புதன், 23 டிசம்பர், 2020

ரூம் ரென்ட்


எங்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த பெண்ணுக்கு மணமாகிவிட்டது. அவளும் அவள் கணவனும் ஐ.டி.கம்பெனிகளில் பணியாற்றுகிறார்கள். அவர்கள், தங்கள் ஒருவயது குழந்தையுடன் பங்களூரில் வசிக்கிறார்கள். என் இரண்டாவது பெண்ணும் பங்களூரிலேயே ஒரு ஹாஸ்டலில் தங்கிக்கொண்டு ஐ.டி.கம்பெனி ஒன்றில் பணியாற்றிவருகிறாள். நான், என் கணவர் மற்றும் மாமியாருடன் தஞ்சாவூரில் வசிக்கிறேன்.

2020 மார்ச்சு மாதம் நாடு முழுவதும் டோடல் லாக்டவுன் என்று அறிவித்தவுடன், அலுவலகங்கள் எல்லாம் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ செய்யச்சொல்லி அறிவுறுத்திவிட்டனர். ஹாஸ்டலிலும் உணவு கிடைக்காது. இங்கிருந்து காலி செய்தோ செய்யாமலே கிளம்பிவிடவேண்டும். அவள் எங்களுக்கு ஃபோன் செய்துவிட்டு, தேவையான சில டிரஸ்கள், லாப் டாப், சார்ஜர், போன்றவற்றை மட்டும் பேக் செய்துகொண்டு, தன் அக்கா வீட்டிற்குப் போய்விட்டாள்.

இங்கே என் கணவர், “நாம் போய் அவளை இங்கே அழைத்துவந்து விடலாம்” என்றார்.

அப்போதுதான் ‘தப்லீ கி ஜமாத்’ பற்றிய செய்திகள் வேறு வந்த வண்ணம் இருந்தன. “இப்போ ஸ்டேட் விட்டு ஸ்டேட் நாம் போறது சரியா தெரியலியே. அவள்தான் ஸேஃபாக இருக்கிறாளே” என்று நான் கூறினேன்.

“இல்ல… இல்ல.. இப்போ உடனடியா அவ இங்க வந்துடறதுதான் நல்லது. இன்னும் என்ன மாதிரி தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுமோ” என்று இவர் கூறியதால், அடுத்த நாளே காரில் சென்று அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம்.

ஹாஸ்டலிலேயே அவள் சாமான்கள் மாட்டிக்கொண்டன. மார்ச் மாத ரென்ட்டை அக்கவுன்ட் ட்ரான்ஸ்ஃபர் செய்தாள். ஏப்ரல் வந்தது.. போனது ரென்ட் அனுப்பினாள். மே, ஜூன், ஜூலை யும் வந்துவிட்டது. அப்போது தான் ‘அனாவசியமாக ரென்ட்டை அனுப்பவேண்டியிருக்கிறதே’ என்று தோன்ற ஆரம்பித்தது. பெரிய பெண்ணிடம் ‘நீ போய் வகேட் செய்யமுடியுமா?’ என்று கேட்டாள். ‘சரி பார்க்கிறேன்.’ என்றாள்.

இதில் பலவித நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் ரூம் சாவி இங்கு உள்ளது. இரண்டாவது, சின்ன குழந்தையை வைத்துக்கொண்டு, அவள் ஹாஸ்டல் வரை போகமுடியுமா? என்பதே சந்தேகமாக இருந்தது. மாப்பிள்ளையை லேடீஸ் ஹாஸ்டலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். இருந்தாலும் அவள் சொன்னாள், ’மொதல்ல நீ சாவியை கொரியர் பண்ணு. நான் ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசிக்கிறேன்’  ‘சரி’யென்று சாவியை கொரியர் செய்தோம்.

அப்போது கர்னாடகாவில் கொரோனா கேஸ்கள் அதிகம் இருந்தது. அவளால் எந்த ஏற்பாடும் செய்யமுடியவில்லை. அப்போது ஃபேஸ் புக்கில் வந்த ஒரு விளம்பரம் கண்ணில்பட்டது. ‘ஈஸி மூவர்ஸ்’ என்ற கம்பெனி வகேட் செய்து சாமான்களை அனுப்புவதாகப் புரிந்தது.

எங்களுக்கு ஒரே குழப்பம். இது போன்ற கம்பெனிகளை நம்பலாமா? இது சரிதானா?’ என்று. விளம்பரத்தில் இருந்த ஃபோன் நம்பருக்கு கால் செய்தோம். பேசும்போதே புரிந்தது அவர்கள் தமிழர்களென்று. ‘வகேட் செய்து தஞ்சாவூருக்கு அனுப்புவதற்கு Rs.10,000 என்று கோட் செய்தனர். மீண்டும் குழப்பம். எல்லா சாமான்களும் இங்கு வந்தவுடன் நிலைமை சீராகி ஆஃபீஸ் வரச்சொல்லி ஆர்டர் வந்ததென்றால் சிரமமாயிருக்குமே என்று. பெரிய மகள் வீட்டிற்கு அனுப்பலாமா என்று கேட்டோம். அதற்கு 4,000 என்றனர். ‘அவர்கள் வீட்டிலிருக்கும் சாவியை வாங்கிக்கொண்டு போய் வகேட் செய்ய வேண்டும்’ என்றோம். ‘அதற்கு R.200’ என்றனர். பேரம் பேசாமல் சரியென்றோம்.

அதே போல் நடந்தது. பெண் வீட்டிலிருந்து சாவி வாங்கிக்கொண்டு ஹாஸ்டலுக்குப் போய் அங்கிருந்து வீடியோ கால் செய்து ரிஸ்ப்ஷனிஸ்ட்டோடு பேசச் செய்தனர். அவர்கள் பர்மிஷன் கிடைத்தது. ரூமுக்குள் போய் ஒவ்வொன்றையும் வீடியோவில் காட்டி, எங்கள் சாமான்களை கலெக்ட் செய்தனர். அவர்களுடன் ஹாஸ்டல் ஸ்வீப்பரும் உடன் இருந்தார். செப்பல் ஸ்டாண்டிலிருந்த ஷூஸ், பாத்ரூமிலிருந்த சோப், பிரஷ் போன்ற சாமான்கள், கப்போர்டிலிருந்த டிரஸ்கள், ஷெல்ஃபில் இருந்த தட்டு, ஸ்பூன், கப் போன்றவை…. இப்படி அத்தனையையும் அசெம்பிள் செய்து கொண்டனர். கதவுக்குப் பின்னாலிருந்த காலண்டர் வரை அனைத்தையும் பேக் செய்து பெரிய பெண் வீட்டிற்கு அனுப்பிவிட்டு. அகௌன்ட் நம்பர் கொடுத்தனர். சரியாக 4,200/- என்று குறிப்பிட்டதும் எங்களுக்குத் திருப்தியாக இருந்தது.

ஆகஸ்ட்டிலிருந்து இப்போது வரை ரென்ட் பணம் மிச்சமானது. இதில் நான் அதிகம் பாராட்ட விரும்புவது, அவர்களின் தொழில் நேர்த்தியை. உருவாகிவிட்ட ஒரு பாதகமான சூழ்நிலையையே சாதகமாக்கிக்கொண்ட அவர்களின் செயல் திறனை.

அதிகம் ஆச்சர்யப்பட்டது. வளர்ந்துள்ள தொழில் நுட்பத்தை. வலைத்தளங்கள், மொபைல் ஃபோன்கள், இன்டெர்னெட் ட்ரான்சாக்ஷன்ஸ். இப்படி இருப்பதனாலேயே இருந்த இடத்திலிருந்து ஒரு வேலை முடிந்திருக்கிறது.

வாழ்க அறிவியல்! வளர்க தொழில் நுட்பம்! பெருகக தொழிலும் உழைப்பும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக