ஞாயிறு, 21 அக்டோபர், 2018

‘அம்பிகை கொலுவிருந்தாள்’


‘அம்பிகை கொலுவிருந்தாள்’


கற்றறிந்தோர் அனைவருக்கும், கனிவான என் வணக்கம்.
நான் லக்ஷ்மி ரவி. இன்று உங்கள் முன்னிலையில் ‘அம்பிகை கொலுவிருந்தாள்’ என்ற தலைப்பில் எனக்குத் தெரிந்த – நான் அறிந்த சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.
முதலில், கொலு என்பது என்ன?
ஒரு அரசவையோ, சட்டமன்றமோ, அதன் அங்கத்தினர்கள் அனைவரும் தத்தம் பதவிக்கும், தகுதிக்கும், தரத்திற்கும், தக்கவாறு அதற்கென வரையறுக்கப்பட்ட ஆசனங்களில் தான் அமரவேண்டும். இந்த கட்டமைப்பிற்கு ‘கொலு’ என்று பெயர். அந்த அரங்கத்திற்கு ‘கொலு மண்டபம்’ என்று பெயர். அதன் அரசரோ, தலைவரோ அரங்கத்தில் கொலுவிருக்கிறார்’ எனறு சொல்கிறோம். இங்கு ‘அம்பிகை கொலுவிருக்கிறாள்’ அம்பிகை கொலுவிருக்கும் அழகான ஒரு பண்டிகைதான் ‘நவராத்திரி’
‘நவராத்திரி’
‘நவ’ எனில் ஒன்பது என்று பொருள். நவகிரஹங்கள், நவரத்தினங்கள், நவராத்திரி. இவை முறையே ஒன்பது கிரஹங்கள், ஒன்பது ரத்தினங்கள், ஒன்பது ராத்திரி என்று பொருள் படும்.
ஒளியும், இருளும் இணைந்து வருவதுதான் இயற்கை;
விழிப்பும், உறக்கமும் பிணைந்து வருவதுதான் வாழ்க்கை!
பகலென்றால் ஒளி; இரவென்றால் இருள்                                 
பகலென்பது தெளிந்த அறிவு; இரவென்பது மயக்கம்
பகலென்றால் விழிப்பு; இரவென்றால் உறக்கம்.
இத்தகு பகலும் இரவும் சங்கமிக்கும் சாயரக்ஷை வேளையில் கொலுவிருக்கும் அம்பிகையை வழிபடுவதுதான் நவாத்திரியின் சிறப்பம்சம்.
மஹாளய அமாவஸ்யைக்குப் பிறகு வரும் அமாவசையன்று தொடங்கப்படும் இந்த அம்பிகை வழிபாடு முழுக்க முழுக்க பெண் தெய்வங்களுக்கான ஒரு பண்டிகை.
இது ஒரு சக்தி வழிபாடு.
அதாவது இறைமையின் பெண்தன்மைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பண்டிகை.
‘சிவனை வழிபட உகந்த ஒரு ராத்திரி சிவராத்திரி
சக்தியை வழிபட உகந்ததோ நவராத்திரி’
இந்த நவராத்திரி வழிபாடானது நம் தேசம் முழுவதும் பல பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது,
1.ஷரத் நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி
இதுதான் தமிழ்னாட்டில் நாம் கொண்டாடும் நவராத்திரி.
2. தஸரா – இது வட மாநிலங்களிலும், மைசூரிலும் 10 தினங்கள் சாமுண்டேஸ்வரி தேவிக்கு செய்யப்படும் வழிபாடு.
3. மேற்கு வங்காளத்தில் ‘துர்கா பூஜை’ யாக காளி தேவியை வழிபடுகிறார்கள்.
4. குஜராத் மற்றும் மும்பையில் இது ‘ராம்லீலா’ வாக கொண்டாடப்படுகிறது. 10ம் நாள் ராமன் ராவணனை வென்ற நாளாக மிகக் கோலாகலத்துடன் ‘தாண்டியா நடனம்’ ஆடி மகிழ்கின்றனர்.
ஒரு வருடத்தில் 5 வகை நவராத்திரிகள் உள்ளன. வசந்த நவராத்திரி, குப்த நவரத்திரி, ஷரத் நவராத்திரி, புஷ்ப நவராத்திரி, மஹா நவராத்திரி என்று 5 வகைகள் சொல்லப்படுகின்றன. இதில் நாம் நம் பகுதிகளில் கொண்டாடுவது ஷரத் நவராத்திரி.
இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் வாழ்வதற்கு மூன்று வித சக்திகள் அவசியம்.
 தைர்யம்     செல்வம்    அறிவு.
இந்த மூன்று சக்திகளின் மூர்த்திதான் துர்க்கா, லக்ஷ்மி, மற்றும் சரஸ்வதி.
அம்பிகையின் அம்சமான இம் மூன்று சக்திகளையும் வழிபட்டால், வாழ்க்கைக்குத் தேவையான மூன்று சக்திகளும் தாமாக வந்தடையும்.
இதுதான் இந்த நவராத்திரி வழிபாட்டின் தாத்பர்யம்.
நவராத்திரியின் 9 நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனையும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடவேண்டும். 8ம் நாள் மஹா அஷ்ட்டமி. 9ம் நாள் மஹா நவமி.
அன்று சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று வீட்டில் உள்ள அனைவருமே பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அவரவர் படித்த பாடப் புத்தகங்களையும், படிக்கும் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களையும் வைத்து பூஜிக்கிறோம். இவை தவிர, சங்கீத புத்தகங்கள், வாத்திய இசைக் கருவிகள், காற்சலங்கைகள், தூரிகைகள் அனைத்தையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அறிவிற்கு அதிபதியான சரஸ்வதி தேவியின் அருட் கடாட்சம் பெற வேண்டுகிறோம்.
10ம் நாள் தேவி அசரனை அம்பெய்து, வதம் செய்து ஜெயம் கொண்ட நாள். அது தான் விஜயதசமி. வெற்றி தருகின்ற நாள். அன்று அட்சராப்யாசம் செய்யப்படுகிறது. பள்ளி செல்லத் தொடங்காத குழந்தைகளுக்கு, அன்றுதான் எழுத்துப் பயிற்சி அளிக்கத் தொடங்குவார்கள். ‘ஹரி நமோஸ்து சித்தம்’ என்று சொல்லியபடி குரு ஒருவர் குழந்தைகளின் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி நெல்லில் ‘அ’ என்ற எழுத்தைப் போட வைப்பார். இன்றும் கூட பல பள்ளிகளில் விஜயதசமி அன்று சேர்க்கை நடைபெறுகிறது. இதைத்தவிர சங்கீதம், இசைக் கருவிகள், மற்றும் பல கலைகளை விஜயதசமி யன்று தொடங்கினால் அந்தந்தத் துறைகளில் வெற்றி நடை போடுவார்கள் என்பது ஐதீகம்.
இந்த விஜயதசமி அன்று தான் பாண்டவர்களின் அஞ்சாத வாசம் முடிவுற்றது. பிரஹன்னளையாக ஒரு வருட காலம் விராட தேசத்தில் மறைந்திருந்த அர்ச்சுனன், தான் ஒரு வருட கால முன்னர் வன்னி மரப் பொந்தில் மறைத்து வைத்திருந்த ‘காண்டீபம்’ முதலான ஆயுதங்களை மீண்டும் எடுத்து உயிர்பித்துக் கொண்ட நாள் இந்த விஜயதசமி நாள்.
அதனால்தான் விஜயதசமி ‘ஆயுத பூஜை’ யாகக் கொண்டாடப் படுகிறது. அன்று, விவசாயிகள், கொத்தனார், தச்சர், ஆசாரி, தையற்காரர் போன்ற தொழில் செய்வோர் அனைவரும், தத்தம் தொழில் சம்மந்தப்பட்ட ஆயுதங்களை பயபக்தியுடன் வழிபடுகின்றனர்.
சரி, கொலுவைத்தலில் உள்ள சிறப்பம்சம், வழிமுறைகள், தாத்பர்யம், என்னென்ன..?
ஐம்பூதங்களில் ஒன்றான களிமண்ணால் ஆன பொம்மைகளை மரப்படிகளில் வைத்து 9 நாட்களும் அம்பிகையை வழிபடுவது இதன் சிறப்பம்சமாகும்.
கொலுப் படி அமைப்பதிலிருந்து, பொம்மைகளை அடுக்குவது வரை ஒரு வழிமுறை உள்ளது. முதலில் படிகளின் எண்ணிக்கை ஒற்றைப் படையில் இருக்கவேண்டும். 1,3, 5,7 என 11 படிவரை வைப்பவர்களும் உண்டு. கொலு வைக்க முடியாத சிலர் அல்லது  சில சந்தர்பங்களில் 1 படி வைத்தும் பூஜிக்கலாம், படியை நன்கு துடைத்து அதன் மீது தூய வெள்ளைத் துணியை விரிப்பது வழக்கம்.
சரி படி அமைத்தாகிவிட்டது. பொம்மைகளை எப்படி அடுக்க வேண்டும்?
மங்களகரமான எந்த செயலையும் செய்யும் முன் கலஸம் வைப்பது என்பது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது.  வெள்ளி அல்லது பித்தளை சொம்பு ஒன்றில் சில நாணயங்களையும், அரிசியையும் பருப்பையும் சிறு சிறு பொட்டலங்களில் போட்டு, அதன் வாய்ப் பகுதியில் மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்றை சொருகி, அதனைச் சுற்றி மாவிலைகளை சொருகி வைப்பர். சில வீடுகளில் சொம்பினுள் தண்ணீர் ஊற்றி தேங்காய் சொருகுவதும் உண்டு. கொலு முடிந்த உடன் தண்ணீரை துளசி செடிக்கு ஊற்றுவர், அரிசி பருப்பு, தேங்காய் அனைத்தையும் சமையலுக்குப் பயன்படுத்தலாம். உள்ளே போட்ட நாணயத்தை தனியாக கலச சொம்புடன் பத்திரப் படுத்தி வைப்பர்,
அடுத்ததாக பொம்மைகளை அடுக்கும் முறையில்தான் வாழ்க்கையின் தாத்பர்யம் அடங்கியுள்ளது, படிப் படியாக முன்னேறிச் சென்றால்தான் வெற்றிக் கனியைப் பெறமுடியும். அதனால் கீழ் படியிலிருந்து வைக்கத் தொடங்க வேண்டும். கீழ் படியில் பறவைகள், விலங்குகள் போன்ற ஓரறிவு கொண்ட உயிரினங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
அதற்கு மேல் உள்ள படியில் வணிகர்கள், தொழிலாளர்கள், உழைப்பாளர்கள் போன்ற பொம்மைகளை வைக்க வேண்டும். அதாவது செட்டியார், செட்டியாரினி, கடை, தபால்காரர், பள்ளிக் கூடம், விவசாயி போன்ற பொம்மைகள்.
அதற்கு மேல் உள்ள படியில், விவேகானந்தர், ராமக்ருஷ்ண பரமஹம்ஸர். பக்த மீரா, சாயி பாபா, காந்தி, திருவள்ளுவர், போன்ற உத்தம புருஷர்களின் பொம்மைகள்,
அதற்கு மேல் உள்ள படியில், அவதாரங்கள், தசாவதாரம், ராமலீலா, கிருஷ்ண லீலா, கீதோபதேசம் போன்ற பொம்மைகளை வைத்துவிட்டு அதற்கு மேல் உள்ள படியில்தான் கடவுளர்களின் உருவ பொம்மைகளை வைக்கவேண்டும். இத்தனைப் படிகளைக் கடந்த பின் தான் ஒருவன் இறை நிலையை, இறவா நிலையை அடைய முடியும் என்ற வாழ்வியலின் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது இந்த கொலுப் பண்டிகை.
முதல் படியில் கலசத்திற்கு அருகில், மரப்பாச்சி பொம்மைகளை வைப்பதும் ஒரு வழக்கமாக உள்ளது. பின் அதற்கு அருகில், பிள்ளையார், முருகன், சிவன் பார்வதி,பெருமாள், லக்ஷ்மி சரஸ்வதி, மஹிஷாசுரமர்த்தினி, இன்ன பிற தெய்வங்களின் பொம்மைகள் வைக்கப்படுகின்றன. எந்த உருவ பொம்மையாக இருந்தாலும் அந்த பொம்மை தேவியின் உருவில்,- அம்பிகையின் உருவில் பார்க்கப்படுகிறது. இங்கு தான் அம்பிகை கொலுவிருக்கிறாள்.
பொதுவாக இந்த கொலுப் பண்டிகையின் 9 நாட்களும் பெண்கள் பகல் பொழுதில் ஒரு வேளை உணவு உண்டு இரவில் பாலும், பழமும் மட்டும் அருந்தி விரதம் இருப்பர். சாயங்கால வேளையில், விளக்கேற்றி புது மலர்களால் பூஜை செய்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை சுண்டல் செய்து நைவேத்யம் செய்வது வழக்கம்.
அக்கம் பக்கத்திலுள்ள பெண்களையும், நண்பர்களையும், உறவினர்களையும், சிறு பெண் குழந்தைகளையும் அழைத்து, பாட்டு பாடச் சொல்லி, தாம்பூலத்துடன், சுண்டலும் விநியோகம் செய்வோம்.
இதுதான் பொதுவாக நாம் கொண்டாடும் முறை. நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபோது தினமும் ஒவ்வொரு வீட்டிற்கும் போவோம். ஒவ்வொரு வீட்டிலும் கூச்சப்படாமல் பாடுவோம். ஒவ்வொரு வீட்டிலும் சுண்டல் வாங்கிக் கொள்வோம். எங்கள் அம்மா எனக்கு தினமும் தன் கற்பனையைக் கொட்டி ஒரு அலங்காரம் செய்து மகிழ்வார். ஆண்டாள், கிருஷ்ணர், ராமர், மடிசார் மாமி என்று குஞ்சலம் வைத்து நீளப் பின்னலில் பூ தைத்து விடுவார், பெண் குழந்தைகள் என்று இல்லை ஆண் குழந்தகளுக்கும் பலவிதமான வேஷங்கள் போட்டு மகிழ்வர்.
இன்று எல்லோரும் BUSY BUSY…காலில் சக்கரமும், கைகளில் இறக்கையும் கட்டிக்கொண்டு பறக்கும் இன்றைய நவீன காலகட்டத்திலும் எல்லாப் பெண்களும் கலை நயமான விஷயங்களை இந்த கொலுவின் மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள்! இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு நடுவில் இந்த 9 நாட்களையும் தமக்குக் கிடைத்த வரப் பிரசாதமாக நினைக்கிறார்கள். முதலில் படியில் வெள்ளைத் துணிக்கு பதிலாக COLOUR CONCEPT டன், ஜரிகை வேலைப்பாடுகள், மணி கோர்த்தவை இப்படி கொலுப் படி விரிப்பைத் தையார் செய்து கொள்கிறார்கள்.
பொம்மைகளை அடுக்குவதிலும், ஒரு THEME  வைத்துக் கொள்கின்றனர். உதாரணமாக இந்த வருட கொலுவுக்கு, ராமர் என்று முடிவு செய்து கொண்டால், பால காண்டம் முதல் யுத்த காண்டம் வரையுள்ள கதைகளைக் கூறும் பொம்மைகளைத் தேடி தேடி வாங்கி வைக்க முயற்சிக்கிறார்கள். அதைத் தவிர தன் கையால் PAINT செய்த பொம்மை, தானே உருவாக்கிய பொம்மைகள், தெர்மொகோல் கொண்டு தானே செய்த கோயில், மலை, குளம் PARK, கலர் கோலங்கள், விளக்கு அலங்காரங்கள், இப்படி தன் கற்பனைத் திறனையும், கலைத் திறனையும் வெளிப்படுத்துகின்றனர். தாம்பூலத்துடன் ஏதாவது பரிசுப் பொருட்கள் – வித்தியாசமான, உபயோகமான பரிசுப் பொருட்கள் என ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு அழகாக – நளினமாக கொண்டாடுகிறார்கள்.
ஆங்காங்கே நடைபெறும் கொலு போட்டிகளில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
பலருக்கும் கொலுவுக்கு என்று அழைக்கச் செல்ல நேரமிருப்பதில்லை. அதனால் என்ன? நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளனவே..? வாட்ஸ் ஆப், மெயில், ஃபோன் இவற்றில் அழைத்தால் போதுமே! ஒருவர் மற்றவர் வீட்டிற்குப் போய் – பார்க்கப் போனால் அறிமுகம் செய்து கொள்ள முடியும். அரைத்த மாவையே அரைக்கும் டிவி நிகழ்ச்சிகளிலிருந்து கொஞ்ச நேரமாவது ஒதுங்கி இருக்க முடியும்.  நம் வீட்டில் கொலுவிருக்கும் அம்பிகையை ஆராதிக்க முடியும்.
கொலு பண்டிகையின் எல்லா நாட்களும் இரவில்  ஹாரத்தி எடுப்பது வழக்கம். பத்தாம் நாள் விஜயதசமியன்று இரவில் பாட்டு பாடியபடி மங்கள ஹாரத்தி எடுத்துவிட்டு கலசத்தை அரிசிப் பானையில் வைத்து மூடிவிட்டு, ஒரு பொம்மையைப் படுக்க வைப்பர். மறுநாள் எல்லா பொம்மைகளையும் எடுத்து காகித்த்தில் சுற்றி பத்திரப்படுத்திவைப்பர்.
இப்படி விருந்தோம்பலும், உற்சாகமும், கோலாகலமும், கலை உணர்வும் மிளிரும் இந்தப் பண்டிகை இந்த மாதம் 19ம் நாள் அம்மாவாசையன்று தொடங்குகிறது. இந்த அம்பிகை வழிபாடு, அவரவர் இல்லங்களில், அவரவர் விருப்பப்படி சிறப்பாக அமையவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


அசுரனை அழித்திட்ட தேவியவள்:
மகேஸ்வரி, கௌமாரி, வராகியிவள்.
அடைக்கலமாய் வரும் பக்தரையணைத்து,
அபயம் அளித்திடும் துர்கையிவள்.

பாற்கடல் அளித்த தேவியிவள்;
மஹாலக்ஷ்மி, வைஷ்ணவி, இந் திராணியிவள்;
பாக்கியம் பெருக்கி வரமளிப்பாள்
பெரும்செல்வம் படைத்திடும் லக்ஷ்மியிவள்.

வீணை இசைத்திடும் தேவியிவள்;
சரஸ்வதி, நாரசிம்மி, சாமுண்டியிவள்.
அறிவுக்கும், கலைகட்கும் அதிபதியாய்
அள்ளி வழங்கிடும் வாணியிவள்.

சக்தியைத் தருகின்ற சக்தியின் பாதத்தில்
பக்தியாய்ப் பற்றியே பெற்றிடும் சக்திதான்
வெற்றியைத் தந்திடும் மந்திரமாம் – நாம்
முக்தியை அடைந்திடும் தந்திரமாம்! – ஆம்
நாம் முக்தி அடைந்திடும் தந்திரமாம்.
நன்றி! வணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக