புதன், 8 ஆகஸ்ட், 2018

பள்ளி நண்பர்கள் 35 வருடங்களுக்குப் பிறகு இணைந்த நாள் - 4.08.208.

'இளைய நிலா பொழிகிறது' பாடல் மெட்டில் நான் எழுதி பாடிய பாடல்.

மகிழ்ச்சி மழை...! - பொழிகிறது!
இதயமெங்கும் இனிக்கிறது!
உலாவந்த காலம்... நிழலாடுது!
நிஜமானது இந்நாளிலே!    (மகிழ்ச்சி மழை)

பொறுப்புகளே சிறிதுமின்றி,
அனுதினமும் சிரித்தபடி!
பறவைகளாய் திரிந்திருந்தோம்
சிறகுகளை விரித்தபடி!
பள்ளி நாட்களின் எண்ண ஓட்டங்கள்
உள்ளமெங்கிலும் மின்னலாகுதே!
விழியிரண்டில் நினைவலைகள் விரிகின்றதே!
                                                               (மகிழ்ச்சி மழை)

எல்லையில்லா அன்புடனே
நண்பர்களாய் ஒன்றிணைந்தோம்!
விண்மீன்கள் கூட்டங்களாய்
வகுப்பறையை நிரப்பியுள்ளோம்!
ஐம்பதாண்டுகள் ஆன போதிலும்,
சின்ன பிள்ளைபோல் மனம் துள்ளுகின்றதே!
மல்லிகையாய் மணம்பரப்பி முகிழ்கின்றதெ!
                                                                  (மகிழ்ச்சி மழை)
இடமிருந்து வலம் : சரவணன், லக்ஷ்மணன், தற்போதைய தலைமை ஆசிரியர், வெங்கடாசலம், பாலாஜி, லக்ஷ்மி (நான்), வேதாமணி, லதா.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

மங்கையர் மலருக்கு ஓர் நன்றி நவிலல்

மங்கையர் மலர் - இது
மயக்கும் மலர்!
மங்கையர் மனம் கவர்
மணம் கமழ் மலர்!

மாலையானால் வாடிடும்
மகரந்த மலரல்ல இது!
மாதம் ஒரு முறை மலரும்
மகத்தான மலர்! மங்காத மலர்!
ஆம்!
நாள்பட நாள்பட மணம் கூட்டும்
மகிழ மலர்!

மலரே! உனக்கு என்
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
மலர் சார்ந்த ஆன்றோரே!
மனம் நிறைந்த வணக்கங்கள்!

ஒரு (சில) வார்த்தை உங்களோடு
உரையாட விழைகிறேன்!

கோவில் நகரமாம் கும்பகோணத்திற்கு
குடிபெயர்ந்தாற்போல் குழுமி வந்தீர்!
பூஞ்சாரல் தெளித்து எம்மை
பூரிக்க வைத்துவிட்டீர்!

உல்லாச ஊஞ்சல் கட்டி
உவகையாய் அமர்த்திட்டீர்!
உற்சாகப்படுத்தி எங்கள்
உள்ளத்தை மகிழ்வித்தீர்!

அடுப்பங்கரையையும், அகமுடையானையும்,
அடம்பிடிக்கும் பிள்ளையையும், அத்தனை பொறுப்புகளையும்,
பாடம், படிப்பு, புத்தகத்தையும்,
வியாதி, மூப்பு, வேலைப்பளுவையும்,
அறவே மறக்கடித்தீர்!
ஆஹா, ஆஹா என
ஐம்பது முறை கூவவைத்தீர்!

கலர்ஃபுல் கல்லூரியின்
சிறகு முளைத்திட்ட சிட்டுபோலே
சட்டென்று மாற்றிவிட்டீர்! - எம்மை
சந்தோஷப்படுத்திவிட்டீர்!

பஞ்சாமிர்தம் போன்ற நல்ல
பல்சுவை நிகழ்ச்சி மூலம்
புதைந்துபோன எம் திறமைகளை
போற்றி வெளிக்கொணர்ந்தீர்!

அன்புவட்டம் அமைத்துத் தந்து,
அரவணைத்துக் கொண்டுள்ளீர்!
நட்புவட்டம் பெருகியதால்
நன்மதிப்பு பெறுகின்றீர்!

நன்றி! நன்றி! நன்றி! - என
உரக்கக் கூவுகின்றோம்.
உயர்த்திக் கூறுகின்றோம்.
வருக! வருக! மீண்டும் வருக! என
விரும்பி அழைக்கின்றோம்!
வேண்டி அழைக்கின்றோம்!