திங்கள், 7 ஆகஸ்ட், 2017

'ல‌க்ஷ்மி ராமாயணம்' பாலகாண்டம் பகுதி V

TUESDAY, JULY 18, 2017

ல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி V

     "லக்ஷ்மி ராமாயணம்"        

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர்.  நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்.)  

 மிதிலைக் காட்சி

நிரைமணிக் கொடிகளும், செழுமணிக் கொடிகளும்,
நெருக்கமாய் இருந்ததாம் மிதிலையின் மதிலில் – அவை
‘திருமகள் சீதா இவ்விட இருப்பதாய்’
கரம சைத் தழைத்ததாம் ஸ்ரீஇராமனை.           160

அமுதுதோய்ந்த கோலெடுத்த மன்மதனும் – அவள்
அழகெழுத தொடங்குகையில் திணற வைக்கும்
பேரழகுப் பெட்டக மாம் பிராட் டிக்குப்
பொருத்தமான ராம்மிதிலை நுழைந்த னராம்!      161

பொன்கலன்கள் தெருவெங்கும் சிதறிக் கிடந்ததால்
செல்வத்தின் மிகுதி யெங்கும் மிளிரக் கண்டனர்,
வீணையிசை, நாடகங்கள் நிகழக் கேட்டனர்.
நடனசாலை நிறைந்த தெருமார்க்கம் சென்றனர்.   162

மலைமீது மலைமோதி போர் செய்வதைப்போல்
வெள்ளைநிற தந்தம்கொண்ட யானை பார்த்தனர்.
கடிவாளம் பூண்டிருந்த சண்டைக் குதிரைகள்
விரைவாகப் பாய்வதையும் பார்த்துச் சென்றனர்.   163

களங்கமில்லா சந்திரனின் உதயம் போலவே,
சாளரங்கள் தோறும்பல பெண்கள் பார்த்தனர்.
கமலமலர், ஆம்பல்மலர் பூத்ததடாகம் – எங்கும்
மகளிரெல்லாம் மனம்குளிர குளிக்கக் கண்டனர்.   164

வீரம், ஆண்மை நிறைந்தயிளம் வீரர்கூட்டமாய்
உருட்டியாடும் வட்டுக்காய் பார்த்துச் சென்றனர்.
அரணெனவே மாளிகையின் பொன்மதில் சுற்றி,
பெருகியோடும் கங்கையொத்த அகழி கண்டனர்.   165

அக்கணம், அவ்விடம் அசைவிலா நின்றனர்!!!!
பொன்னொத்த ஒளியும், பூவொத்த மணமும்,
தேனொத்த சுவையும், கவியொத்த இனிமையும்
ஒன்றிணைந்த ஓருருவம் மாடத்தில் ஒளிர்ந்ததும்! 166

‘உவமையின்’ பொருளுக்கு உதா ரணமாம் – அத்
திருமகளே உருபெற் றங்கு நின்றிருக்க,
உவமைக்கும்ஒப்புக்கும் எவ்வகை நாடி
எவ்வித முரைத்து, எப்படி விளக்கிட?            167

பார்வையிலே, மானையும், மீனையும் வென்று,
பர்வதம் கொண்டு கடையாமல் பெற்ற,
உம்பர் மாடத்தின் அமுதாய் நின்றாள்;
அந்தணர், தேவரின் அறமாய் பிறந்தவள்.         168

மேனகை முதலான விண்ணுலக மங்கையெல்லாம்
அனையாளின் பேரழகால் உளம்வெதும்ப, மனம்வருந்த
வெண்மதிக்கு நிகரான தத்தம் பொன்முகமும்,
பகல்நிலவு போல்மங்கி ஒளியிழந்து இருந்தனராம்.169

தோழிமார்கள் சூழவந்த செங்கைத்தளிர் மானவள்
மின்னலரசி போலமின்னும் அந்த நிமிடத்தில்,
கண்ணோடு, கண்ணும், உணர்வோடு உணர்வுமொன்ற
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். 170

பருகிய பார்வையால் பாசத்தில் பிணைந்து,
ஒருவரை ஒருவர் உள்ளம் ஈர்த்திட,
வில்லுடை இராமனும், வாள்கண் நங்கையும்,
நல்லிதயம் தன்னில் மாறிப் புகுந்தனராம்.        171

உடலிரண் டும், உயிரொன்றும் ஆனவர்கள், – பாற்
கடலிலே பள்ளியிருக்கையில் கலவி நீங்கிப்
பிரிந் திருந்த ஐயனும், நங்கையும் தானின்று
சேர்ந்திட நேர்ந்ததை சொல்லவும் சாலுமோ?     172

கண் ணிமை மூடிட மறைந்திடு வானென
சித்திரப் பாவையாய் ஓவியம் போலானாள் – அவள்
சிந்தையும், அழகும்தன் பின்வரச் சொல்லி
மைந்தனும் முனியோடு மறைந்து போயினான்.   173

பார்வையை விட்டவன் மறைந்த பின்னாலே
சோர்வொன்று தாக்கிட துவண்டு வீழ்ந்தனள்.
‘நிறை’ யென்னும் அங்குசமே தோற்றதாம்
மதம்கொண்ட அவள்குணம் மாற்றுகையில்       174

தண்ணீர் போலவே பெருகிய காமந்தான்
கண் எனும் வாய்க்கால் வழியோடி,
மெய் என்ற உடலிலே பாய்ந்ததனால்
மனமென்னும் பாலும் திரிந்ததுவாம்.              175

நலம் குன்றி, உடல்மெலிந்த நங்கையினை
மலர்படுக் கையில் கிடத்தினாலும் - அவள்
கண்ணின்வழி பெருகியதாம் நீர்த் திவலைகள்!
நெற்றிவழி திரண்டதுவாம் வியர்வைத் துளிகள்!    176

வேடன்கை அம்பு பட்ட மயில்போலவே,
காமனம்பு தைத்திடவே மனம்வெதும்பினாள்;
பூங்கொம்பு போலத் தழைந்து துவண்டுபோயினாள்,
பூம்படுக்கைமீது வீழ்ந்து, சாய்ந்து சூம்பினாள்.      177

தாதியர்கள், செவிலியர்கள் குழம்பி வருந்தினர்,
மாதுயரம் உற்றுகலங்கி, மனம் அஞ்சினர்.
‘நேர்ந்த தென்ன? நிகழ்ந்த தென்ன? புலம்பித்தீர்த்தனர்.
ஆரத்தி சுழற்றிகொட்டி திருட்டி கழித்தனர்.           178

நினைவகன்றுஉணர்விழந்த நிலையினிலும் – திரு
உருவத்தை வருணித்துப் பிதற்றினளாம்!
தலைமுடியைக் காடென்றாள், புயமிரண்டும் தூணென்றாள்,
கண்கள் கமலமென்றாள், வில்தரித்த மேகமென்றாள். 179

தோள்மீது தாங்கிய வில் கண்டேன் – அது
கரும்பல்ல! அதனால் அவன் காமனல்லன்!
கருவிழியிரண்டும் இமைத்திடக் கண்டேன் – அதனால்
தேவருள் ஒருவனாய் இருந் திலன்.                 180

முப்புரி நூல் தரித்திருந்தான் – அவன்
அரச குலத்தினில் பிறந் தவனே!
கண்வழி மனதைக் கவர்ந்தான் – அதனால்
கள் வரிலே விசித்திர கள்வனே!                  181

விரகத்தால் பிதற்றிய பிராட் டியின்
காமத்தீ சுடுமேயென கதிரவன் மறைய
கருநிறக் காலன் கடுந் தெழுந்ததுவாம்
இரவுப் பொழுதும் கரும்பூதமாய் தெரிந்ததுவாம்!   182

பெருமானின் நிறம்போன்ற இருள்சூழ் இரவில்,
பொற்கலத்தினின் றெழுந்ததாம் வெண்திங்கள்
பேரரசர் வீழ்ச்சிபோல கமலம் குவிந்ததாம்.
சிற்றரசர் வெற்றிபோல ஆம்பல் மலர்ந்ததாம்.      183

‘கருநெருப்பில் தோன்றிய வெண்நெருப்புபோல்
பாற்கடலில் தோன்றி யுதித்த சந்திரனே!
கொல்லும்அளவு கொடியவ னல்லன் நீ!
அல்லல் எனக்கு அளித்திடல் தக்கதோ?’           184

செந்நிற பூம்மஞ்சம் தீயென தாக்க
அன்னம் அதன் மேல் கிடந்ததைப்போலும்,
தனங்களில் படிந்த சந்திர கிரஹணம்
தாக்கியது போலும் தவித்தனள்; துடித்தனள்,       185

வாசனை மிகுந்த சந்தனக் குழம்பை
பூசினர் தோழியர் உட லெங்கும்! – அது
உலர்ந்து உதிர்ந்ததாம் அனல் மூச்சால்!
கனத்துப் போனதாம் முலை காற்றால்!            186

அன்னம் இங்கனம் இருக் கையிலே
முன்னம் விழிவழி உளம் கவர்ந்தவனை
மன்னன் சனகனும் வர வேற்றான்.
பொன்னகர் மாடத்தில் உய்த் திட்டான்.            187

கௌதமன் மகனாய் அகலிகை பெற்ற
சதானந்த முனிவரை அங்கு கண்டார்.
சனகனின் புரோகி தனாம் அவரை
வணங்கித் தொழுதனர் தசரத குமாரர்கள்.          188

ஆசிகள் அளித்தபின் கோ முனியும்,
கௌசிக முனிவனின் முகம் நோக்கி,
‘இப்போது நீரி வண் எழுந்தருள
இப்பூதலம் செய்திட்ட தவம்யாதோ?’ என்ன..       189       

‘கேட்டி மாதவ! இப் பெருந்தகைதான்
கடுங்குரல் தாடகை வதம் செய்து,
அடுத்த எம்வேள்வியும், நின்னன்னை சாபமும்,
முடித்து என்னிடர் முடித்தவ ரென்றார்.            190

‘வெற்றி வீரர்க்கு நின்னரு ளன்றி,
வேறேதும் செயற்கரிய செயலு முளதோ?
குருவின் அருமை, பெருமை அனைத்தையும்,
முறைப்படி சீடருமறிதலே முறைமை!’ என்றவர்    191

‘நறுமலர் அணிந்த நாய கனே!
அறிவீர் கௌசிகன் வர லாற்றை! - இவன்
அருள்முறை நீதி நெறியின் படி
புரந்தனன் இப்புவி பல் லாண்டு!                    192

(தொடர்ந்து வரும்)

No comments:

Post a Comment

You can give your comments here

'ல‌க்ஷ்மி ராமாயணம்' பாலகாண்டம் பகுதி IV

TUESDAY, JULY 18, 2017

ல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி IV

"லக்ஷ்மி ராமாயணம்"

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர்.  நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்.)

                                          வேள்விப் படலம்


விண்ணவர் விரித்திட்ட பூ மழையாலே
தண்ணென் றானதாம் கானகம் முழுதும் – முனி
படைக்கலம் அருளினார் இராமனுக்கே
சடையப்பர் வாரி வழங்குவார் போலே!             115

(சடையப்ப வள்ளல் - கம்பருக்கு வாரிவழங்கி உதவியர். அவரைப் பல இடங்களிலும் குறிப்பிடுகிறார் கம்பர்)

சரயுவுடன் நதி கோமதி இணைவதும்,
‘கௌசிக’ நதியென்னும் புண்ணிய நதியையும்
தரிசித்த படியே முனியுடன் குமரர்கள்
கடந்தனர் இருகாத தூரங்கள்.                     116

'நங்கையாய் புவியில் பிறந்தாலும் – இன்று
நதியாய் கௌசகி பாய்கின்றாள் – என்
முன்னம் பிறந்த தமக்கையிவள்
இருசிகன் மணந்த துணைவியிவள்.               117

இல்லறம் சிலநாள் நடத்தியஇருசிகன் ,
கடுந்தவம் புரிந்து வரமதைப் பெற்றான்.- பின்
வானத்தின் வழியே பிரம்மலோகம் சென்றதால்,
ஆற்றாதவளாய் ஆனாள் கௌசகி – பின்          118

ஆற்றின் உருகொண்டு பின் தொடர்ந்தாள் – அதைப்
பார்த்திட்ட மாதவர்க் கரசனாம் இருசிகன்
'மாநிலத்து உறுகண் நீக்கிடவே நீ
பாய்ந்திடு நதி'யென பகர்ந்து சென்றான்.            119

நதியினை யடுத்த சோலையைக் காட்டி,
‘யாதிது’ வென்று வினவினன் இராமன்.
‘சித்தா ஸ்ரமம்’ இதுதா னென்றும் – இங்கு
திருமாலே தவம்செய்ய, பெருமையென்றார்.-பின்     120

( பாட்னா - மொகல்சராய் ரயில் மார்க்கத்தில் உள்ளது சித்தாஸ்ரமம்)

சிந்தைத் தூய்மையில் பத்தினி யொத்த
சித்தாஸ்ரமம் பற்றி விளக்கலானார்.- பின்
அசுரன் இரணியாக்கன்’ பற்றியும்,
‘மகாபலி’ பற்றியும் உரைக்கலானார்.              121

புவியைப் பாய்போல் சுருட்டிக் கொண்டு
புகுந்தான் கடலிலே இரணியாக்கன்,
வராக உருகொண்ட திருமாலும் – புவி
கொம்பினில் தாங்கியே மீட்டு வந்தார்.             122

அத்தகு ஆற்றல் தாமும் பெற்றதாய்
வையமும், வானமும் அபகரித்து
மாவலி யென்பான் உடைமை கொண்டான். – பின்
மாபெரும் வேள்வியைத் தொடங்கி விட்டான்.      123

வருந்திய தேவர்கள் சித்தாஸ்ரமம் வந்து,
தீயவன் மாவலி வேள்வியைக் கூறி - அவன்
கொடுஞ்செயல் தீர்த்திட வேண்டினராம்
நெடுமால் செய்திட இணங்கினராம்.               124

முன்பு –
அசுரரை அடக்கிட மகவொன்று ‘தா’வென
காசியப முனியோர் விரதஞ் செய்ய
‘ஆலமரத்தின் சிறுவிதை போலந்த’ திருமாலும்
அதிதி வயிற்றில் அருகுறள்வாமன உருகொண்டார். 125

இன்று –
குறுகிய வடிவுடன் பிரும்மச் சாரியாய்
மாவலி வேள்விக்கு வாமனன் வந்திட,
வியந்தெதிர் கொண்டவன் விளம்பினனாம்
‘எந்தனில் உய்த்தவர் யாருள’ வென்று?             126

மாவலி மாண்பினை வாமனன் புகழ்ந்ததும்,
உவந்தவன் ‘என் செய?’ வினவிட்டான். - என்
‘மூவடி கால்மண்’ போதும் என்றிட,
‘தந்தோம்’ என்றதை தடுத்தானாம் சுக்ரன்.           127

(சுக்ரன் என்பவர் சுக்ராச்சாரியார் இவர் அசுரர்களின் தலைவனின் குல குரு)

‘குறுவடி யென்றிதைக் கொள்ளாதே!
பிரளயத்தில் அண்டத்தை அடக்கிய இறை’ என்ன,
‘கொள்ளும் கையிது நாரணன் கையெனில்
நன்மையிதைவிட வேறில்லை! தடுக்காதீர் எம்மை!’ 128

‘கொடியவன்’ இவனென்ற மந்திரி மொழிதனை
கொண்டிலன் மாவலி சிறிதளவும் – பின்
‘அடியொரு மூன்றினை அளந்து கொள்வீரென’
நெடுமால் கையினில் நீரினை வார்த்தான்.         129

ஓரடி அளந்ததில் புவியை யடக்கி,
மறு அடியால் வானுலகை யடக்கி,
மூன்றா மடிக்கென இடத்தினைத் தேடி – அவன்
தலையில் வைத்து அமுக்கினார் புவிக்கடியில். - பின்   130

இந்திரனுக் குரிய  உலகத்தை அவனிடம்
ஈந்துவிட்டுபின் பாற்கடல் அடைந்தான்,
திருமகள் கரம்தொட, திருவடி சிவந்த பின்
திருபள்ளி கொண்டனன் ஆதிசேடன் மேல்!         131

அத்தகு திருமால்  தவஞ்செய்த இடமிது!
காசிப முனிவரும் சித்திபெற்ற இடமிது!
அத்தனை சிறப்புடை ‘சித்தாஸ்ரம’மன்றி
எவ்விடமுண்டு யான் யாகமியற்றிட!'              132

வேண்டிய பொருட்களை சேகரித்து – முனி
விண்ணவர்க் காக்கிய வேள்வி யினை,
மண்ணினைக் காக்கும் மன்னன் மைந்தர்கள்,
கண்ணினைக் காக்கின்ற இமையெனக் காத்தனர்.    133

‘தீத்தொழில் செய்பவர் வருவ தெப்போது?’
மூத்தவன் முனியிடம் கேட்கின்ற அப்போது,
வானத்தில் மேகமாய் சூழ்ந்தனர் அரக்கர்கள்
இடியும் அஞ்சும் படியொலி யெழுப்பினர்.           134

எய்தனர் அம்பினை! எறிந்தனர் சூலத்தை!
வீசினர் வேலினை! பிளந்தனர் மலையினை! – அதனால்
பெய்திட்ட மாரிபோல் கானகம் மறைத்ததாம்! – பொங்கிய
மீனுடை பொய்கைபோல் வானகம் போர்த்ததாம்!    135

பவள நிறத்துடன், சுழல்கின்ற விழியுடன்,
பிளவுண்ட பற்களுடன், அரக்கர்கள் சூழ்ந்ததை,
இலக்கு வற்கு இராமன் காட்டிட – ‘நாயக!
இனி வீழ்வதிவர் துண்டம்’ தொழுது வணங்கினன்.   136

அரக்கர்கள் சதையும், குருதியும், பிண்டமும்
கனல்மேல் சிதறிடக்கூடாதேயென
அம்பினை வைத்து, கோமுனி இருக்கையை
அமைத்து விட்டான் ராமன் கூடாரம்!                137

அஞ்சின மாதவர் ‘அபயமபயம்’ என
அஞ்சன வண்ண னைத்தொழுத னராம்.
‘அஞ்சீர்’ என்றவன் நாணேற்றி – குவித்தான்
தலையை மலையாய், குருதிக்கடலைப் பாயவிட்டான்.  138

தாடகைப் புதல்வர்கள் இருவரிலே - ராமன்
விட்டொன்ற அம்பால் கடலிலே ஒருவனும்
மற்றவன் யமபுரியிலும் சேர்ந்திட – எஞ்சிய
அரக்கரை அழித்திடத் தொடர்ந்தனர் இருவரும்.         139
                     

தூவினான் அம்பினை வான் நோக்கி – அது
தூர்த்தது வானத்தை ஓர் கணத்தில்!
மற்றையோர் ஓடினர் தலை தெறிக்க – அம்பு
உரிய இலக்கினை சேர்ந்து அழித்திட!                140

பறவைகள் கூடி பந்தல் கட்டிட! – தேவர்கள்
சொரிந்த பூக்களதை விலக்கி வீழ்ந்திட!
துந்துமி வாத்தியங்கள் முகிலாய் முழங்கிட!
திரண்டனன் அமரர்சூழ் இந்திரன் வான்வெளியில். .   141

வேள்வியை முறைப்படி முடித்திட்ட முனிவனும்,
‘லோகம் காத்திடக் கடவிய மால் நீ!
யாகம் காத்திடல் பொருளல்ல! தோற்றம்தான்!
பெரும் பாக்கியம் எனக்கிது’. என்றுரைத்தார்.          142

‘இனி செய்யும் பணி என்ன?’ வினவிட்டான்.
‘அரும்பெரும் செயல் உள செய்வதற்கு – முன்னம்
மருதம்சூழ் மிதிலையின் கோமகன் இன்று
புரிகின்ற வேள்விக்குப் புறப்படுக!’ என்றார்.            143

                     அகலிகைப் படலம்

பெண்ணென கம்பன் போற்றிப் பாடிய
சோணைநதிக் கரை சேர்ந்தனராம் – பின்
சோலை உறைந்து, கங்கை கடந்து,
மிதிலை மாநகர் அடைந் தனராம்!                    144

வயல்களும், சோலையும், கழனியும், பொய்கையும்,
நதிகளும், குளங்களும், கடந்தபின் அவர்கள்
கல்லொன்று வெளியிடைக் கிடப்பதைக் கண்டனர்.
கல்லல்ல அது! இல்லறம் தொலைத்திட்ட பேதைமகள்.145

திருமால் திருவடி எவர் சேர்ந்தாலும்
கருமந் தொலைந்திட, பெறுவர் தம்முருவம் – அதுபோல்
காகுந்தன் கால்துகள் பட்டவுடன் – அவள்
கல்லுரு மாறிட நல்லுரு பெற்றனள்.                  146

பெண்ணாகியஓர் கல் வணங்கி எழுந்ததை
கண்ணுற்றான் ராமன்! ‘மாமுனி கௌதமன்
துணைவி அகலிகை இவ ளென்று’
இவள் கதை கூற லானார்!                           147

‘கங்கையை புவிதனில் பாயச் செய்த
பகீரதன் குலத்தினில் பிறந்தவனே!
தேவர்கோன் இந்திரன் தீவினை நயந்திட - முனி
கௌதமன் சபித்தான் ‘செங்கண் ஆயிரம்’’             148 

முனிசொன்ன உலகியல் புரியாதவனாய்
‘எதனால் இதுபோல் நிகழ்ந்தது?’ என்றான்.
முந்தைய பிறப்பின் விதியின் வினையா?
கல்லுரு ஏற்பட காரணம் யாது?’                      149

அகலிகை மேலே இந்திரன் கொண்ட
மையலால் இழந்தான் அறிவனைத்தும்  
சேவல் போலவன்கூவவும், முனிவெளி யேற,
உய்த்திட புகுந்தான் முனி உருவில்!                  150

கணவனே என்றிவள் கலந்திட்டாள் – பின்
உணர்ந்தனள்; உணர்ந்தும், உடன்பட்டாள்.
அக்கணம் நள்ளிர வென்பது புரிந்து
முனிவனும் வந்தான் தன்னகம் விரைந்து!            151

இழிசெயல் புரிந்திட்ட அகலிகையும்,
விதிர்த்தபடி – உடல் வியர்த்தபடி நிற்க,
பூனையாய் உருகொண்ட இந்திரனும் – தான்
போகும்வழி தேடி போகலுற்றான்.                   152

தீப்பொறி கக்கிய விழிகளுடன்
தீயவன் இந்திரன் மேனியெங்கும்
‘ஆயிரம் மாதர்க் குறிகளுண்டாக’ ஏயினன்!
இயைந்தன இமைத்திடும் பொழுதினிலே!            153

அளவற்ற பழியுடன், நாணமுடன் அவன்
புறப்பட்டு போய் விட்ட பிற்பாடு
‘விலைமகள் ஆனவள் நீ அதனாலே
கருங்கல் ஆயிடக் கடவதெ’ன்றான்.                 154

‘பொறுப்பீர்! பொறுத் தெம்மை ஆட்கொள்வீர்!
இதற்கொரு முடிவினை உடன் அருள்வீர்!
சிறியோர் புரியும் பிழைதனை பொறுத்தல்
பெரியோர் கடனென உணர்வீர்!’ என்ன               155

‘தசரத ராமனின் திருவடி துகள்பட
தகர்ந்திடும் உந்தன் கல்லுரு என்றும்,
வருத்தமுடன் மனம் திருந்திய இந்திரனின்
குறிகளும் யிரம் விழிகளாகும்’ என்றார்.            156

‘மழைவண்ணம் கொண்ட பெருமானே! – அன்று
மைவண்ணத் தாடகை வதைக்கையில் உந்தன்
கைவண்ணம் சிறக்க கண்டிட்டேன்! – இன்று
கால்வண்ணம் கண்டு களிப்புற்றேன்.’ குருசொன்னார். 157

தீது அகன்ற அகலிகைப்பெண்ணிடம் ஸ்ரீராமன்
‘கௌதம முனி தாள் பற்றிடுவீரே!
வந்த பழியிது தள்ளிடுவீரே!’ என்ன
தொழுது எழுந்து போயினள் அகலிகை.               158

அருந்தவ கௌதம முனியிடம் சென்று,
‘உருபெற்ற அகலிகை ஏற்பீர்!’ என்ற
அஞ்சன வண்ணனின் கோரிக்கையை – முனி
நெஞ்சம் நிறைந்திட ஏற்றுக் கொண்டார்.              159

(மேலும் வளரும்)











'ல‌க்ஷ்மி ராமாயணம்' பாலகாண்டம் பகுதி III

ல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி III

       "ல‌க்ஷ்மி  ராமாயணம்"

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர்.  நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்.)

                   கையடைப் படலம்
            (விஸ்வாமித்ரர் இராமனை காட்டுக்கு அழைத்தல்)

வெண்குடைகீழ் ஆண்டுவந்த அரசன் அவைதன்னில்
விஸ்வாமித்ர முனியொருநாள் வருகை புரிந்தனர்.
பணிந்து, வணங்கி, இனிது இருத்தி, தசரதனும்
பாதபூசை செய்துவினை போக்கிக்கொண்டனன்.       50

மாமுனி தன்மனைதேடி விஜயம் செய்ததில்
மாதவமே செய்துவிட்டே னென்று மகிழ்ந்தனன்.
'யாது பணி? யாம் செய்ய' வென்று வினவியே
காத்திருந்தான் கருத்துடனே கடமை யாற்றவே!       51

உரத்தழைத்தார் முனி, ‘வீரன் தசரதனே!’
இந்திரனின் ராச்சியமாம் அமராவதியை
சம்பரனெனும் அசுரன் வந்து கைப்பற்ற,
கைகேயி தேரோட்ட, போராடி மீட்டவனே!            52

சித்த வனத்தினிலே யான் செய்திடும்
முக்தி வேள்விக்குத் தடையான அசுரர்களை
செருமுகத்துக் காக்க வேண்டி – நின்
கரிய நிறமுடை குமரன் வேண்டுமெ'ன்றார்.           53
(செருமுகம் - போர்முகம்)

அருந் தவத்தோன் கூற்றெல்லாம்
கனல் காதில் விழுந்தாற் போன்றும்;
கண் இலான் பெற்றிழந்தார் போன்றும்
கடுந் துயருற்றான் தசரதமா மன்னவன்!              54

‘மகன் பிரிய உயிரிழப்பான்’ என்றவொரு
முன்சாபம் மனதுள்ளே ரணமாயிருக்க – அதைக்
கூரான கத்திகொண்டு கிழித்த வுடன்
‘கோரற்க இராமனையே!’ கரங்குவித்தான் தசரதன்.     55             

'படைத் தேர்ச்சியில்லா சிறுவனவன்!
சடையுடை பரமனும், ப்ரம்மனும், புரந்தரனுமே
இடையூறு செய்யுங்கால் உடனிருந்து நானே
தடைகளகற்றிடுவேன்! புறப்படுக!' என்றுரைத்தான்     56

சினந்து எழுந்தனராம் மாமுனிவர் – அதைக்கண்டு
பயந்து நடுங்கினராம் இமையோரும், அவையோரும்!
‘மறுத்திடேல்! நின்மகன் பொருத்த முடையான்
பொறுத்திடுவான்.’ உபதேசித்தனராம் வசிஷ்ட்டமுனி.  57

குருவின் திருவாசகத்தைக் கேட்ட தசரதன்
திருவின் வடிவினனாம் சிறுவன் இராமனை
வருவிக்க ஏவலரை வேண்டியவன் – பின்
தருவித்துத் தன்னருகில் இருத்தினான்.           58

தம்பி இலக்குவனுடன் வந்தவனை
முந்தை நான்மறை முனியிடம் தந்து,
'தந்தையும், தாயுமாய் நீயிவர்க்கு
இயைந்ததை செய்க! என்றுரைத்தான்..            59

ஒன்றே போல் அண்ணனும், தம்பியும்
வெற்றி வாளொன்றை இடையிலே கட்டி
குன்று போலுயர்ந்த இடத் தோளினில்
கொற்றம் வில்லுடன், விறைப்பாய் ருந்தனராம். 60
(கொற்றம் வில் - வெற்றி வில்)

சினம் அகன்றிட, குணம் தோன்றிட
அருள் வழங்கினராம் முனி. – பின்
அண்ணன் தம்பி இருவரையும் தன்
உடன் கூட்டிச் சென்றனராம்.                    61

மாதவத் தோனைப் பின் தொடர்ந்திடவே
மாநகர் அயோத்தி பின்னடைந்ததுவாம்,
தந்தை மொழி சொல் ஏற்றபடி
சரயு நதிக்கரை யடைந்தனராம்.                      62

கரும்பும், கமுகும், அரும்பும், தேனும்
அடர்ந்து, குளிர்ந்த சோலை தன்னில்,
இரவுப் பொழுதைக் கழித்த பின்னர்
சரயுவைக் கடந்தனர் உதிப்பதற்குள்!                63

புகை தழுவு சோலை காட்டி,
‘ஈது யாவது’ கேட்டான் இராமன்.
‘காமனாச்ரம்’ இது வென்றும் – அதைச்
சார்ந்ததேசம் ‘அங்கநாடெ’ன்றும் கூறி,             64

யோக நிலையிருந்த பரமேஸ்வரனை
மோக வலைதள்ள காமனவன்
மலரம்பு தொடுத்திட, நுதல்விழியால் ஈசன்
கனல்பறக்கக் காமனை எரித்தயிடம் இதுவென்றார்.  65
(நுதல் விழி - நெற்றிக்கண்)

அடுத்து,,
வெம்மைக்குக் காரணமாம் அக்னியே
வெந்து வருந்திடத் தக்கதும்,
மழைமேக நீரெல்லாம் கொதிப்பேறி
மின்னலும், இடியுமே தகிப்பதும்,                  66

கள்ளியும், மூங்கிலும், வெந்தாற் போல்,
வெடித்தும், சிதறியும்,
மண் தரையும் பேய் பிளந்தாற்போல்,
உலர்ந்தும், பிளந்தும்,                            67

காக்கையும், யானையும், கருகினாற் போல்,
இறந்தும், கிடந்தும்,
காய்ந்திருந்த பாலைவழி சிறுவர்களை
கரம்பிடித்துச் சென்றாராம் தவமுனி.               68                                                
ஆற்றலுடையவ ராயினும் பிள்ளைகள்
பூவின் மிக மெல்லியரே! – அவர்கட்கு
நான்முகன் ஆக்கிய மந்திரங்களாம்
பலை, அதிபலையை போதித்தனராம் அப்பாலையில்!   69

இம்மந்திரங்களால் 
புயவலிமை உயர்ந்தோங்கும்!
குண நலமும் சிறந்தோங்கும்!
உறக்கம் கொள்ளாது! நோய் தாக்காது!
அரக்கர்கள் எதிர்த்திடத் தவிப்பர்’ என்றார்.          70

மந்திரம் இரண்டையும், மனனம் செய்திட – கனல்
துஞ்சிய பாலையும், தண்புனல் ஒத்ததாம்!
‘அறிஞ! சடையுடை சிவனின்
விழிபட இவ்விடம் வெந்ததோ? அன்றி           71

வேறொரு காரணம் இதற்குண்டோ?
பழிபடர் மன்னனின் நாட்டைப் போல
அழிந்ததன் காரணம் கூறிடுக!"
வில்லோன் முனிவனை வினவினனாம்.        72

கொன்று உழல் வாழ்க்கையள்
கொடிய கூற்றின் தோற்றத்தள்
ஆயிர மதயானைகளின் வலுவினள்
அவளின் கதை கேளீர்!’ உரைக்கலானார்.         73

'இயக்கர்தம் குலத்தவனாம் சுகேது – அவன்
மயக்கமில்லா மிகத் தூய்மையனாம்
மகவில்லா குறைபோக்க நான்முகனை
மிகப் பலநாள் கடுந்தவமே புரிந்தானாம்.         74

மெச்சிய பிரம்மனும் வர மளித்தான்
‘லட்சுமியை ஒத்த அழகினளாய்
ஆயிரம் யானைகள் வலியவளாய்
பிறப்பாள் ‘தாடகை’ யெனும் புதல்வி            75                 

பிறப்பினில் புதல்வர்கள் இலை யென்றாலும்
புயலாய் வளர்ந்தாள் தாடகையும் – பூப்
பெய்தபின் அவளுக்கு மண முடிக்க
ஆய்ந்தான் தகப்பன் தக்கவனை!                    76

நான்முகன் அருள்வழி பிறந்த தம் மகளுக்கு
நாயகன் 'சுந்தனை' தேர்வு செய்தான். - அவர்க்கு
புஜபல மாரீசன்,  சுவாகுவென 
புவனமே வருந்திட பிள்ளைகள் பிறந்தன              77

மாயமும், வஞ்சமும் மிகுந்த இப்பிள்ளைகள்
சூதுடன், வலிமையும் பொருந்தியே வளர்ந்திட,
சுந்தன் களிப்பின் உச்சத்தில் ஏறி,
வந்தான் அகஸ்த்திய ஆஸ்ரமம் தேடி,              78

அகஸ்த்தியன் என்பார் ஓர் முனிவர் – அவர்க்கு
பரமன் அருளினார் தமிழ் மொழியை!
அருந்தவம் புரிந்த அம் முனிவருமே
அரும் பெரும் சக்திகள் பல பெற்றார்!             79                                              
விருத்திராசுரன் மற்றும் அசுரர்களை
விரட்டினான் இந்திரன் ஒருசமயம் – தன்
சுற்றத்தோடு அவ்வசுரன்
ஆழ்கடல் புகுந்து ஒளிந்து கொண்டான்.          80

அகஸ்த்திய முனி தம் தவப்பயனால் – அக்
கடல்நீர் முழுதையும் கையில் கொண்டு
ஆச மனம்போலே உட் பருகி
அசுரரை இந்திரன் வசம் தந்தார்.                  81

அத்தகு முனியின் ஆஸ்ரமத்தின்
அத்தனை மரத்தையும் வேரறுத்தான் – சுந்தன்
அழகிய உழைகலை மான்கொன்றான் – முனி
தீயெழ விழித்திட நீர்போல் வீழ்ந்தான்,              82

கணவனைக் கொன்றதைக் கேள்வியுற்று
கனல்போல் கனன்ற தாடகையும் – தம்மிரு
மகனுடன் அவ்விடம் வந்தாள்.
முனிவனை முடிப்பதாய் சூளுரைத்தாள்.         83

அச்சமயம் –
இடியும், காற்றும் பொங்கிற்றாம்!
அமரர்கள் ஒளியும் மங்கிற்றாம்!
கதிரும், நிலவும் அஞ்சிற்றாம்!
மிதக்கும் மேகமும் நடுங்கிற்றாம்!               84                                

விழிவழி கனலுமிழ் அகஸ்த்தியனும்
‘அழிவன செய்தலால் அரக்கராயிழிக’ என்ன
உருக்கிய செம்பென அக்கணமே
மூர்க்கர்களாயினர் மூவருமே!                  85

தவபலம் பொறுந்திய அகஸ்த்தியன் சாபத்தை
எதிர்த்திட இயலா இரு மகனும்
அரக்கனாம் ‘சுமாலி’ யுடன் சேர்ந்து,
‘உனக்குயாம் புதல்வரெ’ன்றுறவு கூர்ந்தார்.       86

‘சுமாலி’ யென்பான் இராவணனின்
தாயாம் கேசகியின் தந்தை – இப்
பாட்டன் தம் தமையர் மாலியுடன் – பல
தீங்குகள் புரிந்தே வாழ்ந்து வந்தான்.             87

தேவர்கள் வேண்டிட, திருமால் செய்த -கடும்
போர் தனில் மாண்டனன் மாலியும்!
எஞ்சிய அசுரர்கள் பதுங்கினராம் – மனம்
அஞ்சியே அதளபாதாளத்தில்                  88

இலங்கையை குபேரன் ஆளுகையில்,
இராவணன் வளர்ந்து வரம் பெற்று – தாம்
இலங்கையின் அதிபதி யானதினால் – அங்கே
சுமாலியும் சுற்றமும் குடி பெயர்ந்தார்.           89

தாடகை புதல்வர்கள் இருவரையும்
தசமுகன் மாமனாய் அணைத்துக் கொண்டான்.
சலுகையும், பலமும் கிடைத்ததினால் - அங்கே
அழித்தும், துவைத்தும் திரிந்தனராம்.          90

சாபத்தால் பாதித்த தாடகையும்,
சந்ததி பிரிந்திட மிகத் தவித்தாள்.
அழலெனப் புழுங்கும் மனத்துடனே – இவ்
வனந்தன்னில் வந்து புகுந்திட்டாள்.. – அவள்    91

மண் உதைத்துப் பெயர்த்திடுவாள்!
விண் உருத்து இடித்திடுவாள்!
கண்ணின்று நஞ்சு உமிழ்ந்திடுவாள்!
‘திண்’னென்று இடிபோல் உறுமிடுவாள்!       92

செம்பட்டை முடியுடையாள்! – பிறைபோல்
கோரைப் பற்களுமுடையாள்!
மலையொத்த தனங்களுடையாள் – இம்
மருதத்தைப் பாலை யாக்கிய தாடகையாள்!   93

இலங்கையரசன் ஏவலினால் – பெரும்
இடையூறிவள் இழைக்கின்றாள் – எம்
வேள்வி, யாகம் கெடுக்கின்றாள் – பல
உயிர்கள் தின்று திரிகின்றாள்.               94

இவளை வதைக்க விலை யென்றால்
இரை யெனவே உயிரெல்லாம்
இட்டு வயிற்றை நிரப்பிடுவாள்; -உயிர்
இல்லாமல் செய்திடுவாள்’ உரைத்திட்டார்.   95                                 

‘எங்கிருக்கிறாள் இத்தொழில் இயற்றுபவள்?’ என்று
சங்கின் இடத்தில் வில்தாங்கிய வித்தோன்
சுருண்டு விழுந்த தன் திருமுடியை – மெல்ல
அசைத்து, அழகுற கேட்டதும்,               96

இருப்பது இம்மலை’ காட்டிய கணத்திலே,
கருமலை எரிந்தே நடப்பது போல
உறுமியபடி அத் தாடகையும்
வருவதை மூவரும் உடன் கண்டார்.                  97 

கடைப்புறம் துடித்திடும் புருவம் இரண்டுடன்
மடித்திடும் கோரப் பற்களிரண்டுடன்,
குகை போல் பிளந்த வாயுடனும் - கனல்
புகைந்திடும் விழியினை உருட்டி விழித்தாள்.        98

‘சுவையுடை ஊன் எனக்கரிதன்றோ? - உன்
தீவினை யழைத்திட கருதியதோ? - பலர்
கடக்கவே நடுங்கிடும் இக் காட்டை
அடைந்ததன் பொருளென்ன?’ நகைத்திட்டாள்.     99

மேகம் சிதறிடும் படி விழித்தாள்;
மலையும் உடையும் படி உதைத்தாள்;
'குறியாய் மார்பில் பொருந்தும்படியே
எறிவேன் சூலத்தை!' சூளுரைத் தாள்.     100

அவள் உயிர் முடித்திடல்தான் - இத்
தவமுனியின் கருத்தெனினும்.- அவள்            
பெண்'ணென்ற காரணத்தால் பெருந்தகையும்
அம்பினைத் தொடுத்திடத் தயங்கி நின்றான்.     101
.                                              
'மாதென்றெண்ணுகிறாய்! மணிப் பூணினாய்!
தீதென்றுள்ளவை யாவையும் செய்பவள்.
உருவத்தில் பெண்ணான அரக்கியவள்!
தருமம் அறிந்திடுவாய் தரணியைக் காத்திடுவாய்!.  102                    

குருவாகிய நின்னுரையை
சிரமேற்று சிரத்தையுடன்,
நிறைவேற்றுவதே முறைமை!
அறம் செய்வதே என் கடமை'                    103                 

றிந்தாள் இராமனின் மனக்கருத்தை – பின்
சொறிந்தாள் கனலைத்தன் கண் வழியே!
எறிந்தாள் சூலத்தை இராமன் மேலே
நிறைமதி மேல்வரும் கோளைப் போலே   104                        

(நிறைமதியாம் இராமனைப் பிடிக்க வரும் கேது எனும் கோள் போலே)   

பெண்ணுடன் போர் செய
அண்ணல் தயங்கினார்! – தான்
முன்னம் எறிந்த சூலத்தால் இராமனை
‘மாசற்ற வீரனா'ய் ஆக்கிட்டாள்.       105                                                        

கோலவில் தரையூன்றி அம்பு தொடுத்ததை
கண்டிலர் எவருமே ஒரு நொடியில்
யமனிடமிருந்து ஏவிய சூலமோ
துண்டாய் வீழ்ந்திட அனைவரும் கண்டார்         106                                    
கடலையும் தூர்த்திடும் வலிமையில் சிறந்த 
கல்மழை யொன்றினை வீசிவிட்டாள்!
வில்லின் வீரன் பாணங்கள் ஏவியே
விரைவினில் அம்மழை விலக்கிவிட்டான். – பின் 107                       

வேகத்துடனே, வீரியம் நிறைந்த – முனி
வாக்கினை ஒத்த ‘சுரம்’ பாணம்!
புல்லார்க்கு கூறும் நல்லார் மொழிபோல்
அவள் மார்பினுள் பாய்ந்து பின்புறம் போனதாம். 108                  

(புல்லர் - கல்லாதவர்)     

ஊழிக் காலத்து மாருதம் தாக்கிட,
கடையுக காலத்தில், மின்னிடும் மேகம்
இடியுடன், மோதுண்டு வீழ்வதைப் போலே
தாடகை தரையினில் வீழ்ந்து விட்டாள்.     109                             

தசைகள் பொருந்திய கோரப் பற்களும்,
பிளந்திட்ட வாயுடன் கூடிய தாடகை
தசமுடி ராவண அழிவுக்கு முந்தி,
படியிடை யற்று கொடியென சாய்ந்தாள். 110                            

குருதிப் பீறிட்டு சூழ்ந்த அக்காடு
இரத்தக் கடலென மாறியதாம்!
பற்றுக் கோடற்று தரைமேல் வீழ்ந்த – செவ்
வானப் பரப்பென ஆனதுவாம்!            111                             

அரக்கர்கள் உயிர் கொள்ள பயந்தபடி
தருணம் நோக்கிடும் யம தர்மனுக்கு
தொடக்கம் ஆனதாம் கன்னிப்போர் – இன்னும்
அரக்கர்கள் பலருயிர் சுவைப்பதற்கு.       112                            

கன்னிப் போரினைக் கண்ணுற்ற தேவர்கள்
‘யாமும் இருக்கை பெற்றிட்டோம்,
உமக்கும் இனியில்லை இடையூறெ’ன்று
உவகை மேம்பட உரைத்திட்டார் - பின்    113                            

பூமழை பொழிந்து இராமனை வாழ்த்தி,
‘கோ மகனுக்குக் கொடுப் பீராக
தெய்வப் படைக்கலம்’ என மாமுனிக் குரைத்து,
வானுலகடைந்தார் விண்ணவர். 
    114.     

(தொடர்ந்து வரும்)