செவ்வாய், 12 டிசம்பர், 2017

'ஊர் சுற்றிப் புராணம்'

'ஊர் சுற்றிப் புராணம்' படிப்பதற்கு அதி முக்கியமானது பயணம். பயணமாவது, ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்வது தான். நில வழி, நீர் வழி, ஆகாய வழி என்ற மூவழிகளிலும் பயணம் மேற்கொள்வதற்கு பல்வேறு சாதனங்களும், வாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், நில வழியாக,  இருப்புப்பாதை அமைக்கப்பட்டு அதன் மீது செல்லும் தொடர் வண்டிப் பயணம் தான் அனைவரின் மனதிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

கடலலை, யானை போல தொடர்வண்டியும் எக்காலத்திலும், எந்த வயதினரானலும், பார்த்தவுடன் அவர்கள் மனதில் ஒருவித களிப்பை உண்டாக்கும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத் தொடர்வண்டி, காலமும், அறிவியலும் வளரவளர வெகுவாக முன்னேறியுள்ளது.  இரண்டிரண்டு சக்கரங்களை இருப்புப்பாதை வடத்தின் மீது பதித்து, மரவட்டை போல ஊர்ந்து செல்வது ஒரு அசகாய கண்டுபிடிப்பு தான். புகையை கக்கியபடி, பெருங்குரலெடுத்து, ஒலியெழுப்பி, தன் வருகையை ஊர்ஜிதப்படுத்தியபடி, ஒரே தாள லயத்துடன் செல்லும் புகைவண்டி இன்று, புகை ஏதும் இல்லாததால் 'தொடர்வண்டி' என்று நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. . மின் வசதியைப் பயன் படுத்தி 'மின்சார தொடர் வண்டி' ஆகியுள்ளது. இருக்கை வசதி, படுக்கை வசதி,  குளிர் சாதன வசதி, கழிவறை, முன்பதிவு, தட்கல் வசதி போன்ற பலபல வசதிகளுடன் இயங்கி வரும் இந்த துறை போற்றுதற்குரியதே!

மூத்த குடிமகன்களுக்கும்  உடல் ஊனமுற்றோருக்கும்
வழங்கப் படும் சலுகைகள்,  ரயில் நிலைய அமைப்புகள், பயணிகளுக்கான தங்கும் அறை. உணவு சாலைகள், சரக்கு ரயில் வண்டிகள், விரைவு ரயில் வண்டிகள், CHAIR CARS, உணவு கிடைக்கும், 'PANTRY CARS', METRO TRAINS இவை எல்லாம் ரயில்  துறையினர் பயணிகளின் வசதிகளுக்காக உருவாக்கியவை.

இத் தொடர் வண்டி பயணம் ரம்மியமாகவும், ரசிக்கும்படியும், அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கும். சிறு வயது முதல்  மூத்த குடிமக்கள் வரை  ஜன்னலோர இருக்கைக்கு ஒருவித போட்டி நிலவுவது நிஜம். ஜன்னல் வழியே பின்னோக்கி நகரும் மரங்களும், கைக்காட்டி கம்பங்களும், வீடுகளும் கண்கொள்ளா காட்சியாய் அனைவரையும் வசீகரிக்கும்.  அருகில் அமர்ந்திருக்கும் சக பயணிகளுடன் ஏற்படும் தோழமை வித்தியாசமான அனுபவமாக இருக்கும். முன் பின் தெரியாத அந்த நபர் நம்முடன் பிரயாணிக்கும் அந்த சில மணித்துளிகள் நம்மில் ஒருவராக மாறி இருப்பார். அதிலும் அவர்  பெயர் நம் பெயராக இருந்தாலோ,  அவர் நம் ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலோ, நமக்குத் தெரிந்த எவரையாவது அவரும் அறிந்திருந்தாலோ, அவர் பால் நாம் கொண்டுள்ள அன்பின் அளவு பன்மடங்கு அதிகரித்துவிடும். ஆனால் இந்த உறவு, அதன்பின் தொடர்ந்ததாகவோ, வளர்ந்ததாகவோ பெரும்பாலும் இருப்பதில்லை.  ஆனாலும் ரயில் ஸ்நேகத்திற்கு ஒரு அழகு இருக்கத்தான் செய்கிறது.

24 மணி நேரங்களைக் கொண்ட ஒவ்வொரு நாளும் முற்பகல் 12 மணியாகவும், பிற்பகல் 12 மணியாகவும் பிரிக்கப்பட்டு AM என்றும் PM  என்றும்  வழங்கப்படுவது நாம் அறிந்ததே! ஆனால் இந்த ரயில்பெட்டித் துறையினர் ஒரு நாளை 24 மணி நேரமாகவே கணக்கிடுகின்றனர். இதனால் சில குழப்பங்கள் ஏற்படுவதும் உண்மை. உதாரணமாக, ராமேஸ்வரத்திலிருந்து கும்பகோணம் வழியாக சென்னை வரை செல்லும் ரமேஸ்வரம் விரைவு ரயில் வண்டி, நள்ளிரவு 12.06 மணிக்கு கும்பகோணத்திற்கு வருகிறது. ரயில் நிலைய வழக்கபடி ஒரு நாள் என்பது நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி, மதியம் 12 மணியிலிருந்து 13, 14 என்று தொடரப்பட்டு, 24 மணி நேரங்கள் அளக்கப்படுகிறது.  நாம் பயணச்சீட்டு வாங்கும்போது, பயணம் செய்யவிருக்கும் தேதியான 5ம் தேதி என்று குறிப்பிட்டுவிடுவோம். அதில் நேரம் என்ற ஒரு பகுதி இருப்பதில்லை. பயணச் சிட்டிலும் 5ம் தேதி என்று பதியப்பட்டுவிடும் ஆனால் அப் பயணச் சீட்டின் படி 4ம் தேதி நள்ளிரவு 12.06 மணிக்கு 5ம் தேதி தொடங்கிவிடுவதால் நாம் 4ம் தேதியே நம் பயணத்தைத் தொடங்க நேரிடும். இதை ஒரு அனுபவக் குறிப்பாகவே நான் இங்கு வழங்கியுள்ளேன். கும்பகோணத்தில் இரு தினங்கள் தங்கி பின் சென்னை திரும்புவதற்காக முன்பதிவு செய்திருந்த நான் இந்த தேதி தந்த குழப்பத்தால், ஒரு நாள் முன்னதாகவே திரும்ப வேண்டியதாகி விட்டது.

இத்தனை வசதிகள் செய்து தரும் இத் துறை இந்த தேதி விஷயத்தைக் கருத்தில் கொள்ளலாமே! அல்லது பொது மக்களாகிய நாமாவது ரயில் நேரத்தை நினைவு கொண்டு பயணச் சீட்டு வாங்கலாமே!

Image result for FREE IMAGE OF PASSENGERS IN THE TRAIN

சனி, 18 நவம்பர், 2017

'லக்ஷ்மி' எனும் நான்.


Image result for CARTOON IMAGE OF A iNDIAN MIDDLE AGED SMART LADY WEARING SAREEImage result for CARTOON IMAGE OF A iNDIAN MIDDLE AGED SMART LADY WEARING SAREEImage result for CARTOON IMAGE OF A iNDIAN MIDDLE AGED SMART LADY WEARING SAREE

              முழு நேர விவசாயியான என் அப்பாவுக்கு, நான் பிறந்த அதே ஆண்டு, அரசு அறிவித்திருந்த கரும்பு மகசூல் போட்டியில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது.  அதற்கான அதிர்ஷ்ட்ட தேவதையே நான் தானென பூரித்த என் அப்பா, வீட்டிற்கு தனலக்ஷ்மியே பிறந்திருப்பதாய் எண்ணி, 'லக்ஷ்மி' என்று நாமகரணம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.

நான் வளர வளர... என் பெயரிலிருக்கும் 'க்ஷ்' என்ற உச்சரிப்பு எனக்கு உற்சாகத்தை அளித்தாலும், பலர் நாவில் நர்த்தனமாடியது வருத்தத்தையே அளித்தது.  'லச்சுமி' லஷ்மி, ல்ட்சுமி, லெச்சுமி, லக்ஸ்மி என்றெல்லாம் அவரவர் தன் இஷ்டம் போல் அழுத்தம் கொடுக்க கொடுக்க ' அழகற்ற பெயர்' என்று நான் கலங்கிய நாட்கள் நிறைய உண்டு.

அதே நேரம், என் பாட்டு டீச்சரின் அம்மா என்னை ' எச்சுமு' என்றது எனக்கு ரொம்.....பப் பிடித்திருந்தது. 

என் தோழியின் பெரியப்பா என்னை 'லட்சு' என்று செல்லமாகக் கூப்பிட்டதும் சாக்லேட் போல் இனித்தது. 

அடுத்து சீனு தாத்தா! அவர் என்னை 'லோஷ்மி....லோஷ்மி' என்று நீட்டி ராகத்துடன் கூப்பிட்டதும் எனக்கு பிடித்துதான் இருந்தது. ஆனாலும் நான் என் தோழிகளுடன் இருக்கும்போது அப்படி பாட்டு பாடி கூப்பிட்டது வெட்கத்தையும் தந்திருக்கிறது. தர்மசங்கடமாகவும் இருந்திருக்கிறது. 

என் அப்பாவின் நண்பர் M.S.கிட்டு மாமா! அவருக்கு நான் என்றுமே 'பொற்செல்வி' தான். ஒரு நாள் கூட அவர் மறந்ததில்லை. அவர் இறக்கும் வரையில்  என்னை 'லக்ஷ்மி' என்று அழைத்ததேயில்லை. பொற்செல்வி என்ற பெயர் எனக்கு பெருமையை கூட தந்தது எனலாம். ஏனெனில், அவர் அப்படி என்னை செல்லமாகக் கூப்பிடுகையில் நான் 40 ஐ கடந்திருந்தேன்.

ராமதுரை அண்ணாவுக்கு நான் இன்றும் 'லக்ஷ்மி பாப்பா'தான்.  இரு மகள்களுக்குத் தாயாகவும், ஒரு மருமகனையும் கொண்டுள்ள நான் இன்னமும் 'லக்ஷ்மி பாப்பா' என்று ஆசையாக அழைக்கப்படுவதில் பெருமிதமும், பேரானந்தமும் ஏற்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?

பள்ளி, கல்லூரிக் காலங்களில் கவிதைகள் எழுதி, 'செல்வி.லக்ஷ்மி ராஜாராம்' என்று கையெழுத்திடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். என் ஆருயிர் தோழி 'செல்வி' என் அன்பான அப்பா 'ராஜாராம்' இவர்கள் இருவர் பெயரையும் மணமாகும் வரைதான் என் பெயரோடு இணைத்துக்கொள்ளமுடியும் என்றெல்லாம் எண்ணிக்கொள்வேன்.  இன்று மணமாகி நான் 'திருமதி.லக்ஷ்மி ரவி' என்று கூறுகையில் என் முழு அறிமுகமும் வெளிப்பட்டு மிடுக்கோடு மிளிர்வதாய் பூரித்துப் போகிறேன்  

வெள்ளி, 20 அக்டோபர், 2017

சில்லறையால் சிதைந்த மனம்

       ஒரு வாரமாக ராமசாமி மில்லுக்கு வாடிக்கையாளர்கள் வருவதும் ஏதாவது அரைத்துக்கொண்டு போவதுமாக இருந்தனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது.
  "அண்ணே! ஈர அரிசி ரெண்டு கிலோ அதிரசத்துக்குண்ணே! கொஞ்சம் சீக்கிரண்ணே! பசங்க ஸ்கூல்லேர்ந்து வந்துடுவாங்க"

   "ஏம்பா.... முறுக்குக்கு அரைக்கணும்!

    "ஏங்க.... எவ்ளோ நேரமா நிக்கறேன்... சாம்பார் பொடிக்கு!"
இப்படி அங்கங்கிருந்து குரல்கள் வந்து கொண்டிருந்தன.

    ராமசாமி பம்பரமாக சுழன்று, ஈர அரிசி மிஷினை ஓட விட்டு அரைப்பார். "கொஞ்சம் இருங்க மாமி....ஈர மாவு அரைச்சுட்டு முறுக்குக்கு அரைச்சு தரேன்" என்பார். "ஏங்க... தீபாவளி பலகார மாவு அரைக்க எவ்ளோ பேர் வந்திருக்காங்க.. சாம்பார் பொடியெ வைச்சுட்டு போங்க.. கடைசியா அரைச்சு வைக்கறேன்" என்று அவரவர்களுக்கு பதில் கூறிவிட்டு சுறுசுறுப்பாக வேலை பார்த்தபடி இருந்தார்.

     தீபாவளி நேரமானதால் அவரின் மருமகளும் இந்த பத்து நாட்களாக  மில்லுக்கு வந்து, அரைகூலி வாங்கி வைத்து, அரவையை,  வருசைப்படுத்தி, அவருக்கு உதவியாக இருந்தாள். இன்று சனிக்கிழமை. பள்ளிக்கூடம் லீவானதால் பேத்தி சரசா, தாத்தாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தாள்.

      மிஷின் ஓடும் 'கடக் கடக்' சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. ராமசாமி அரைக்க வந்த சாமான்களைத் தூக்கி,  அதன் வாய்ப் பகுதியில் கொட்டினார். மாவு அரைபட்டு வெளியே கொட்டும் குழாயின் வாயை நீளமான வெள்ளைத் துணியால் குழாய் போலவே உருளை வடிவில் கட்டியிருந்தார். அதிலிருந்து கொட்டும் மாவை பிடிக்க வைத்திருந்த வேறொரு  டின்னில் பாதி அரைபட்டிருந்த மாவைப் பிடித்து, மீண்டும் அதை வாய்ப் பகுதியில் கொட்டினார். இம்முறை  நன்கு அரைபட்ட மாவை அரைக்கக் கொண்டுவந்திருந்த தூக்கில் கொட்டி வைத்தார். சரசா சம்மந்தப்பட்டவருக்கு தூக்கைக் கொடுத்து அரை கூலி வாங்கி, சில்லறை தந்து.. என்று வேலை  பார்த்துக்கொண்டிருந்தாள்.

     அப்போது ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு மூன்று டப்பாக்களை எடுத்துக் கொண்டு ஒரு பெண்மணி இறங்கிக் கொண்டிருந்தார். அவர் வாடிக்கையாக இந்த மிஷினில் அரைத்துப் போவார். வாடிக்கையாளர்களிடம் அதிக மதிப்பும், மரியாதையும் தாத்தா வைத்திருப்பது சரசாவுக்குத் தெரியும். அதனால் அவளும் தன் அம்மாவைப் போலவே தாத்தா விரும்பும்படியே நடந்து கொள்வாள்.

'அக்கா! வாங்கக்கா! " என்றபடி ஆட்டோவை நோக்கி ஓடி "நீங்க இருங்க அக்கா.. நான் சம்படத்தையெல்லம் எடுத்துக்கறேன்" என்றி கூறிய அவள்,  முதலில் ஒரு தூக்கையும், ஒரு டப்பாவையும் அரை மிஷினுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு மீண்டும் ஓடி, மூன்றாவது டப்பாவையும், தானே எடுத்துவந்தாள்.

'தாத்தா! அக்கா வந்திருக்காங்க பாருங்க!' என்று சத்தமாகக் கூறினாள். ராமசாமியும் புன்னகை முகத்துடன் தலையை அசைத்து வரவேற்றார். மிஷின் 'கடக், கடக்' என்று ஓடிக்கொண்டிருந்தது.

சரசா அந்த அக்காவுக்கு உட்கார தன் நாற்காலியை விட்டுக்கொடுத்தாள். "என்னம்மா அரைக்கணும்" என்றபடி அவளின் டப்பா மற்றும் தூக்கை உள்ளே எடுத்துச் சென்றார் ராமசாமி.

மூன்று வித மாவையும் ஒன்றன்பின் ஒன்றாக அரைத்து அந்தந்த பாத்திரங்களில் போட்டுவிட்டு, 'அம்மாடி! மூணையும் அரைச்சுட்டேன். சரசா... அக்காகிட்ட கணக்கு சொல்லு" என்றபடி மீண்டும் மிஷினை ஓடவிட்டார்.

"அக்கா! இது ரெண்டுக்கும் பத்து பத்து ரூவா.. ஈர அரிசிக்கு பதினஞ்சு ரூவா அக்கா" என்றாள் சரசா.

பர்சைத் திறந்த அந்தப் பெண்மணி, போன தடவ அரைச்சப்ப பாக்கி தரலியாமேமா. அத கழிச்சுக்கலாமா?' என்றாள்.

'இல்லையே அக்கா... பாக்கி எதுவும் இல்லயே"

'இல்ல சரசா! போன தடவ எம் பொண்ணை அனுப்பியிருந்தேன்.   60 ரூபா ஆச்சாம்.  100ரூபா கொடுத்தாளாம். பாக்கி  நாப்பது ரூபா அடுத்தவாட்டி கழிச்சுக்கறேன்' னு சொன்னியாமேமா.

இல்ல அக்கா.. அது மாதிரி எதுவுமே நடக்கலியே!'

'பின்ன நான் என்ன பொய்யா சொல்றேன்! முளச்சு மூணு இல விடலெ... உனக்கு இருக்கற திமிரப் பாரு! உங்க தாத்தவ கூப்பிடு' உரக்கக் கத்தினாள் அந்தப் பெண்.

'அது இல்லக்கா...! அம்மா சொல்லியிருப்பாங்களோ...!"

' மரியாதயா இப்ப பாக்கிய  கழிக்கப்போறியா இல்லயா!"

அதற்குள் சத்தம் கேட்ட ராமசாமியும் மிஷினை ஆஃப் செய்துவிட்டு' 'என்னம்மா! என்ன ஆச்சு?' என்றபடி வெளியில் வந்தார்.

'இங்க பாருங்க... உங்க பேத்தியெ கண்டிச்சு வைங்க! போன தடவ அரைச்சபோது சில்லறை இல்லனு சொன்னாளாம்.. இப்போ அதெ கழிச்சுக்கறியான்னா..... என்னவோ அப்படி எதுவுமே நடக்கலெங்கறா'

அரைக்க வந்திருந்தவர்களுக்கு இந்த நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக இருந்தது. வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.

ராமசாமிக்கு என்னவோபோல் ஆகிவிட்டது.

"அவ்வளவுதானே! மறந்துபோயிருப்பா.. இப்போ கழிச்சிட்டா போவுது"
'கண்ணு சரசா இப்போ எவ்வளவு ஆச்சு?"

'தாத்தா... போன தடவ மீதி எதுவுமில்ல தாத்தா;

"இந்தா.. அது போனா போவுது கண்ணு... இப்போ 35ரூபாயெ எடுத்திட்டு அஞ்சு ரூபா குடுத்து அனுப்பு தாயி'

"இல்ல தாத்தா.." என்று ஆரம்பித்த சரசாவை 'இத பாரு நான் சொன்னா கேக்கணும்' என்றுகூறி, ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு ,;நீ போய் வா அம்மணி' என்று கையெடுத்து கும்பிட்டார் ராமசாமி.

கண் கலங்கியது சரசாவுக்கு.....

அரைத்த மாவு சம்படங்களை இம்முறை சரசா ஆட்டோவரை கொண்டு தரவில்லை. அந்த அம்மா ஒரு டப்பாவை எடுத்துக்கொண்டு போய் ஆட்டோவில் வைத்துவிட்டு ஆட்டோ ட்ரைவரை மீதி இரண்டையும் எடுத்துவரச் சொன்னாள்.

அவமானத்தால் சுருங்கிய சரசாவின் கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டு வந்தது.

"தாத்தா....நான் பொய் சொல்லலெ. மீதி எதுவும் இல்ல தாத்தா..."

"அட.... நீ பொய் சொன்னனு நான் சொல்லவேயில்லயே கண்ணு.... போ! அடுத்து எத அரைக்கணும்னு பாரு"  என்ற ராமசாமியின் முகமும் சிந்தனை வயப்பட்டு சிறுத்துப் போனது.

கூடியிருந்தவர்கள் வியப்பாய் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது சைக்கிளில் ஒரு பெண் வந்து இறங்கினாள்.

"மன்னிச்சுக்கோங்க... அம்மா இந்த 35 ரூபாய கொடுத்துட்டு வரச் சொன்னாங்க.. பாக்கி இங்க இல்ல மளிகைக் கடையில! என்றபடி சரசாவின் கைகளில் நீட்டினாள்.

"இப்படி வைச்சுட்டு போங்க..."

அந்த சில்லறையை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சரசா.  அவற்றை கல்லாவில் போட கூட அவளுக்கு மனம் வரவில்லை.

 சில்லறையாலோ, சில்லறைத் தனமான பேச்சாலோ, அந்த  சின்ன மனது  சிதைந்து போய்விட்டது. சிதைந்தது அவள் மன்ம் மட்டுமல்ல.. அந்த உறவும் தான்.


Image result for FREE IMAGE OF COINS






திங்கள், 9 அக்டோபர், 2017

கோணம்

ரமேஷ் கல்யாணம் முடிந்துவிட்டது.

பொண்ணாத்துக்காரா,  நன்னா, நிறைவா  கல்யாணத்தை பண்ணினா. வந்தவா எல்லோரும் சந்தோஷமா வாழ்த்திட்டுப் போனா.

கல்யாணி மாமிக்குப் பெருமை பிடிபடலை. ஒரே பையன்! கண்ணுக்கு அழகா, மாட்டுப் பொண்ணு வந்தாச்சு. ஆத்துக்காரர் ஃபோட்டோக்கு முன்னாடி நின்னுண்டு கண் கலங்க அவர்கிட்ட நடந்த விவரத்தையெல்லாம் சொல்றா.

'நீங்க இல்லாமலேயே ரமேஷ் கல்யாணம் நடந்துடுத்து. நம்ம மாட்டுபொண்ணு பேரு என்ன தெரியுமோ? விமலா! அழகா சமத்தா இருக்கா.நன்னா சிரிச்சு பேசறா.
ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இன்னிக்கு நான் ஒரு மாமியார்! மாமியார்னாலே கொடுமைக்காரின்னுதானே எல்லாரும் நினைக்கறா. நான் பாருங்கோ! அத மாத்தி காமிக்கப்போறேன். என்ன! நம்மாத்துக்கு ஒரு பொண்ணு வரப்போறா! அவள உக்காத்தி வச்சு நான் சமச்சு சாப்பாடு போடப் போறேன் 'வேலை நிறைய பண்ணச் சொல்றா'ங்கறதுதான எல்லா மாட்டுப் பொண்களோட கொறையா இருக்கும்? அவள வேலை எதுவும் செய்யவிடாம மகாராணி மாதிரி பாத்துக்கப்போறேன்.
அதேமாதிரி.... எப்பவும் ரமேஷோடவே இரு, பேசு'ன்னு நானே சந்தோஷமா சொல்லப்போறேன். 'அவரோட பேசவே விட மாட்டேங்கறா... அவரோட நான் வெளில போனாலே பிடிக்க மாட்டேங்கறது...' ன்னுதானே எல்லாராத்து மாட்டுப் பொண்களும் புலம்புவா... ஏன்? எனக்கேகூட இந்த குறையெல்லாம் இருந்ததே! எவ்வளவு உடம்புன்னாலும்.. எங்க வெளில போயிட்டு எப்போ வந்தாலும் நானேதானே சமையல் வேலை, பாத்திரம் அலம்பறதுன்னு எல்லா வேலயும் பண்ணணும்! உடம்பு எத்தனை நாள் ஆடிப்போயிருக்கு! இந்த குறை நம்ம விமலாவுக்கு வரக் கூடாது!
நாம கொஞ்சம் சிரிச்சு பேசினாலே உங்கம்மாவுக்கு கோபம் வந்துடுமே! அது மாதிரியெல்லாம் நான் நடந்துக்காம, 'நல்ல மாமியார்'ன்னு  நிச்சயம் பேர் எடுக்கணும்'

கணவன் முன் சபதம் எடுத்துண்டு கண்ணைத் துடச்சுக்கறா கல்யாணி மாமி.

சபதத்துக்கு ஏத்தமாதிரியே, 'நீ போய் டீ.வி பாரும்மா, புக்ஸ் ஏதாவது படி, கைவேலை பண்ணு' ன்னு சொல்லி தானே சமையலை கவனித்தாள்.

ரமேஷ் வந்தவுடனும், 'ஏண்டா.. இன்னிக்கு விமலாவ சினிமாவுக்கு கூட்டிண்டு போயேன்... வெளில நல்ல ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுங்கோ. புடவை அல்லது சூடிதார் வாங்கிக் குடேண்டா விமலாவுக்கு' இப்படி எதாவது சொல்லி இருவரையும் ஒன்றாக வெளியே போக வைத்து ஆனந்தப்பட்டாள்.

தான் ஒரு நல்ல மாமியாராக செயல்படறதுல தனக்குத்தானே சந்தோஷப்பட்டு ஆத்துக்காரரிடமும் அவ்வப்போது கூறி தன் சந்தோஷத்த பரிமாறிக்கறா.

ஒரு நாள், 'கோவிலுக்குப் போய்ட்டு வரேன்மா.. கதவ தாழ்ப்பாள் போட்டுக்கோ' ன்னு விமலாகிட்ட சொல்லிட்டுப் போறா மாமி. கொஞ்ச தூரம் போனதும் செருப்பு அறுந்துபோச்சு. நடக்க முடியலெ. சரி ஆத்துக்கே போயிடலாம்னு திரும்பி வந்தா. ஆத்துக்கிட்ட வந்த உடனே, விமலா யாரிடமோ பேசிண்டிருந்தது ஜன்னல் வழியா காதுல விழறது.

அறுந்த செருப்புடன் வேகமா நடக்க முடியாம கால தேச்சு தேச்சு மெதுவா நடக்கறா மாமி. விமலா அவ அம்மா கூடதான் ஃபோன்ல பேசிண்டிருந்தா.

"என்னம்மா இது!  என்னக் கிச்சனுக்குள்ளயே விடலைன்னா என்னம்மா? என்னம்மா அர்த்தம்? நிர்வாகப் பொறுப்ப விட மனசில்லைதானேம்மா! எனக்கு ஏதாவது புதுசா என் கையால பண்ணி அவருக்கு சர்பிரைஸ் குடுக்கணும்னு ஆசையா இருக்காதா!! நான் இந்த வீட்டுல என்ன பண்ணட்டும்? எப்போ பாத்தாலும் இவர் கிட்ட இங்க கூட்டிண்டு போ1 அங்க கூட்டிண்டு போ! ன்னு ஒரு ப்ரொக்ராம் லிஸ்ட்டே ஒப்பிச்சுடறா! இவரும் 'பூம்பூம் மாடு' மாதிரி தலய ஆட்டறார்மா! ஏன் நாங்களே ஏதாவது டிசைட் பண்ணி எங்கயாவது போறோம்... இதெல்லாம் இவாளுக்கு எதுக்கும்மா.... போயிட்டு வந்த உடனேயே அது எப்படி இருந்தது, இது பிடிச்சுதான்னு ஒரே கேள்விதான்........

சொல்லிக்கொண்டிருந்தாள் விமலா! பிய்ந்த செருப்பால் அடி வாங்கியது போல் துடி துடித்துப் போனாள் கல்யாணி மாமி. இப்படி ஒரு 'கோணமா'? செய்வதறியாது நின்றாள்.

Image result for FREE IMAGE OF A tAMIL BRAHMIN COUPLE WITH THE MOTHER IN LAW

  

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தொலைந்த உறவு

தொலைத்துவிட்டாய் மனிதனே! - நீ
தொலைத்துவிட்டாய்!

உன் ஆணவத்தாலும்,  அகம்பாவத்தாலும்,
அதிகாரத்தாலும், ஆதிக்கத்தாலும்,
அழகான ஓர் உறவை
அகாலமாய் இழந்துவிட்டாய்.

அதனால்தான் இன்று,
முதியோர் இல்லங்களும்,
மழலையர் காப்பகங்களும்
மூலைக்கு மூலை
முளைத்துள்ளன!
மறக்காதே! மறுக்காதே!

எங்கோ பிறந்து, வளர்ந்தாலும்,
உன்னையும், உன் உறவுகளையும்
தன்னதாய்க் கொள்ள,
எவ்வளவு
தயாள குணம்  வேண்டுமென்பதை நீ
எள்ளளவும் எண்ணவில்லையே!

மூன்று முடிச்சுக்கு
முக்கியத்துவம் தந்து
முழு நேரமும்
மூச்சுவிடாமல் உழைத்திட
எத்தகைய
தாராள மனம் வேண்டுமென்பதை நீ
ஏறெடுத்தும் பார்க்கவில்லையே!

தாயாய், தாசியாய்
சேவகியாய், செவிலியாய்,
தோட்டியாய், துப்புரவாளராய்,
மேலாளராய், காசாளராய்,
பல்வேறு பொறுப்புகளையும்
எளிதாகக் கையாண்டதை நீ
ஏளனப்படுத்திவிட்டாயே!

திறமையாய் திட்டமிடுவோருக்குத்
தட்டிக்கொடுத்தல் தேவையென்பதையும்,
செம்மையாய் செயல்படுவோருக்கு
அங்கீகாரம் அவசியமென்பதையும்,
அறிந்தும் நீ
அலட்சியப்படுத்திவிட்டாயே!

அத்தனைப் பொறுப்புகளை
அநாயாசமாய் கையாள்பவர்
அநீதியைப் பொறுப்பரோ?
பொறுமையிழந்து
பொங்கியெழுந்து விட்டனர்
பூவினும் மிக மெல்லியர்.

படிக்கிறார்கள் -
பெரும் பதவி வகிக்கிறார்கள்.
உழைப்புக்குத் தகுந்த
ஊதியமும், உன்மத்தமும் கிடைக்கையில்
மூன்று முடிச்சு கூட வெறும்
சடங்காகிப் போனதில்
வியப்பென்ன இருக்கிறது?

விலைமதிப்பற்ற தன்
மூளையையும், உழைப்பையும்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
பணயம் வைக்கிறார்கள்.

நீ இன்னமும்
'நீ'யாகவே இருக்கிறாய்!
உறவுகளையும், உணர்வுகளையும்
உதாசீனப்படுத்துகிறாய்!

இந்த கட்டமைப்பு
உறுதிப்பட்டுவிட்டது.
பெண்கள் வெளியில் சென்று
வேலை பார்ப்பதையே
பெரிதும் விரும்புகின்றனர்..

வலியையும், வயோதிகத்தையும்
வளரும் பிள்ளைகளையும்
வருடிக்கொடுக்க
விரல்களே இன்று இல்லை.

நினைவில் கொள்!
உன்னோடு இன்று வாழ்வது
உன்
மனைவி மட்டுமே!
'துணைவி'யைத் தான் நீ
தொலைத்துவிட்டாயே!

                                                 
Image result for FREE IMAGE OF A SMART OFFICE GOING WOMAN

Image result for FREE IMAGE OF A HINDU HOUSE WIFE NURSING HER MOTHER INLAWImage result for FREE IMAGE OF A HINDU HOUSE WIFE


வெள்ளி, 22 செப்டம்பர், 2017

தமிழனே! தலை நிமிர்!


தமிழனே! தலை நிமிர்!
தலைகனத்தைத் தவிர்!
தன்மானத்தையும், தன்னம்பிக்கையையும்
தனதாக்கிக்கொள்ளென்றால் நீ
தன்னலத்தையே தஞ்சமடைகிறாயே?


அஹிம்சா வழி சென்று, அற நெறியில் போராடி,
அன்னியனை விரட்டி அடித்த
அண்ணலுக்குத் தெரியாது,
நீ புரியும் 'போராட்டங்களின்' பொருள்.
புரிந்தால் அந்த
பொக்கைவாய் மாமனிதர்
விக்கித்துப் போய்விடுவார்.

'கற்கை நன்றே! கற்கை நன்றே!
பிச்சைப் புகினும் கற்கை நன்றே!'
என்ற வரிகள் இன்று..
'கற்பது வேண்டாம்! கற்பது வேண்டாம்!
இலவச பொருட்கள் கிடைக்குது நன்றாய்!'
என்றான நிலைகண்டு
எள்ளி நகையாடுவாள்
ஒளவை இன்றிருந்தால்.

'செப்பு மொழி பதினெட்டுடையாள் - அவள்
சிந்தனை ஒன்றுடையாள்'
என்றான் பாரதி...
தாய்மொழியை துண்டு துண்டாக்கி,
வேண்டவே வேண்டாம் வேற்று மொழி
என்று நீ சொல்வது தெரிந்தால்
மூர்ச்சையாகி விடுவான் அந்த
முண்டாசுக் கவிஞன்.


தமிழனே!
கடமை, நேர்மை,
உண்மை, திண்மை யெனும்
'மை' அனைத்தையும்
மெள்ள மெள்ள நீ
ஆங்கில 'MY' ல்
ஆழ அமிழ்த்துகிறாய்.


இலவசங்களை ஏற்றுக்கொண்டு நீ
இளிச்சவாயன் ஆகிறாய்!
'அன்பளிப்பு' பெற்றுக்கொண்டு நீ
அற்பப் பதராய் போகிறாய்!


நன்னெறிகளும், நீதிபோதனைகளும்
நிறைந்த நம் தேசம் - உன்
'சுய நலம்' என்ற சுள்ளியின்
சூடு தாங்க முடியாமல்
சுருங்கி - சிதைந்து போய்
சின்னாபின்னமாய் உள்ளது.
தெரியுமா உனக்கு?
புரிந்துகொள்ள முயற்சிப்பாயா?

'வாழ்க்கை' யென்பது
எப்படி வேண்டுமானாலும் வாழ்வதல்ல!
இப்படித்தான் வாழவேண்டும்!
மனிதனாகத்தான்!
ஆறறிவு கொண்ட மனிதனாகத்தான்!
அற்பப் புழுவாய் நெளிவதற்கல்ல!

நீ... நீயாக இரு
நிமிர்ந்து நட!
'நீ' தான் '
'நீ மட்டும்தான்' என்ற
நினைவை மட்டும்
நெஞ்சினின்று
நிரந்தரமாய் நீக்கு!
நெறிஞ்சி முள்ளாய் குத்தாமல்
நித்திய கல்யாணியாய்
நிதம் மணக்கும் நம் தேசம்.





                                                       
                                           


Image result for free cartoon image of bharat mata standing with a man






வியாழன், 7 செப்டம்பர், 2017

லக்ஷ்மி ராமாயணம் பகுதி XII

லக்ஷ்மி ராமாயணம் பகுதி  XII 

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். திருச்சி  வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவரது குரல் பலருக்குப் பரிச்சயமானது.


நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்Blogger.)


                           பரசுராமப் படலம்

இராமனுக்கு வேதநீதி போதித்த முனிகௌசிகன்
இமயமலைக்குப் புறப்பட்டார் தவஞ்செய்யவே
மிதிலையிலே சனகனுடன், தசரதனின் பரிவாரம்
களிப்புடனே அளவளாவி கழித்தனவாம் சிலகாலம்.                      377

தன்மக்கள், மருமக்கள், தசரதனைத் தொடர்ந்திடவே
மண்மக்கள், அயல்மக்கள் புடைசூழப் புறப்பட்டார்.
மிதிலைமக்கள் வருத்தத்துடன் திருமகளை வழியனுப்ப
அயோத்திமக்கள் ஆர்வமுடன் வரவேற்கக் காத்திருந்தார்.                378
                 
                   இருவகை நிமித்தங்கள் எதிர்படல்

செல்லும் வழியிலே-
இடமிருந்து வலமாய் மயில் சென்றிட.
வலமிருந் திடமாய் காகம் சென்றதாம்.
இடையூறு வழியிடையில் உள்ளதோ வென
நடவாது நின்றான் நெறி வந்தான்.                                       379

நின்றவன், நிமிடத்தில் நிமித்திகனை அழைத்தனன்.
‘நன்றோ, பழுதோ நடுநிலையுடன் நயந்துரை’ என்ன
‘இன்றேவரு மிடையூறது நன்றாய்விடுமெ’ன்றான்
குன்றொத்த புயம்கொண்டோ னிடம் நிமித்திகன்.                         380

அவ்வமையம்-
திடீரென இருண்டதாம் வானம் – செஞ்
சடை யுடையான், இடியொலி யுடையான்
கோடரிக் கையுடை யான், கனலுமிழ்
சுழல் விழியுடையான் பரசுராமன் – சிவ                                 381

தனுசுக் கொப்பான பொற்சிலை யெடுத்து
வளைத்து நாணேற்றி அம்பு தெறித்தான்.
அலை கடலில் அகப்பட்ட மரக்கலன்போல்
நிலைகுலைந்து நடுங்கியதாம் மூவுலகும்.                               382
அவன்-
முனிவராய் பிறந்த மற்றொரு அவதாரம்.
‘ராமன்’ என்றவன் காட்டினன்தன் வில்வீரம்
பரமனை நோக்கிக் கடும்தவம் புரிந்து
பரசுப்படை பெற்று ‘பரசுராமன்’ என்றானவன்.                            383

உருத்திர மூர்த்தி பிரளயத்தில் காட்டிய
கோர தாண்டவ தோற்றத்தைக் கொண்டு
இருபத் தொரு அரசர்களைக் கொன்றபின்
குருதிப் புனலில் குளித்தவோர் அந்தணன்.                               384

தனதாக்கிக் கொண்டான் புவிமுழுதும்
சினம் தணிந்தபின் முனி காசிய பரிடம்
தானம் செய்தனன் இப்புவி யனைத்தும் – பின்
தவம் செய்தனன் பரசுராம க்ஷேத்ரத்தில்.                                385

                  பரசுராமன் வருகை கண்டு தசரதன் வருந்துதல்

கடுஞ்சினத் துடனவன் வருவதைக் கண்டதும்
நடுங்கிய தசரதன் பணிந் தெழுந்தான்.
‘அறனல்ல இது’வென தழுதழுத்தான்.
அடிபணீந்தேன் ஆதரிப்பீ’ரென! மூர்ச்சித்தான்.                             386

மன்னனை சற்றும் மதித் திடாமல்
சொன்னனன் இராமனின் முகம் நோக்கி,
‘முன்னரே சிதிலமான சிவதனுசு வளைத்தநீ
என்றுமே வீரனல்லன்! என்னோடு போர்புரி’                              387

                           இரண்டு விற்களின் வரலாறு

முன்னாளில் இருந்ததுவாம் இரு விற்கள்
ஒன்றினை உமையவளின் அண்ணல் கொள்ள
மற்றொன்றை திருமால் தன்வசம் கொள்ள
ஒடிந்தது ஓர்வில். அம்மெய்நெறி கேள்நீ’                               388

இரண் டினும் வன்மை யெய்திடும்
வெற்றி யுடைய வில்லெது வென்று,
விண்ணோர் பிரும் மனை வினவினராம்.
வெகுண் டனராம் சிவனும், திருமாலும்.                                 389

ஏற்றினராம் நாணை தத்தம் வில்லினில்
ஈரேழுலகும் அஞ்சி நடுங் கினவாம்.
முறிந்ததாம் அவ்வமையம் உருத்திரன் வில்
மூண்டதுவாம் இருவருக்கும் மிகப்பெரும்போர்.                         390

விண்ணவர் விரைந்தே விலக்கினராம் - சிவ
வில்லதை தேவர்கோன் வாங்கினனாம்.
விருச்சிக முனிவர், தவத்தில் மிக்கவர்
அவருக்குத் திருமால் தம்வில் தந்தனராம்.                              391

விருச்சிகன் ஈந்தனன் அவ்வில்லை - அவர்
சதானந்த முனியாம் எம் தந்தை – நீ
கட்டமைந்த இவ்வில்லை வளைப்பா யெனின்
கோட்டையரசன் நீ! கொத்தடிமை நான்!’ என்றான்.                       392

முறுவல் பூத்த முகத்துடன் இராமன்
நாரணன் கைக்கொண்ட வில்லினை வாங்கி,
தோளின்பின் வரை இழுத்து வளைத்து,
நாணேற்றி யதில் அம்பினைத் தொடுத்தவன்,                            393

‘பூதலத்து பலமன்னர் உயிர் கொண்டோனே!
வேத வித்தகர் புத்திரனாய் பிறந்தவன் நீ!
தவத்தோ டிருந்ததை கருத்தினில் கொண்டு
இவ்வம்பினை உன்மேல் விடுவதை விடுத்தேன்.                         394

நாரணன் வில்லின் அம்புக்கு இலக்கு
வேறெது வென்று உரைத் திடெ’ன்றான்.
‘அல்லாரை அழித்து நல்லாரைக் காப்போனே!
இலக்கென என் தவப் பயனைக்கொள்” என்ன                            395

தவபலம் இழந்தான் பரசு ராமன்.
‘அவதரித்த உன் வலிமைக்கு இணையில்லை!
எண்ணிய பொருட்களை இனிது பெறுக!வென
வாழ்த்தி வணங்கி விடை பெற்றான்.                                    396

மூர்ச்சை தெளிந்த தசரதன் தழுவினன்.
தேவர்கள் பூ மழை பொழிந்தனர்.
வேற்படை யுடையவனாம் வருணனிடம்
மால்வில் தந்து அடைந்தனர் அயோத்தி.  .                              397

                      (பாலகாண்டம் இத்துடன் நிறைவு பெற்றது)
                           அயோத்யா காண்டம் தொடரும்.