வியாழன், 30 ஜூன், 2016

வலையில் சிக்கி........ (sowrabhi's idea and written by me)

     நான் இப்போது எங்கோ ஒரு இருட்டு அறையில் அடைக்கப்பட்டுள்ளேன். கண் சிமிட்டும் நேரத்திற்குள் அந்தக் கடத்தல் நடந்து விட்டது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி நடந்தது..? 'ஸ்கூலிலிருந்து வீட்டிற்கு நடந்து போய்க் கொண்டிருந்தேன்.....! அருகில், மிக அருகில் அந்த கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய முரட்டு ஆள் ஒருவன் என்னை லாகவமாக காருக்குள் தள்ள..... மற்றொரு கடா மீசை ஆள் என் வாயைப் பொத்த...அப்பப்பா... இப்போது கூட என் இதயம் 'படபட' வென அடித்துக்கொண்டிருக்கிறது. என்னால் பிரமிப்பிலிருந்து மீள முடியவில்லை.
     அப்பா, அம்மாவுக்குத் தெரியுமா..? என் பிரண்ட்ஸ் பூஜா, சுமா, பிரேம், கௌஷிக், மாலினிக்கெல்லாம் நான் இங்கே வலையில் சிக்கிய மான் குட்டிபோல அடைத்துவைக்கப்பட்டுள்ளது தெரியுமா...?
    அய்யய்யோ..! என்ன செய்வேன்..? கடவுளே! ஒரு வழிகாட்ட மாட்டாயா...?என்று மனதிற்குள் புலம்பியபடி சுற்றும் முற்றும் பார்க்கிறேன். இப்போது இருட்டு கண்களுக்கு சற்று பழகிவிட்டது.
    நிழல் போல் ஒரு உருவம் நகர்வது அங்கிருந்த ஜன்னல் வழியே தெரிகிறது. மூச்சை அடக்கிக் கொண்டு ஜன்னலையே பார்க்கிறேன். ஆம்! யாரோ ஒருவன் இப்படியும், அப்படியும் நடந்து கொண்டிருக்கிறான். எனக்கு காவலுக்கு இருக்கிறான் போலுள்ளது.
     ஏதாவது ஐடியா தோன்றுகிறதா என்று அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
     அட! அது என்ன அவன் கையில் பளபளப்பாக ஏதோ தெரிகிறதே! ஆமாம்! நான் நினைப்பது சரிதான். அது செல்போன் தான்! என் மூளை படு வேகமாக செயல்பட ஆரம்பிக்கிறது. எப்படியாவது அந்த போனைக் கைப்பற்றவேண்டுமே...! என்ன செய்யலாம்?
     உடனே! 'தண்ணீர், தண்ணீர்.... ஒரே தாகமாக இருக்கிறதே.... ப்ளீஸ் யாராவது தண்ணீர் கொடுங்களேன்...!" என்று குரல் கொடுக்கிறேன்.
     திடுக்கிட்ட அவன் ஜன்னல் வழியே உள்ளே பார்த்து, "என்ன...? எதற்காக சத்தம் போடுகிறாய்..? என்று அதட்டுகிறான்.
     "குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும்" என்று அழுவது போன்ற பரிதாபத் குரலில் கேட்கிறேன்.
    "இரு" என்று சொல்கிறான்.
    நான் அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
   "இதோ! இதோ! நான் எதிர்பார்த்தபடியே கையிலிருந்த போனை ஜன்னலில் வைத்துவிட்டு தண்ணீர் எடுக்கப் போகிறான்.
    நான்--
    ஒரு நொடிகூட தாமதிக்காமல் - மிக வேகமாக - சடாரென்று பாய்ந்து சென்று - ஜன்னல் கம்பிகளுக்கிடையில் கையை நுழைத்து - கஷ்டப்பட்டு போனை எடுத்து facebook - ல் என் அகௌண்டை login செய்து 'got kidnapped, excited' என்று என் ஸ்டேட்டஸைக் கொடுத்துவிடுகிறேன்.
     அப்பாடா...! திருப்தியாக உள்ளது... கண்டிப்பாக ஆயிரத்திற்கு மேல் 'லைக்' கிடைக்கும்.
     நல்லவேளை! நெட் பூஸ்டர் போட்டிருக்கிறான்.
    அப்போது அடக்கிய மூச்சு, இப்போது நிம்மதி பெருமூச்சாக வெளிவருகிறது.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக