திங்கள், 21 டிசம்பர், 2020

பட்டம்முக்கண்ணு

 

பங்களூரில் ஐ.டி. நிறுவனங்களில் வேலையிலிருக்கும் என் இரண்டு மகள்களும் ‘work from home’ அடிப்படையில் வீட்டிற்கு வந்தது எதிர்பாராத மகிழ்ச்சியைக் கொடுத்தது. என் மூத்த பெண்ணிற்கு மணமாகி ஒரு பெண் குழந்தை உண்டு. அவளின் புகுந்த வீடும் எங்கள் ஊரானதால் அவர்களும் எங்கள் ஊருக்கு வந்துவிட்டனர்.

சென்ற ஆண்டு எங்கள் பேத்தி பிறந்து மகளை அவர்கள் வீட்டிற்குக் கோண்டு விடுவதற்கு முன்தான் எங்கள் புது வீட்டிற்கு கிரஹப்பிரவேசம் முடித்திருந்தோம். இப்போது பேத்தி, தவழ்ந்து கொண்டும், பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க முயற்சித்துக் கொண்டும் இருந்தாள். சொந்த ஊருக்கு வந்த அவர்கள் எங்கள் வீட்டில் 10 நாட்களும், அவர்கள் வீட்டில் 10 நாட்களுமாக இருந்தனர்.

அப்போது எங்கள் பேத்தி, வீடு முழுவதும் தவழ்ந்து சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

இறைவா… இறைவா… இறைவா….”

என்ற பாடல் பொங்கி பூரிக்கச்செய்தது.

‘உம், அம்’ என்ற ஒலிகளுக்கு மேல் ‘ம்ம்மா’ ‘ப்ப்பா’ ‘தத்தத்தத்த’ என்று த்வனி குட்டி பேச ஆரம்பித்தது லாக்டவுன் சமயத்தில் எங்கள் புது வீட்டில்தான்.

பங்களூரில் ஹாஸ்டலில் இருந்த எங்கள் சின்ன பெண்ணிற்கு, அக்காவுடன் சேர்ந்து எங்கள் வீட்டிலேயே இருக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததோடு, குட்டிப்பாப்பாவோடு சேர்ந்து விளையாடவும், அதன் ஒவ்வொரு அசைவிற்கும், வளர்ச்சிக்கும் ரசித்து மகிழ்வதற்கும் ஏதுவான காலமாயிற்று இந்த லாக்டவுன். ‘சித்தி’யென்றால் கொள்ளை இஷ்டம் எங்கள் பட்டம்முவுக்கு. ‘சித்தி’ சொல்லு…. என்றால் ‘த்தியா’ என்று சொல்லும் அழகே அழகு.

இந்த இரண்டு பெண்களையும், ஸ்கூலுக்கு, அனுப்பி, காலேஜ் அனுப்பி, இப்போது அவர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பதை பெருமிதமாய்ப் பார்ப்பேன். இவர்களோடு மாப்பிள்ளையும். ஆளுக்கு ஒரு தனியிடத்தில், மடிக்கணினி (lap top) யோடு அமர்ந்துவிடுவார்கள். மீட்டிங்க் என்று அறைக் கதவை மூடிக்கொள்வார்கள். சில நேரங்கள் காரசார மீட்டிங்கும் இருக்கும். த்வனி குட்டி என்னிடமே இருக்கும். நானே கதை சொல்லி சாதம் ஊட்டுவேன். புத்தகப் படங்கள் காட்டுவேன். தூளியில் போட்டு ஆட்டி தூங்கச் செய்வேன். இதையெல்லாம் செய்ய ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா? ‘பட்டம்மு’ ‘பட்டம்மு’ என்று நான் கூப்பிட்டால் அது ‘அம்மம்மா..’ அம்மம்மா..’ என்று என்னை அழைக்கும்.

தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை எழுந்து நின்று நடக்க ஆரம்பித்ததும் எங்கள் வீட்டில்தான். தத்தக்கா… பித்தக்கா… வென்று நடந்து ‘தொம்’ என்று உட்காரும். காண கண் கோடி வேண்டும்.

‘தளர் நடை இட்டு வாராய்’ என்று நான் பாடுவேன். பெண்ணும், மாப்பிள்ளையும் பார்த்து ரசிப்பார்கள். அவர்களுக்கும் கிடைத்த பெரும் பேறுதான் இந்த லாக்டவுன். ‘work from home’ இல்லையென்றால் காலையில் அலுவலகம் போய்விட்டு குழந்தை தூங்க ஆரம்பிக்கும் போது வருவார்களாயிருக்கும்.

அதே போல அவரவர் தங்கள் மீட்டிங்கை எப்படி கையாள்கிறார்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியும்படி ஆயிற்று. சில நேரங்கள், ‘இப்படி கூட சொல்லியிருக்கலாமே!’ என்றோ ‘You managed well’ என்றோ பேசிக்கொள்வார்கள்.

‘அத்தியாவசியப் பணி’யான E.Bயில் D.E.யாக இருக்கும் என் கணவர் தினமும் மாஸ்க் சகிதம் அலுவலகம் சென்று வந்தார். வந்ததும் சானிடைசர், குளியல் என்ற எல்லா தற்காப்பு நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டு குழந்தைக்கு மாடு காட்டுவார். அதுவும் ‘தாத்தா தாத்தா’ என்று கூப்பிட்டு அவரைக் கட்டிக்கொள்ளும். வீடு முழுவதும் ஜனக்கூட்டமும், சுறுசுறுப்புமாக இயங்குவதைப் பார்த்து மகிழ்ந்து போவார்.

மொத்தத்தில் அந்த காலக்கட்டம் எங்கள் எல்லோருக்குமே கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் தான். ‘சோஷியல் டிஸ்டென்ஸிங்க்’ ஐ உலகமே அறிவுறுத்தும் இந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் டிஸ்டென்ஸைக் குறைத்து, அனைவரையும் சேர்ந்து இருக்கச் செய்தது இந்த ‘கொரோனா’ தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக