வெள்ளி, 10 ஜூலை, 2020

சமத்து வாசனை

ஐந்து மணிக்கு செல்ஃபோன் அலாரம் அடித்தது. சாந்தியால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. ஸ்னூஸ் க்குத் தள்ளிவிட்டு திரும்பி படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.  நேற்று இரவுக்குள் ஒரு கட்டுரை எழுதித்தரும்படி 'புல்வெளியும், முள்வேலியும்' E- MAGAZINE ஆசிரியர் சாயங்காலம் ஃபோன் செய்து கேட்டுக்கொண்டதால் வேர்டில் டைப் செய்து மெயில் செய்துவிட்டு தூங்குவதற்கு 1 மணி யாகிவிட்டது. அதனால் கண்கள் திறக்க மறுத்தன. மனம் விழித்துக்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை நினைவுபடுத்தியது. செல்ஃபோன் மீண்டும் குரல் கொடுக்க அதை ஆஃப் செய்துவிட்டு மெல்ல எழுந்து பல் தேய்த்தாள். பளீரென முகத்தில் நான்கு முறை தண்ணீரைத் தெளித்துக்கொண்டாள். ம்....!  அப்பாடா நன்றாக விழிப்பு வந்துவிட்டது. செல்ஃபோனை சார்ஜில் போட்டுவிட்டு, நிதானமாக காபி குடித்தாள். 'டக் டக்' என வேலைகளைப் பட்டியலிட்டாள்.

மெல்ல மாமனார் படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்தாள். மல்லாந்து படுத்தபடி, வாயத் திறந்தபடி தூங்கிக் கொண்டிருந்தார். மூச்சுவிட சிரமப்படுவதால் 'கர்கர், கடகட' வென்று சத்தம் வந்து கொண்டிருந்தது. பாவம் நெஞ்சில் கபம் கட்டிக்கொண்டு மிகவும் சிரமப்படுகிறார்.  சத்தம் செய்யாமல் வெளியே வந்தாள்.

ஸ்வேதாவுக்கு ஸ்நாக்ஸ் வைத்து, வாட்டர் பாட்டில் நிரப்பி வைத்தாள். லன்ச் பாக்ஸுக்கும், காலை டிஃபனுக்கும் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்தாள். பின் பென்சில் சீவி, புத்தகப் பையை அடுக்கி வைத்தாள். செல்ஃபோன் மெசேஜ் டோன் அழைத்தது. 'புல்வெளி,முள்வேலி' ஆசிரியர் தான்.

'ஹலோ குட்மார்னிங்க் சாந்தி. த ஆர்ட்டிகிள் ஹாஸ் கம் அவுட் நைஸ்லி. தாங்க் யூ ஃபார் தெ சேம். வில் கால் யூ லேட்டர்'

இந்த வாட்ஸுப் மெசேஜ் மனதுக்கு புத்துணர்ச்சியைத் தந்தது.

பெட் ரூமுக்குள் நுழைந்தாள். குமார் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரும் நேற்று மீட்டிங் முடிந்து வர 11 1/2 ஆகிவிட்டது. ஸ்வேதா குட்டிதான் நெளிந்து கொண்டே இப்படியும்,  அப்படியும் புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். குமாரை எழுப்பி விடப் போகிறாள்!. அதற்குள் சாந்தி, 'என்னவோ சமத்து வாசனை அடிகிறதே!' என்று சொல்லிக்கொண்டே மூக்கை உறுஞ்சி வாசனைப் பிடித்தாள். 'டக்'கென எழுந்த ஸ்வேதா, 'ஏன்னா, ஸ்வேதாகுட்டி முழிச்சுண்டாச்சு! என்று கூறிக்கொண்டே ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

'அப்பாடா... நல்ல மூடுக்குக் கொண்டு வந்தாச்சு! ஒவ்வொரு நாள் அழுகையுடனே எழுந்திருப்பாள். சில நாள் 'ஸ்கூலுக்குப் போகலை' என்றவாறு எழுந்திருப்பாள். சில நாள் பிடிவாதம்! இப்படி போகும்.

'ஹோம் ஒர்க் பண்ணணும் இல்லை டா?'

'தமிழ் மட்டும்தானே பாக்கி. மீதி எல்லாத்தையும் நேத்திக்கே முடிச்சாச்சே!'

மாமனார் இருமும் சத்தம் கேட்டு மெல்ல ஸ்வேதாவை விடுவித்துவிட்டு, ஓடினாள். இருமலேடு போரடிக்கொண்டிருந்தார். அவர் நெஞ்சை நீவிவிட்டு, விக்ஸை அவர் விலா வரை தடவி விட்டாள்.

'வெந்நீர் குடுக்கட்டுமாப்பா?'

வாய் கொப்பளிக்கவில்லை யென அவர் ஜாடை காட்டினார்.

பாத் ரூமிலிருந்து ஒரு மக்கில் தண்ணீரும், கொப்பளித்து துப்புவதற்காக மூலையில் சாத்தி வைத்திருந்த பேசினையும் எடுத்து வந்து கொப்பளிக்க வைத்தாள்.

ஃப்ளாஸ்க்கிலிருந்து வெந்நீர் எடுக்கும் போது, ஸ்வேதா குமாரை எழுப்பி விடப் போகிறாளே என்ற எண்ணம் வர, மெல்ல ஹாலை எட்டி பார்த்தாள்.

'என்னடா இது, சமத்து வாசனையோட பேஸ்ட் வாசனையும் வர்றதே' என்று குரல் கொடுத்தாள்.

'ஈ..... என்று பல்லைக் காட்டிக் கொண்டு சிரித்துக்கொண்டே ஓடி வந்தாள் ஸ்வேதா.

'என்னடா மின்னலடிக்கறது?'

'அது ஸ்வேதாகுட்டியோட பல்லு"

'இன்னிக்கு ஸ்வேதா குட்டிக்கு என்ன வேணும் M, C, B..?'
M ன்னா மால்டோவா, C ன்னா காம்ப்ளான், B ன்னா போர்ன்விட்டா.

'ம்ம்ம்ம்ம்  இன்னிக்கு 'M' '

மால்டோவாவைக் கலந்து அவளுக்குப் பிடித்த கப்பில் கொடுத்துக் கொண்டே
'இன்னிக்கு என்னடா ஒரே சமத்து வாசனையா இருக்கு?'

'ஏன்னா குமார் முழிச்சுண்ட வாசனை இது' என்றபடி வந்தார் குமார்.

அதற்குள் 'சாந்தி சாந்தி' என்று இருமலுக்கு இடையே சத்தமாகக் கூப்பிட்டார் மாமனார்.

'தோ வந்துட்டேம்பா... குமார் குழந்தைக்கு மால்டோவாவை குடுங்கோ' என்றபடி ஓடினாள் சாந்தி.

அதற்குள் மாமனார் கோழையும், கபமுமாக வாந்தி எடுத்திருந்தார்.

அவர் வாயத் துடைத்து, கழுத்து, கையையெல்லாம் வெந்நீரால் சுத்தம் செய்து டெட்டாலால் துடைத்தாள்.

'காபி குடிக்கறேளாப்பா?'

'சூடா கொஞ்சமா குடும்மா..'

குமாருக்கும், மாமனாருக்கும் காபியை கலந்து கொண்டிருந்தாள்.
குமார் கிச்சனுக்கு வந்து,

'சாந்தி, ஸ்வேதாவ பாரு! தானே ஹோம் ஒர்க் பண்ணிண்டிருக்கா.. எட்டிப் பாரேன்' என்றார்.

'அம்மா.. நல்ல சமத்து வாசனை அடிக்கறதா..? தமிழ் ஹோம் வொர்க் ஃபினிஷ்ட்' கட்டிக் கொண்டாள் ஸ்வேதா.

மணி 8 ஆகிவிட்டது. 8.20 க்கு ஆட்டோ வந்துவிடும். குமார் 8 1/2க்கு கிளம்ப வேண்டும். ரெண்டு பேருக்கும் லன்ச் பாக்ஸ் பேக் செய்ய செய்யவேண்டும்.  அரக்க பரக்க கிச்சனுக்குள் நுழையும் முன், செல்ஃபோனை எடுத்து ஏதேனும் செய்தி உள்ளதா என ஆராய்ந்தாள். நிறைய வாட்ஸ்அப் மெசேஜ்கள் இருந்தன. அத்தோடு ஒரு மெயிலும் இருந்தது. நேரமாகிவிடப்போகிறதே என்ற பதைப்புடனேயே மெயிலை ஓபன் செய்து படித்தாள். அவள் முகம் புன்னகையால் பிரகாசித்தது. சமீபத்தில், வேறொரு E, BOOK ல் ஒரு போட்டிக்காக அவள் அனுப்பியிருந்த குறு நாவல் முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஃபோனை அவசரமாக ஆஃப் செய்யும் போது, ஒரு மெசேஜ் வந்தது. 'மேம்... தங்களை இப்போது அழைக்கலாமா? '10 மணிக்குப் பிறகு அழைக்கலாம்' என பதிலளித்துவிட்டு, கிச்சனுக்கு ஓடினாள்.

குமார் இங்கே டிஃபன் சாப்பிட்டுவிட்டு, கையில், சாம்பார் சாதம், தயிர் சாதம், கறி என்று லன்ச்சுக்கு எடுத்துச் செல்வார். ஸ்வேதாவுக்கு, காலை உணவாக பருப்பு சாதம் வெண்டைக்காய் கறியும், டப்பாவுக்கு குட்டி குட்டியாய் தோசை, ஒரு வாய்க்கு ஒரு தோசை என வார்த்து நெய் சர்க்கரை தடவி  வைத்தாள்.

ஸ்வேதாவைக் குளிப்பாட்ட அழைத்துச் சென்றாள். குளிப்பாட்டும் போதே 2 திருக்குறள் சொல்லிக்கொடுக்க மறக்கவில்லை சாந்தி. இப்பொழுது ஸ்வேதாவுக்கு ஒரு 50 குறள் அர்த்தத்துடன் தெரியும்.

குளிப்பாட்டி, ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்யச்சொல்லி, சாப்பாடு ஊட்டி விட்டு, ஷூ போட்டுவிட்டு வாசலுக்கு வரவும், ஆட்டோ வரவும் சரியாக இருந்தது. 'பை மா! பை பா!' என்ற படி சிரித்துக்கொண்டே ஆட்டோவில் குழந்தை ஏறிச்சென்றது. மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.

குமாரும் 8.30க்கு கிளம்பிவிட்டார்.

மாமனாருக்கு, டிஃபனுக்கு முன் தரவேண்டிய மருந்தை கொடுத்தாள்.
 'தோசை சூடா வாத்துண்டு வரேம்பா.. சாப்டுட்டு, வெய்யில் வந்ததும் வெந்நீர்ல குளிச்சு விடறேன்'

மெத்து மெத்தென்று சாஃப்ட்டாக தோசை, சாம்பார் கொடுத்துவிட்டு, மீதம் உள்ள 3 மாத்திரைகளை கொடுத்துவிட்டு. படுக்கையை தட்டி போட்டு, அவரை படுக்க வைத்தாள்.

அப்பா...டா! ஃபேனைப் போட்டுக்கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தாள்.

செல்ஃபோன் அழைத்தது. 10 மணிக்குப் பிறகு அழைக்க சொன்ன காலோ என்று நினைத்து எடுத்தாள்.
அம்மா...

"ஹலோ அம்மா.. குட் மார்னிங்க்'

'ஹலோ சாந்தி....என்னம்மா ஒரே சமத்து வாசனை அடிச்சுண்டே இருக்கு....."

கலங்கிய கண்ணுடன் சிரித்தாள் சாந்தி.

அவள் சிரிப்பின் அர்த்தம் அம்மாவுக்குப் புரிந்திருக்கும். 'இது போதும்மா எனக்கு. இதாம்மா வேணும்' மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் சாந்தி.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக