ஞாயிறு, 14 ஜூலை, 2019

சௌமித்ரி - குரு வளைகாப்பு பாடல் - பாடியவர் : லக்ஷ்மி ரவி, சௌரபி 10.07.2019


நாள் தள்ளி போனதுன்னு நாணத்துடன் நீ சொல்ல,
நாடி பார்த்த மருத்துவச்சி நல்ல சேதி சொன்னார்.
மூன்று மாதம் முடியும் வரை மசக்கையினாலே – நீ
முன்னும் பின்னும் ஓடி ஓடி வாந்தி எடுத்தாயே!
நான்கு, ஐந்து, ஆறு, ஏழு மாதம் முடிந்ததும் -  நீ
மசக்கை தெளிந்து, வயிறும் தெரிந்து, நடையும் தளர்ந்தாயே!
மேலும், கீழும் மூச்சு வாங்கி, மெல்ல நடந்தாயே!- உனை
முட்டி உதைக்கும் பிள்ளைதனை சுமந்து நடந்தாயே!

ஆரிராரோ.. ஆரிராரோ… ஆரிராராரோ… நாம்
ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரிராராரோ!

சொந்தமெல்லாம் ஒன்று கூடி நல்ல நாள் பார்த்து,
நலங்கு வைத்து, வளையல் பூட்டி, பூச்சூடல் செய்தோம்.
பச்சை வளை, பவள வளை, முத்து வளையல்
மஞ்சளுடன், நீல வளை, பட்டு வளையல்..
கருப்பு வளை, சிவப்பு வளை கங்கணங்களும்,
தங்க வளை, கல் பதித்த வைர வளையல்களும்….

ஆரிராரோ… ஆரிராரோ.. ஆரிராராரோ…. நாம்
ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரிராராரோ..


மல்லி, முல்லை, இருவாச்சி, சாதி சம்பங்கி,
மரிக்கொழுந்தும், ரோஜாக்களும், செண்பகப்பூவும்,
சரம் சரமாய் கோர்த்து தலையில் சூட்டிவிடுகின்றோம்.
வேப்பிலையைக் காப்பு செய்து பூட்டிவிடுகின்றோம்.
கையைத் தட்டி, கும்மி கொட்டி, பாட்டுக்கள் பாடி,
மஞ்சள் இட்டு, திருஷ்டி சுற்றி, ஹாரத்தி எடுப்போம்.
என்ன வேணும் ஏது வேணும்? எங்கள் கண்மணி…
இக்கணமே செய்து தருவோம் செல்ல பைங்கிளி..

ஆரிராரோ… ஆரிராரோ.. ஆரிராராரோ…. நாம்
ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரிராராரோ..

அப்பமுடன் கொழுக்கட்டை, தேங்குழல் தருவோம்..- உன்
அடி நாக்கு ருசிக்க ஒரு அதிரசம் தருவோம்..- சிறு
தான்யத்துடன் செய்த இட்லி, பொங்கலும் தந்து… - உன்
ஆயாசங்கள் தீர்ந்திடவே  பாயசம் தருவோம்… நீ
கேட்டதெல்லாம் வாங்கித் தர தகப்பனார் உள்ளார். – நீ
சொன்னதெல்லாம் செய்துதர தாயாரும் உள்ளார்.
ஓடி ஓடி வேலை செய்ய உடன் பிறந்தோரும்,
பாசத்துடன், பாட்டி மற்றும், அம்மம்மா, தாத்தாவும்,
அத்தை, சித்தி, மாமன் மாமி, அனைத்து சொந்தமும்
அன்புடனே உன்னைச் சுற்றி அணைத்திட உள்ளோம்.

ஆரிராரோ.. ஆரிராரோ… ஆரிராராரோ! நாம்
ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரிராராரோ…!

இத்தனையும் ஆனபின்னே பத்தாம் மாதத்தில் – நீ
முத்து போலே பிள்ளைதனை பெற்று தந்திடணும்!
ஊரைக் கூட்டி, பேரைச் சூட்டி, தொட்டில் போடணும்! – உன்
மாமனாரும், மாமியாரும் பார்த்து மகிழணும்!
இடைவிடாது உனது கணவன் உங்களிருவரையும்
கண்ணுக்குள்ளே மணியைப் போலே காத்திடல் வேண்டும்!

ஆரிராரோ.. ஆரிராரோ… ஆரிராராரோ! நாம்
ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரிராராரோ…!
ஆரிராராரோ…! ஆரிராராரோ…!

சனி, 1 ஜூன், 2019

தோசையம்மா தோசை!


செல் ஃபோனின் அலார்மை ஆஃப் செய்துவிட்டு அரக்க பரக்க எழுந்தேன். நான் விமலாவோ, கமலாவோ, தர்ஷினியோ, வர்ஷினியோ….. யாராய் இருந்தால் என்ன? உங்களைப் போன்ற ஒரு இல்லத்தரசி. போதுமா!
பல் தேய்க்கும் போதே.. இன்னிக்கு என்ன டிஃபன் பண்ணலாம் என்ற எண்ண ஓட்டம் மெல்ல தோன்றி, பூதாகாரமாய் மனதை ஆக்ரமித்துக்கொண்டது. என்னதான் டிஃபன் இருக்கு ஒலகத்துல…! இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, உப்புமா, அடை, பொங்கல்….. இதுல ஒண்ணுதானே எல்லார் வீடுகள்லயும் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு இருக்கும்!
எங்க வீட்டுல 3 வித ஜெனெரேஷன்ஸ்! என் மாமியார், மாமனார், என்ற ஓல்டர் ஜெனெரேஷன், நான், என் கணவர் என்ற மிடில் ஜெனெரேஷன், யெங்கர் ஜெனெரேஷனில் பிரைமரி ஸ்கூலில் இருக்கும் சின்ன பெண், 11 ம் க்ளாஸ் படிக்கும் பெரிய பையன் என்ற இரண்டு கிளை ஜெனெரேஷன்ஸும் உண்டு. எல்லாருக்கும் பிடிக்கற மாதிரி ஏதாவது பண்ணியாகணுமே!
என்ன டிஃபன் பண்ணலாம்…..?
மொதல்ல இட்லி! நேத்திக்குத்தான் அரைச்சுருக்கேன். ஓல்டெர் ஜெனெரேஷனுக்கு ‘தொட்டுக்க’ எதுவும் இல்லைன்னாலும், இட்லிக்கு மிளகாய் பொடி இருந்தாலே தேவாமிர்தம்தான். சட்னி, சாம்பார் இல்லைன்னா இந்த மிடில் ஜெனெரேஷன் கொஞ்சம் சண்டித்தனம் பண்ணும். ஆனா ஸ்ருதியும், ஸ்ரேயஸும் இட்லியைத் தொடவே மாட்டார்கள். என்னை விடுங்கள்! நான் சமயத்துக்கு ஏத்த ஜெனெரேஷன்ல சேர்ந்துப்பேன்.
பூரி சப்பாத்தின்னா…. ‘ம்ம்ம்ம்ம்ம்’ பெரிசா தலைய ஆட்டுவார்கள் யெங்க்ஸ்டர்ஸ். அதுலயும் ஸைட் டிஷ் தான் இடிக்கும். சவுத் இண்டியன் குருமா ஸ்ருதிக்கு பிடிச்சா, சன்னா, ராஜ்மாதான் ஸ்ரேயஸுக்குப் பிடிக்கும். ஆனா மாமனார், மாமியாருக்கோ, பூரியும் சப்பாத்தியும் கடிச்சு, மென்னு சாப்பிட முடியறதே இல்ல. என் கணவர் சவுத் இண்டியன் ஃபுட் பிரியர். ‘காலை வேளல யாராலயாவது சப்பாத்தி சாப்பிட முடியுமா என்ன?’ என்று எல்லாரையும் சேர்த்துக்கொண்டு கூட்டணி அமைப்பார். பூரி அவருக்குப் பிடிக்கும்தான். ஆனாலும் நாற்பதைக் கடந்துவிட்டவர்களுக்கு வரும் ஹெல்த் கான்ஷியஸ்னால ‘ஆயில் ஃபுட் வேண்டாமே’ என்பார்.
ஆச்சா… பூரியும், சப்பாத்தியும் மட்டும் பண்ணி காலக்ஷேபம் பண்ண முடியாது.
ரவா உப்புமா… !
நானும் எண்ணையை ஊத்தி, இஞ்சி, பச்சமிளகாய், வெங்காயம், காரட், கறிவேப்பிலை எல்லாம் போட்டு ‘கமகம’ ன்னு ‘பொலபொல’ ன்னு உப்புமா கிளறுவேன். ‘அய்யய்ய….. இன்னிக்கும் உப்புமாவா!’ இது ஒருமித்த எக்ஸ்பிரஷன். இதுல……. நான் மாமியார், மாமனாருக்காக வெங்காயம் போடாம……ஸ்ரேயஸுக்காக இஞ்சி போடாம, வெங்காயம் போட்டு…….. ரவா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, சேமியா உப்புமா, சோள ரவை உப்புமா, அவுல் உப்புமா, அரிசி உப்புமா ன்னு மாத்தி மாத்தி யோசிச்சு யோசிச்சு, பயத்தம் பருப்பையும், மஞ்சள் தூளையும் சேர்த்து போட்டு ரவா கிச்சடி ஆக்கின்னு ஏதேதோ தகிடுதத்தம் பண்ணினாலும் ஏகோபித்த கருத்து மாறவே மாறாது. எத்தனை பேர் இருந்தாலும் 10 நிமிஷத்துலும் கிளறி பரிமாரிடலாம்ங்கிற அந்த உப்புமாவை ஏன்தான் இப்பிடி நிஷித்தமா நினைக்கிறார்களோ தெரியவில்லை.
சரி… அடை பண்ணலாம்னா…. காலை வேளைல ஹெவியாகி விடுவதாக கணவர் கூற, அவியல்தான் காம்பினேஷன் என்று கூறும் மாமியாரும், மாமனாரும், அவியல் இல்லையென்றால் நிராகரித்து விட, இந்த பசங்களும் ‘அடையா…. எனக்கு கார்ன் ஃப்ளேக்ஸ்…. எனக்கு மேகி’ என்று குரல் கொடுத்தால்…. எனக்கு என்ன ஆச்சு….? அடை மாவைத் தூக்கி ஃப்ரிஜ்ஜில வைக்கவேண்டியது தான்.
அப்பாடா… குக்கரில் வைத்து, குழைய வேகவிட்டு மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி போட்டு நிமிஷமா பொங்கல் பண்ணிடலாம். மாமனார், மாமியாருக்கு மென்று கஷ்டப்பட வேண்டியதில்லை என்றால், ‘வடை இல்லையா?’ என்பார் என் அருமை கணவர். மிளகு போடாதே என்பாள் ஸ்ருதி. ‘இஞ்சி ஏன் போட்ட?’ என்பான் ஸ்ரேயஸ்.
என்னதான் பண்ணலாம்? இடியாப்பம், குழி ஆப்பம் எல்லாம் பண்ணினாலும், அதை முழு டிஃபனாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள். ஒரு கல்லை போட்டு தோசை வார்க்க வேண்டும்.
அட…. தோசையை மறந்தே போனேனே! ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன் தோசை தான். ஒரு தோசை கல், தோசை திருப்பி, மாவு மட்டும் இருந்துட்டா, என்னென்னெல்லாம் பண்ணி அசத்திடலாம்! கல்லு நடுவில் குண்டா ஊத்தினா ஊத்தப்பம், அது மேல ஆனியன் போட்டா ஆனியன் ஊத்தப்பம், காரட் தூவினா, காரட் ஊத்தப்பம், மிக்சட் வெஜிடெபிள்ஸ் தூவினா வெஜிடெபிள் ஊத்தப்பம், பட்டர் ஊத்தினா….. பட்டர் தோசை, நெய் ஊத்தி மெல்லிசா வார்த்தா…. கீ ரோஸ்ட், பொடி தூவினா…. பொடி கீ தோசை, மசால் வைச்சு மூடினா மசால் தோசை, பனீர் தூவினா பனீர் தோசை…… அப்பா………டி! எவ்ளோ வெரைட்டீஸ் பண்ணிடலாம்.
அதோட இன்னொரு சீக்ரெட் சொல்றேன் காதோட…. இந்த தோசை எவ்ளோ ஃப்ரெண்ட்லி தெரியுமா…? தோசையை கல்லுல ஊத்திட்டு ஆனியன்ஸ் கட் பண்ணிக்கலாம். காரட் துருவிக்கலாம். இன்னொரு தோசை ஊத்திட்டு, எல்லா காய்கறி குப்பையையும் க்ளியர் பண்ணிடலாம். ஃப்ரிஜ்ஜில் வைக்கவேண்டியதெல்லாம் வச்சு, வேலையை முடிச்சுக்கலாம். ஒண்ணொண்ணா வார்த்து, சூடா போடலாம். போதும்னா வாக்கறத நிறுத்திடலாம். இட்லியோ, உப்புமாவோ, பொங்கலோ…. தோராயமா கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் பண்ணமுடியும். தோசை ரொம்ப வேஸ்ட் ஆகாம பண்ணிடலாம். என்ன… தோசை கல்ல கொஞ்சம் பழக்கிக்கணும். இல்லன்னா கல்ல விட்டு எடுக்கவே முடியாம சண்டி பண்ணி… உப்புமாவா சுரண்டி எடுக்க வச்சுடும். இப்போதான் நான் ஸ்டிக் தோசைக்கல்லெல்லாம் வந்திருக்கே! இப்படிப்பட்ட வசதிகள் இந்த தோசைல இருக்குங்கறத ரகசியமா வச்சுக்கணும். நமக்கு ஈஸியா இருக்குன்னு தெரிஞ்சா அந்த டிஃபனுக்கும் ஆப்பு வந்துடும். எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி ஒரே கல்ல வச்சுண்டு 4 மாங்கா அடிச்சுடலாம். இன்னி பாடு ஆச்சு!
தோசையம்மா தோசை!
அம்மா சுட்ட தோசை!
அரிசி மாவும், உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை!
அப்பாவுக்கு நாலு! அம்மாவுக்கு மூணு!
அண்ணனுக்கு ரெண்டு! பாப்பாவுக்கு ஒண்ணு!
ஆக மொத்தம் பத்து….
தின்ன தின்ன ஆசை!
இன்னும் கேட்டால் பூசை!
Image result for IMAGE OF DOSA ON TAWA STREET VENDOR

சனி, 18 மே, 2019

ஹயக்ரீவா


ஹயக்ரீவா.
நாங்கள் சமீபத்தில் கர்னாடகாவில் பெங்களூர், மைசூருக்கு சுற்றுலா சென்றிருந்தோம். பெங்களூருவில் காய்கறிகாரர்கள், ஹோட்டல்காரர்கள் என அனைவருமே தமிழிலும் பேசியதால் எளிதாக உணர்ந்த நாங்கள், மைசூரில் நிறையபேர் கன்னடத்தில் மட்டும் பேசியதையும் பார்த்தோம். நமக்கு, கன்னடம் துளியும் தெரியாத அதே வேளையில், நமக்குத் தெரிந்த ஹிந்தியும், ஆங்கிலமும் அங்கு செல்லுபடியாகவில்லை.
கர்னாடக பாரம்பரிய உணவுகளை சாப்பிடவிரும்பி, மைசூரில் ஒரு சிறிய மெஸ் போன்ற ஒரு உணவு விடுதிக்குள் இரவு உணவு சாப்பிடச் சென்றோம். அங்கு ஆங்கிலத்தில் உணவுப் பெயர்களை எழுதியிருந்தனர்.

HAYAGRIVA, KHARA PONGAL, PADDU, TATTE IDLI, NEER DOSA, MASALA DOSA

ஹயக்ரீவா என்று ஒரு ஸ்வாமி பெயர் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது என்ன பதார்த்தம் என்று தெரியவில்லை. கார பொங்கல் என்பது உப்புமாவா, பொங்கலா என்று புரியவில்லை. ‘பட்டு’ என்பது என்னவென்றே விளங்கவில்லை. டாட்டி இட்லி. ஏதோ ஒரு வகை இட்லி என்று மட்டும்  புரிந்தது. நீர் தோசை, மசால் தோசை கேள்விப்பட்ட வகைகளாக இருந்தன. நான் எப்போதும் வித்தியாசமாக சாப்பிட விரும்புவேன். என் கணவரோ, எனக்கு ‘KNOWN DEVIL. மசால் தோசை’ என்றார். அது மெஸ் போல இருந்ததால் கவுண்டரில் டோக்கன் பெற்று, உள்ளே டோக்கனைக் கொடுத்து நமது ஆர்டரை வாங்கிக் கொண்டு, அங்கங்கே இருக்கும் உயரமான டேபிளில் வைத்துக்கொண்டு நின்று கொண்டே சாப்பிட வேண்டும்.
எனக்கோ கர்னாடக பாரம்பரிய உணவைத் தான் சாப்பிட ஆசை. கூட்டம் அதிகமாக இருந்தது. இருந்தாலும் நான் மெள்ள உள்ளே போய், ‘ஹயக்ரீவா’ ன்னா என்னமா’ என்றேன். அங்கே இரண்டு பெண்கள் சர்வ் செய்து கொண்டிருந்தனர். அந்தப் பெண் எதோ விளக்கினாள். அது எனக்குப் புரியவில்லை. ‘ஏம்மா, அது மெயின் டிஷ்ஷா, ஸயிட் டிஷ்ஷா, என்று நான் கேட்டது அப்பெண்ணிற்குப் புரியவில்லை. அவள் அந்த ‘ஹயக்ரீவா’ வை கரண்டியில் எடுத்து எனக்குக் காண்பித்தாள். அது கொஞ்சம் செமி சாலிட்டாக இருந்தது. அத்தனைக் கூட்டத்திலும் அவள் எனக்குப் பொறுமையாக புரியவைக்க முயன்றது எனக்குப் பிடித்திருந்தது. ஏதாவது களி அல்லது கூழாக இருக்கலாம் என்று நினைத்தேன். ‘பட்டு’ எதும்மா?’ என்றேன். அவள் காட்டியது குழிப்பணியாரம். ‘சரி, டாட்டி இட்லி? என்றேன். அவள் அதையும் பொறுமையாகக் காட்டினாள். அது ‘தட்டு இட்லி’. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நான் ‘ஹயக்ரீவா’வையே முயற்சிக்கலாம் என்று முடிவெடுத்தேன். மீண்டும் க்யூக்கு வந்து, ஒரு ஹயக்ரீவா, ஒரு மசால் தோசை, ஒரு நீர் தோசை’ க்கு டோக்கன் வாங்கிக்கொண்டு ஃபுட் கவுண்டருக்கு வந்த என்னைப் பார்த்து அந்தப் பெண் ஸ்னேகமாக சிரித்தது கூட எனக்குப் பிடித்திருந்தது.
நான் என் கணவருடன் டேபிளுக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தேன். முதலில் ஆர்வமாக ஹயக்ரீவாவைத்தான் சுவைத்தேன். அது சக்கரைப்பொங்கல், அக்காரஅடிசல் போன்றதொரு ஒரு இனிப்புப் பதார்த்தம். என் கணவரோ ‘இதுதான் உனக்கு டின்னரா…? மறுபடியும் க்யூல போய் ஏதாவது தோசை வாங்கிக்கொள்’ என்றார். எனக்கு அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது. ‘இல்லை… எனக்கு இன்று இதுதான் டின்னர்’ என்று கூறிவிட்டு, மீண்டும் ஃபுட் கவுண்டருக்குச் சென்று, அந்தப் பெண்ணிடம், ‘நல்லா இருந்தது’ என்றேன். அவள் ஸ்னேகமாய் சிரித்தாள்.

பின்னர் ஊருக்கு வந்ததும், கூகுக்ளில் நான் தேடிப்பார்த்தது, ‘ஹயக்ரீவா’ வைத்தான். விஷ்ணுவின் அவதாரமான ‘ஹயக்ரீவா’ என்ற கடவுள் குதிரை முகமும், மனித உடலும் கொண்டவர். அவர், அறிவு மற்றும் புத்திகூர்மையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். குதிரை முகம் கொண்ட இவரை ‘வேகமும், விவேகமும்’ வேண்டி மக்கள் வழிபடுகின்றனர்.
’ஹயக்ரீவா’ என்று இந்த இனிப்பிற்குப் பெயர் வரவும் ஒரு கதை கூறப்படுகிறது. உடுப்பி ஸ்ரீ வடி வடிராஜா மடத்தில் ஸ்ரீ வடிராஜதீர்தா’ என்ற பக்தர் தினமும் கடலைப்பருப்பைக் கொண்டு தயாரித்த ஒரு இனிப்பைத் தன் தலைமேல் வைத்துக்கொண்டு, பகவான் ஹயக்ரீவரின் ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டு, நைவேத்யம் செய்து வந்தாராம். ஹயக்ரீவர், வெள்ளைக் குதிரையின் உருகொண்டு வந்து அந்தப் பிரசாதத்தை உண்பாராம். அதனால் இன்றும் அந்த மடத்தில் கடலைப்பருப்பையும், வெல்லத்தையும் கொண்டு தயாரிக்கப்படும் ‘ஹயக்ரீவா’ பிரசாதமாகத் தயாரிக்கப்படுகிறது.
ஹயக்ரீவா தயாரிக்க தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு       -  1 cup
பொடித்த வெல்லம்   -  ¾ - 1 cup
துருவிய தேங்காய்   -  ½ மூடி
ஏலப்பொடி           -  சிறிதளவு
நெய்                -  ¼ cup
முந்திரி, பாதாம்,     -  15 – 20
உலர் திராட்சை      -  தேவையான அளவு
செய்முறை :
கடலைப் பருப்பை நன்கு களைந்து, pressure pan ல் 5 whistle வரும் வரை வேகவிடவேண்டும்.
வெந்த பருப்பை, கரண்டி அல்லது மத்தால் நன்கு மசிக்க வேண்டும்.(ஹயக்ரீவாவை மசித்தும் செய்யலாம். மசிக்காமல், வெந்த முழு பருப்பைக் கொண்டும் செய்யலாம்.)
மசித்த பருப்பில், பொடித்த வெல்லத்தை சேர்த்து, அடிபிடிக்காமல் கிளற,கிளற வெல்லம் கரைந்து ஒன்று சேர்ந்து, கெட்டிப்படும்.
வெல்லம் நன்கு கரைந்ததும், பாதி அளவு நெய்யை சேர்க்கவேண்டும்.
மற்றொரு அடுப்பில் இலுப்பக்கரண்டியை ஏற்றி, நெய்யில், முந்திரி, பாதாம், திராட்சையை வறுத்து பருப்பு, வெல்லக் கரைசலில் சேர்க்கவேண்டும்.
ஏலப்பொடி, துருவிய தேங்காய், மீதமுள்ள நெய்யை சேர்த்து இறக்கினால் சுவையான ‘ஹயக்ரீவா’ தயார்.

கடலைப்பருப்பை மசிக்காமல் இருந்தால், முழு முழு வெந்த கடலைபருப்பு, கடிபட்டு, சுவையில் வேறுபடும்.