வியாழன், 21 ஜூன், 2018

வைத்தியம்

2008_0614_rosethorn_002 (seannarae) Tags: june rose ouch foot pain blood toe step 407 thorn 2008 bizarregardeningaccident

பரத்தும், பார்கவியும், கொல்லைப்புறம் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.  செல்லம்மா பாட்டியின் மகள் வயிற்றுப் பேரப்பிள்ளைகள் அவர்கள். ஹைதராபாத்திலிருந்து நேற்றுதான் அவர்கள் வந்தார்கள். மகளும், மருமகனும் ஒரு கல்யாணத்திற்காக மதுரை வரை போயிருக்கின்றனர். பிள்ளைகள் இருவரும் கிணற்றங்கரையிலும் சுற்றி உள்ள தென்னை, மா மரங்கள் இருக்கும்  தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.  செல்லம்மா  கிச்சனில் குழந்தைகளுக்குப் பிடித்த சமையல் செய்துகொண்டிருந்தாள்.

 திடீரென தோட்டத்திலிருந்து 'ஆ.. அம்மா' என்ற அலறல் கேட்டதும்  பயந்து போய் கொல்லைப்புறம் ஓடினாள் செல்லம்மா பாட்டி. பரத்தின் காலில் சீதமுள் குத்தியிருந்தது. பார்கவி செய்வதறியாமல் 'பாட்டி... பாட்டி' என்று அழுகையுடன் அழைத்தாள். பரத் காலைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தான். முள் செடியின் குச்சியிலிருக்கும் ஒரு முள் காலில் ஏறியிருந்தது. பாட்டி அதை லாகவமாக காலிலிருந்து உருவினாள்.

'ஐ வில் கால் அம்மா அண்ட் டெல்' என்று பரபரத்தாள் பார்கவி. 

'அம்மாடி... இப்போ ஃபோன் பண்ண வேண்டாம். அம்மா பயந்துடுவா. வந்ததும் சொல்லிக்கலாம்' என்றாள் செல்லம்மா.

'மருந்து ஏதாவது தரணுமே பாட்டி.. அண்டிபயாடிக் குடுக்கலாமா? டாக்டர்கிட்ட போலாமா பாட்டி'  பெரியமனிஷி போல பார்கவி கேள்விகளை அடுக்கினாள்.

பேத்தி பேசுவதைப் பெருமையுடன் பார்த்த பாட்டி, 'இதுக்கு மருந்து இங்கேயே இருக்கு தங்கம்'  என்றாள். '

'பத்துரதன், புத்திரனின், மித்திரனின், சத்துருவின், பத்தினியின் காலை வாங்கித் தேய்' என்றாள்.

'பாட்டி... என்ன பாட்டி...மருந்து இருக்குன்ன.. அப்புறம் ஸ்லோகம் மாதிரி ஏதோ சொல்ற..!'  சிணுங்கினான் பரத்.

'ஒது ஒண்ணும் இல்லடா கண்ணு...முள்ளு உள்ள போகல... முள்ளு குத்தின வலிக்கு  இதுதான் மருந்து' என்று பாட்டி சொன்னதும் புரியாமல் பாட்டியைப் பார்த்தனர் பரத்தும், பார்கவியும்.

'என்ன பாட்டி சொல்ற.. ஒண்ணுமே புரியலியே!' என்றாள் பார்கவி.

பாட்டி அந்த பட்டை மறுபடியும் சொன்னாள்.
'பத்துரதன்,
புத்திரனின்,
மித்திரனின்,
சத்துருவின்,
பத்தினியின்
காலை வாங்கித் தேய்'

பத்துரதன் யாரு? தசரதன்
தசரதனின் புத்திரன் யாரு?  பாட்டி கேட்டதும், 'ராமன்' என்றனர் இருவரும்.
'ம்ம்.. ஆமாம்.' என்ற பாட்டி,
'ராமனின் மித்திரன் யாரு? கேட்டாள் பாட்டி.
'மித்திரன்' ன்னா என்ன பாட்டி?' என்றான் பரத்.
'டேய்.. மித்திரன்னா ஃப்ரண்ட் டா' என்றாள் பார்கவி.
'கரெக்ட்.. ராமனோட ஃப்ரெண்ட் சுக்கிரீவன்' என்றாள் பாட்டி.
அதற்குள் பரத்... 'பாட்டி மருந்து சொல்றன்னு சொன்ன.. ராமாயணம் சொல்ற' என்றான்.
சிரித்த பாட்டி... 'இரு பரதா... ராமாயணத்துக்குள்ள தான் மருந்து இருக்கு.' என்றபடி,
'பார்கவி... எங்க விட்டோம்?' என்று கேட்டாள்.
'ராமனோட ஃப்ரெண்ட் சுக்கிரீவன்' என்றாள்.
'ஹ்ம்.. மித்திரனின் சத்ரு யாரு?' என்று நிறுத்தினாள்.
'பாட்டி.. சத்ருன்னா எனிமி.. சுக்கிரீவனின் எனிமி வாலி' நீதான் எனக்கு ராமாயணக் கதை சொல்லியிருக்கியே!' என்று சிரித்தாள்.
'ஆமாண்டி செல்லம்...' என்று பாட்டி, பேத்தியை. கட்டிக்கொண்டு.
சுக்கிரீவனின் சத்ரு வாலி. வாலியோட பத்தினி யாரு?' என்றதும். 'தாரை' என்றான் பரத். ' அட.. சரியா சொல்லிட்டியே' என்ற பாட்டி. 'தாரையின் காலை வாங்கித் தேய்.  'தாரை'ல இருக்கற கால எடுத்தா என்ன.. தர.. தரையில தேச்சா முள்ளு குத்தின வலி போயிடும்' என்றதும். 'ஏமாற்றம் ஒருபக்கம் இருந்தாலும், 'இந்த பாட்டுக்குள்ள இவ்ளோ அர்த்தம் இருக்கா பாட்டி' என்ற பரத். முள் குத்தின இடத்த தோய்க்கற கல்லுல நன்கு தேய்த்தான். வலி போயே போச். 
மீண்டும் விளையாட ஓடிவிட்டனர் பிள்ளைகள். புன்சிரிப்புடன் செல்லம்மா பாட்டி சமையல் கட்டுக்குள் சென்றாள்.

ஞாயிறு, 10 ஜூன், 2018

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 12

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 12


                  அநுமன் நிலையும், செயலும்

நெருப்பினால் எரியுண்ட வால் முழுதும்
வருத்தாது குளிர் தந்த நிலையுணர்ந்து,
சனகன் பாவையின் கற்பின் நெறியென
உணர்ந்த அநுமனும் உவகை கொண்டான்.                       231

கட்டிய கயிற்றொடு சட்டென உயர்ந்தான்.
பற்றிய அரக்கரின் ஆயிரம் புயங்களும்,
தூண்போல் தொங்கிட விண்மேல் எழுந்தான்.
மண்மேல் கூட்டமாய் அரக்கர்கள் விழுந்தனர்.                    232

துதித்துப் போற்றினான் இராம பிரானை! – பின்
சிவந்து எரியும் சிறந்த வாலினை,
புரத்தின் மீதினில் புரளச் செய்தவன்,
மாளிகை மேல்புறம் தாவிச் சென்றான்.                          233

                   இலங்கை எரியூட்டு படலம்

வாசலில் பட்ட பொறி யொன்று
வீட்டினைச் சூழ்ந்து தாக்கத் துவங்கிட,
ஊச லிட்டு அலைந்து திரிந்தனர்
பூசலிட்ட இலங்கை அரக்கர்கள்.                                 234

வானகத்தை நெடும் புகை மாய்த்திட,
போன திக்கழிந்து புலம்பின விலங்குகள்.
யானையின் கரும்தோல் கருகிக் கழன்றிட,
வெண்யானை போலுருவம் பூண்டது.                            235

பொடித் தெழுந்த பெரும் பொறிகள்
இடிக் குரலில் வெடித்துச் சிதறிட,
துடித்துத் துவண்டன மீனினங்கள்!
மடிந்து மரித்தன மானினங்கள்.                                  236

சூழ்ந்திருந்த கடல் நீரும்
உலை நீராய்க் கொப்பளிக்க,
மழை மேகக் கூட்டமெல்லாம்
கலைந்து திரிந்தன வெம்மையினால்.                           237

பூக்கள் கரிந்து பொறியாய் மாற
சோலைகள் கரிந்து சாம்பராய் போனது.
சந்திர மண்டலம் உருகிய தாலே
அமிர்தம் வழிந்து கீழே உருண்டது.                              238

வளைந்த குளம்புடை குதிரைகளெல்லாம்
உலர்ந்து, தவித்து, எரிந்து அழிந்தன.
வெருளும் வெம்புகை படலம் சூழ்ந்திட
இருளும் கடலுள் பறவைகள் விழுந்தன.                         239

கடும்கனல் தோல்களை உரித்துக் கருத்திட,
கடல்நீ ரமிழ்ந்து குளிர்ந்தனர் அரக்கர்கள்.
ஆடவர், பெண்டிரின் செந்நிறக் கூந்தலால்
கடலும் எரிந்திடும் நெருப்பாய் வெந்தது.                         240

ஊர் முற்றும் எரித்தழித்த கொடுந்தீயும்,
உட்புகுந்தது இராவணனின் அரண்மனையுள்.
எழுநிலை மாடங்கள் எரிந்து விழுந்திட
பலமிக்க யானைகளும் பயந்து ஓடின.                           241 

பிரளயம்தான் வந்ததோ? பிரிதொன்றும் உள்ளதோ?
பற்றிய பெரும்தீ முற்றிலும் அழித்திட,
புஷ்ப்பக விமானத்தில் பறந்தே போயினர்            
அரக்கர் தலைவனும், அரிவையர் குழுவும்.                      242

‘இறையோய்! நெடிய வாலில் நாமிட்ட
நெருப்பால் குரங்கு சுட்டது ஈதென,
கரம் குவித்து அரக்கர்கள் பகன்றதும்,
கொதித்துக் கனன்றான் இராவணனும்.                           243

‘புன்தொழில் குரங்கின் வலிமையினால்
எரிந்தழிந்தது எந்தேசமென்றால்,
நன்றென நகைப்பர் தேவர்கள்’ என்றதும்,
சென்றனர் குரங்கினைப் பிடித்திட அரக்கர்கள்.                    244

கால் கொண்டும், வேல் கொண்டும் அக்குரங்கை
வளைத்திட முனைந்தனர் வீரர்கள் பலரும் – வெம்தீ
வால்கொண்டு வாயுபுத்திரன் வளைத்ததும்,
வதங்கியோர் பலரெனின், தப்பியோரும் பலராம்.                 245

நெருப்பணைக்கத் தம் நெடுவாலைக்
கடல் நீரில் தோய்த்தெடுத்தவன்,
பிராட்டியிருக்கும் பிரதேசம் மட்டும்
எரியா திருந்ததால் மகிழ் உற்றான்.                             246

                        திருவடி தொழுத படலம்.

பிராட்டி பார்த்தவன், இலங்கையை எரித்தபின்,
திருமால் போலொரு பேருரு யெடுத்தான்.
இராமானைத் தொழுது விவரங்கள் பகன்றது,
‘திருவடி தொழுத படலத்’தில் விரிந்தது.                         247

மைந்நாக மலையினை முறையாகக் கண்டவன்,
உற்றது உணர்த்தியே, விரைந்து பறந்தனன்.
தாய்வரப் பார்த்த குஞ்சினைப் போலவே
வானார வீரரகள் உவகை யடைந்தனர்.                          248

‘அண்ணலே!
முகக் குறிகண்டு நற்செய்தி யுணர்ந்தோம்.
முதலில் புசித்திடு தேனொடு, கிழங்கினை’ யென்றவர்,
வகிர்ந்த புண்கள் நிறைந்த உடலால்,
உயிர்த்து நொந்து. பெருமூச் செறிந்தனர்.                         249

                  அநுமன் பிராட்டியின் செய்தி கூறல்
வாலியின் மைந்தன் அங்கத னுக்கும்,
கரடித் தலைவன் சாம்ப வானுக்கும்,
புறத்தே அமர்ந்து இருந்தோர்க் கெல்லாம்
பிராட்டி பற்றிய விவர முரைத்தான்.                             250

               அனைவரும் இராமபிரானிடம் செல்ல எழுதல்

சோர்வுற்று ஓய்ந்திருந்த இராம பிரானை
சூரிய புத்ரன் சுக்ரீவன் தேற்றி வந்தான்.
தெற்குதிசை தேடிச்சென்ற வாயு புத்ரன்,
நற்செய்தி சொல்வானென உயிர் கொண்டான்.                   251

                        அநுமன் தோன்றுதல்

‘கண்டனன் கற்பினுக் கணியாளைக் கண்களால்’
என்றதைச் சொல்லியே அவ்விடம் வந்தவன்,
‘பண்டுள துயரும், ஐயமும் தவிர்த்தி’யென,
அண்டர் நாயகன் திருவடி பணிந்தான்.                           252

ஐயனே!
பொன்னொத்த பொறுமை தாங்கி,
தனக்கொப்பு தானே யென் றெண்ணி,
நின்னைத் தவிர்த்து நினைவுகள் இலையெனும்
நங்கையைக் கற்புடன் லங்கையில் கண்டேன்’                   253

தாம் சென்ற நாள் முதலாய்
செய்தவை ஈதென கோர்வையாய்க் கூறியே
தந்த சூடாமணித் தந்திட இராமனும்
கண்மணியையேக் கண்டதைப்போல் களித்தான்.                    254

‘எழுக வெம் படைகளென்றான்’
முழங்கத் தொடங்கின முழு முரசு!
அழகிய இராம இலக்குவர் வில்லேந்தி,
அடைந்தனர் கடலை பன்னிரு தினங்களில்.                      255               


                  சுந்தர காண்டம் முற்றிற்று.

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 11

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 11



             இந்திரசித் அநுமனை இராவணனுக்கு அறிமுகப்படுத்துதல்

அரசனை வணங்கிய இந்திரசித் அரக்கன்,
‘ஆடவரிற் சிறந்தோனே! வானரமாம் இவன்தான்
மால் போன்றும், சிவன் போன்றும்
போரிட வல்ல பெரும் வீரன்’ என்ன                             210
                       
                         இராவணன் வினா

'சிவனோ? மாலோ? நான்முகனோ? ஆதிசேடனோ?
யார் நீ? இவண் வந்தது எங்கனமெ'ன
நோக்கிய கண்களால் கனல்பொறி கக்கினான்
மூக்குகள் பத்திலும் வெம்புகை துப்பினான்.                      211

                           அநுமன் விடை

அல்லேன் யான் நீ சொல்லிய எவருமே!
அல்லி மலரனைய வில்வீரன் தூதன்தான் – அவனும்
தேவரும், பிறருமல்லன்! களிறும், கயிலாயமுமல்லன்!
பூவலயம் ஆளுகின்ற புரவலனின் புதல்வனவன்.                 212

முதல், இடை, கடையில்லா காரணன்
முன்பு, நடப்பு. எதிரில்லா வீரியன்.
சூலம், சங்கு, சக்கரம், கமண்டலம்
கயிலை, ஆலிலை, தாமரை துறந்தவன்.                         213

கையினில் ஏந்திய வில்லுடனே,
இராமனாய்ப் பிறந்தான் அயோத்தியிலே!
அன்னவற் கடிமை செய்கின்றேன்.
அநுமன் என்றே நாமம் கொண்டேன்.                            214

தேவியைத் தேடியே தென்புலம் வந்த
வானர சேனையின் தலைவன் நான்.
வாலியின் மைந்தன் அங்கதன் தூதனாய்
வந்தேன் நகரினுள் தனியனாய்த் தான்.                                215

                 மேலும் இராவணன் அனுமனை வினவுதல்                                         

'நும்குலத் தலைவனாம் வலிமைமிகு வாலியை
அம்பெய்துக் கொன்றானின் அடிமை யென்றும்,
தமையனைக் கொல்வித்த சுக்ரீவனைத் தலைவனென்றும்,
சொல்லுகின்ற நீயிங்கே தூதனாய் ஏன் வந்தாய்?'                216

                      அநுமன் மறுமொழி

சூரியமைந்தனாம் சுக்ரீவன் தூதனாய்
கூறுகின்றேன் நல் வார்த்தைகளை!
அறம் சிறிதும் நோக்கி டாமல்
பிறன்மாதை துயர் செய்தாய்! – உன்மேல்                        217

வெறுப்புகொண்ட தூயவளை
விரும்புதல்தான் அழகாமோ? – உன்
மாதவப் பலன்களையெல்லாம்
சேறாக மாற்றலாமோ?                                           218

        மேலும் இராவாணன் வினாவும், அநுமன் விடையும்

குன்றில் வாழ்ந்திடும் குரங்கின் கூற்றினை
‘நன்றென’ நக்கலாய் நகைத்த இராவணன்
நகர் வந்த தூதுவன் நீயிங்கு
நெறிகடந்து கொன்றதை உரை’யென்றான்.                       219

உனைக் காட்டுவார் இன்மையால் – மலர்க்
காட்டினை வாட்டினேன்! – எனைத்
தாக்கவந்த அரக்கர்களை வீட்டினேன். – பின்
உனைக் காணும் நோக்கிலே மாட்டினேன்!                       220
                 
என்றவன் சொன்னதும், சினந்த இராவணன்
‘கொல்மின் இக்குரங்கை’யென கொக்கரித்தான்.
‘’நின்மின்’ யென்றனன், நீதி நெறி நின்று,
நடு நிலை தவறா வீடணன்! - பின்                              221

நீண்ட கைகளால் தொழுது வணங்கியே
‘மூண்ட கோபம் முறையது அன்று!
மாதரைக் கொன்றார் உளரெனினும்,
தூதரைக் கொன்றவர் எவருமிலர்!                               222

தகாது நடந்த சூர்ப்பணகையை
வகையாய் வதைத்துக் கொன்றிடாமல்,
தமையனிடம் சொல்லெனச் சொல்லி,                          
மூக்கினை யுடைத்து உயிருடன் விட்டனர்.                       223

இத் தூதனைக் கொன்றாயாயின், இவந்தன்
கண்ணினால் கண்ட காட்சிகளை யெல்லாம்
சொல்லாமல் செய்கிறவன் ஆகின்றாய்’ என
உள்ளத்தில் பொருந்திட வீடணன் கூறினான்.                     224

          அநுமன் வாலுக்கு நெருப்பிட இராவணன் கூறுதல்

‘கொல்வது பழுதென நல்லது உரைத்தா’யென
நவின்றான் இராவணன் வீடணிடம் – பின்
தொல்லை தந்திடும் வாலினைக் கொளுத்தி,
எல்லை கடந்திதை துரத்துங்கள்’ ஆணையிட்டான்.               225

பிரும்மாத்திரம் கட்டுண் டவன்மேல் தீயிடல்
எம்மாத்திரம்? எனக் கூறிய இந்திரசித்
மந்திர விதிப்படி மீட்டுக்கொண்டதும்
இறுக்கிக் கட்டினர் பாசக் கயிற்றினால்.                          226

வாலினைக் கொளுத்திட பிறந்த கட்டளை
‘ஊரினை நீ சுடு” எனச்சொன்ன தெளிவுரை!
எனவெண்ணி உவந்தவன் – அரக்கர்கள்
கயிற்றினால் பிணைக்கையில் சிரித்தான்.                        227

                       அநுமன் வாலுக்கு தீயிடல்

முட்டி யுதைத்து, கட்டி யிழுத்து,
வெட்ட வெளியினில் நிறுத்தினர் ஏவலர்.
கந்தைத் துணிகளை வாலினில் கட்டியே
எண்ணையில் தோய்த்து கடும்தீ கொளுத்தினர்.                  228

            பிராட்டியின் வேண்டுகோளும், அதன் விளைவும்

‘கருணை கொண்ட அநுமனுக்குத்
துணை புரிவாய் அக்னியே!
எந்தூய்மை மெய்யெனில் அவனை நீ
சுட்டிடாதே’ வெனச் சொல்லி தொழுதெழுந்ததும்,                 229

ஒளிர்ந்த வெம்கனல் தண்மை யடைந்ததாம்.
கொற்றவன் நெற்றிக்கண் குளிர்ந்து போனதாம்.
அண்டம் கடந்த பிரம்மன் வளர்த்த
அக்னிக் குண்டமும் அணைந்து தணிந்ததாம்.                   230

                      

to be continued....................

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 10

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 10


இருப்பினும் –
‘வீரத்திலே சிறந்திருக்கும் அக்குரங்கை
பற்றித் தருகுவேன் நொடிப் பொழுதிலெ’ன,
அமரர் கோவை சிறைபிடித்த இந்திரசித்
அமர்க்களமாய்ப் போர் தொடுக்கப் புறப்பட்டான்.                        192

கண்ணொத்த கைப்படை வீரர்கள் எண்ணற்றோரும்,
எண்ணத்திலே ஊக்கமிகு இராக்கத வீரர்களும்,
மண்மீதில் கிடந்ததைக் கண்டு இரங்குகையில்,
ஆண்தகை அநுமனும் அவனை நோக்கினான்.                    193

மூவுலகங்களையும் மும்முறை வென்றவன்,
நால்வகைப் படையுடன் போரிட முனையவும்,
ஆச்சா மரத்தினை அநுமன் சுழற்றிட,
அச்சுக்கள் முறிந்து உருண்டன தேர்கள்.                         194

உதையுண்டு மிதியுண்டன யானைகள்!
சிதையுண்டு, சிரம் நொருங்கின குதிரைகள்!
பிடியுண்டு பிணமானர் வீரர்கள்! - அநுமன் மேல்
பட்டுத்தெரித்த அம்பெல்லாம் எரிந்து கரிந்தன.                   195

                       இந்திரசித்து அநுமனுடன் போரிடுதல்

தேர்களும், யானைகளும், புரவிகளும்
பாரினில் வீழ்ந்ததால், தனித்த இந்திரசித்,
‘வாரும்! வாரும்!’ என்று உரத்தழைத்த
வீரனாம் அநுமனின் மேல் வந்தான்.                             196

ஆயிரம் அம்புகள் வில்லினிற் பூட்டி,
அநுமன் மேலதை சரமாய் செலுத்தினான்.
கனன்ற அநுமனோ தேரொடு அவனையும்,
சுழற்றி வீசியே தரையினில் ஆர்த்தான்.                         197

விழுந்தவன், தரை தொடும்முன் எழுந்தான்.
தேரிலான் ஆனதால் மிகச் சினந்தான்!
நிகரற்ற ஆயுதமாம் பிரமதேவனின்,
பிரம்மாத்திரம் தொடுக்கத் துணிந்தான்.                          198

நீண்ட நாணினில் அம்பினை சேர்த்தவன்,
தூண்டினான் அநுமனின் தோளினை நோக்கியே!
மண்ணுடன் எண்திசைகளும், மதி தாங்கும்,
விண்ணும், பெரும் மலைகளும் மிரண்டனவாம்.                 199

நான்முகன் ஆயுதம் அநுமனை வருத்திட,
அண்ணலும் மண்மேல் மயங்கிச் சாய்ந்தான்.
‘ஓய்ந்தது குரங்கின் வலிமை’யென்றே
வாய்விட்டு மகிழ்ந்தன அரக்கர் குழாம்.                          200

                           பிணிவிடு படலம்

எய்திடுங்கள் இதனுடம்பில் அம்பினை!
கொய்திடுங்கள் உருவிய இதன் குடலினை! – இது
உய்த்திருந்தால் நம் உயிர் இராது. அதனால்
செய்திடுங்கள் இரு துண்டாய் அறுத்தெடுத்து!                    201

முழங்கிய அரக்கர்கள் மூர்க்கத்தி னுடனே
சுழற்றிய கயிற்றினால் அழுத்தியே பிணைத்தனர்.
இழுத்தனர் குரங்கினை அரண்மனை நோக்கியே
மொழிந்தனர் அனைவரும் ‘வீரனே இவனெ’ன!                   202

தேவரீ ரீந்த வரந் தன்னால் - கயிற்றை
சிதறிடச் செய்தல் அநுமனுக் கெளிதாம் - எனினும்
இலங்கை வேந்தனைக் காண்டல் தானே
நலமென அவனும் பின் தொடர்ந்தான்.                           203

பிடிபட்ட செய்தியை தூதுவர்கள்
பகன்றிட இராவணன் அக மகிழ்ந்தான்.
‘கொன்றிடாமல் கொணர்ந்திடக் கூறி - முத்து                     
மாலையைக் கழற்றி பரிசளித்தான்.                              204

                 அநுமன் நிலையைப் பிராட்டி கேட்டு வருந்துதல்

ஒடித் தழித்தான் அசோக வனத்தினை!
கொன்று குவித்தான் அரக்கர் குழாத்தினை!
என்றெல்லாம் செவிமடுத் துவந்த பிராட்டி
துன்புற்றாள் அநுமனின் நிலையை யெண்ணி.                    204

              அநுமன் இராவணன் கோயிலடைதல்

அருந்தவப் பயன்களால் அகிலங்கள் மூன்றையும்,
அரசாளும் இராவணன்தன் அரண்மனையின் ஆசனத்தில்
ஆர்ப்பரிக்கும் கருங்கடல்மேல் மேரு ஒன்று
கவிந்ததைப் போல் கம்பீரமாய் வீற்றிருந்தான்.                   205

            இராவணனைக் கண்ட அநுமனின் சீற்றம்.

கரும்திண் நாகமாய் வருத்திடும் அரசனை
கருடனாய் வெறித்தவன் எதிர்கொண்டான்.
‘உறக்கத்தில் இருக்கையில் உயிர் உண்டல்
அறமாகாதென அன்றொழிந்தேன். – இன்று                       206

சிரங்கள் பத்தையும் சிதறிடச் செய்து
சிறையிடை சீதையை மீட்டகல்வேனென
குன்றின் மேலெழும் சிங்கம் ஆனவன்
முனைந்தான் ப்ரும்மாத் திரம் முறிக்க! – பின்                    207

எந்தன் காரியம் இதுவன்று.
என்னால் கொல்லல் தரமன்று!
என்னை வெல்வதும் எளிதன்று!
அன்னவன் ஒருவனே ஏற்றவனென்றும்,                       208

அவன்-
ஏழுயிர் உலகங்கள் இன்புற் றிருக்க
இருபது தோள்களும், பத்துத் தலைகளும்
புழுதியில் புரட்டிட சபதம் ஏற்று
விளம்பிய உரையெண்ணி அமைதியானான்.                     209

      
to be continued....................

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 9

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 9



              பஞ்சசேனாபதிகள் வதைப் படலம்

‘அந்தக் குரங்கினை யானே பிடிப்பேன்’
சினந்து சொன்ன இராவணன் நோக்கி,
சேனைத் தலைவர்கள் ஐவர்களும் – நற்
சேதி கொணர்வதாய்ப் போரிடக் கிளம்பினர்.                     170

வீரக்கழல்களைக் கால்களில் கட்டினர்!
அம்புப்புட்டிலை முதுகினில் சாற்றினர்!
இந்திரன், குபேரன், யமனையும் வென்ற,
பஞ்ச சேனாபதிகளும், சேனை வீரரும்!                          171.

தோரண வாயிலை சூழ்ந்து கொண்டு,
சேனைகள் நாற்புறம் அணிவகுக்க,
தனியனாய் மாருதி இருப்பதைக் கண்டு,
விண்ணவர் வருந்தியே நடுங்கினராம்.                           172

‘புல்தலை குரங்கா போரினில் வென்றது?
வல்லிய அரக்கரை முறுக்கித் தின்றது?’
ஐவரும் ஐயமாய் அவ்விடம் அடைந்ததும்,
பேருரு தாங்கியே எதிர் கொண்டா னனுமன்.                    173

சீற்றமிகு வீரர்களின் ஆற்றல்மிகு படைகளும்,
தாக்கவந்த குதிரைகளும், தடுத்து நின்ற தேர்களும்,
மேகமலை போன்றிருந்த யானைகளின் கூட்டங்களும்,
மாளும்படி தள்ளிவிட்டு, வீரத்துடன் போர்புரிந்தான்               174

உதைத்து மிதித்தான்; தேய்த்து அரைத்தான்.
குதித்துக் கடித்தான்; பிசைந்து கொன்றான்.
களிறும், பரியும், குருதியாற்றிலே மிதந்திட,
போர்முனை வந்தனர் பஞ்ச சேனாபதிகளும்.                     175

‘எழு’வினைத் தாங்கி அநுமன் தாக்கிட,
வில்லினால் வாங்கித் தடுத்தான் ஒருவன் – அவன்
மலையினைப் பெயர்க்க முயலும் முன்னே
‘எழு’வினால் அடித்தவன் உயிர் உண்டான்.                       176

ஏனைய நால்வரும் சினத்தீ கக்கினர்.
நாணினைப் பூட்டியே வில்லினைச் சொரிந்தனர்.
பட்ட அம்பினால் அநுமனின் தோள்வழி,
ரத்தப் பெருக்குகள் விழுந்து தெரித்தன.                          177

வஞ்சனை மிக்க அரக்கர் களின்
வலிமையை உணர்ந்தான் அந்த மிலான்.
மலையினை யொத்த நால்வரில் ஒருவனை
குழம்பாய் மாற்றிட மிதித்தே கொன்றான்.                        178

ஐவரில் இருவர் மாண்டதன் பின்னர்,
மூவரின் தேர்களில் இரண்டினைத் தூக்கி,
ஆகா யத்திலே மற்போர் புரிந்தான்.
இராகுவும், கேதுவும் இறந்து வீழ்ந்தன.                          179

எஞ்சிய ஒருவனை,
குன்றிடைத் தாவும், சிங்கம் போலவன், 
வன்தலை மீதே குதித்துக் கொன்றான்.
‘சேனையும் அழிந்தது; தலைவரும் சமைந்தாரெ’ன
இராவணன் வசம்போய் கூறினர் பிழைத்தோர்.                   180

          அக்ககுமாரன் (அக்ஷயகுமாரன்) வதைப் படலம்.

கோபக் கொடுந்தீ கிளர்ந்து எழுந்திட,
போருக்குக் கிளம்பிய இராவணனை – அவன்
மைந்தனாம் அக்கக் குமாரன் தடுத்தான்.
‘எந்தாய்! ஈகடன் அடியேனுக்கு ஈதி’யென.                        181

மண்டோதரியின் செல்லப் பிள்ளையும்,
இந்திர சித்தின் இளவலுமான இக்குமரன்,
அரக்கர்கள் வாழ்த்தொலிகளுக்கிடையே
முரசுகள் முழங்கிட, ஏறினான் தேரினில்.                        182 

இவனை…
இந்திரசித்தோ –இராவணனோ வென
சிந்தையில் எண்ணிய அநுமன் தன்
சுந்தரத் தோள்களைத் தட்டிக் கொடுத்து,
‘வந்தனன்! முடிந்ததென் மனக்குறை’ மகிழ்ந்தான்.                183

வந்த அரக்கனை உற்று நோக்கினான்.
‘குன்றென விளங்கும் குமரன் யாரொ? ஐயுறுகையில்,
‘இ குரங்குதானா அரக்கர் குழாத்தை கொன்றதென
பற்கள் தெரிய நகைத்தான் அரக்கன்.                             184

ஆர்த்தெழுந்த அரக்கரின் சேனைகள்
போர்த்தது பொருபடை அநுமன் தோளில்,
முறிந்தன சிதைந்தன படைக் கலமெல்லாம்.
உட்புக முயன்றவை ஒடிந்து விழுந்தன.                           185

ஆற்றலைப் பெருக்கி, பொங்கி யெழுந்தவன்.
காற்றினைப் போலே கொடும்போர் புரிந்திட
வன்தோள் அரக்கரின் என்புகள் முறிந்தது.
பொன்னகர் குலைந்து பிணக்கா டானது.                         186

இறந்தார் பலர்; உடல் சிதைந்தார் பலர்.
குருதி வெள்ளம் குற்றாராய் ஓட,
தனியனாய் விடப்பட்ட அக்க குமாரன்,
நனிதிறன் அம்புகள் சரமாகத் தொடுத்தான்.                       187

அவற்றை
நேர்த்தியாய்த் தடுத்து பின் தேரினுள் தாவினான்.
கோலெடுத்து, சாரதியின் உயிர் கொண்டான்.- பின்
நேரெதிராய் நின்றபடி நெடும்போர் புரிந்தவன்- குமரனின்
பிடரியைப் பிடித்து, தரையில் தேய்த்து மாய்த்தான்.              188

செய்தியறிந்த மண்டோ தரியோ
பொங்கியெழுந்த கண்ணீ ருடனே,
வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கதற,
வையமே நடுங்கிட வெகுண்டான் இந்திரசித்.                     189

                           பாசப்படலம்

‘மரக்கொம்பினில் தாவிடும் குரங்கொன்றால் - வீர
அரக்கரின் வம்சமே அழிந்திடு மென்றால்,
குலைந்தது இராவணன் புகழன்றோ?’வென
புலம்பித் தீர்த்தான் இந்திரசித்.                                  190

அரண்மனையுள் ஆவேசமாய் புகுந்தவன்– சிறு
குரங்கொடு புரிந்த போரினில் என்னிளவலொடு
இறந்த அரக்கரே அதிகமென இடித்துரைத்தான்.
துடித்த இராவணனும் கலங்கிச் சோர்ந்தான்.                     191

to be continued................