திங்கள், 12 அக்டோபர், 2020

லக்ஷ்மி ராமாயணம் - அயோத்தியா காண்டம் - பகுதி 5

 

                       பள்ளிப்படை படலம்

 

‘அவசரக் காரியம் இயற்றுதற் கெனவே

அவசியம் புறப்பட்டு வரவேண்டும்'  எனும்

முத்திரைப் பதித்த ஓலையைத் தூதரும்

புத்திரன் பரதனிடம்  பத்திரமாய் ஈந்தனர் .

120

 

தொழுதான் பரதன் தம் பாட்டனாரை!

‘எழுக சேனை’ என பதட்டத்துடன் சொன்னான்.

தழுவும் சத்ருக்ன தம்பியும் தானுமாய்

பொழுதுடன் தேரினில்  புறப்பட்டு விட்டான்.

121

                  

                            கோசலத்தின் அவல நிலை

பொலிவிழந்த கோசலத்தைக் கண்டதுமே

நலிவுற்ற பரதனும்  கலக்க முற்றான்.

'பெருந்தீங்கு நிகழ்ந்ததோ'வென பயப்பட்டான்.

பெருந்துயரின் பிடியினிலே அகப்பட்டான்.

122

 

அரண்மனை யடைந்ததும் விரைந்தான் தந்தையிடம்.

நல்லிடம் எங்கினும் கண்டிலன்; கலங்கினான்.

அணைத்தாள் தன் மகனை கேகயி அன்னை .

வினவினாள் கேகய நாட்டின் நலத்தினை.

123

 

சுருங்கச் சொன்னான் ‘நலமென்று’

அறிய விழைந்தான் ‘கோ எங்கென்று?’

‘வானகம் எய்தினன்’ என்றவள் சொன்னதும்

பேரிடி தாக்கிட வேரறுந்து வீழ்ந்தான்.

124

 

‘இராமனைக் கண்டேனும் துயர் தணிவோம்’ என்ன

‘இனிதுள்ளான் இளவலோடும், துணைவியோடும் கானகத்தில்

மரவுரியோடும்  சடாமுடியோடும் தவக்கோலத்தில்’ என்றாள்.

நெருப்புண்டாற் போல்  துடித்துப் போனான் பரதன்

125

 

வனத்தினுள் தமையன் சென்றது, தந்தை

விண்ணுலகு எய்தற்கு முன்போ, பின்போ,

எதனாலோ, யாராலோ என்பது போல்

விதவிதமாய்  அடுக்கலானான் வினாக்களை.

126

                 கைகேயி நிகழ்ந்ததைக் கூறுதல்

 

உள்ளது உள்ளபடி கூறலானாள் கைகேயி.

நல்லது ஒன்றுமே இல்லாமைக் கண்டவன்

கரங்களால் காதுகளை அழுத்தமாய் மூடினான்.

விரிந்த விழிகளால் உதிரத்தை உமிழ்ந்தான்.

127

 

‘பூண்டனென் தமையன் திருத்தவக்கோலம்

மாண்டனென் தந்தை நீயேதான் காரணம்.

தாயென உனை நான் கருதுதலே பாவம்.

'உடந்தையாய் இருப்பேன் நான்' என்றதே என் கோபம்’

128

 

                கோசலையின் இருப்பிடம் செல்லுதல்

 

விரைந்து சென்றான் கோசலையின் இருப்பிடம்.

விசும்பிப் பற்றினான் அவளின் மலர்க்கரம்.

‘'கேகயர் கோமகள் இழைத்த கைதவம்

அறிந்திலன் போலும் நீ” வினவினாள்.

129

 

'எனையீன்றவள்  செய்த தீ வினையால்

எனக்கீந்த இவ்வரசை ஏலேன் நானெ’ன்றான்.

'நானிலத்தில் நிகழ்ந்திட்ட இப்பாவத்தால்

நரகத்துள் போவேன் தானெ’ன்றான்.

130

 

தூய வாசகம் கூறிய தோன்றலை

ஆரத் தழுவினாள் கண்ணீர் பெருகிட.

‘மன்னர் மன்னவா’ விளித்துச் சொன்னாள்,

உன்னை நிகர்த்த தன்மையார் யாருள்ளார்?’.

131

                

                      தசரதனது உடலைக் காணுதல்

 

மண்மேல் விழுந்து தந்தையைத் தழுவினான்.

கண்ணீர் சொறிந்து அவருடலைக் கழுவினான்.

‘இறுதிக் காரியம் இயற்றுதற்கு வருக’ வென்று

பரதனை வேதியர் அழைத்ததும் வசிட்டர்,

132

 

‘மகனல்லன் நீ’யென்று மருகினார் நின் தந்தை

தேர்ந்தலன் நீ ஈமச்சடங்கினை இயற்றுதற்கு’ என்றபடி

ஆகம முறைப்படி ஆகவேண்டியதை

முற்றுவித்தார் சத்ருக்ன மகன் கொண்டு.

133

 

அரற்றினான் பரதன்

‘பிரேத பூசனை செய்விப்பதற்கும்

பேறு அற்ற பாவியாய் ஆனேனே!

அரியணை  ஏறிட மட்டும் நான்

உரிமையுள்ளவன் ஆவேனோ? அல்லேன்’அழுதான்.

134

 

தாமரை மலர்செறி தடாகத்தினுள்ளே

தாவிப் பாய்ந்திடும் மயில்களைப் போலே

அறுபதி னாயிரம் அரண்மனை தேவியர்

எரியில் புகுந்தனர் மகிழ்ச்சியினோடே!

135

                           

                              ஆறுசெல் படலம்

 

மந்திரக் கிழவர் வசிட்ட முனியுடன்,

தந்திரத் தலைவரும், நகர மாந்தரும்,

கொற்றவக் குரிசிலை சூழ அமர்ந்து,

‘நாட்டினை ஆண்டிட, முடிசூடிட அழைத்தனர்.

136

 

‘நஞ்சை உண்க’ என்றது போலே,

நடுக்கமடைந்து சோர்ந்தனன் சொன்னான்.

‘மூவுலகாளவே மூத்தவன் இருக்கையில்

ஈன்றவள் செய்தது பெரும் பிழையென்றே

137

‘நன்னெறி இது’வென உரைத்தாலும்,

மன்னுயிர் சுமந்து வாழ்தல் விரும்பேன்.

அன்னதற்குரிய அண்ணலைக் கொணர்ந்து

மண்ணினை ஆண்டிடச் செய்திடுவேன்.

138

அன்றெனின் அவனுடனே யிருந்து,

அருந்தவம் நானும் இயற்றிடுவேன்.

அதுவும் கை கூடாத நிலையென்றால்

இனிதின் என்னுயிர் போக்கிடுவே’னென்றான்.

139

 

அரியணை யேற்று சிறப்புற ஆளினும்

முடியதைத் துறந்ததை அவையோர் வியந்தனர்.

அரசினை மறுத்த பரதனை அமைச்சர்கள்

‘வாழிய நின் புகழெ’ன பாடியே வாழ்த்தினர்.

140

 

முறைப்படி வேந்தனை அழைத்திடுவேனென

நெறிப்படி முரசினை அறையச் செய்தான்.

அன்னையர் மூவர், அமைச்சர் தொடர்ந்திட,

முனைப்புடன் கிளம்பினர் பரத சத்ருக்னர்.

141

                           


 

லக்ஷ்மி ராமாயணம் = அயோத்தியா காண்டம் - பகுதி 4

 

                        தைலமாட்டுப் படலம்

 

செம்பொன் தேரேறிப் புறப்பட்ட மூவரையும்,

கண்ணீர் பெருக்கோடு கண்டனர் அனைவரும்.

அன்புப் பிராவாகத்தில் ஆட்கொண்ட குடிமக்கள்.

பின்தொடர்ந்து நடந்திட உண்டானதோ பெரும்திரள்.

85

                    இராமபிரான் சுமந்திரனிடம் கூறுதல்

நள்ளிரவு நேரத்தில் சோலையொன்றை அடைந்தனர்.

கள்ளமற்ற நகரமாந்தர் கண்ணயர்ந்து உறங்கினர்.

உறக்கமின்றி தவித்தபடி விழித்திருந்த இராமபிரான்

உரையாடத் தொடங்கினார் சுமந்திரனெனும் அமைச்சரிடம்.

86

 

‘உம்மால் செயத்தக்க செயலொன்று உள.

எம்பால் அன்புகொண்டு எனைத்தொடர்வார் பலர்!

பூண்டபேர் அன்பினாரை அனுப்புவது எளிதன்று.

உடனழைத்துச் செல்லுவதும் முறையன்று.

87

 

வேண்டுவது யாதெனில், இவர் விழிப்பதற்குள்

தூண்டிடணும் வெறும்தேரை நகர்நோக்கி,

சென்றிடுவோம் அவ்வமையம் வனம் நோக்கி!

தேர்ச்சுவட்டால் இவர் மீள்வார் நகர்நோக்கி’ யென்றான்.

88

 

‘மன்னவர்க்கும், அத்தையர்க்கும் அன்பு சொல்லி,

மலரினையும், கிளியினையும் பேணிடெ’ன்று

திண்தேர் வல்லான் சுமந்திரன் நோக்கி

கண்ணீர் பெருகிட மொழிந்தாள் பிராட்டி.

89

.

 

திருவடி வீழ்ந்து எழுந்தான் சுமந்திரன்.

‘அரசர்க்கும் அன்னையர்க்கும் சேதி யாதெ’ன

பெருகிய துயருடன் இலக்குவன் நோக்கி,

கனத்த மனத்துடன் வினவியே நின்றான்.

90

                  இலக்குவன் சினந்து கூறல்

 

‘வனத்துக்குள் தன்மகனை அனுப்பிவிட்டும்,

வானகமே சென்றிடா வலிமையுடை அரச’ரென

சினந்து சிவந்த தம்பியை அணைத்துத்

தணித்தான் சினத்தினை தமையன் இராமன். - பின்

91

 

விரைந்தனர் மூவரும் கானகத் துள்ளே!

நுழைந்தது தேரொலி அயோத்தியி னுள்ளே!

திரும்பி வந்தனனோ வில் வீரனென

வீறுகொண்டெழுந்த தசரதன் மாண்டுபோனான்.

92

                      கோசலையின் நிலை

 

‘பூத்துக் காய்த்த பின் மடிந்திடும்

மூங்கிலும், வாழையும் போலே,

மூப்போ, போரோ, நோயோ யின்றி

இறந்தாரே!’ யெனப் புலம்பினாள் கோசலை.

93

 

மயிற் கூட்டமென மன்னனைச் சூழ்ந்தனர்

அறுபதினாயிரம் அரண்மனை தேவியர்.

சேதிகேட்டு ஓடிவந்த மாமுனிவர் வசிட்டரும்

விதிசெய்த வினையெண்ணி வருத்தமுற்றார்.

94

       

           வசிட்டன் தசரதன் உடலைத் தைலத்தில் இடுவித்தல்

 

இறுதிக் காரியம் இயற்றுவதற்கு,

உரியவர் எவரும் அருகிலில்லை.

பரதன் வரும்வரை இவ்வுடலை

பத்திரப் படுத்திட தைலத்தி லிட்டார்.

95

 

பட்டத்துத் தேவியர் இருவரது

துக்கத்தை எவ்விதம் தாம் உரைப்பது?

திக்பிரமை பீடித்த அவர் மனதை

மாற்றிடத்தான் எங்கனம் நாம் முனைவது?

96

                       பரதனுக்கு ஓலை போக்கல்

 

 

பாட்டனார் வீட்டிருந்த பரதனைக்

கூட்டிவர பணித்தனர் தூதனை! - அவன்

வருமளவும் நகரத்தைக் காக்கவென்று

கிரணங்கள் விரித்துதித்தான் கதிரவன்.

97

                       

                                கங்கைப் படலம்

 

சோலையிலே கண்ணயர்ந்த குடி மக்கள்

காலையிலே கண்விழித்துக் கலக்க முற்றனர்.

மூவரையும் எவ்விடமும் தேடிப் பார்த்தனர்.

தேர்தடத்தைப் பின்பற்றித் திரும்பிப் போயினர்.

98

தம்பியும், துணைவியும் பின் தொடர,

அன்னம் துயிலும் நந்த வனத்தையும்,

பொன்னைக் கொழித்திடும் நதிகளையும்,

தாண்டியபடியே கங்கையை அடைந்தான்.

99

 

பொங்கும் கங்கைக் கரைதனிலே,

தங்கியபடி தவம் செய்துவரும்,

முனிவர்கள் எதிர்கொண்டார் மூவரையும் – பின்னர்

இலையுண வளித்தே இன்புற்றார்.

100

 

                            குகப்படலம்

          இராமன் இருந்த ஆஸ்ரம வாயிலை குகன் அடைதல்

ஓடங்களின் நாயகன்; வேடர்குல வீரியன்;

இடையினிலே ‘துடி’யென்னும் பறை உடையான்;

‘இடி’யனைய திடமான குணமுடையான்;

இருள் கவிந்த நிறமுடைய ‘குகனெ’ன்பான்.,

101

அவன்-

தீரனாம் இராமனின் காவியம் அறிந்ததவன்

தரிசனம் செய்திட வேட்கையும் கொண்டவன்.

கானகம் எய்திய இராமனை இவ்விடம்

கண்டிட கருத்தாய் உறுதியும் பூண்டவன்.

102

 

தாம் நித்தம் உண்ணும் ஊன், மீன், கள்ளின்

நாற்றம் வீசிடும் நல்லான் இன்று

சீற்றம் துறந்து, குறுவாள் தவிர்த்து,

நற்றவ சாலையின் வாயிலை யடைந்தான்.

103

 

இலக்குவன் வினவினான், ‘யாரெ’ன்று.

விளக்கினான் குகனும் இன்னாரென்று.

உள்ளத்தூயவன், நல்லவன் இவனென்று

உள்ளே இளவல் அழைத்து வந்தான்.

104

அண்ணலைக் கண்களால் கண்டதும் கனிந்தவன்.

மண்ணுறக் குனிந்து, வாய்ப்பிளந்து பணிந்தான்.

ஒருக்கை நீட்டியபடி முறுவல் புரிந்து

‘இருக்கையில் இருத்தி’ சுட்டினான் இராமன்.

105

.இருந்திலன் குகனோ, தாம் அன்புப் பெருக்குடன்

திருத்திக் கொணர்ந்த தேனையும், மீனையும்,

கருத்தாய் படைத்தான் நாயகன் எதிரினில்

‘திருவுளம் கனிந்து ஏற்பீர்’ என்றான்.

106

 

நீள்பெரும் உலகின் நீள அகலமாய்

ஆழ் கடல் மூழ்கி மீனையெடுத்தவன்.

ஆகாயம் தொடும் சிகரம் வரை சென்று

பாங்காய் தேனையும் எடுத்து வந்தான்.

107

 

                       இராமன் கூற்று

 

‘அன்புடன் நீ கொணர்ந்த பொருட்களெல்லாம்

அமுதினும் அரிதான ஒன்றென நானறிவேன்.

எமையொத்த முனிவர்க்கும் உரியன. - அவற்றை

யாமும் இனிதின் உண்டனம்’ என்றான். – பின்

108

 

‘பொங்கிடும் கங்கையை யாம் நாளைப்

பொழுதினில் கடந்திட இருப்பதினால்

இரவினைக் கழித்திடு நின் கிளையோடு.

விடியலில் வந்திடு படகோடு’ யென்றான்.

109

 

‘இங்கனம் உன்னைப் பார்த்தபின் கண்ணை

எவ்விதம் நானும் ஈர்த்திடுவேன்?’ என்ன

‘இருத்தி’யென்றதும் ‘துடி’யுடன் குகனும்

துடிப்புடன் காவல் இருக்கலானான்.

110

 

நாணலில் துயின்றனர் நாயகன், நாயகி

நற்காவலிலிருந்தான் இமைத்திடா தம்பி.

கதிரவன் உதித்தான் கதிர்களைப் பரப்பி,

கமலமும் விரிந்தது மனதினால் விரும்பி.

111

‘கொணருதி நாவாய் சடுதியில்’ இராமன் சொன்னதும்

‘இனிதிரு எம்மொடு’ குகன் சொன்னான்.

‘மீண்டு வருகையில் இருப்போம்’ என்றே,

ஏறினர் மூவரும் ஓடத்தின் மீதே!

112

கரையேறினர் மூவரும்! கண்கலங்கினான் குகனும்!

‘பிரியிலேன் நானும்மை, உடனிருந்து உதவிடணும்’

‘அன்புள நால்வர் இன்று ஐவரானோம் – இனிமேல்

உன்கிளை, என்கிளை, இனிது கா’வென்றான் இராமன்.

113

                      

                              வனம் புகு படலம்

சிங்கமும், களிரும் குட்டியும், கன்றுமாய்

அங்கங்கே நடைபயின்று அலைந்திருந்த

அடர்காட்டின் இடை புகுந்த மூவரும்

அடைந்தனராம் பரத்வா சாஸ்ரமம்.

114

 

அங்கே

சிரமப் பரிகாரம் செய்த பின்னர்,

‘சித்திர கூடம்’ நோக்கிப் புறப்பட்டனர்.

எதிர்ப்பட்ட சுட்டெரிக்கும் பாலை யொன்று

மருதமாகிக் குளிரூட்டி மகிழ்வித்தது சூடுபோக்கி.

115

(சித்திரக்கூடம் – உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத்துக்கு அருகில் உள்ளது)

 

சித்திரக் கூடத்தை அடைந்தனர் மூவரும்.

கண்களை மூடியே கடவுளை வேண்டினர்.

இளவல் அமைத்தான் பர்ணசாலையை! – அண்ணன்

உள்ளம் உருகிட அணைத்தான் தம்பியை!

116

 

‘மன்னவன் ஆணையைப் பேணிடும் பொருட்டு,

மரவுரி தரித்து கானகம் வந்தேன். - நான்

இடருனக் கிழைத்தது சரியல்ல!’ – நீ

இன்னல்கள் சகிப்பது முறையுமல்ல!’ கலங்கினான்.

117

 

‘ஐயனே!

நின் தொண்டு இன்பமே எனக்கு.

துன்பம் தருவதும் ஒன்றுணடு - நீ

முன்னம் பிறந்தவன் என்பதினாலே

மண்ணைத் துறந்திட நேர்ந்ததே!’ யென்றான்.

118

 

அணைத்துத் தேற்றினான் தம்பியை!

அமர்ந்து நேற்றான் நோன்பினை! – அங்கோ

தலைவனை இழந்த அயோத்தி மாநகர்

தாயிழந்த கன்றுபோல் கதறி யழுதது.

119

லக்ஷ்மி ராமாயணம் - அயோத்தியா காண்டம் - பகுதி 3

 

                    தசரதனைக் கண்ட கோசலையின் நிலை


‘நாடு காத்தல் பரதனது ஆகட்டும்! - இராமன்

காடு செல்லல் தடைபட வேண்டும்’ என

நாதனை வேண்டிட, கோசலை சென்றாள். – அங்கே

மூர்ச்சித்திருந்த மன்னனின் மார்பினில் மூர்ச்சித்தாள்.               61

 

தெளிவு பெற்றதும் கலங்கிப் புலம்பினாள்.

ஒளிகுன்றி நினைவின்றி மன்னன் கிடத்தலின்,

“இராமா, இராமா’ வென அழுகுரலில் உரத்தழைத்தாள்.

வாராய் மன்னன்தன்மை காண” வென ஓலமிட்டாள்.               62

 

                  வசிட்ட முனிவர் வருகை

 

மங்கலங்கள் நிகழவுள்ள அந்த வேளையில்

அமங்கலமாய் அழும் ஓசை காதில் அறைந்ததும்,

அரசர்களும் முனிவர்களும் அதிர்ச்சியுற்றனர்.

விபரமறிய வசிட்டமுனி விரைந்து வந்தனர்.                       63

                 

                  கைகேயி நிகழ்ந்தவை கூறுதல்

 

மயங்கித் தளர்ந்த கோசலையால்

விளக்கிச் சொல்லல் ஆகா ததனால்

மயங்கிய மாமன்னன் நிலை பற்றி,                       

கேகயர்கோன் மகள் நோக்கிக் கோரினார்.                          64

 

தன்னால் நிகழ்ந்த தனைத்து நிகழ்வையும்

 

தானே தெளிவாய் தெரிவித் தாள்;

தன்னுணர் வெய்திய தசரத மன்னனும்,

‘இராமா.. இராமா’ எனப் புகன்றான்.                                65

 

                 முனிவன் கைகேயியை வேண்டுதல்

 

‘மனுவழி சென்றிடும் பெண்ணே! – நின்

புதல்வனுக் கரசினைப் பெற்றுக்கொள்.

வனத்திடை இராமனை அனுப்புதல் தவிர்த்து

ஏனையோர் உயிரை காத்துச் செல்’ இறைஞ்சினார்.                 66

 

அவளோ..

கொண்ட சொல் மாறாது வீம்பாயிருந்தாள்.

நயந்து கேட்டவர், கடிந்து கொண்டார்.

‘மன்னரும், பிறரும் மாண்டு போயிடின்,

உன்னைத்தான் உலகார் இகழ்வா’ரென்றார்.                         67

 

                 தசரதன் தன் சாப வரலாற்றைக் கூறுதல்

 

முன்பொருநாள்,

யானைகளை வேட்டை யாட,

சுனையோரம் மறைந்திருந்தேன்.

நீரருந்தும் யானையொலி காதில் விழ

‘சப்தபேதி பாண’ மெய்தேன்.                                      68

 

அலறியதோர் மனிதக் குரல் கேட்டு,

அஞ்சி நடுங்கி அவ்விடம் வந்தேன்.

பார்வையிழந்த முனிதம்பதியின் மகனொருவன்,

நீர்மொண்ட ஒலியென்று நானுணர்ந்தேன்.                         69

 

உயிரொடுங்கும் நிலையிருந்த அக்குமரன்

தவித்திருக்கும் பெற்றோர்தம் நீர்வேட்கை

தணித்திட வேண்டுமென கரம்கூப்பி வேண்டினான்.

கணத்துக்குள் கண்மூடி விண்ணுலக மேகினான்.. –                  70

 

மகனைச் சுமந்தபடி நீரெடுத்து நான் வந்தேன்.

அடியோசை கேட்டவர்கள் ஆவலுடன் அளவளாவ,

‘அறியாப் பிழையினால் மகனைக் கொன்ற

கொற்றவன் நானினி உன் மக’னென்றேன்.                          71

 

நீரெடுத்து வந்தவன் தம் மகனல்லன்

‘மகனைக் கொன்ற பாதகன்’ என்றறிந்து

‘ஏவா மகவைப் பிரிந்து எம்போல்

போவாய் நீயும் விண்ணுலகெ’ன சபித்தார்.                        72

 

‘விழிபோயிற்றே!’ யென வீழ்ந் தயர்ந்தார்.

‘மகவை இழந்து இறப்பாய்’ என்னாது

‘மகவைப் பிரிந்து’ என்றதே கடிதன்று.

இராமன் பிரிய நான் இறப்பதுறுதி’யென்றார்.                       73

 

                 வசிட்ட முனிவன் அரசவையில் கூறுதல்

காத்திருந்த அவை முன்னே வசிட்டமுனி

கைகேயி வரம் பற்றி கூறலானார்.

வாய்மையுடை பெரியோனுரை கேட்டதுமே

விதியெண்ணி அனைவருமே கலக்கமுற்றார்.

74               

 

                      இலக்குவனது போர்க்கோலம்

 

‘மணிமகுடம் தமையனது தலை மீது,

அணிவிப்பேன் தடை களைந்து!’ யென்றபடி,

பேரிடியாய் முழக்கமிட்டுப் புறப்பட்டான்.

போர்க்கோலம் பூண்ட இளையான் இலக்குவன்.                   75

 

                         இராமபிரான் நல்லுரை

 

‘மதியின் பிழையோ, மகனின் பிழையோ அன்று!

விதியின் பிழைதான் இங்கனம் நிகழ்ந்தது. - நீ

வெகுண்டு, பயனில்லை’ யெனச்சொல்லி, அவன்

சீற்றத்தை மாற்றிட முயற்சித்தான் இராமன்.                      76                   

 

சினம் தணிந்த இலக் குவனை

இனிது இறுக்கித் தழுவினான். – பின்

சுமித்ரைத்தாயை தரிசனம் செய்ய

தம்பியும், தானுமாய் புறப்பட்டான்.                                77

 

கண்களை ஒத்தத் தன்னிரு மகன்களும்,

தண்டாவனம்வரை செல்வதை யெண்ணி,

தளர்ந்து வருந்திய அன்னையைத் தொழுது,

‘மீள்வோம்! நீ கலங்கா திரு’ யென்றான்.                           78

 

 இலக்குவன் அன்னைபால் தமையனுடன் செல்ல விடை கேட்டல்

 

அன்னையின் திருவடி வணங்கிய இலக்குவன்

“உடன் சென்றிடுவாய் மகனே’ யென

உடன்பட்டு சொல்லிடு தாயே! எனக்கோர,

‘உடனே புறப்படு நீயென்றாள் உளமாற ‘                           79

 

மறுத்துப் பார்த்தான் இராம பிரான்

மரவுரி தானும் தரித்தான் இளையான்.

குமரர்கள் கோலத்தைக் கண்ணுற்ற தேவர்கள்

குமுறிய நெஞ்சுடன் குழம்பித் தவித்தனர்.                         80

 

                    பிராட்டி இராமனிடம் வினவுதல் 

 

சீதையின் அரண்மனை யடைந்தனர் இருவரும்.

நிகழ்ந்தது அறிந்திடா தேவியோ அதிர்ந்தனள்.

நேர்ந்தது யாதென வினவியே வியர்த்தனள்.

தந்தையின் ஆணையை கேட்டதும் வியந்தனள்.                    81

 

            பிராட்டி கூறுதலும் இராமனின் மறுமொழியும்

 

‘மன்னரின் கூற்றினைப் படிவது முறையே!

என்னையும் கூட்டிச் செல்வது சரியே!’ என்ன

‘கானகம் கொடிய அரக்கரின் இருப்பிடம்

கால்களும் சுட்டுப் பொசுக்கிடும்’ என்றான்.                       82

 

‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடெ’ன

நினைத்தவள், நுழைந்தாள் அந்தப் புரத்தினுள்!

துணிந்து புனைந்தாள் மரவுரி அணிகளை

பணிந்து பற்றினாள் கணவனின் கரங்களை!                        83

 

மரவுரி தரித்த திருமகள் பின்செல,

விற்கை வீரனாம் இளையவன் முன்செல,

கார்வண்ண இராமன் கானகம் செல்வதைக்

கண்டவர்  துன்பத்தை, எவ்விதம் சொல்ல!

84

லக்ஷ்மி ராமாயணம் - அயோத்தியா காண்டம் - பகுதி 2

 

                      3. கைகேயி சூழ்வினைப் படலம்

 

முடிசூட்டு நிகழ்ச்சியின் முன்னேற்பாடுகளை

முறையாக முடித்து விட்ட மாமன்னன்,

இன்சொல் பேசிடும் கைகேயி மாளிகையுள்

பின்னிரவு நேரத்தில் புன்னகையுடன் நுழைந்தார்.                   37

 

பஞ்சணை துறந்தவள் படுத்திருந்த நிலைகண்டு,

நெஞ்சம் பதறிய தசரதனும் – சிறு

மானைத்தன் துதிக்கையால் தூக்கிடும் பெரிய

யானையைப் போலே அணைத் தெடுத்தார்.                         38

 

அணைத்த கைகளை அப்புறப்படுத்தியே

துவண்டு விழுந்தாள் மின்னற்கொடியாள்.

துணுக்குற்ற தசரதன், துரிதமாய் வினவினான்,

“நிகழ்ந்தது என்ன? உனை இகழ்ந்தவர் யாரெ”ன?                          39

 

கண்ணீர் பெருகிய நெடுங்கண்ணுடனவள்,

‘என்பால் கருணை உளதென்றால் – நீ

முன்னம் அருளிய வரங்கள் இரண்டையும்

இன்றே பரிந்து அளித்திடு’ யென்றாள்.                              40

 

                        மன்னன் வாக்களித்தல்

 

கள்ளம் கொஞ்சமும் இல்லா மன்னனும்,

‘வள்ளலாம், நும்மகன் இராமன்மேல் ஆணையுடன்,

உள்ளமிசைந்திட அளிப்பேன் வரங்களை!’ என்ன,

‘இமையோர் சான்றாய் ஈன்ற வரம் ஈதி! யென்றவள்-                41

 

வரமொன்றால் தன்சேய் பரதனுக்கு நாடென்றாள்!

வரமிரண்டால் சீதையின் கணவனுக்கு வனமென்றாள்.

வேகமிழந்த வேழம் போலே தசரதனும்,

தேகமதிர, நெடிது வீழ்ந்தான் நிலம் மீதே!                          42

 

உலர்ந்து வெடித்த தவன் நாவு!

புலர்ந்து வாடிய தவன் உள்ளம்!

புலனைந்தும் பொறி கலங்கியது.

புலம்பிப் புழுங்கினர் தேவர்கள்.                                    43

 

                              மன்னரது வேண்டுகோள்

 

‘நின்மகன் பரதன் இவ்வரசு கொள்ளான்!

அன்னான் கொள்ளினும் இந்நிலம் நள்ளாது.

வனத்திடை இராமனை மூவுலகார் கொள்ளார்.

மண்ணை நீகொள்! மற்றது மற’வென்றான்.                         44

 

‘’தந்த வரங்களைத் தவிரென்பது,

தவறன்றி, அறமாமோ உரை’ உரத்துக்கூற,

இடிதாக்கிய மால்வரை போலே,

பொடிந்து உதிர்ந்தான் தரைமேலே!                                 45

 

                      கைகேயி கூற்று

 

பசையற்ற கைகேயி, திசையினின்று வழுவாமல்

‘இசைந்திடுக இருவரம் ஈந்தேனென!

மசியாவிடில் உயிர் மாய்வேன் நானெ’ன்றதும்,

‘ஈந்தேன், ஈந்தேன்’ யென்றபடி மூர்ச்சித்தான்                        46

 

                      சூரியோதயம்

பொழுது புலர்ந்து, பறவைகள் ஒலித்ததும்,

அமிழ்து உண்டிட குமிழும் அமரர் போல்,

அரச வெள்ளம் நகரமெங்கும் பெருகிவர

பாரகர்கள் வந்தடைந்தார் வேத மோத!                             47

 

மண்டபமடைந்த வசிட்ட முனிவரும்,

மனமகிழ்வுடனே மகுடம் சூட்டிட,

மங்கலப் பொருட்களைச் சேகரித்தார். – பின்

மன்னனை யழைக்க சுமித்ரனைப் பணித்தார்.                       48

 

வேந்தனை எங்குமே கண்டிலா சுமித்ரன்,

தாதியை வினவியே விவர மறிந்தான் - பின்

கேகயி மாளிகை யடைந்ததும், அவளோ

‘இராமனை இவ்விடம் கொணரெ’ன்றாள்.                           49

 

அன்னை அழைத்ததும், அரசர்கள் தொடர்ந்திட,

அரண்மனைக்குள்ளே நுழைந்தான் இராகவன்

தேரினில் ஏறியே குமரன் சென்றதை,

குழுமிய மக்களும், மகிழ்ந்து பார்த்தனர்.                      

50

.                    

தாயை வணங்கிய தமையனின் எதிரில்,

தனியளாய் வந்தாள் சிற்றன்னை!

நாயகன் ஆணை உனக்கென்றே

நயந்தா ளிரு வரங்களைப் பின்வருமாறு!                              51

 

“ஆழிசூழ் உலகெலாம் பரதனே ஆளவேண்டும் - நீ

தாழிரு சடைகளுடன் அருந்தவங்கள் புரிந்தவண்ணம்

புழுதியுடை கானகத்தில் புண்ணியத் துறைகளாடி,

ஏழிரு ஆண்டின்பின் வாவென்றான் அரசனெ”ன்றாள்.                52

 

‘மன்னவன் ஆணை’ தானென இல்லை!

நும் பணி ஏற்றலும் என் கடனே!

பின்னவன் பெற்றிடும் அரசென்றால் – அதை

எண்ணிட என்மனம் நிறைகின்றதே!                                53

 

இருளுடை உலகினைத் தாங்கலி லிருந்து

அவிழ்ந்ததைப் போலே உணர்கின்றேன்!

நும்பணி தலைமேல் கொள்ளு கின்றேன்.

இப்போதே வனம் செல்லுகின்றேன்!’                              54

 

                    நகர் நீங்கு படலம்

வெண்கொற்றக் குடை தாங்கி, விண்ணதிர

பொன்மகுடம் தரித்தபடி தனை தரிசிக்க

அருமைந்தன் வருவானென கோசலைத்தாய்

அகமகிழ முகம்மலர்ந்து அமர்ந்திருந்தாள்                          55

 

இழைக்கின்ற விதி முன்னே சென்றிட

அறம் வருந்திப் பின்தொடர்ந்து வந்திட,

குழைகின்ற கவரியின்றி கொற்றமின்றித்,

தனியனாய் மைந்தன்வர பரிதவித்து வினவினாள்.                  56

 

கரம்குவித்த ராமன், “நின் காதல் திருமகன்

பரதனேயின்று மாமுடிதரிக்க உள்ளான்’ யென்றதும்,

“நன்றே நீ நானிலம் நல்கிய தென்றும்,

ஒன்றி உடன்பட்டுப் பல்லாண்டு வாழெ”ன்றாள்.                     56

 

‘மரவுரி தரித்து நான் மாதவத்தோருடன்,

காட்டிடை வாழ்ந்து ஏழிரு ஆண்டின்பின்

மீண்டு வருதலே அரசகட்டளை’ யென்றதும்,

ஏங்கி இளைத்தாள்; மனம் வீங்கித் தவித்தாள்.                      57

 

“தஞ்சமாக இப்புவியைத் தாங்கிடென அழைத்தபின்,

வஞ்சனையாய் உனைமட்டும் வனத்திடையே அனுப்புதல்,

நஞ்சன்றி வேறென்ன? அருமைந்தே! – இனி

அஞ்சும் என்னுயிர் தரியாதே!’ புலம்பினாள்.                        58

 

                    கோசலையை இராமன் தேற்றுதல்

‘அன்னையே!

ஐம் பூதங்களும் அழிந்து போயினும்,

அண்ணலின் ஏவல் மறுக்க லாகுமோ?

சிறந்த எந்தம்பி அரசுரிமை ஏற்கட்டும்!

குறித்த நேரத்தில் திரும்பி நான் வருவேன்.:                         59

 

“என்னையும் உன்னோடு கொண்டனை” அன்னை கூற,

“என்னை நீங்கி துயர் கடல் மூழ்கும்

மன்னர் மன்னனைத் தேற்றிடு நீ” யென்றவன்

சுமித்திரை அன்னையின் மாளிகை யடைந்தான்.                    60