வெள்ளி, 24 ஜூலை, 2020

படத்துக்கு ஏற்ற கதை.

                                          பிறந்த நாள் கொண்டாட்டம்         
வைஷாலி பர்த்டேக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. ரகுவும், சாதனாவும் ப்ளான் போட ஆரம்பித்தனர்.
'இன்னிக்குக் குழந்தையைக் கூட்டிட்டுப் போய் அவளுக்குப் பிடிச்ச டிரஸ் வாங்கிக்குடு. நான் நாளைக்கு பேக்கரில கேக் ஆர்டர் குடுக்கறேன். வேற என்ன வாங்கணும்?'
'அவ ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ், டீச்சர்களுக்கு சாக்லேட் வாங்கணும்.' என்றாள்.
ரகு, தன் ஆஃபீஸிலிருந்து, சாதனா ஆஃபீஸுக்கு வந்து பிக் செய்துகொண்டு வரும் போதுதான் பேசிக்கொண்டு வந்தார்கள்.
இவர்கள் வீடு வந்து சேர்வதற்கும், வைஷாலியின் ஸ்கூல் வேன் வருவதற்கும் சரியாக இருந்தது. ஆறாவது படித்துக்கொண்டிருந்தாள் வைஷாலி.
'கண்ணம்மா... இன்னிக்கு நானும் நீயும் கடைக்குப் போப்போறோம். என்ன டிரஸ் வாங்கலாம் குட்டிக் கண்ணனுக்கு?' என்றாள் சாதனா.
'அம்மா... இந்த தடவை எனக்கு பர்த்டே டிரஸ் வேண்டாம்மா....எங்க ஸ்கூல் வேன் வர்ர வழில ஒரு அனாதை ஆஸ்ரமம் இருக்கு. அவங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்மா' என்றாள்.
டிரஸ் வேண்டாம் என்று வைஷாலி சொன்னதும் அதிர்ந்த இருவரும் அவள் அடுத்ததாகக் கேட்ட விஷயத்தை அறிந்ததும் மகிழ்ந்தனர்.
அவள் அம்மாவிடம் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வந்த ரகு, 'கண்டிப்பா செய்வோம்டா கண்ணா. டிரஸ்ஸும் வாங்கலாம்' என்றார்.
உடனே ரகு, அந்த கருணை இல்லத்தின் ஃபோன் நம்பரைப் பிடித்து விவரங்களைத் தெரிந்துகொண்டார்.
'அன்பு கருணை இல்லமாம் அது. அனாதைக் குழந்தைகளைத் தவிர மனம் நலம் குன்றிய குழந்தகளைக்கூட அவங்க பராமரிக்கறாங்களாம். லஞ்ச்க்கு 2,000 ன்னாங்க நான் டேட் குடுத்துட்டேன்' என்றார்.
'தாங்க்யூப்பா' என்று கட்டிக்கொண்டது வைஷாலி.
பர்த்டேயும் வந்தது.
'ஹாப்பி பர்த்டே வைஷூ' ஹாப்பி பர்த்டே கண்ணா' அப்பா அம்மாவின் முத்த மழையில் நனைந்தாள் வைஷாலி.
'லஞ்ச் டைத்துல நான் உங்க ஸ்கூலுக்கு அம்மாவோட வரேன். அன்பு கருணை இல்லத்துக்குப் போய் எல்லாருக்கும் சாக்லேட் குடுத்துட்டு வரலாம்' என்றார் ரகு.
'ஓகே அப்பா' என்றபடி ஸ்கூல் வேனில் ஏறினாள்.
மத்யானம் மூவரும் கருணை இல்லத்துக்குப் போனார்கள். அங்கே பல வயது பிள்ளைகள் இருந்தனர். ஒரு ஆசிரியர் அவர்களை வரிசையாக அமரச் செய்தார். உணவுகள் அவர்கள் எதிரில் வைக்கப்பட்டது.
'இன்று பிறந்த நாள் கொண்டாடும் வைஷாலி அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்று அந்த ஆசிரியர் கூறக் கூற அந்தப் பிள்ளைகளும் பின் தொடர்ந்து வாழ்த்தினர்.
'இன்று எங்களுக்கு மதிய உணவு அளித்த வைஷாலி அவர்களுக்கு நன்றி' என்று ஆசிரியருடன் அனைவரும் பின் தொடர்ந்து கூறினர்.
'நன்றி... நன்றி' என்று மூவரும் சொல்லும்போது அவர்களுக்குப் புல்லரித்தது. சாக்லேட் கவரை அந்த ஆசிரியரிடம் கொடுத்து எல்லோருக்கும் கொடுக்கும்படி சொல்லிவிட்டு மூவரும் கருணை இல்லத்தை விட்டு வெளியே வந்தனர்.
ஒரு கனத்த மௌனம் நிலவியது.
ரகுதான் பேச்சை ஆரம்பித்தார்.
'நல்ல ஐடியா பண்ணினடா கண்ணம்மா... ஒவ்வொரு வருஷமும் இதே மாதிரி கொண்டாடலாம்'
'அப்பா... லஞ்ச் மட்டும் குடுக்கலாம். நாம வரவேண்டாம்பா... அவங்களுக்கெல்லாம் பர்த்டேயும் தெரியாது... அப்பா, அம்மாவும் கிடையாது. அவங்க முன்னாடி சப்பாடெல்லாம் கூட வந்தாச்சு. அந்த நேரத்துல அவங்க எனக்கு வாழ்த்து சொன்னது எனக்குக் கஷ்டமா இருந்ததுப்பா. நாம மட்டும் பர்த்டே கொண்டாடறோம் அவங்களுக்கு அந்த கொண்டாட்டமே இல்லையேப்பா' என்று கூறி அழுத வைஷாலியைக் கட்டிக்கொண்டு, 'ஆமாடா செல்லம். நீ சொல்றது ரொம்ப சரி' என்று சொன்னார் ரகு. ரகுவுக்கும், சாதனாவுக்கும் கண்கள் கலங்கின.
Chandrasekaran Jayaraman and 5 others
6 Comments
Like
Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக