வெள்ளி, 10 ஜூலை, 2020

திருப்புமுனை - திரு.வெ.கோபாலன் பற்றிய பதிவு




திருப்புமுனை
பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே எனக்குத் தமிழில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஏதாவது எழுதிக்கொண்டே இருப்பேன். அதற்கு ஏற்றாற்போல் நான் கலந்து கொண்ட ஒரு கட்டுரைப் போட்டியில் ‘பாரதியார் கவிதைகள்’ புத்தகம் எனக்குப் பரிசாகக் கிடைத்தது. உண்மையில் அந்த நேரத்தில் அது எனக்குக் கிடைத்த ‘தீனி’ போலாயிற்று. தமிழ் வார்த்தகளை இத்தனை அழகாக அடுக்கமுடியுமா? சொற்களுக்குள் இத்தனை வீரியம் இருக்கிறதா? போன்றவை உந்துதலோடு கூடிய ஆர்வத்தை என்னுள் விதைத்தது. இப்படித்தான் நான் எழுதுதலை ஒருவித விருப்பத்தோடு செய்துவந்தேன்.
கரூர் மாவட்டத்திலுள்ள ‘மகாதானபுரம்’ என்ற கிராமம்தான் எங்கள் ஊர். நான் கல்லூரி படிப்பு முடித்த வருடம், குளித்தலை கவிஞர் முகிலன் என்பவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது என் அப்பா என் கவிதைகளை அவருக்குக் காண்பித்தார். உடனே அவர் ‘ஆடிக் கிருத்திகை’ அன்று நடைபெற இருந்த ‘ஆறுபடை வீடுகள்’ என்ற ஒரு கவியரங்கத்தில் என்னையும் இணத்துக்கொண்டார். நான் ‘திருத்தணி’ பற்றி பேசினேன். அதுதான் எனக்குக் கிடைத்த முதல் மேடை. என் அப்பாவிற்குப் பெருமை பிடிபடவில்லை. அடுத்ததாக குளித்தலையில் அதே குழுவுடன் ஒரு கவியரங்கம். ‘தோழி’ என்ற தலைப்பில் பேசினேன். என் அப்பாதான் என்னை அழைத்துச் சென்றார். அதன் பிறகு அப்பாவே முயன்று திருச்சி தமிழ்ச்சங்கத்தில் சொற்பொழிவாற்றும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தார்.. ‘வள்ளி மணாளன்’ என்ற தலைப்பில் பேசினேன். அதே வருடம் எனக்குத் திருமணம் ஆனது. கும்பகோணத்திற்கு நான் வந்தேன். குழந்தைகள், குடும்பம், அவர்கள் படிப்பு என்ற வாழ்க்கை ஓட்டத்தில் இரண்டற கலந்துவிட்டேன். என் மேடைப்பேச்சும் அத்தோடு முற்றுப்பெற்றுவிட்டது. என்னை எவரும் கட்டுப்படுத்தவில்லை. இருந்தாலும் மேடையேறி பேசும் வாய்ப்பு எதையும் நான் பெறவில்லை. அப்போது கூட எழுதுவதை நான் நிறுத்தவில்லை.
இப்போது மணமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன. குழந்தைகள் இருவரும் வளர்ந்துவிட்டனர். இந்த நேரத்தில் நான் ‘தஞ்சாவூர் தியாகப் பிரும்ம சபா’வின் அங்கத்தினர் ஆனதுடன், சிறப்புரை ஆற்றிவருகிறேன் என்பது வியப்பாக இருக்கிறது அல்லவா? எப்படி இது சாத்தியமாயிற்று? திருவையாறு பாரதி இயக்கத்தின் நிறுவனரான திரு.வெ.கோபாலன் அவர்களை நான் சந்தித்ததுதான் இதற்கான திருப்புமுனை என்றால் மிகையில்லை.
அவரை நான் சந்திப்பதற்கு பல வருடங்கள் முன்னரே, திருவையாறு பாரதி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி ஒன்றிற்கு என் பெரிய மகள் சௌமித்ரியை அழைத்துக்கொண்டு கும்பகோணத்திலிருந்து திருவையாறு சென்றிருந்தேன். அவளுக்கு அப்போட்டியில் முதல் பரிசு கிடைத்ததுடன் அவளின் பேச்சு, இயக்க உறுப்பினர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாம். இந்த விஷயத்தை திரு. கோபாலன் அவர்களோடு அறிமுகம் ஆனபின் ஒரு நாள் கூறினார்.
அதே போல அவரால் நிறுவி, நடத்தப்படும் பாரதி இயக்கம், பாரதியாரைப் பற்றி நடத்திய அஞ்சல் வழி கல்வியில் நான் பங்கு கொண்டேன். அதற்கான பாடங்களை திரு.கோபாலன்தான் தயாரித்து இருக்கிறார். அதில் சிறப்பாக எழுதிய பத்து நபர்களின் பெயர்கள் அடுத்த பாடப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் வெளியிடப்படும். அந்தப் பெயர்ப் பட்டியலைப் பார்ப்பதற்குள் ஆர்வமும், தவிப்பும் போட்டி போடும் எனக்கு. எப்படியும் என் பெயர் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடும். பாராட்டுவிழாவில் பரிசும் பெற்றுள்ளேன். விழாவை ஏற்பாடு செய்தவர் திரு.கோபாலன்தான். ஆனால் எனக்கு இதுவரை அவரோடு பரிச்சியம் ஏற்படவில்லை.
அதன்பின் என் கணவரின் பணி நிமித்தமாக நாங்கள் தஞ்சாவூருக்கு குடி வந்தோம். அப்போது ‘பாரதி இயக்க விழாவில் பரிசு பெறும் புகைப்படைத்தில் இருந்த ஒருவரை வழியில் பார்த்ததும், ‘நீங்கள் பாரதி இயக்கத்துடன் தொடர்புடையவரா’ என்று விசாரித்தேன். ‘ஆமாம்’ என்று சொன்னவர்தான் திரு.கோபாலன்.
மிகவும் எளிமையான மனிதரான அவர் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம் (encyclopedia) என்பது அவரோடு உரையாடிய மாத்திரத்தில் தெரிந்தது. 80 வயதான அவரின் சுறுசுறுப்பையும், நினைவாற்றலையும் பார்த்து பிரமித்துத்தான் போனேன். இவையெல்லாம் எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது..
அவருடைய 80 வது பிறந்த நாளை பாரதி இயக்க அன்பர்கள் திருவையாறில் கொண்டாடிய போது அவரைப் பற்றி ஒரு கவிதை எழுதி வாசித்தேன். மொழிப்புலமையும், பல்வேறு திறமைகளையும் கொண்ட அவருக்கு என் எழுத்துப் பிடித்துப்போனது என் அதிர்ஷ்ட்டம்தான். என் அப்பாவை போலவே என்னைப்பற்றி பலரிடமும் புகழ்ந்து பேசியதும் எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் தான்.
.தஞ்சாவூர் தியாக பிரும்ம சபையின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருக்கும் அவர், ஒரு நாள் ‘இந்த மாதம் இரண்டாவது சனிக்கிழமை நடக்கும் கச்சேரிக்கு முன்னதாக, நவராத்திரியை முன்னிட்டு, ‘அம்பிகை கொலுவிருந்தாள்’ என்ற தலைப்பில் ஒரு 10 நிமிடம் பேசவேண்டும்’ என்றார். அவர் கூறத் தொடங்கியதும் ஏதோ என்னிடம் சொல்ல வருகிறார் என்று நினைத்த நான், ‘பேசவேண்டும்’ என்று அவர் முடித்தவுடன், ‘நானா சார்?’ என்று வியப்புடன் கேட்டேன்.. ‘ஆமாம். நீங்கள்தான். அழைப்பிதழில் உங்கள் பெயரை என்னவென்று போடட்டும்’ என்றாரே பார்க்கலாம். மனம் ‘ஜிவ்’ என்று பறந்தது. அதற்குப் பிறகு ‘தியாகப் பிரும்ம சபை’ யில் பலமுறை பேசியிருக்கிறேன். சபை மூலம் நடைபெற்ற பாட்டுப் போட்டிகளுக்கு தொகுப்பாளராக, சிறப்பு விருந்தினரை மரியாதை செய்து பேச, அறிவிப்பாளராக என்று பல வாய்ப்புகளை எனக்கு வழங்கி வருகிறார். பல வார, மாத இதழ்களுக்கு என்னை எழுதச் சொல்லி ஊக்குவிக்கிறார். தற்சமயம் நான் கம்பராமாயணத்தைப் படித்து ‘எளிய மொழியில் கம்பராமாயணம்’ என்று கவிதை வடிவிலேயே எழுதி வருகிறேன். அதை எழுதுவதற்கு உற்சாகமும், ஊக்கமும் வழங்கி வருவதும் திரு.கோபாலன் அவர்கள் தான்.
அவரைப் பற்றியும், அவர் எழுதியுள்ள புத்தகங்கள் பற்றியும், அவர் நடத்தும் பாரதி இயக்கம் பற்றியும், அவர் பொறுப்பேற்கும் தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி பற்றியும் கூட எழுத விருப்பம். அதனை தனிப் பதிவாக கண்டிப்பாகத் தருகிறேன்
திரு.கோபாலன் அவர்களுக்கு இந்தப் பதிவின் மூலம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு இலக்கிய ஆர்வலரை சந்தித்ததுதான் புதைந்திருந்த என் மொழி வேட்கையை வெளிக்கொணர்ந்த திருப்புமுனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக