லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 5
நஞ்சைப் போன்ற இராவணன் எனக்கு
வஞ்சம் இழைத்திட பஞ்சவடி வந்த
அன்றும் துடித்தது வலப்புருவம்.
இன்று துடிக்குது இடப்புருவம்’ 83
வலப்புறம் இன்று துடிக்கவில்லை;
இடப்புறம் நன்றாய் துடிக்கிறதே!
நலம் விரைந்து வருகிறதோ?
நற்செயல் ஏதும் அடைந்திடுமோ?’ 84
திரிசடை தான் கண்ட நிமித்தமும், கனவும் அவற்றின் பயனும் கூறல்
‘மின்னல் போலே ஒளிர்ந்திடும் பெண்ணே! - பொன்
வண்டொன்று உன்செவியில் ஊதியதின்று – அதனால்
இராமதூதன் உனைவந்து பார்ப்பது திண்ணம்! – அவன்
தீயவர்க்கு தீங்கிழைப்பான் என்பது என் எண்ணம் 85
வேல்விழியாளே!
தூக்கமே உனக்கில்லை யதனால்
சொப்பனமே நீ காண்பதில்லை!
விடிகாலை நான் கண்டேன் ஒர்கனவு!
இடிந்தழிந்தது இப்பெருநகரம் பிளந்து. 86
மேலும் நீ கேளாய்!
இணையான இரு ஆண் சிங்கங்கள்,
குழுவாகப் பல புலிகளைக் கூட்டி,
பிளிறும் மத யானைகள் அழித்திட,
வளைத்தன வனத்தினை நெருக்கியே! 87
யானைகள் பிணமாய் விழுந்து அழிந்திட,
புலிகள் கூட்டமாய் மகிழ்ந்து தொடர்ந்திட,
நாயக சிங்கம் மயிலினை அணைத்திட,
வாழ்ந்திடும் புரம்புக புறப்பட்டனர்’. 88
இராம இலக்குவர் இணை சிங்கங்களாம்,
வானரக் கூட்டமே புலிக் குழுவாம்,
மதயானை இராவணனாம்; மயிலே சீதையாம்,
புரமென்பது அயோத்யாபுரமாம் திரிசடை கனவில் 89
தொடர்ந்தாள் திரிசடை;
சிவந்த ஒளியுடை விளக்கினை ஏந்திய,
சிவப்பு வண்ணப் பெண்ணொருவள்
விபீடணன் மாளிகை நுழையும் பொழுது,
உறக்கத்தினின் றெனை எழுப்பிவிட்டாய்’ என்ன 90
‘தாயே!
அரைகுறையாய் உள்ள நும் கனவை
முறைப்படி முடித்திட உறக்கம் கொள்’ளென
இருகரம் குவித்துக் கும்பிட்டாள். அவ்வமையம்
அவ்விட மடைந்தான்அந்தமிலான். 91
துயிலுணர்ந்த அரக்கியர் நிலை
ஒற்றைத் தலையும், பத்துக் கைகளும்,
நெற்றியில் பதித்த விழிக ளிரண்டும்,’
வெறித்த பார்வையும், கருத்த மேனியும்,
தரித்த அரக்கியர், துயிலினின் றெழுந்தனர்.. 92
பிராட்டி வருந்தலும் அநுமன் அணுகலும்
தீயனைய அரக்கியர் தேவியை சூழ்ந்திட,
நயந்து வந்த, நாயக தூதனும்,
உயர்ந்து வளர்ந்த மரத்தின் கிளைதனில்
விரைந்து ஏறியே விவரத்தை நோக்கினான். 93
அநுமன் பிராட்டியக் காண்டல்
பரவிடும் மேகத்தைக் கிழித்தபடி – ஒளி
பரப்பிடும் மின்னலாம் பிராட்டியினை
நிறத்தினில் நீருண்ட மேகம் போன்ற
அரக்கியர் கூட்டத்தின் நடுவினில் பார்த்தான். 94
கடலினும் அகன்ற கண் பொழியும்
கண்ணீர் தடாகத்தின் நடுவினிலே,
அன்னம் போன்றவள் வீற்றிருந்தாள்.
அவளே ‘சீதை’ என்றுணர்ந்தான். 95
ஆடினான்: பாடினான்; பாய்ந்து மீண்டும்
ஓடினான், உணர்ந்தான் அவ்வுண்மையை
‘அறம் இன்னும் அழியவில்லை;
அடியேன் மரிக்கத் தேவையிலை’யென. 96
பிராட்டியின் தூய்மை கண்டு அநுமன் வியந்து போதல்
தருமம்தான் காத்ததோ - சனகனின்
கருமம்தான் காத்ததோ இவள் கற்பை!
அருமைதான்! இந் நன்நெறியிவளை
ஒருமையாய்க் காத்ததே!’ என மகிழ்ந்தான் 97
அசோகவனத்துள் இராவணன் தோன்றுதல்
நீண்ட பலமலைகள் திரண்டாற் போன்றும்,
திண்திரள் தோள்கள் இருபதாய் இருக்கவும்,
ஒளிர்ந்த மகுடங்கள் பத்துடன் அரக்கன்,
அவ்விடம் வருவதை, பொந்திடை பார்த்தான். 98
அவனுடன்,
உடைவாள் ஏந்தியே ஊர்வசி வந்திட
தொடர்ந்தனள் மேனகை வெற்றிலை மடித்தே
தாங்கினாள் திலோத்தமை இராவணன் செருப்பினை;
இமையா நோக்கினர் விண்ணவர் யாவரும். 99
அநுமன் இராவணனை நோக்குதல்
‘வினையும், செயலும், அதன் விளைபொருளும்,
விளங்கிடும் இனிமேல் தமக்கென யெண்ணி,
வீரக்கழல் புனை இராமனை ஜெபித்து
ஓரிடம் மறைந்து பார்வை யிட்டான். 100
இரவணனைக் கண்டு பிராட்டி அஞ்சுதல்
ஆசைகொண்ட அற்பனின் வருகையால்
புசிக்கவந்த புலியினைப் பார்த்துக்
கூசிடும் மானென சீதையை, அநுமனும்
மாசற கண்டு ‘வாழீ சானகி’ ‘வாழீ அறமெ’ன்றான் 101
to be continued................
to be continued................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக