செவ்வாய், 23 அக்டோபர், 2018

நவராத்திரி நாயகிகள்

அரங்கத்திலுள்ள ஆன்றோர்கள் அத்தனை பேருக்கும் லக்ஷ்மி ரவியின் கனிவான மாலை வணக்கங்கள்.

தனம் தரும், கல்வி தரும், ஒரு நாளும்
தளர்வறியா மனம் தரும்.
தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்.
அன்பர் என்பவருக்கே கனம் தரும்
பூங்குழலாள் அபிராமிக் கடைக்கண்களே!

கற்றறிந்த அவையோரே!
சென்ற ஆண்டு 'அம்பிகை கொலுவிருந்தாள்'என்ற தலைப்பில் நவராத்திரி விழா பற்றியும், கொலு வைக்கும் முறை பற்றியும் எனக்குத் தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். இந்த ஆண்டு, 'நவராத்திரி நாயகிகள்' என்ற தலைப்பில், அகிலண்ட நாயகி, அன்னபூரணி, ஆதிபராசக்தியைப் பற்றி பேச வந்துள்ளேன்.

இறைவன் இவ்வுலகத்தைப் படைக்கும்போதே, இச்சா சக்தியையும், ஞான சக்தியையும், கிரியா சக்தியையும் சேர்த்தே படைத்துள்ளார். இந்த மூன்று சக்திகளின் தோற்றம்தான், பராசக்தியின் அம்சமான துர்க்கா, லக்ஷ்மி, மற்றும் சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகள்.

சக்தியிருந்தால் செய், இல்லாவிட்டால், சிவனே என்று இரு' என்று விளையாட்டாகச் சொல்வதுண்டு. 

உலகம் அனைத்தும் 'சக்தி மயம்' என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்.   '

செய்பவளும், செய்கையும், செய்கையின் பயனும் அவளே! அவளே சக்தி! அவளே மாயை!

மனித வாழ்விற்குத் தேவையான சக்திகளான மன தைர்யம், செல்வச் செழிப்பு, அறிவு வளர்ச்சி ஆகிய மூன்று சக்திகளுக்கும் மூலமான லோக நாயகியை ஒன்பது நாட்களும் பூஜிப்பதுதான்  நவராத்திரி பூஜை.

இந்த நவராத்திரி பூஜையில் முதல் மூன்று நாட்கள்  வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி, துர்கா பரமேஸ்வரியையும், அடுத்த மூன்று நாட்கள் சகல செல்வங்களை வேண்டி, மகாலட்சுமியையும்,  கடைசி 3 நாட்கள் கல்வி,  அறிவு, கலைகள் வேண்டி சரஸ்வதி தேவியையும் வணங்க வேண்டும். 

ஆவேசப் பார்வையுடன் இருக்கும் துர்க்கா தேவி,  வீரத்தின் தெய்வம். இவள் பார்வையில் நெருப்பின் ஜொலிஜொலிப்பு. இவளை ''கொற்றவை '' , ''காளி'' என்றும் குறிப்பிடுவர்.  சிவபக்தையான இவளுக்கு  கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தில்லை காளி கோவில் அமைந்துள்ளது.

அருள் பார்வையுடன் அழகாக இருக்கும் லக்ஷ்மி தேவி  செல்வத்தின் தெய்வம். இவள் பார்வையில் கருணையின் மினுமினுப்பு. விஷ்ணு பிரியையான இவளுக்கு, திருப்பதியிலுள்ள திருச்சானூரில் தனிக் கோயில் அமைந்துள்ளது. 

அமைதிப் பார்வையுடன் அடக்கமாக இருக்கும் சரஸ்வதிதேவி, கல்வியின் தெய்வம்.  இவள் பார்வையில் அறிவுப் பிரவாகம். பிரும்மனின் நாயகியான இவளுக்கு,  கூத்தனூரில் தனி கோயில் அமைந்துள்ளது. 

சரி...  'நவராத்திரி' என்று ஒன்பது நாட்கள்  கொண்டாடப்படுவதன் காரணம் என்ன தெரியுமா?
.
முன்பொரு நாள் மகிஷாசுரன் என்ற அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், இன்னல்கள் பல இழைத்துவந்தான். அவன் தவங்கள் பல செய்து, வரங்கள் பல பெற்று, தன்னை அழிக்க எவருமில்லை என்ற தலை கனத்துடன் இருந்தான். அவன் மேலும் 14,000 ஆண்டுகள்  தவம் புரிந்து இறைவனிடன் இறவா வரம் கேட்டான். 'பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒரு நாள் இறக்க வேண்டியவர்கள்தான்' என்று கூறி இறைவன் அவ்வரத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.  சற்று யோசித்த அந்த அசுரன் பூவினும் மிக மெல்லியரான பெண்களால் தன்னை ஒன்றும் செய்யமுடியாது என்று குறைத்து மதிப்பிட்டு,   ஒரு பெண்ணால் மட்டுமே தன் இறப்பு நிகழ வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் 'ஈந்தேன்' என்று கூறி மறைந்தார்.

வரம் பெற்ற அசுரனின் கொடுஞ்செயல்கள் மேலும், மேலும் அதிகரித்தன. மக்கள் அல்லலுற்றனர். தவசீலர்கள் வேள்விகளைச் செய்யமுடியாது தவித்தனர்.  இதையெல்லாம் கண்டு கலங்கிய தேவர்கள் மஹாவிஷ்ணுவிடமும், சிவனிடமும், பிரும்மனிடமும், முறையிட்டனர்.  மும்மூர்த்திகளும் அவன் பெற்ற வரத்தை எண்ணி ஆலோசித்து ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர். அவளும் அழகிய மங்கையின் உரு கொண்டு பூமிக்கு வந்தாள். மும்மூர்த்திகளும், இந்திரனும்,  தங்கள் ஆயுதங்களையும், சக்தியையும் தேவிக்கு அளித்துவிட்டு சிலையென நின்றார்கள். அதைக் குறிக்கும் வகையில்தான் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்ததாம்.


இப்படி, எல்லா ஆயுதங்களையும், பத்துக் கரங்களில் தாங்கியபடி போர்க்கோலம் பூண்டு, ஒன்பது நாட்கள் போரிட்டு, சும்பன், நிசும்பன், மதுகடைபன், ரக்தபீஜன், சண்டன், முண்டன், விசுக்ரன், தும்ரலேசனன் ஆகிய படைத் தளபதிகளையும், மகிஷாசுரனையும்,  வதைத்து விஜயதசமியன்று வெற்றி வாகை சூடி தர்மத்தை நிலைனாட்டினாள் மகிஷாசுரமர்த்தினி. அதனைக் கொண்டாடும்பொருட்டே 'நவராத்திரி' கொண்டாடப்படுகிறது.

ஏன் ராத்திரி கொண்டாட வேண்டும்? பகலில் கொண்டாடலாமே என்ற கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளும்.அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும்,மறு நாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி, அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் ஒன்பது இரவுகள் நடைபெறும்.  அதனாலேயே நாம் 'நவ -  ராத்திரி'யாகக் கொண்டாடுகிறோம்.

மகிஷாசுரன்! மகிஷம்' எனில் எருமை என்று பொருள். அதன் நிறம் கருமை, அதன் குணமோ அறியாமை.  மகிஷனை வதம் செய்ததினால், இருளையும், அறியாமையையும் அகற்றிய அம்பிகைக்கு புரட்டாசி மாதம் பிரதமை திதியிலிருந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 

பகலும், இரவும் மாறி மாறி வருவதுதான் ஒரு நாள் எனப்படுகிறது.
ஒரு நாளில் பகல் என்பது சிவனின் அம்சமாகவும் இரவு என்பது அம்பிகையின் அம்சமாகவும் கருதப்படுகிறது. பகலில் உழைக்கும் உயிரினங்களை இரவில் அம்பாள் தன் மடியில் கிடத்தி தாலாட்டி உறங்கச் செய்கிறாள்.இரவெல்லாம் விழித்திருந்து உலகைக் காக்கும் அம்பிகைக்காக ஒன்பது நாள் இரவு மட்டும் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பர்.

சிவனுக்கு உகந்தது சிவ ராத்திரி.
மாலுக்கு உகந்தது வைகுண்ட ஏகாதசி
சக்திக்கு உகந்ததோ நவராத்திரி.

விக்கிரமாதித்யனும், காளிதாசரும், பாரதியாரும் வணங்கிய தெய்வம் சக்தி.  ஒருமுறை பாரதியார், தம் மகளான தங்கம்மாள் கேட்டுக்கொண்டத்ற்கிணங்க,'உஜ்ஜயினி நித்ய கல்யாணி, ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்சக்தி ஓம்சக்தி' என்ற  'நவராத்திரி பாடல்' ஒன்றை எழுதித் தந்திருக்கிறார்.
உஜ்ஜயினி என்றால் 'வெற்றி பெறுபவள்' வெற்றி தருபவள்' என்று பொருள் கொள்ளலாம்.  காளியின் அருள் பெற்ற குப்த வம்சத்து அரசரான விக்ரமாதித்யன், தான் புதிதாக அமைத்த தலை நகருக்கு 'உஜ்ஜயினி' என்று பெயரிட்டன். மத்தியப் பிரதேசத்தில், க்ஷீப்ரா நதிக்கரையில் அமைந்திருக்கும் 'உஜ்ஜையினி' என்ற இந்த நகரம், 52 சக்தி பீடங்களிலும், 12 ஜ்யோதிர்லிங்கத் தலங்களிலும், ஒன்றாக வைத்து எண்ணப் படுகிறது.

பலவகை பொம்மைகளை அடுக்குவதற்கு ஒரு ஆன்மீகக் காரணத்தைக் கூறுகிறார் பாரதியார். அதாவது,  'புல், பூண்டு,  மரம், பசு, புலி, மனிதர் என எல்லாவித உயிர்களுமாக் விளங்குகிறாளாம் பராசக்தி. இதனால்தான் கொலுவிற்கு 'சிவை ஜோடிப்பு' என்றும் பெயருண்டாம்.  சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது என்றும், எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் தாத்பர்யத்தை உள்ளடக்கியுள்ளது இந்த நவராத்திரி திருவிழா என்றும் விளக்குகிறார் பாரதியார்.

 தகுதியான நபர்களுக்கு  தகுந்த நேரத்தில் தேவி அருள் வழங்குகிறாள் என்பதற்கு காளமேகப்புலவர் ஒரு சிறந்த உதாரணம். சமையல்காரனாக இருந்த வரதன் என்பவனின் வாயில் சரஸ்வதி தேவி தாம்பூலத்தை உமிழ்ந்ததால் அவன் காளமேகப் புலவராகி சிலேடை பாடல்கள், பரப்பிரும்ம  விளக்கம், சரஸ்வதி மாலை போன்ற நூல்களை எழுதியது நாம் அறிந்ததே!

நவம் என்றால் ஒன்பது என்றும் புதிய என்றும் பொருளுண்டு

இந்த நவராத்திரி வழிபாட்டினால் புத்துணர்ச்சி பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும். நற்பெயர் உண்டாகும், ஐஸ்வர்யம் அதிகரிக்கும், கலை, கல்வி, வளரும்.

முன்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் கதை இது. ஒரு காட்டில், குடிசை ஒன்றில், ஒரு கணவனும் மனைவியும் இருந்தனர். நோய்வாய்ப்பட்டிருந்த அந்த கணவன் தன் மனைவியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தார். அந்த மனைவி கிழிந்த உடை அணிந்திருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அப்போது பிக்ஷை கேட்டு வந்தார் ஆங்கீரஸ முனிவர். அவர் இந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு, 'யாரம்மா நீ? உன்னைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் போலிருக்கிறதே!  உன் நிலைக்கு என்ன காரணம்?' என்று கேட்டார். 

ரிஷியை நமஸ்கரித்த அப்பெண் தன் கண்ணீரைத் துடைத்தபடி,' உத்தம ரிஷியே! நீங்கள் சொல்வது சரியே! நாங்கள் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தான். எங்கள் தாயாதிகள் எங்களை ஏமாற்றி, ராச்சியத்தை அபகரித்துக் கொண்டு, எங்களை விரட்டிவிட்டனர். என் கணவர் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவர் உடல் நலம் தேறவேண்டும். ராஜ்ஜிய பரிபாலனம் செய்ய எங்களுக்கு நல்ல பிள்ளை பிறக்கவேண்டும் நல்வழி கூறுங்கள் மஹப்ரபோ' என்றாள்.

அவளின் துயரக் கதையைக் கேட்ட முனிவர்,'அம்மா. வருந்தாதே! எல்லா துயரங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. வழி உண்டு. நீ உன் கணவருடன் அருகில் இருக்கும் பஞ்சவடிக்குப் போ. அங்கே எழுந்தருளியிருக்கும் அம்பிகையைப் பூஜை செய். நல்லதே நடக்கும்' என்றார்.

அவளும் அவர் சொல்படி பஞ்சவடியை அடைந்தாள். முனிவரே முன்னின்று, அவளுக்கு, புரட்டாசி மாதம் பிரதமை திதியில் நவராத்திரி பூஜையை செய்வித்தார். பின் அவர்களுக்கு, தன் ஆஸ்ரமத்திலேயே அடைக்கலம் கொடுத்தார். கொஞ்ச நாட்களில் அரசர் உடல் நலம் தேறி நோயிலிருந்து மீண்டார்.  பின்னர் அந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  அக் குழந்தைக்கு 'சூரியப் பிரதாபன்' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். 

ஆங்கீரஸ முனிவரே சூரியப் பிரதாபனுக்குப் பல கலைகளையும், கேள்விகளையும் கற்றுவித்தார். இளம் பிராயத்தை அடைந்ததும், தன் பெற்றோர்களின் வாட்டத்தைப் போக்க முடிவெடுத்த சூரியப் பிரதாபன் முனிவரை வணங்கி, அன்னை, தந்தையரின் அனுமதியுடன், பகைவர்கள் மீது உரிமைப் போர் தொடுத்து, வீரத்துடன் போராடி வெற்றி பெற்றான். ஆஸ்ரமம் அடைந்தபின் முனிவரை வணங்கி, தன் தாய் தந்தையுடன் தன் நாட்டிற்கு வந்து அரியணை ஏறினான். அரசனும், அரசியும், அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இருந்தாலும் தாம் தொடங்கிய நவராத்திரி பூஜையை தொடர்ந்து செய்து, அம்பிகையின் பாதத்தில் ஐக்கியமானார்கள்.

தேவி பாகவதத்தில் மகரிஷி வியாசர், ராமபிரான் அனுஷ்டித்த நவராத்திரி விரதம் பற்றி விளக்கி உள்ளார். 
சீதையை ராவணன் கடத்திச் சென்ற பிறகு ராமர் மிகுந்த துயரத்துடன் லட்சுமணனுடன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கே வந்த திரிலோக சஞ்சாரியான நாரதர்  ராமரை நவராத்திரி நோன்பு இருக்கும்படி கூறினார்.

நாரதர் கூறியபடியே, ராமரும், மால்யவான் மலையில் இருந்தபடி, புரட்டசி மாதம் பிரதமை முதல் நவராத்திரி  பூஜைகளை நடத்தினார். எட்டாவது நாள் அஷ்டமி தினத்தில் நள்ளிரவு வேளையில் மால்யவான் மலையின் உச்சியில் அம்பிகை சிம்ம வாகனத்தில் தோன்றி ராமருக்கு தரிசனம் தந்தாள். ராமனின் பூர்வ அவதாரங்களை உணர்த்தியதுடன், ராவணனை சம்ஹாரம்  செய்ய அருள் புரிந்து மறைந்தாள்.

வால்மீகி இராமாயணத்தில் போர் புரியத் தொடங்க உகந்த நாள் என்று, புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி)  நாள்  அன்று இராவணனுடன் போர்புரிய இராமன், புறப்பட்டதாக வருகிறது.  

.இந்த விஜயதசமியன்றுதான் பாண்டவர்களின் அஞ்சாதவாசம் முடிவுற்றது. பிரஹன்னளையாக ஒரு வருட காலம் விராட தேசத்தில் மறைந்திருந்த அர்ச்சுனன், தான் ஒரு வருட காலம் முன்னர் வன்னி மரப் பொந்தில் மறைத்து வைத்திருந்த 'காண்டீபம்' முதலான ஆயுதங்களை மீண்டும் எடுத்து உயிர்பித்துக் கொண்ட நாள் இந்த விஜயதசமி நாள். 

இந்த 9 நாட்களிலும், 
  1. தேவி மகாத்மியம்
  2. அபிராமி அந்தாதி
  3. துர்க்கா அஷ்டகம்
  4. கனகதாரா தோத்திரம்
  5. சகலகலாவல்லி மாலை
  6. சரஸ்வதி அந்தாதி
  7. மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம்
  8. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 
  9. போன்ற ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து, கொண்டை கடலை, கடலை பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்தியங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும். பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதிப்பது சிறப்பையும், மேன்மையையும் தரும். பெண்கள், சிறுவர்- சிறுமிகளின் கோலாட்டம், கும்மி, நடனம் போன்றவை நவராத்திரி பண்டிகைக்கு உரிய சிறப்புகளாகும். 
ஒன்பது நாட்கள் போரிட்ட தேவி, விஜயதசமி தினத்தில், அசுரர்கள் அனைவரையும் அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவத்தை -தைர்யத்தாலும், வறுமையை -  செல்வத்தாலும், அறியாமையை -ஞானத்தாலும், வெற்றி கொண்ட தினமாதலால், இந்த நாளில் தொடங்கப்படும் எல்லா செயல்களும் எளிதாக வெற்றி பெறும் என்பது ஐதீகம்.

வாடிய பயிரென வருந்திடும் பக்தரை
வாரியணைத்திடும் நாயகி இவளே
மகேஸ்வரி, கௌமாரி, வராகி பெயர் கொண்ட
தைரியம், நிரம்பிய மலைமகள் இவளே!

செல்வமும், வளங்களும், பெருகிடச் செய்து
வறுமையகற்றிடும்  நாயகி இவளே!
மஹாலக்ஷ்மி, வைஷ்ணவி, இந்ராணி  பெயர்கொண்டு
பாக்கியம் அளித்திடும்  அலைமகள் இவளே!

அறிவையும், இசையையும், கலையையும் அளித்து
அடைக்கலம் தந்திடும் நாயகி இவளே!
சரஸ்வதி, நாரசிம்மி, சாமுண்டி பெயர்கொண்டு
வீணையிசைத்திடும்  கலைமகள் இவளே!


முப்பெரும் சக்திதான், பிற சக்தியின் பிறப்பிடம்
சக்தியைத் தந்திடும் சக்தியின் பாதத்தை
பக்தியாய்ப் பற்றியே பெற்றிடும் சக்திதான்
வெற்றியைத் தந்திடும் மந்திரமாம்! - நாம் 
முக்தியைச் சேர்ந்திடும் தந்திரமாம்! - ஆம்
நாம் முக்தியைச் சேர்ந்திடும் தந்திரமாம்!

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை
அண்டமெல்லாம் பூத்தாளை! மாதுளம்பூ நிறத்தாளை!
புவியடங்கக் காத்தாளை
அங்குசம் பாசம் குசமும் கரும்புமங்கைச் சேர்த்தாளை
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே!

நன்றி வணக்கம்.











    ஞாயிறு, 21 அக்டோபர், 2018

    ‘அம்பிகை கொலுவிருந்தாள்’


    ‘அம்பிகை கொலுவிருந்தாள்’


    கற்றறிந்தோர் அனைவருக்கும், கனிவான என் வணக்கம்.
    நான் லக்ஷ்மி ரவி. இன்று உங்கள் முன்னிலையில் ‘அம்பிகை கொலுவிருந்தாள்’ என்ற தலைப்பில் எனக்குத் தெரிந்த – நான் அறிந்த சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.
    முதலில், கொலு என்பது என்ன?
    ஒரு அரசவையோ, சட்டமன்றமோ, அதன் அங்கத்தினர்கள் அனைவரும் தத்தம் பதவிக்கும், தகுதிக்கும், தரத்திற்கும், தக்கவாறு அதற்கென வரையறுக்கப்பட்ட ஆசனங்களில் தான் அமரவேண்டும். இந்த கட்டமைப்பிற்கு ‘கொலு’ என்று பெயர். அந்த அரங்கத்திற்கு ‘கொலு மண்டபம்’ என்று பெயர். அதன் அரசரோ, தலைவரோ அரங்கத்தில் கொலுவிருக்கிறார்’ எனறு சொல்கிறோம். இங்கு ‘அம்பிகை கொலுவிருக்கிறாள்’ அம்பிகை கொலுவிருக்கும் அழகான ஒரு பண்டிகைதான் ‘நவராத்திரி’
    ‘நவராத்திரி’
    ‘நவ’ எனில் ஒன்பது என்று பொருள். நவகிரஹங்கள், நவரத்தினங்கள், நவராத்திரி. இவை முறையே ஒன்பது கிரஹங்கள், ஒன்பது ரத்தினங்கள், ஒன்பது ராத்திரி என்று பொருள் படும்.
    ஒளியும், இருளும் இணைந்து வருவதுதான் இயற்கை;
    விழிப்பும், உறக்கமும் பிணைந்து வருவதுதான் வாழ்க்கை!
    பகலென்றால் ஒளி; இரவென்றால் இருள்                                 
    பகலென்பது தெளிந்த அறிவு; இரவென்பது மயக்கம்
    பகலென்றால் விழிப்பு; இரவென்றால் உறக்கம்.
    இத்தகு பகலும் இரவும் சங்கமிக்கும் சாயரக்ஷை வேளையில் கொலுவிருக்கும் அம்பிகையை வழிபடுவதுதான் நவாத்திரியின் சிறப்பம்சம்.
    மஹாளய அமாவஸ்யைக்குப் பிறகு வரும் அமாவசையன்று தொடங்கப்படும் இந்த அம்பிகை வழிபாடு முழுக்க முழுக்க பெண் தெய்வங்களுக்கான ஒரு பண்டிகை.
    இது ஒரு சக்தி வழிபாடு.
    அதாவது இறைமையின் பெண்தன்மைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பண்டிகை.
    ‘சிவனை வழிபட உகந்த ஒரு ராத்திரி சிவராத்திரி
    சக்தியை வழிபட உகந்ததோ நவராத்திரி’
    இந்த நவராத்திரி வழிபாடானது நம் தேசம் முழுவதும் பல பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது,
    1.ஷரத் நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி
    இதுதான் தமிழ்னாட்டில் நாம் கொண்டாடும் நவராத்திரி.
    2. தஸரா – இது வட மாநிலங்களிலும், மைசூரிலும் 10 தினங்கள் சாமுண்டேஸ்வரி தேவிக்கு செய்யப்படும் வழிபாடு.
    3. மேற்கு வங்காளத்தில் ‘துர்கா பூஜை’ யாக காளி தேவியை வழிபடுகிறார்கள்.
    4. குஜராத் மற்றும் மும்பையில் இது ‘ராம்லீலா’ வாக கொண்டாடப்படுகிறது. 10ம் நாள் ராமன் ராவணனை வென்ற நாளாக மிகக் கோலாகலத்துடன் ‘தாண்டியா நடனம்’ ஆடி மகிழ்கின்றனர்.
    ஒரு வருடத்தில் 5 வகை நவராத்திரிகள் உள்ளன. வசந்த நவராத்திரி, குப்த நவரத்திரி, ஷரத் நவராத்திரி, புஷ்ப நவராத்திரி, மஹா நவராத்திரி என்று 5 வகைகள் சொல்லப்படுகின்றன. இதில் நாம் நம் பகுதிகளில் கொண்டாடுவது ஷரத் நவராத்திரி.
    இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் வாழ்வதற்கு மூன்று வித சக்திகள் அவசியம்.
     தைர்யம்     செல்வம்    அறிவு.
    இந்த மூன்று சக்திகளின் மூர்த்திதான் துர்க்கா, லக்ஷ்மி, மற்றும் சரஸ்வதி.
    அம்பிகையின் அம்சமான இம் மூன்று சக்திகளையும் வழிபட்டால், வாழ்க்கைக்குத் தேவையான மூன்று சக்திகளும் தாமாக வந்தடையும்.
    இதுதான் இந்த நவராத்திரி வழிபாட்டின் தாத்பர்யம்.
    நவராத்திரியின் 9 நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனையும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடவேண்டும். 8ம் நாள் மஹா அஷ்ட்டமி. 9ம் நாள் மஹா நவமி.
    அன்று சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று வீட்டில் உள்ள அனைவருமே பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அவரவர் படித்த பாடப் புத்தகங்களையும், படிக்கும் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களையும் வைத்து பூஜிக்கிறோம். இவை தவிர, சங்கீத புத்தகங்கள், வாத்திய இசைக் கருவிகள், காற்சலங்கைகள், தூரிகைகள் அனைத்தையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அறிவிற்கு அதிபதியான சரஸ்வதி தேவியின் அருட் கடாட்சம் பெற வேண்டுகிறோம்.
    10ம் நாள் தேவி அசரனை அம்பெய்து, வதம் செய்து ஜெயம் கொண்ட நாள். அது தான் விஜயதசமி. வெற்றி தருகின்ற நாள். அன்று அட்சராப்யாசம் செய்யப்படுகிறது. பள்ளி செல்லத் தொடங்காத குழந்தைகளுக்கு, அன்றுதான் எழுத்துப் பயிற்சி அளிக்கத் தொடங்குவார்கள். ‘ஹரி நமோஸ்து சித்தம்’ என்று சொல்லியபடி குரு ஒருவர் குழந்தைகளின் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி நெல்லில் ‘அ’ என்ற எழுத்தைப் போட வைப்பார். இன்றும் கூட பல பள்ளிகளில் விஜயதசமி அன்று சேர்க்கை நடைபெறுகிறது. இதைத்தவிர சங்கீதம், இசைக் கருவிகள், மற்றும் பல கலைகளை விஜயதசமி யன்று தொடங்கினால் அந்தந்தத் துறைகளில் வெற்றி நடை போடுவார்கள் என்பது ஐதீகம்.
    இந்த விஜயதசமி அன்று தான் பாண்டவர்களின் அஞ்சாத வாசம் முடிவுற்றது. பிரஹன்னளையாக ஒரு வருட காலம் விராட தேசத்தில் மறைந்திருந்த அர்ச்சுனன், தான் ஒரு வருட கால முன்னர் வன்னி மரப் பொந்தில் மறைத்து வைத்திருந்த ‘காண்டீபம்’ முதலான ஆயுதங்களை மீண்டும் எடுத்து உயிர்பித்துக் கொண்ட நாள் இந்த விஜயதசமி நாள்.
    அதனால்தான் விஜயதசமி ‘ஆயுத பூஜை’ யாகக் கொண்டாடப் படுகிறது. அன்று, விவசாயிகள், கொத்தனார், தச்சர், ஆசாரி, தையற்காரர் போன்ற தொழில் செய்வோர் அனைவரும், தத்தம் தொழில் சம்மந்தப்பட்ட ஆயுதங்களை பயபக்தியுடன் வழிபடுகின்றனர்.
    சரி, கொலுவைத்தலில் உள்ள சிறப்பம்சம், வழிமுறைகள், தாத்பர்யம், என்னென்ன..?
    ஐம்பூதங்களில் ஒன்றான களிமண்ணால் ஆன பொம்மைகளை மரப்படிகளில் வைத்து 9 நாட்களும் அம்பிகையை வழிபடுவது இதன் சிறப்பம்சமாகும்.
    கொலுப் படி அமைப்பதிலிருந்து, பொம்மைகளை அடுக்குவது வரை ஒரு வழிமுறை உள்ளது. முதலில் படிகளின் எண்ணிக்கை ஒற்றைப் படையில் இருக்கவேண்டும். 1,3, 5,7 என 11 படிவரை வைப்பவர்களும் உண்டு. கொலு வைக்க முடியாத சிலர் அல்லது  சில சந்தர்பங்களில் 1 படி வைத்தும் பூஜிக்கலாம், படியை நன்கு துடைத்து அதன் மீது தூய வெள்ளைத் துணியை விரிப்பது வழக்கம்.
    சரி படி அமைத்தாகிவிட்டது. பொம்மைகளை எப்படி அடுக்க வேண்டும்?
    மங்களகரமான எந்த செயலையும் செய்யும் முன் கலஸம் வைப்பது என்பது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது.  வெள்ளி அல்லது பித்தளை சொம்பு ஒன்றில் சில நாணயங்களையும், அரிசியையும் பருப்பையும் சிறு சிறு பொட்டலங்களில் போட்டு, அதன் வாய்ப் பகுதியில் மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்றை சொருகி, அதனைச் சுற்றி மாவிலைகளை சொருகி வைப்பர். சில வீடுகளில் சொம்பினுள் தண்ணீர் ஊற்றி தேங்காய் சொருகுவதும் உண்டு. கொலு முடிந்த உடன் தண்ணீரை துளசி செடிக்கு ஊற்றுவர், அரிசி பருப்பு, தேங்காய் அனைத்தையும் சமையலுக்குப் பயன்படுத்தலாம். உள்ளே போட்ட நாணயத்தை தனியாக கலச சொம்புடன் பத்திரப் படுத்தி வைப்பர்,
    அடுத்ததாக பொம்மைகளை அடுக்கும் முறையில்தான் வாழ்க்கையின் தாத்பர்யம் அடங்கியுள்ளது, படிப் படியாக முன்னேறிச் சென்றால்தான் வெற்றிக் கனியைப் பெறமுடியும். அதனால் கீழ் படியிலிருந்து வைக்கத் தொடங்க வேண்டும். கீழ் படியில் பறவைகள், விலங்குகள் போன்ற ஓரறிவு கொண்ட உயிரினங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
    அதற்கு மேல் உள்ள படியில் வணிகர்கள், தொழிலாளர்கள், உழைப்பாளர்கள் போன்ற பொம்மைகளை வைக்க வேண்டும். அதாவது செட்டியார், செட்டியாரினி, கடை, தபால்காரர், பள்ளிக் கூடம், விவசாயி போன்ற பொம்மைகள்.
    அதற்கு மேல் உள்ள படியில், விவேகானந்தர், ராமக்ருஷ்ண பரமஹம்ஸர். பக்த மீரா, சாயி பாபா, காந்தி, திருவள்ளுவர், போன்ற உத்தம புருஷர்களின் பொம்மைகள்,
    அதற்கு மேல் உள்ள படியில், அவதாரங்கள், தசாவதாரம், ராமலீலா, கிருஷ்ண லீலா, கீதோபதேசம் போன்ற பொம்மைகளை வைத்துவிட்டு அதற்கு மேல் உள்ள படியில்தான் கடவுளர்களின் உருவ பொம்மைகளை வைக்கவேண்டும். இத்தனைப் படிகளைக் கடந்த பின் தான் ஒருவன் இறை நிலையை, இறவா நிலையை அடைய முடியும் என்ற வாழ்வியலின் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது இந்த கொலுப் பண்டிகை.
    முதல் படியில் கலசத்திற்கு அருகில், மரப்பாச்சி பொம்மைகளை வைப்பதும் ஒரு வழக்கமாக உள்ளது. பின் அதற்கு அருகில், பிள்ளையார், முருகன், சிவன் பார்வதி,பெருமாள், லக்ஷ்மி சரஸ்வதி, மஹிஷாசுரமர்த்தினி, இன்ன பிற தெய்வங்களின் பொம்மைகள் வைக்கப்படுகின்றன. எந்த உருவ பொம்மையாக இருந்தாலும் அந்த பொம்மை தேவியின் உருவில்,- அம்பிகையின் உருவில் பார்க்கப்படுகிறது. இங்கு தான் அம்பிகை கொலுவிருக்கிறாள்.
    பொதுவாக இந்த கொலுப் பண்டிகையின் 9 நாட்களும் பெண்கள் பகல் பொழுதில் ஒரு வேளை உணவு உண்டு இரவில் பாலும், பழமும் மட்டும் அருந்தி விரதம் இருப்பர். சாயங்கால வேளையில், விளக்கேற்றி புது மலர்களால் பூஜை செய்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை சுண்டல் செய்து நைவேத்யம் செய்வது வழக்கம்.
    அக்கம் பக்கத்திலுள்ள பெண்களையும், நண்பர்களையும், உறவினர்களையும், சிறு பெண் குழந்தைகளையும் அழைத்து, பாட்டு பாடச் சொல்லி, தாம்பூலத்துடன், சுண்டலும் விநியோகம் செய்வோம்.
    இதுதான் பொதுவாக நாம் கொண்டாடும் முறை. நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபோது தினமும் ஒவ்வொரு வீட்டிற்கும் போவோம். ஒவ்வொரு வீட்டிலும் கூச்சப்படாமல் பாடுவோம். ஒவ்வொரு வீட்டிலும் சுண்டல் வாங்கிக் கொள்வோம். எங்கள் அம்மா எனக்கு தினமும் தன் கற்பனையைக் கொட்டி ஒரு அலங்காரம் செய்து மகிழ்வார். ஆண்டாள், கிருஷ்ணர், ராமர், மடிசார் மாமி என்று குஞ்சலம் வைத்து நீளப் பின்னலில் பூ தைத்து விடுவார், பெண் குழந்தைகள் என்று இல்லை ஆண் குழந்தகளுக்கும் பலவிதமான வேஷங்கள் போட்டு மகிழ்வர்.
    இன்று எல்லோரும் BUSY BUSY…காலில் சக்கரமும், கைகளில் இறக்கையும் கட்டிக்கொண்டு பறக்கும் இன்றைய நவீன காலகட்டத்திலும் எல்லாப் பெண்களும் கலை நயமான விஷயங்களை இந்த கொலுவின் மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள்! இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு நடுவில் இந்த 9 நாட்களையும் தமக்குக் கிடைத்த வரப் பிரசாதமாக நினைக்கிறார்கள். முதலில் படியில் வெள்ளைத் துணிக்கு பதிலாக COLOUR CONCEPT டன், ஜரிகை வேலைப்பாடுகள், மணி கோர்த்தவை இப்படி கொலுப் படி விரிப்பைத் தையார் செய்து கொள்கிறார்கள்.
    பொம்மைகளை அடுக்குவதிலும், ஒரு THEME  வைத்துக் கொள்கின்றனர். உதாரணமாக இந்த வருட கொலுவுக்கு, ராமர் என்று முடிவு செய்து கொண்டால், பால காண்டம் முதல் யுத்த காண்டம் வரையுள்ள கதைகளைக் கூறும் பொம்மைகளைத் தேடி தேடி வாங்கி வைக்க முயற்சிக்கிறார்கள். அதைத் தவிர தன் கையால் PAINT செய்த பொம்மை, தானே உருவாக்கிய பொம்மைகள், தெர்மொகோல் கொண்டு தானே செய்த கோயில், மலை, குளம் PARK, கலர் கோலங்கள், விளக்கு அலங்காரங்கள், இப்படி தன் கற்பனைத் திறனையும், கலைத் திறனையும் வெளிப்படுத்துகின்றனர். தாம்பூலத்துடன் ஏதாவது பரிசுப் பொருட்கள் – வித்தியாசமான, உபயோகமான பரிசுப் பொருட்கள் என ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு அழகாக – நளினமாக கொண்டாடுகிறார்கள்.
    ஆங்காங்கே நடைபெறும் கொலு போட்டிகளில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
    பலருக்கும் கொலுவுக்கு என்று அழைக்கச் செல்ல நேரமிருப்பதில்லை. அதனால் என்ன? நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளனவே..? வாட்ஸ் ஆப், மெயில், ஃபோன் இவற்றில் அழைத்தால் போதுமே! ஒருவர் மற்றவர் வீட்டிற்குப் போய் – பார்க்கப் போனால் அறிமுகம் செய்து கொள்ள முடியும். அரைத்த மாவையே அரைக்கும் டிவி நிகழ்ச்சிகளிலிருந்து கொஞ்ச நேரமாவது ஒதுங்கி இருக்க முடியும்.  நம் வீட்டில் கொலுவிருக்கும் அம்பிகையை ஆராதிக்க முடியும்.
    கொலு பண்டிகையின் எல்லா நாட்களும் இரவில்  ஹாரத்தி எடுப்பது வழக்கம். பத்தாம் நாள் விஜயதசமியன்று இரவில் பாட்டு பாடியபடி மங்கள ஹாரத்தி எடுத்துவிட்டு கலசத்தை அரிசிப் பானையில் வைத்து மூடிவிட்டு, ஒரு பொம்மையைப் படுக்க வைப்பர். மறுநாள் எல்லா பொம்மைகளையும் எடுத்து காகித்த்தில் சுற்றி பத்திரப்படுத்திவைப்பர்.
    இப்படி விருந்தோம்பலும், உற்சாகமும், கோலாகலமும், கலை உணர்வும் மிளிரும் இந்தப் பண்டிகை இந்த மாதம் 19ம் நாள் அம்மாவாசையன்று தொடங்குகிறது. இந்த அம்பிகை வழிபாடு, அவரவர் இல்லங்களில், அவரவர் விருப்பப்படி சிறப்பாக அமையவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


    அசுரனை அழித்திட்ட தேவியவள்:
    மகேஸ்வரி, கௌமாரி, வராகியிவள்.
    அடைக்கலமாய் வரும் பக்தரையணைத்து,
    அபயம் அளித்திடும் துர்கையிவள்.

    பாற்கடல் அளித்த தேவியிவள்;
    மஹாலக்ஷ்மி, வைஷ்ணவி, இந் திராணியிவள்;
    பாக்கியம் பெருக்கி வரமளிப்பாள்
    பெரும்செல்வம் படைத்திடும் லக்ஷ்மியிவள்.

    வீணை இசைத்திடும் தேவியிவள்;
    சரஸ்வதி, நாரசிம்மி, சாமுண்டியிவள்.
    அறிவுக்கும், கலைகட்கும் அதிபதியாய்
    அள்ளி வழங்கிடும் வாணியிவள்.

    சக்தியைத் தருகின்ற சக்தியின் பாதத்தில்
    பக்தியாய்ப் பற்றியே பெற்றிடும் சக்திதான்
    வெற்றியைத் தந்திடும் மந்திரமாம் – நாம்
    முக்தியை அடைந்திடும் தந்திரமாம்! – ஆம்
    நாம் முக்தி அடைந்திடும் தந்திரமாம்.
    நன்றி! வணக்கம்!