வியாழன், 26 ஏப்ரல், 2018

பழமொழிகள் - யானை

                                                         யானை

    இந்துக்களின் முதன்மைக் கடவுளான 'வினாயகர்' யானை முகம் கொண்டவர்.

    'ஐந்து கரத்தனை, யானை முகத்தனை
     இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை
     நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினைப்
     புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!
என்று வினாயகர் துதி பாடி, வழிபடுகிறோம்.

     யானை ஒருமுறை குளத்து நீரில் குளிக்க இறங்குகையில், அதன் காலை முதலை ஒன்று கவ்வ, 'ஆதிமூலமே!' என்று இறைவனை உதவிக்கு அழைக்க, உடனே மகாவிஷ்ணு, விரைந்து வந்து தன் சக்கரத்தால் முதலையை இரு துண்டுகளாக்கினார் என்று ஒரு புராணக் கதை உண்டு.

     குறத்தியான வள்ளியை மணம் முடிக்க விரும்பிய முருகன், கிழ வேடமிட்டு, வள்ளி இருந்த வனத்திற்குப் போய், அவளிடம் யாசகம் கேட்க, திணைமாவைத் தருகிறாள். அதனை உண்ணும்போது விக்கல் ஏற்படுகிறது. உடனே வள்ளி, முருகனை, ஒரு நீர்ச்சுனைக்கு அழைத்துச் செல்கிறாள். காட்டில் வாழும் வள்ளிக்கு, யானை மட்டுமே பயப்படுத்தும் மிருகம் என்பதை அறிந்து கொண்டு, 'யானை அண்ணா' என்று பெருங்குரலெடுத்து அழைக்க, உடனே பிள்ளையார் யானை உருகொண்டு அவ்விடம் வந்து, முருகன் வள்ளி திருமணத்தை நிகழ்த்தினார்.

                                   யானையைப் பற்றிய பழமொழிகள்.

1. யானை அசைந்து தின்னும்; வீடு அசையாமல் தின்னும்.
2. யானை ஆசார வாசலைக் காக்கும்; பூனை புழுத்த மீனைக் காக்கும்.
3. யானை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா?
4. யானை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.
5. யானை உண்ட விளாங்கனியைப் போல.
6. யானை ,ஒரு திட்டி வாசலில் நுழைவதைப் போல.
7. யானை ஒரு குட்டி போடுவதும், பன்னி பல குட்டி போடுவதும்.ஒன்றாகுமா?
8. யானை தன்னைக் கட்ட சங்கிலியை தானே எடுத்துக் கொடுத்தாற் போல.
9. யானை கண்ட குருடர் அடித்துக் கொண்டதைப் போல.
10. யானை காணாமற் போனால் குண்டுச் சட்டியில் தேடினால் அகப்படுமா?
11. யானை குட்டி போடும் என்று பார்த்தால் லத்தியல்லவா போடுகிறது?
12. யானை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்பதா?
13. யானைக்கில்லை கானலும், மழையும்.
14. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
15. யானைக்கு சிட்டுக்குருவி மத்தியஸ்தம் செய்தாற்போல்
16. யானைக்கு தீனியிடும் வீட்டில் ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா?
17. யானைக்கும் அடி சறுக்கும்.
18. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.
19. யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதைப் போல.
20. யானை யைப் பார்க்க வெள்ளெழுத்தா?
21.யானை போன வழியிலே ஆட்டுக்குட்டியா போக முடியாது?
22. யானை மேல் இருக்கிற பாரத்தை பூனை மேல் இடலாமா?
23.யானை மேல் இருக்கிற அரசன் சோற்றை விட, பிச்சை எடுக்கும் பாப்பான் சோறு மேல்.
24. யானையும், யானையும் மோதும் போது இடையில் அகப்பட்ட கொசுபோல.
25. யானையைத் தேட, குடத்துக்குள் கைவிட்டதைப் போல.
26. யானையை விற்று பூனைக்கு வைத்தியம் பார்ப்பதைப் போல.
27. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.
28. யானை வாய்க் கரும்பு போல.
29. யானையின் வேகம் அடங்கும் அங்குசத்தில்.

வியாழன், 12 ஏப்ரல், 2018

கேட்க விழைந்தேன்! மடல் வரைந்தேன்.

நலம்                                                                                                             13.4.2018,
                                                                                                                         தஞ்சாவூர்.

அன்புள்ள கடவுளுக்கு,

                               அநேக கோடி நமஸ்காரங்கள். இங்கு வீட்டில் அனைவரும் நலம். அதையே அங்கும் விழைகிறேன். நிற்க..

                               நீவீர் ஆணா, பெண்ணா, இருபாலருமா, என்பதல்ல என் கேள்வி. நீர் யாராக இருந்தாலும், கண்டிப்பாக  இருக்கிறீர் என்பதில் ஐயமில்லை. அதனால் தான் இக்கடிதம்.

                              நீங்கள் கற்பனைதிறன் மிக்க திறமைசாலி என்பதை  உங்கள் படைப்புகளால் நிரூபிக்கிறீர்.  என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு முகத்தையும் பார்க்கும் போது, சிறு மாறுபாட்டைக்கொடுத்து எப்படி இத்தனை விதமான உருவங்களை உருவாக்கியுள்ளீர்கள் என்று நான் வியப்பது வழக்கம்.
                   
                               சில நேரங்கள் ஆண்,பெண் இருபாலினரைத் தவிர்த்து, மூன்றாம் பாலை உருக்குவதும், சிறு குறைபாட்டுடன் சிலரைப் படைப்பதும், தவறுதலா அல்லது புதுமை செய்யும் முயற்சியா என்று நான் நினைப்பதுண்டு.

                           உங்கள் படைப்புகளை சற்று கூர்ந்து நோக்கத் தொடங்கினேன். அதில் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

                           அதாவது....

                           பருவ வயதாகும் போது,  இரு பாலருக்கும் உடலளவில் சில மாறுதல்கள் ஏற்பட்டாலும், ஒரு மனிதக் குழந்தை பிறக்கும்போது, எல்லா அடிப்படை உறுப்புகளுடனேயே பிறக்கின்றன. அப்படி இருக்கையில் பற்களை மட்டும் ஏன் கடவுளே விட்டு வைத்தீர்?  பற்களில்லாமல் பிறக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் ஏன் பால் பற்கள் முளைக்கின்றன? அவை ஒவ்வொன்றாய் விழுகின்றன. பின் முளைக்கின்றன. பால் பற்கள் வருசையாய்  வளர்ந்தாலும், மீண்டும் முளைக்கும் பற்கள் கோணலாய் முளைக்கின்றன. அப் பற்களும், இடையிலே ஏன் கடவுளே ஒவ்வொன்றாய் விழுகின்றன?  ஒவ்வொரு பல்லுக்கும் ஒவ்வொரு பிரச்சனை வருகிறது? பல் இருப்பதில்லை. ஆனால் பசி இருக்கிறது. பல் சொத்தையாகிறது. தேய்ந்து போகிறது.  பற்களால் கடித்து தானே சாப்பிட்டாக வேண்டும்? மனிதர்கள் பல்செட் என்று கண்டுபிடித்து, ஒவ்வொரு பல்லுக்கும் ஒரு டாக்டர் என்ற அளவில் ஏதேதோ செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நீங்கள் ஏன் பற்களுக்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து பார்க்கக்கூடாது?  பல் பிரச்சனைகளை சந்திக்காத மனிதர்களே இல்லை என்ற நிலை உள்ளது.
                         நீங்கள் தயை கூர்ந்து, இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்யவேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

                         உங்கள் பதில் கடிதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
                     
                          தவறு இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

                                                                                                                      தங்கள் அன்புள்ள,
                                                                                                                          லக்ஷ்மி ரவி.
                                                                                                                            எழுத்தாளர்,
                                                                                                                               தஞ்சாவூர்.
                                                                                                                               pincode.613 001 
ph: 94868 35904                                                                                                       



உறைமேல் முகவரி,   

கடவுள்,
படைப்பாளர்,
பூமி.

Image result for free image of a girl writing postal letterImage result for free image of a girl writing letter