு காவலுக்கு இருக்கிறான் போலுள்ளது.
     ஏதாவது ஐடியா தோன்றுகிறதா என்று அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
     அட! அது என்ன அவன் கையில் பளபளப்பாக ஏதோ தெரிகிறதே! ஆமாம்! நான் நினைப்பது சரிதான். அது செல்போன் தான்! என் மூளை படு வேகமாக செயல்பட ஆரம்பிக்கிறது. எப்படியாவது அந்த போனைக் கைப்பற்றவேண்டுமே...! என்ன செய்யலாம்?
     உடனே! 'தண்ணீர், தண்ணீர்.... ஒரே தாகமாக இருக்கிறதே.... ப்ளீஸ் யாராவது தண்ணீர் கொடுங்களேன்...!" என்று குரல் கொடுக்கிறேன்.
     திடுக்கிட்ட அவன் ஜன்னல் வழியே உள்ளே பார்த்து, "என்ன...? எதற்காக சத்தம் போடுகிறாய்..? என்று அதட்டுகிறான்.
     "குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும்" என்று அழுவது போன்ற பரிதாபத் குரலில் கேட்கிறேன்.
    "இரு" என்று சொல்கிறான்.
    நான் அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
   "இதோ! இதோ! நான் எதிர்பார்த்தபடியே கையிலிருந்த போனை ஜன்னலில் வைத்துவிட்டு தண்ணீர் எடுக்கப் போகிறான்.
    நான்--
    ஒரு நொடிகூட தாமதிக்காமல் - மிக வேகமாக - சடாரென்று பாய்ந்து சென்று - ஜன்னல் கம்பிகளுக்கிடையில் கையை நுழைத்து - கஷ்டப்பட்டு போனை எடுத்து facebook - ல் என் அகௌண்டை login செய்து 'got kidnapped, excited' என்று என் ஸ்டேட்டஸைக் கொடுத்துவிடுகிறேன்.
     அப்பாடா...! திருப்தியாக உள்ளது... கண்டிப்பாக ஆயிரத்திற்கு மேல் 'லைக்' கிடைக்கும்.
     நல்லவேளை! நெட் பூஸ்டர் போட்டிருக்கிறான்.
    அப்போது அடக்கிய மூச்சு, இப்போது நிம்மதி பெருமூச்சாக வெளிவருகிறது.
     

அறிவுப் புதிர் - 2

    கண், தலை, வாய், பல், கை ஆகிய ஐந்து சொற்களில் துவங்கும் தமிழ் வார்த்தைகளைக் கூறவேண்டும்.
   'கண்'  எனில்  உடல் உறுப்பான கண்ணுடன் தொடர்பில்லாத வார்த்தைகளாக அவை இருக்க வேண்டும்.
   (எ .கா) கண் - கண்ணாடி என்றால் முகம் பார்க்கும் கண்ணாடி என்று கொள்ளலாம். கண்ணில் அணியப்படும் 'ஆடி' என்ற பொருளைக் கொண்டதாக இருக்கக் கூடாது. கண்ணிமை, கண்ணீர் போன்ற சொற்கள் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
    ஒவ்வொரு சொல்லுக்கும்  குறைந்தது ஐந்து வார்த்தைகளாவது கூறவேண்டும்.
    முயற்சித்துப் பாருங்களேன்!




உதாரணத்திற்கு சில வார்த்தைகள். 

கண்   -    கண்டம் (continent) கண்டம் (பிரச்சனை)
                  கண்டங்கத்திரி (முட்ச்செடி)
                  கண்டதிப்பிலி (கொடிவகை நீண்ட மிளகு))
                  கண்டனம்
                  கண்டிப்பு
                  கண்டாங்கி ( புடவைக்கட்டு)
                  கண்டாமணி
                  கண்ணாடி விரியன்
                  கண்ணி
                  கண்மாய்
                  கண்ணன்
                  கண்ணமுது
                  கணவர் ரிஷி.

தலை   -  தலைப்படு (தொடங்கு)
                   தலைப்பறை ( யானை முதலியவற்றின் முன் கொட்டும் பறை)
                   தலைப்பிரட்டை ( தவளைமீன்)
                   தலைப்பு (புடவை தலைப்பு)
                   கதை தலைப்பு என்பது வராது (heading)
                   தலைமுறை (பரம்பரை)
                   தலையாரி (village watchman)
                  தலைவரிசை (உயர்ந்த சன்மானம்)

வாய்  -   வாய்ப்பு
                  வாய்மை
                  வாய்க்கால்
                  வாய்தா (due date)
                  வாய்த்தல்
                  வாய்ப்பாடு
                  வாய்வு (gas)

பல்    -     பல்கலைக்கழகம்
                  பல்லக்கு
                  பல்லாங்குழி
                  பல்லாண்டு  
                  பல்சுவை
                  பல்வேறு
                  பல்லவர்
                  பல்லவி
                  பல்லி

கை   -    கைக்கிளை (ஒரு தலைக் காமம்)
                கைங்கர்யம்  (தொண்டு, service)
                கைசிகம் (ராகம்)
                கைடவன் (அசுரன்)
                கைதி
                கைது
                கைந்தலை (widow)
                கைம்பெண் (widow)
                கைலி
                கைலாயம்
                கைம்மாறு ( பிரதி, exchange)
         

               




திங்கள், 27 ஜூன், 2016

அறிவுப் புதிர் - 1

சில உயிரினங்கள் கடவுளின் வாகனமாக இருக்கும், சில கடவுளோடு தொடர்புடையவையாக இருக்கும். கடவுளையும், அக் கடவுளோடு சம்மந்தமுள்ள உயிரினத்தையும், பொருத்துங்களேன்.

1.     சிவன்                                                                       நாய்

2.     ரங்கநாதர்                                                               அன்னம்

3.     முருகன்                                                                  காகம்

4.     விநாயகர்                                                               பசுவும், கன்றும்

5.     கிருஷ்ணர்                                                             மயில்

6.     அய்யப்பன்                                                             சிங்கம்

7.     ஏசு                                                                              எருமை

8.     சனீஸ்வரன்                                                           கிளி

9.     கஜலக்ஷ்மி                                                             காளைமாடு

10.    சரஸ்வதி                                                                மூஞ்சூறு

11.    ராஜராஜேஸ்வரி                                                 கருடன்

12.    மீனாக்ஷி                                                                 புலி

13.    விஷ்ணு                                                                  யானை

14.    பிரும்மா                                                                 ஆடு

15.    எமதர்மராஜா                                                       ஆதிசேஷன்




விடைகள்.

(1  -  9)  (2  -  15)  (3  -  5)  (4  -  10)  (5  -  4)  (6  -  12)  (7  -  14)  (8  -  3)  (9  -  13)  (10  -  2)
(11  -  6)  (12  -  8)  (13  -  11)  (14  -  1)  (15  -  7)

தாயும், மகளும்

         "இந்த அம்மாவை புரியவும் இல்ல.... புடிக்கவும் இல்ல....." ராதாவின் மனதில் கோபம் கொப்பளித்தது.
          திருமணம் ஆகி 6 மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் அம்மா வீட்டிற்க்கு தான் மட்டும் போய் 2 நாட்கள் இருந்துவிட்டு தன் கணவன் வீடு திரும்பி இருந்தாள்  ராதா. 2 நாட்களுமே  ராதாவுக்குப் பிடித்த சமையலாக -  வாய்க்கு ருசியாக செய்து போட்டிருந்தாள் அம்மா.
           இன்று தன் வீட்டில் புதினா சட்னி செய்து - அது அம்மா செய்திருந்ததைப் போலவே இருந்ததால், மகிழ்ச்சியோடு அம்மாவுக்குப் போன் செய்தால்..... அம்மா துளி கூட பாராட்டாமல், "அச்சச்சோ!!! ராதா.... புதினா உன் மாமியாருக்கு அலர்ஜியாச்சே....! உளுத்தம்பருப்பு தாளித்தால் உன் கணவருக்குப் பிடிக்காதே! என்கிறாள்.
            இந்த அம்மாவை புரியவும் இல்ல...... புடிக்கவும் இல்ல....!

விடுமுறைக் கொண்டாட்டம்!

         Image result for image of a family working in the garden

          இந்த சண்டே எப்படி செலிபரேட் பண்ணலாம்..? கேட்டாள் என் சின்னப்பெண்.
         ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று ஏதாவது புதுமையாக செய்யவேண்டும் என் இரண்டு மகள்களுக்கும், கணவருக்கும்.  இவர்களுக்கு அன்று  ஹாலிடே! ஆனால் எனக்கு அன்று ஓவர்டைம்.
         ஒரு வாரம் பிக்னிக் போனோம். ஒரு வாரம் அவர்கள் மூவரும் சமைப்பதாகக் கூறி, சமையலறையைப் போர்க்களம் ஆக்கினார்கள். ஒரு வாரம் கோவிலுக்கு சென்றோம். ஒரு வாரம் லஞ்சுக்கு ஆர்டர் செய்து டீவி பார்த்துக்கொண்டே நால்வரும் சேர்ந்து சாப்பிட்டோம்.
        இந்த வாரம் என்ன செய்யலாம்? யோசித்துக்கொண்டிருக்கையில் பொறி தட்டியது போல் அந்த ஐடியா தோன்றியது. கணவரிடம் நான் கூற, அவருக்கும் பிடித்துப் போனதால் மகள்களுடன் குஷியாக கொல்லைப்புறத்திற்குப் போனார்.
         கொல்லையில் இரண்டு தென்னை மரங்கள் மட்டுமே உள்ளன. மீதி 10"10 இடம் சும்மா தான் இருந்தது. ரமாவுக்கும், சுமாவுக்கும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. முதலில், மண்ணில் கிடந்த கற்கள், பிளாஸ்டிக் கவர்கள், மட்டை இவற்றை அப்புறப்படுத்தினோம்.
          ரமா வாளியில் நீர் கொண்டு வந்து தெளிக்க - சுமா  உள்ளே இருந்து மண் வெட்டி கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்தாள். அவர் சூரியஒளி நன்கு விழும் இடங்க்ளில் பாத்தி வெட்ட - அதற்குள் நான் வீட்டிலிருந்த மிளகாய் விதை, கீரை விதை, வெண்டை, கத்தரி, அவரை போன்ற விதைகளை எடுத்து வந்தேன். ரமாவுக்கும், சுமாவுக்கும் கொண்டாட்டம் தாங்க முடியவில்லை.
           முதலில், கீரையைத் தூவச் சொன்னேன். அதற்கு அருகில் இருந்த பாத்தியில், வெண்டையையும், அதற்கு அடுத்து கத்திரியையும், சிறு குழி செயது அதில் விதைகளை போட்டு மூடச் சொன்னேன். அவரையை பந்தலமைக்க ஏதுவான இடத்தில் ஊன்றினோம். அதற்கு அருகில் இருந்த சதுரத்தில் மிளகாயைத் தூவினோம்.
             மீண்டும் நீர் எடுத்து வந்து எல்லா விதைகளிலும் படுமாறு தெளிக்கச் சொன்னேன்.
               இதற்குள் மணி 11 ஆகியிருந்தது. பசிவேறு வந்துவிட்டது. டிபனோ, சமையலோ செயது சாப்பிடும்வரை பொறுமையில்லை. பழைய சாதம் இருந்தது அதில் சீரகத்தைக் கசக்கிப் போட்டு,சின்ன வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும், பொடியாக நறுக்கிப் போட்டு., தயிரையும், உப்பையும் போட்டு நன்கு தளர பிசைந்து நான் தோட்டத்திற்கு எடுத்து வந்தேன். அதற்குள் கை கழுவி விட்டு வந்த மூவரும் கையை நீட்ட, நான் ஒவ்வொருவர் கையிலும், ஒரு ஸ்பூன் சாதத்தை வைக்க..... அடடா.....அமிர்தமாக இருந்தது பழைய சோறு.
             இன்றைய ஞாயிறு இப்படிக் கழிய.... இனி எல்லா ஞாயிறும் களையெடுத்தல், நீர்பாய்ச்சுதல், நீராகாரம் உண்ணுதல் என்று கொண்டாடுவோம் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
         

மங்கையர் மலர் உல்லாச ஊஞ்சலில் பங்குகொண்டு எழுதிய நன்றி நவிலல்

மங்கையர் மலர் - இது
மயக்கும் மலர்!
மங்கைகள் மனம் கவர்
மணம் கமழ் மலர்!

மாலையானால் வாடிடும்
மகரந்த மலரல்ல இது!
மாதம் ஒருமுறை மலரும்
மகத்தான மலர்! மங்காத மலர்!
ஆம்!
நாள்பட நாள்பட
மணம்  கூட்டும் மகிழ மலர்!

மலரே! உனக்கு என்
சிரம்  தாழ்ந்த வணக்கங்கள்!
மலர் சார்ந்த ஆன்றோரே!
மனம் நிறைந்த வணக்கங்கள்!
ஒரு சில வார்த்தை உங்களோடு
உரையாட விழைகின்றேன்!

கோவில் நகரமாம் கும்பகோணத்திற்கு
குடி பெயர்ந்தாற்போல் குழுமி வந்தீர்!
பூஞ்சாரல் தெளித்து எம்மை
பூரிக்க வைத்திட்டீர்.!
உல்லாச ஊஞ்சல் கட்டி
உவகையாய் அமர்த்திட்டீர்!
உற்சாகப்படுத்தி  எங்கள்
உள்ளத்தை மகிழ்வித்தீர்!

அடுப்பங்கரையையும், அகமுடையானையும்
அடம் பிடிக்கும் பிள்ளையையும், அத்தனை பொறுப்புகளையும்
பாடம், படிப்பு, புத்தகத்தையும்
வியாதி, மூப்பு, வலைப்பளுவையும்
அறவே மறக்கடித்தீர்!
ஆஹா ஆஹா என
ஐம்பது முறை கூவவைத்தீர்!

colourfull கல்லூரி யின்
சிறகு முளைத்திட்ட சிட்டுப்போல
சட்டென்று மாற்றிவிட்டீர்! - எம்மை
சந்தோஷப்படுத்திவிட்டீர்!

பஞ்சாமிர்தம் போன்ற நல்ல
பல்சுவை நிகழ்ச்சி மூலம்
புதைந்துபோன எம் திறமைகளை
போற்றி வெளிக்கொணர்ந்தீர்!

அன்புவட்டம் அமைத்துத் தந்து
அரவணைத்துக் கொண்டுள்ளீர்!
நட்புவட்டம் பெருகியதால்
நன்மதிப்புப் பெறுகின்றீர்!

நன்றி!நன்றி! நன்றி! - என
உரத்துக் கூவுகின்றோம்.
உயர்த்திக் கூவுகின்றோம்.

வருக!வருக! மீண்டும் வருக என
விரும்பி அழைக்கின்றோம்!
வேண்டி அழைக்கின்றோம்!







ஞாயிறு, 26 ஜூன், 2016

'கரண்டி யுத்தம்' - சண்டித்தனம் பண்ணுவது மைசூர் பாகா, ரவா லாடுவா....? மங்கையார் மலர்.

முறுக்கிக் கொண்டு முருகன் சேர்ந்த இடம் தான் பழனி!
முறுகிப்போன இப்பதார்த்தம் சேரும் இடமோ கழுநீர்!
வாயில் போட்டால் மெல்லக் கரைந்திடும் இப்பண்டம்,
பாகு முறிந்து போனாலோ பரிகாசம்தான் பண்ணும்.
பல்லை பதம் பார்த்து 'பாறாங்கல்' பட்டம் பெரும்.
கைதவறி காலில் விழ 'கருங்கல்' என்றே கரிக்கப்படும்.
வீடுகட்ட வாங்கப்பட்ட 'செங்கல்' என்றும் சித்தரிக்கப்படும்.
நெய்யை நிறைய குடித்துவிட்டு நைய்யாண்டிதான்  செய்யும்.
அன்று முதல் இன்று வரை.......
தண்ணி (தண்ணீர்) காட்டி சண்டி பண்ணும்
ராங்கிக்காரி மைசூர்பாகு தான்.!  


யானை

இந்துக்களின் முதன்மை தெய்வமான 'விநாயகர்' யானை முகம் கொண்டவர்.

          'ஐந்து கரத்தனை, யானை முகத்தனை
          இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை
          நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
          புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!
என்று விநாயகர் துதி பாடி வழிபடுகின்றோம்.


யானை ஒருமுறை குளத்து நீரில் குளிக்க இறங்குகையில் அதன் காலை முதலை ஒன்று கவ்வ 'ஆதிமூலமே' என்று கூவி யானை  இறைவனை உதவிக்கு அழைக்க, உடனே மகாவிஷ்ணு,  விரைந்து வந்து தன் சக்கரத்தால் முதலையை இரு துண்டுகளாக்கினார் என்று ஒரு புராணக் கதை உள்ளது.


குறத்தியான வள்ளியை மணம்  முடிக்க விரும்பிய முருகன், கிழ வேடமிட்டு வள்ளி இருந்த வனத்திற்குப்  போய் அவளிடமிருந்த திணை மாவை உண்ணும்போது விக்கல் ஏற்படுகிறது. உடனே வள்ளி, முருகனை ஒரு நீர்ச்சுனைக்கு அழைத்துச் செல்கிறாள். காட்டில் வாழும் வள்ளிக்கு யானை மட்டுமே பயப்படுத்தும் மிருகம் என்பதை அறிந்துகொண்டு 'யானை அண்ணா' என்று பெருங்குரலெடுத்து அழைக்க, உடனே, பிள்ளையார் யானை உரு கொண்டு அவ்விடம் வந்து, வள்ளி முருகன் திருமணத்தை நிகழ்த்தினார்.

பழமொழிகள்.

1. யானை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே!

2. வெண்கல கடைக்குள் யானை புகுந்தார் போல

3. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்!   இறந்தாலும் ஆயிரம் பொன்!

4. யானையும், எறும்பும் போல.... (உருவத்திற்கு ஒப்பிடுதல்)

5. கோயில் யானை போல....( அசைந்து  மெதுவாக வருவதற்கு ஒப்பிடுதல்)

6. யானைக்கு அர்ரம்! குதிரைக்கு குர்ரம் !

7. யானை தன் தலை மேலே தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்வது போல .

8. யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெரும்; பூனை கறுத்தால்......

9. யானை தொட்டாலும் மரணம் வரும்.

10.யானை முன்னே முயல் முக்கியது போல!

11.யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி, இரும்பு அங்குசத்திற்கு ஏமாந்தது போல!

12. யானை வாய்க்  கரும்பும்,பாம்பின் வாய்த் தேரையும், யமன் கைக்கொண்ட உயிரும் திரும்ப வராது.

13. யானை விற்றால் யானை லாபம்! பானை விற்றால் பானை லாபம்.!

14. யானை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்பதுபோல்.

15. யானை வாய்க் கரும்பு போல

16. காட்டிலே யானையைக் காட்டி, வீட்டிலே பெண்ணைக் கொடுப்பது போல!

கடலைப் பருவம்

                       மனிதர்களின் வாழ்நாள் பருவங்களில் ' விடலைப் பருவம்' என்பதைப் பற்றிய வ்யாக்யானங்கள் அநேகம் உண்டு. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கும் இப்பருவம், சம்மந்தப்பட்டவர்களை படாதபாடுபடுத்தும் என்பதும் எல்லோரும் அறிந்ததே! அதனால், இப்பருவம் பற்றி நான் இப்போது பேசப் போவது இல்லை.
                     
                        ஆனால், நான் பேசவிருக்கும் 'இப்பருவமும்'  விடலைப்  பருவம் போன்றே அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்றே நான் உணர்கிறேன். முதலில் அத்தகு முக்கியத்துவம் நிறைந்த பருவத்திற்கு ஒரு பெயர் வைத்தாக வேண்டுமே...! என்னவென்று வைக்கலாம்...? "சுடலைப் பருவம்' என்று வைப்போமா..? அல்லது 'கடலைப்  பருவம்' என்றா..? சரி... சரி.... காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. காலம் கடத்தாமல் 'கடலைப் பருவம்' என்றே இப்பருவத்திற்கு பெயர் வைத்துவிடுவோம்.

                      என்ன தோழிகளே...! 'கடலைப் பருவம்' நாம் இருக்கும் இப்பருவம் பற்றியதுதான்.

                     சிறு வயது முதலே, ஆடிப் பாடி, கற்பனைக் கோட்டைகள் கட்டியவாறு எதிர்காலம் என்பதை - என்னவோ எட்டிப் பிடிக்க முடியாத - ஆனால் எதிர்பார்ப்புகள் நிறைந்த பட்டாம்பூச்சியாய் பாவித்து - எட்டி எட்டிப் பிடிக்க எத்தனித்தபடி என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறோம்.

                    முதலில், படித்தோம்    -     பரிசுகள் பெற்றோம்!
                     பின்னர் தோழியரோடு களித்தோம்  - கதை பேசி சிரித்தோம்!
                     பிறகு மணம் முடித்தோம்  -  மகிழ்ச்சிக் கடலில் திளைத்தோம்.!

படிப்பிற்கும், திருமணத்திற்கும் இடையில்  ஒரு சிலர் பணியில் அமர்கின்றனர். பதவிப் பொறுப்பைப் பெறுகின்றனர். பணியினுடனே மணம் முடிக்கின்றனர்.

                   எப்படியோ.... மணம்  ஆனபின், புது புது உறவுகள்...! மக்கட்ச்செல்வம்...!

                    மழலைப் பேச்சு, விஷமம், விளையாட்டு என்று, கண்ணெதிரே உயிர் ஒன்று உருவாகி, வளர்வதில் பெருமிதம் கொள்கிறோம்.

                     அடுத்து, பிள்ளைகளின் பள்ளிப் பருவம் ! அப்போது நம் பள்ளிப் பருவம் மனத் திரையில் நிழலாட, நாமும் பிள்ளையோடு - பிள்ளையாய் பள்ளிப்பருவத்தில் பயணிப்பதுபோல உணர்கிறோம்.  மகனோ.... மகளோ..... அவர்களை நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக நினைக்கிறோம். அவர்களோடு சேர்ந்து மீண்டும் ஆடிப்பாடி, கற்பனைக் கோட்டைகள் கட்டியபடி..........

                     இருங்கள்! இருங்கள்!            

                   நாம் இத்தனைக் காலமாய் ஒரு விஷயத்தை மறந்தே போனோமே...!நாம் ஏறெடுத்தும் பார்க்காத 'அது' என்னவோ எட்ட எட்ட அடிவைத்து, ஏறிக்கொண்டே இருந்திருக்கிறது. ஆம்! நம் வயதைத்த்த்தான் சொல்கிறேன். அதற்குள் நாற்பதைக் கடந்துவிட்டோமே...! விருப்பமே இல்லாமல் பற்பல மாற்றங்களுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கிறோமே...!

                  இன்று நம் மகள் இளமைப் பொலிவுடன், அழகுச் சிலையாய் பரிமளிக்கையில், நம் கல்லூரி நாட்கள் நம் கண் முன்னே வந்து, 'நாம் தான் நம் எதிரில் இருக்கும் நம் மகள்' என்ற மாய எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.

                 ஆனால்.... ஆனால்........ கண்ணாடி பிரதிபலிக்கும் நம் பிம்பமோ, பீதியளிப்பதாய் உள்ளது.

                காதோரம் வெள்ளி முடிகள் வெளிப்பட்டு மெல்ல சிரிக்கின்றன.
                கொத்துக் கொத்தாய் தலைமுடி கொட்டி ஆங்காங்கே வழுக்கை விழத்தொடங்கியுள்ளது.
                 தரையில் அமர்ந்து எழுகையில் சிரமம் தெரிகிறது.
                 மாடிப் படி ஏறி இறங்கினாலோ...... மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிறது.
                 வெய்யில் தகிக்கிறது...... குளிர் நடுக்குகிறது....

                ஜுரம்,தலைசுற்றல் என்று மருத்துவரிடம் போனால்....... உப்பைக் குறை! உரைப்பைக் குறை! சர்க்கரையைத் தவிர்! எண்ணையில் பொறித்ததை எந்நாளும் உண்ணாதே! உடற்பயிற்ச்சி செய்! நடை பழகு! என்ற  எண்ணற்ற கட்டளைகளை இயல்பாக அடுக்குகிறார்.

              தலைவலி என்று கண் டாக்டரிடம் போனால், 'அ, ஆ, இ,ஈ, A,B,C,D என்று படிக்கச்சொல்கிறார். நாமும் நம் பள்ளி ஆசிரியர்களை நினைவு கூர்ந்தபடி படித்தால்... அல்லது படிக்க முயற்சி செய்தால்... கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, புறையென்று ஏதாவது சொல்லி கண் கவசமாய் கண்ணாடியைப் பரிந்துரைக்கிறார்.

                இவை உடல் ரீதியான பிரச்சனைகள் என்றால் மன ரீதியான பிரச்சனைகளோ மிக பிரும்மாண்டமாக இருக்கின்றன.

                நம்மைவிட சற்றே மூத்த நம் கணவர்களுக்கும்  இதே பிரச்சனைகள் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகப் புரிந்தாலும், மனம்  என்னவோ மணம்  ஆன புதிதில் இருந்தவரோடு நிகழ்கால கணவனை ஒப்பிட்டு - ஒப்பிட்டு . நிதர்சனத்தை ஏற்க மறுக்கிறது.

                குழந்தைகள் என்னடா என்றால்... நவீன விஞ்ஞான வளர்ச்சியின் ஞானம் கிடைக்கப் பெற்றதாலோ என்னவோ, 'அம்மா, உனக்கு இதெல்லாம் புரியாது' என்று கூறி நம்மை சென்ற தலைமுறையின் சின்னமாக்குகின்றனர்.

                நாம் அவர்களின் நல்ல தோழிகளாக இருப்பதாக கர்வத்தோடு நினைத்துக்கொண்டிருக்கையில் அவர்களோ......' அம்மா, என் friends முன்னாடி நீ இப்படி நடந்துக்கணும், அப்படி பேசணும், இப்படியெல்லாம் பேசக்கூடாது'
என்றெல்லாம் கூறி நம்மைத் தனிமைப்படுத்தி விடுகின்றனர்.

                ஜிமிக்கி, கொலுசு போன்ற நகைகளைப்  போட்டுக்கொள்ளலாமா? கூடாதா.....?  நாயகன் கமல் கூறுவது போல நாம் 'சின்னவளா...? பெரியவளா ...? என்ற கேள்வி அடிக்கடி அடிமனதில் எழும்பிக்கொண்டே இருக்கிறதே...!


                என்ன தோழிகளே! நான் சொல்லும் 'கடலைப் பருவம்' உங்களுக்குப் புரிகிறது தானே...? நீங்களும் இப்பருவக் கோளாறுகளை அனுபவிக்கிறீர்கள்தானே...?

                 ஒன்றும் பெரிய விஷயம் இல்லைங்க....! நாற்பதை கடந்திருக்கிறோம் அவ்வளவுதான். இருப்பினும் ' எதிர்காலம்' எதிர்காலம்'  என்றோமே அந்த எதிர்காலமே நிகழ்காலமானது புரியத்தொடங்கி நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

               காலச் சக்கரம் ஏன் இப்படி குடு குடு வென்று ஓடி கலக்கத்தை ஏற்படுத்துகிறது....?

              'ஏ காலச்சக்கரமே......! கொஞ்சம் மெதுவாக சுழலமாட்டாயா....? அல்லது நீ சுழலும்படி சுழலேன் ! எங்களிடம் ஏன் உன் தாக்கத்தை ஏற்படுத்துகின்றாய்...?

Image result for free image of a wheel




Image result for images of ageing as the time passesImage result for images of ageing as the time passes
     

       

             

                  

வெள்ளி, 24 ஜூன், 2016

நெல் நாற்று

         Related image
Image result for image of a village lady with herImage result for image of a village lady with her

இன்னும் கொஞ்சம் கொளம்பு ஊத்தட்டா....?" சாதக்  குழிக்குள் குழம்பை ஊற்றியபடி கணவனின் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள் காமாட்சி.
              யோசனையில் ஆழ்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த்தார் கதிரேசன்.
              "மருமவப் புள்ள, தங்கமணி, குழந்தைங்க எல்லாரும் சொகம்தானே ....?"
              "ம்ம் !"
              "அவ மாமியார், மாமனாரெல்லாம் நல்லபடியா இருக்காங்களா...?"
              "ம்ம் !"
              " புள்ளெங்க ஸ்கூலுக்குப் போய் வாராங்களா....?"
              "ம்ம்!"
இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் ஒற்றை வார்த்தையே பதிலாய் வர, காமாட்சிக்கு கலவரமாயிற்று.
கதிரேசன் சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு கை கழுவ கிணற்றடிக்குச் சென்றார். 

கதிரேசன் காமாட்சியின் ஒரே மகளான தங்கமணி வீட்டிற்குப் போய் நான்கு நாட்கள் தங்கியிருந்துவிட்டு  இன்று காலைதான் வீடு திரும்பி இருந்தார் அவர்.. பகலெல்லாம் தூங்கிவிட்டார். களைப்பு போல என்று நினைத்தாள் காமாட்சி. இரவு சாப்பாடு பரிமாறுகையில் பேச்சுக் கொடுத்தாலும் பிடி கொடுத்தே பேசாதது மனதுக்கு சங்கடமாக இருந்தது. 

     "என்னவாயிற்று இவருக்கு...? ஏதும் மரியாதை கொறைவா நடந்திருக்குமோ...? அவ மாமியார், மாமனார் எதுனாச்சும் சொல்லியிருப்பாங்களோ ..? தங்கமணிக்கு கலியாணமான இந்த பதினஞ்சு வருசத்துல இதா மொதமொற  இவரு அவ வீட்டுக்குத் தனியா போயி நாலுநாள் தங்குனது . என்னாச்சோ தெரியலியே! மகமாயி! நா ஒரு ரூவா முடிஞ்சு வைக்கறேன் தாயி....!" பலவாறு குழம்பியபடி வெத்தலை செல்லத்தை எடுத்துக்கொண்டு கேணியடிக்குப் போனாள்.

     நிலா வெளிச்சமும், குளு குளு  காற்றும் ரம்மியமாய் இருந்த கிணற்றங்கரையில் கயிற்றுக் கட்டிலில், நிலாவை பார்த்தபடி மல்லாக்கப் படுத்திருந்தார் கதிரேசன். 

     கட்டிலின் விளிம்பில் அமர்ந்துகொண்டு இள வெற்றிலையைத் துடைத்து, காம்பு நீக்கி, சுண்ணாம்பு, பாக்கு, துளி சர்க்கரை வைத்து மடித்து, கணவனிடம் நீட்டியபடி மீண்டும் பேச்சை எப்படி ஆரம்பிக்கலாம் என்று எண்ணியபடி அவர் முகத்தையே பார்க்கிறாள்.

     நீட்டிய வெற்றிலையை வாங்காமல் "நம்ப மக அங்கன  எப்பிடியெல்லாம் இருக்கா தெரியுமா காமாட்சி..? அவராக பேச்சை ஆரம்பித்தார்.

    "மாமியாருக்கு கஞ்சி வெச்சு தாரா. மாமனாருக்கு கழுத்துவலின்னு வெளெக்கெண்ணை வச்சு உருவிவிடறா,  சுடுதண்ணி வெச்சு குடுக்கறா, எந்த சாமானையும் வீணாக்கறதே இல்ல காமாட்சி. சிக்கனமா, அதே நேரம் எல்லாருக்கும் புடிக்கற மாதிரி சமையல் செஞ்சு போடறா. மாப்பிள்ளையையும்  கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்கறா, புள்ளெங்களுக்கு பாடம் சொல்லித்தரா, அட்டை போட்டு தரா, நன்னெறி, திருக்குறள்ன்னு ஏதாவது சொல்லித்தரா,....."

    "ஏங் காமாட்சி.... சமையல்னா வெறும் சோறாக்கி, கொளம்பு செய்யறது மட்டுமில்லே தெரியுமா...? மொத நாளே  தயிர உறையூத்தி வெக்கணும், இன்னி கால டிபனுக்கு மொத நாளே அரிசி உளுந்த ஊற வைக்கணும், அப்புறம் பக்குவமா அரைக்கணும். பொறவு ஊறுகா போடணும், பருப்புப் பொடி,இட்லிப்பொடி செஞ்சு வெக்கணும்!

    "அது மட்டுமில்ல காமாட்சி.... புள்ளெங்களுக்கு தலைக்கு ஊத்தணும், சாம்பிராணி போட்டு, பேன், பொடுவு  வெக்காம பாத்துக்கணும்...."

      கூறிக்கொண்டே போனார் கதிரேசன். 
      கன்னத்தில் கை வைத்தபடி கணவன் கூறுவதையே இமைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள் காமாட்சி.

     "தாயா , மகளா, தாரமா, தோழியா, ஆசிரியையா, மருத்துவச்சியா, நிதியமைச்சரா, மந்திரியா, சமையல்காரியா, தையல்காரியா...... இப்பிடி எத்தனை பதவில இருக்கு தெரியுமா என்தங்கம்......? பெருமூச்சு விட்டார் கதிரேசன். 

     "ஆ ......ங் ! இம்புட்டுதானா  விசயம்...? நா இத்தினி நாளா செஞ்சது - செஞ்சிகிட்டு இருக்கறது தெரியாலியாக்கும்...? மக செஞ்சா பெரிசா தெரியுதோ...? இட்லிக்கு மொத நாளே நனைக்கணுமாம்.... அரைக்கணுமாம்....
இந்தாங்க.... இந்த வெத்தலையை புடிங்க.... நா என்னமோ ஏதோன்னு பயந்து போனேன்." 
   
    என்றவாறு சமயலறைக்குச் சென்று, தான் சாப்பிட உட்கார்ந்தாள் காமாட்சி.

    "ரெட்டை சடையும், பட்டுப்பாவாடையுமா வளைய வருவா....பள்ளிக்கூடத்துல பரிசெல்லாம் வாங்கினா, காலேஜ்ல கப்புகூட வாங்கினா. அவங்க அப்பாருக்கு தங்கமணின்னா அப்பிடி ஒரு இஷ்டம். 'தங்கம்... தங்கம்'  னு மூச்சுக்கு முன்னூறு தடவ கூப்பிட்டுக்கிட்டே இருப்பாரு.

"சாப்பிட்ட தட்ட கழுவி வை டீ " ன்னா  போச்சு " இந்தா ...! தங்கத்தை ஒன்னும் செய்ய சொல்லாதே. அது படிக்கட்டும்" பாரு. 

யாரா இருந்தா என்னங்க....? கட்டி குடுத்துட்டா தோசை சுட்டு போட்டுதானெங்க ஆகணும்...?
ஏதேதோ நினைவுகள் அலைமோத சாப்பாடு வேண்டியிருக்காமல் எழுந்து கை கழுவினாள் காமாட்சி.  

சனி, 4 ஜூன், 2016

உயிர் - மெய்

   
Image result for free image of a wounded dog

"வ்ஊ ....!' "வ் ஊ ...! என்று ஊளையிடுவது போல் அரை மணி நேரமாக அழுது கொண்டிருந்தது அந்த தெரு நாய். அந்த மாலை நேரத்தில், அச்சத்தம் நாராசமாக ஒலித்தது. வீட்டினின்று வெளியில் வந்து வாசலில் நின்று பார்த்தார் ராகவன் .

    சாலையின் எதிர் சாரியில் ஒரு வெள்ளை நிற நாய் உட்கார்ந்திருந்தது. உடல் முழுவதும் புழுதிப்படலம். வெள்ளை நிறம் மங்கி ஆங்காங்கே பழுப்புத் திட்டுக்களுடன் இருந்தது.

    ஊளையிடுகையில், முகத்தை கீழிருந்து மேல் நோக்கி உயர்த்தியபடி உச்சஸ்தாயியில் "வ் ஊ .....!" என்று ஒலியெழுப்பியது. பின்னர் 'தஸ்.... , புஸ் .." என்று மூச்சு வாங்கிக்கொண்டது. முக்கியது, முனகியது, பின் மீண்டும் வானை நோக்கிப் பார்த்து, வாயை பிளந்தபடி கத்தியது.

    "தெருவில நாய் இப்பிடி கத்தக்கூடதுன்னு சொல்லுவாங்களே...!"
    "ச்சை..! கொஞ்சம் கூட நிறுத்தாம கத்திகிட்டே இருக்கு பாருங்க..!
    " விரட்டு அந்த சனியனை...!"
 
    இப்படி பல விதமாய் விமர்சித்தபடி அத தெருவாசிகள் பலரும் அங்கு சூழ்ந்தனர்.

     "ச்சூ...ச்சூ..." என்றபடி கல் ஒன்றை அந்த நாயின் மீது வீசி விரட்டினான் ஒரு சிறுவன். பயந்து போன நாய், ஓட முயற்ச்சித்து எழ முற்பட்டது. முடியாமல் மீண்டும் அழுதபடி கீழே சரிந்து 'தொப்' என்று விழுந்தது.

    அப்போதுதான் தெரிந்தது, காலில் நல்ல ரத்தக்காயம் என்று. முன்னங்கால்கள் இரண்டும் வயிற்றுப்பகுதியோடு இணையும் இடத்திலிருந்து ரத்தம் கசிந்துகொண்டிருந்தது.

    "ஐயோ.. பாவம் அடிபட்டிருக்கு.!'
    "எவனோ இடிச்சிட்டுப் போய்ட்டான் போலிருக்கு சார்"
    "வலி பொறுக்காமத் தான் கத்தியிருக்கு"
    "அச்சச்சோ...! அச்சச்சோ...!

     இப்படி பலரும் பல விதமாக அனுதாபப்பட்டனர்.
     அப்போது சிலு சிலுவென்ற குளிர் காற்றுடன் லேசாக தூற  வேறு ஆரம்பித்தது.

   "அய்யய்யோ... மழை வருதே! காய்ந்த துணியை எடுக்க வேண்டுமே!"
   "காத்து வேற வீசுது, கரண்ட் போறதுக்குள்ள வேலையை முடிக்கணும்."
   "கடைக்குப் போகணும்! கிளாசுக்குப் போகணும்!"

    இப்படி கூறி, அனைவரும் அவரவர் வேலையை கவனிக்கச் சென்றுவிட,
ராகவன் மட்டும் நாயைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்.

   இதற்குள்  நாய் வேறு விதமாக முனக ஆரம்பித்தது. தலையை சிலிர்த்துக்கொண்டது. உடலை குலுக்கிக் கொண்டது. மீண்டும் கதறியது.

  'அடடா...! நாய்க்குக் குளிருகிறது போலிருக்கு" என்று எண்ணியபடி தன்  வீட்டிலிருந்து  பழைய போர்வை ஒன்றை எடுத்தார் ராகவன்"
     இதற்குள் மழை வலுக்க ஆரம்பித்தது.
     "சாரதா! இந்தக் குடையைப் பிடித்துக்கொண்டு என்னோடு வா" என்று 8ம் வகுப்பு படிக்கும் தன்  மகள் சாரதாவையும் அழைத்துக் கொண்டு நாயருகில் விரைந்தார்,.
      சாரதா குடையை விரித்தபடி பிடிக்க, போர்வையால் நாயை மூடி அப்படியே சுருட்டி, லாகவமாக தூக்கி, அருகில் இருந்த டீக்கடை வண்டியின் அடியில் உட்கார்த்திவிட்டார். சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தார். நாயின் முக்கல் சற்று குறைந்தாற் போலிருந்தது.

     "வா..! அதுக்கு பால், பிஸ்கெட்  ஏதாவது சாப்பிட எடுத்துவருவோம்" என்று கூறிக்கொண்டே இருவரும் வீடு நோக்கித் திரும்பி நடக்க எத்தனிக்கயில்தான் அந்த விபரீதம் நடந்தது.

    வேகமாக வந்த பைக் ஒன்று சாரதா மீது மோதிவிட்டு, சீறிப்பாய்ந்தபடி நிறுத்தாமல் கூடச் சென்றுவிட்டது. கொட்டும் மழையில் 'வீ ல்'லென்று கத்தியபடி நிலைதடுமாறி விழுந்த சாரதா துடித்தாள் - தவித்தாள். செய்வதறியாது விழித்தார் ராகவன். நிமிட நேரத்தில் நிகழ்ந்தது என்ன என்றே புரியாமல் சற்று நேரம் திகைத்துப்போனார். உடனே, சுதாரித்துக்கொண்டு அந்த வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி, குழந்தையை ஆட்டோவில் அமர்த்தினார்.

      இதற்குள் இருட்டத் துவங்கியிருந்தது.
      மீண்டும் தெருவாசிகள் பலரும் குழுமிவிட்டனர் .
ராகவன் வீட்டிற்குள் ஓடி, தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு, பீரோவிலிருந்து பண நோட்டுக்கள் சிலவற்றை பர்சில் திணித்துக்கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

       சாரதாவின் உடலில் பல இடங்களில் அடி பட்டிருந்தது. நல்லவேளையாக முகத்திலோ, தலையிலோ அடியேதும் படவில்லை. இருந்தாலும், மூன்று இடங்களில் தையல் போடும்படி இருந்தது. ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக அலைந்துகொண்டிருந்ததில் ராகவன் நாயை பற்றி மறந்தே போய்விட்டார்.

      மூன்று நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த உடனேயே நாயின் நினைவு வந்துவிட்டது அவருக்கு.

     "அடாடா...! நாயை மறந்தே போய்விட்டோமே! எப்படி இருக்கிறதோ" என்று எண்ணியபடி வாசலூக்குப் போனார்.

      பக்கத்துவீட்டு அருண் நண்பர்களுடன் வாசலில் விளையாடிக்கொண்டிருந்தான்.

      "அருண்! நாய் எங்கே.... காணோமே இங்க....! சரியாயிடுச்சா அதுக்கு?" என்று பதட்டத்துடன் சரமாரியாக வினவினார்.

      "இல்ல சார்! செத்துபோச்சு   அதால நடக்கவும் முடியலே. கத்தி கத்தியே களைச்சுப் போய்டும். டீ கடைக்காரங்க கடை போடணும்னு வண்டிய நகர்த்திப் போட்டுகிட்டாங்க. கடைக்கு வரவங்க பன்னோ, பிஸ்கட்டோ போட்டாலும் அதால சாப்பிட முடியலே. பலர் அதோட கத்தல் தாங்காம விரட்டிகிட்டே இருந்தாங்க. ரெண்டு நாள் உயிரோட இருந்தது, நேத்து காலையிலதான் செத்துபோச்சு. முனிசிபாலிட்டில எடுத்துட்டுப் போய்ட்டாங்க" என்றான் அருண்.

     "சொரேர்" என்றது ராகவனுக்கு.
      இதே இடத்துல சாரதா அடிபட்ட உடனே, - கொட்டுற மழையிலேயும் டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனோமே! அந்த அக்கறையை நாய்க்குக் காட்டலியே....! சுயநலமாய் இருந்திருக்கிறோமே....! குற்ற உணர்ச்சி .குறுகுறுத்தது

      'நாய் டக்டர் கிட்ட தூக்கிட்டுப் போயிருக்கலாமோ! லயன்ஸ் க்ளப், ரோட்டரி க்ளப், முனிசிபாலிட்டி இப்படி யாருக்காவது போன் பண்ணியிருக்காலமோ...?  இப்படியான எண்ணங்கள் ராகவனின் மனதில் பொங்கி எழுந்தது.

     வெவ்வேறு  'மெய்'யில் உயிர் இருந்தாலும் உயிர் என்பதன் மதிப்பு 'மெய்'யாலும் சமம் தானே. 'சமமல்ல' என்பதுபோல் நடந்துகொண்டதற்கு வெட்கப்பட்டார்  - வேதனைப்பட்டார் ராகவன்.






 

புதன், 1 ஜூன், 2016

இல்லத்தரசியின் ஒருநாள் பொழுது!

என்னனு சொல்றது..?
ஏதுனு  சொல்றது...?

அதிகாலை கண்முளிச்சு,
அடுப்படில நொளஞ்சேன்னா,
நடுசாமம் ஆகும்வர
நடந்துகிட்டே தா இருப்பேன்.

காப்பித்தண்ணீ வச்சுகிட்டே
காய்கறிய வெட்டிபுட்டு
காலப் பணியாரம்
கலர்கலரா செஞ்சுடுவேன்.

ஏத்தி, இறக்கி வச்சு
போட்டுப் பரிமாறி,
தொடைச்சு சுத்தம் செஞ்சா,
சுளுவா மணி எட்டாவும்.

விடிஞ்சது தெரியாம
ஒறங்கும்  பிள்ளைகள
எழுப்பிக் குளிப்பாட்டி,
உடுப்ப மாட்டிவிட்டு,

எழுதிப் படிக்கவச்சு,
எததையோ ஊட்டிவிட்டு
ஏட்டுபைய மாட்டிவிட்டு
பள்ளிக்குக் கிளப்போணும் .

மாசத்துல பத்துநா
புதுபேனா வாங்கிடுங்க!- ஆனா
எழுதி கிறுக்கணும்னா,
எதொன்னும் அம்படாது

மூடி தொலஞ்சிருக்கும்
மொன ஒடஞ்சிருக்கும்
தேடித் தாரங்குள்ள
தாவு தண்ணி தீந்துபோவும்.

ஆட்டோ கிளம்புச்சின்னா
அப்பாடான்னு ஆகிப்போகும்
வீட்டை சரி செய்ய
ஒன்னேகா மனிவேணும்.

வீடு முச்சூடும்
போர் நடந்த களமாட்டம்
வாரி எறஞ்சிருக்கும்
வகை வகையா சாமாங்க!

பொறவு...

குளிச்சு தலைமுழுகி
தொவச்சு ஒலரவச்சு
பெருக்கித் தொடச்சேன்னா,
பிற்பகலும் நெருங்கியிருக்கும்.

சோத்த வடிச்சுவச்சு,
கொழம்பு, பொறியல் செஞ்சு,
மொராக் கடஞ்சுகிட்டு,
தொவையல் ஒண்ணும் அரச்சுடுவேன்,

பக்குவமா பரிமாறி,
பாத்திரத்த ஒழிச்சுபோட்டு,
ஒருவா சாப்ட்டேன்னா...
அப்படியே ஒறங்கிடுவேன்.

அஞ்சு நிமிச ஒறக்கம்தான்
ஆனந்தமா எனக்குப்படும்
அரக்க, பரக்க எந்திரிச்சு,
டிக்காசன் வைக்க ஓடுவேன் .

படிச்சு, களைக்கும் புள்ளேங்க
பசியோட திரும்பி வரும்.
புடிச்ச டிபன் ஒண்ண
படபடன்னு செஞ்சிடணும்.

பள்ளிக்கூட உடுப்பு மாத்தி,
தல சீவி பொட்டிட்டு,
தங்கமான ஸ்கூல் நிகழ்வ
தலையோடந்தம் கேட்டிடுவேன்,

ஓடி விளையாட,
ஓரிடமும் இங்கில்ல
கேரம் ஆடிடுவோம்,
தாயம் ஆடிடுவோம்.

நா படிச்ச ஹிந்திய
நாடு பூரா  பரப்பிடவோ,
வெட்டியா நானில்லைன்னு
வெவரம் வெளக்கிடவோ,

ஆழ்ந்து அனுபவிச்சு
அழகா நா சொல்லித்தர...
அற்புத நேரமிது,
ஆனந்த போதது.

அதுக்கடுத்து வீட்டுப்பாடம்!
முடிக்க வக்குங்குள்ள
அடியும்,  திட்டும் விழும்
படிக்க சொல்லிட்டு அடுக்களைக்கு ஓடுவேன்

ரவைக்கு சோறுதண்ணி
நிறைவா செய்யோணும்
நிரவியும் செய்யோணும்.
நேரமும் கொஞ்சமில்லை - நிக்கவும் நேரமில்லை!

ஆக்கி முடிச்சாச்சு
சாப்டு படுத்தாச்சு
கண்ணு சொருகி நிக்கும் - கணவன்
என் மொகம் பாத்து சிரிக்கும்.

அப்பாடியோய்....!
அசந்து கண் மூடினா,
அலாரம் சத்தம் போடும்
அஞ்சு மணி ஆயிடிச்சுன்னு !




Image result for images of busy village housewife free download