செவ்வாய், 8 டிசம்பர், 2020

ஒரு வட்டத்தின் உயரம்

 

                                                 ஒரு வட்டத்தின் உயரம்

 

‘Lak Textile Palace’  என்ற என் ஸ்தாபனத்தின் எஞ்சிய சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெருமானமுள்ள டிரஸ் மெட்டீரியல்களை என் கஸின் சிவாவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு, என் கணவருடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். சிவா, என் கஸின் மட்டுமல்ல என் தொழில் குருவும் கூட. ஒரு சிறிய புள்ளியில் தொடங்கிய என் தொழிற் பயணம், மீண்டும் அதே புள்ளியை அடைந்து முழுமையான வட்டமானதைப் போன்ற ஒரு உணர்வு என் மனதை ஆக்ரமித்தது. ‘Lak Textile Palace!’ திரும்ப திரும்ப என் மனம் அதை உச்சரித்துக்கொண்டே இருக்கிறது.

நான் ஒரு 10 ஆண்டு காலம் புடவை, டிரஸ் மெட்டீரியல்கள் பிஸினெஸ் செய்துகொண்டிருந்தேன். அந்த Lak Textile Palace இன்றோடு மூடப்பட்டுவிட்டது. சிவாதான் எனக்கு இந்தத் தொழிலை அறிமுகப்படுத்தியது. அவன் ரொம்ப நாட்களாக வீட்டிலிருந்தபடியே புடவைகள் வியாபாரம் செய்து வருகிறான். அவனிடம் நான், ‘வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்ததும், நிறைய நேரம் இருப்பது போல இருக்கு. ஏதாவது செய்யலாமா என்று யோசிக்கிறேன்’ என்று சொன்னதும் உடனேயே தன்னுடைய சில புடவைகளை எனக்குக் கொடுத்து, என் தோழிகளிடையே முயற்சித்துப் பார்க்கச் சொன்னான்.

பழைய நினைவுகளில் நான் மூழ்கியிருந்தேன். ‘இளநீர் குடிக்கலாமா?’ என்றபடி காரை நிறுத்தினார் என் கணவர். அந்த இளநீர் வண்டி முன் இன்னொரு காரில் வந்தவர்கள் இளநீர் குடித்துக்கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண் நிறை மாதத்தில் இருந்தார். அவருக்குத் தந்த இளநீருக்குப் பணம் வேண்டாம் என்றார் அந்த இளநீர்காரம்மா. என்ன ஒரு தொழில் நேர்த்தி! மனிதாபிமானம்!

 நானும் அப்படித்தான் என் தொழிலில் ஒருவித பக்தியையும் நேர்த்தியையும் காட்டினேன். இல்லாவிட்டால் இத்தனை கடைகள் இருக்கும் போது எனக்கு எப்படி அத்தனை வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்? எத்தனை கடைகள் இருந்தாலும் அங்கே ஒரு இயந்திரத்தனமாகத்தான் புடவை பர்சேஸ் இருக்கும். ‘கடைக்காரர் எதையெதையோ எடுத்துக் காண்பிப்பார். அந்த கூட்டத்தில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்துவிட வேண்டியிருக்கும்’ என்று என் வாடிக்கையாளர்கள் கூறுவது வழக்கம். என்னிடம் புடவை வாங்கும் போது தனக்கு இது நன்றாக இருக்கிறதா என்று என்னிடமே கேட்பர். நானும் அவர்களுடன் நட்பாகப் பழகி என் கருத்தைக் கூறுவேன். எப்போதுமே என்னிடம் புடவை வாங்குவதில் ஒரு சௌகர்யம் உண்டு. நான் அவர்கள் இத்தனை நாள் என்னிடம் வாங்கியதை நினைவில் வைத்துக்கொள்வேன். போன தடவைதானே இதே பச்சை கலர்ல புடவை வாங்கினீங்க.. பரவாயில்லையா?’ என்று குறிப்பிடுவேன். அவர்களே மறந்திருப்பர். ‘ஆமா… ஆமா… நல்லவேளை! நானே மறந்துவிட்டேன். நீங்க நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்க’ என்பர். அவர்கள் வேறு யாருக்காவது வாங்க வந்தால் ‘என்ன நிகழ்ச்சி? எந்த வயதினருக்குப் பரிசு’ என்பதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல கலரோ, டிசைனோ, மெட்டீரியலோ எடுத்துக்காண்பிப்பேன்.

என் வாடிக்கையாளர்களின் ரசனை எனக்கு அத்துப்படியாக இருந்தது. அவர்களுக்கான ஒரு முந்தைய செலக்ஷனை நான் செய்துவிடுவதால் அவர்களுக்கு வேலை எளிதாகும். நான் அவர்கள் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்று காண்பிக்கையில் அவர்கள் ‘வேறு ஏதாவது இருக்கிறதா?’ என்றால் உடனே மீண்டும் வீட்டிற்கு வந்து அத்தனையையும் அப்படியே வைத்துவிட்டு, அவர்களைக் காக்க வைக்காமல் தேவையானதை மீண்டும் எடுத்துச் சென்று காண்பிப்பேன்.

இளநீர் நன்றாக இருந்தது. குடித்துவிட்டு மீண்டும் எங்கள் பயணத்தை துவக்கினோம். வழியில் காப்பிப்பொடியின் கமகம வாசம் அடித்தது. இந்த காப்பிப் பொடி கடை கூட எனக்கு பலவிதத்துல இன்ஸ்பிரேஷன் தந்திருக்கு. ஒரு சின்ன காப்பிப்பொடி கடை. அதில், வத்தல், வடகம், ஊறுகாய், பொடி வகைகள், வெண்ணெய் எல்லாம் வியாபாரம் ஆகும். அதைப் பார்த்துவிட்டுதான் நான் என் Palace இன் ஐட்டங்களை அதிகரித்தேன். சிவா என்னிடம் முதலில் 20 புடவைகளை மட்டும்தான் கொடுத்து பிஸினெஸ் ஆரம்பிக்கச் செய்தான். தங்களுக்கு புடவை வாங்க வருபவர்கள், தங்கள் பெண்ணிற்கு ஏற்ற ரகங்கள் என் Palace ல் இருந்தால், ஃபர்ஸ்ட் ப்ரிஃபரென்ஸ் பெண்களுக்கு கொடுப்பார்கள் என்ற ஒருவித மனோதத்துவத்தை நான் கொஞ்ச காலத்திலேயே புரிந்து கொண்டேன். சிவாவுடனான எனது அக்ரிமென்ட் சரியாக போய்க்கொண்டிருந்தது. அவன் கொடுத்த புடவைகளுக்கு எனக்கு 5% கமிஷன் கொடுத்துக்கொண்டிருந்தான். அந்தத் தொகையை சிறுக சிறுக சேமித்து, மெதுவாக என் Palace ல் சில சூடிதார் மெட்டீரியல்கள் வாங்கினேன். அப்புறம் லெகின், டாப்ஸ், பிளவுஸ் பிட்ஸ், உள்பாவாடை, சாரி ஃபால்ஸ் போன்றவற்றை வாங்கி வைத்தேன். ஒரு ‘மினி சூப்பர் மார்கெட் என் Palace!’ என்று பெருமை கூட பட்டுள்ளேன். இந்த காப்பிப்பொடி கடை மட்டுமல்ல நான் போகும் எந்த ஒரு தொழில் நிறுவனமோ, கடையோ எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடும். ‘எப்படி இத்தனை ஆட்களை வைத்து நிர்வகிக்கிறார்கள், எப்படி சம்பளம் தருவார்கள்?’ போன்ற கேள்விகள் என் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும். அந்த எண்ணத்தின் விளைவுதான் நான் தேவியையும், வாணியையும் என் Palace உடன் இணைத்துக்கொண்டது. எங்கள் பக்கத்து வீடுகளில் இருந்த அவர்களுக்குத் தைக்கத் தெரியும். என்னிடம் புடவையும், புடவை ஃபால்ஸும் வாங்குபர்களுக்கு இலவசமாக ஃபால்ஸூம், புடவைக்கு ஓரமும் அடித்துக் கொடுப்பதற்காக அவர்களை நான் வேலைக்கு அமர்த்திக் கொண்டேன். அதே போல என்னிடம் வாங்கிய புடவைகளுக்கு பிளவுஸோ, அல்லது சூடிதாரோ தைப்பதற்கு குறைந்த தையல் கூலியை நிர்ணயித்திருந்தேன். முதலில் கையிலிருந்துதான் தேவிக்கும், வாணிக்கும் சம்பளம் கொடுக்கவேண்டியிருந்தது. ஆனால் அந்த வியாபார நுணுக்கமே  பலரை, நிரந்தர வாடிக்கையாளராக்கி, என் வருமானத்தைப் பெருக்கியது.

எங்கள் கார் காலேஜ் ஒன்றைக் கடந்து சென்றது. இன்று நான் பார்க்கும் ஒவ்வொன்றும், என் மனதில் கடந்த கால நினைவுகளை நிழற்படமாக்கிக் காட்டிக்கொண்டிருப்பதைப் போல இந்த காலேஜ் கட்டிடத்தைப் பார்த்ததும், என் மனதிற்குள் மூன்று நினைவுகள் போட்டி போட்டன.

முதலாவது என் காலேஜ் நாட்கள். அப்போது என் மனதில் என் எதிர்காலத்தைப் பற்றிய கற்பனை நிறைய இருந்தது. அதில் ஒன்றுதான், ‘வேலை எதற்கும் செல்லாமல் ஒரு முழு நேர குடும்பத்தலைவியாக, குழந்தைகள், கணவன் மற்றும் குடும்பத்திலுள்ளோரை கவனித்துக்கொள்ளவேண்டும்’ என்ற என் வைராக்கியம். ‘ஒருவரால் ஒரு துறையைத் தான் சிறப்பாக கவனிக்கமுடியும்’ என்ற எண்ணம் எனக்கு உறுதியாக இருந்தது.

அது சரியா, தவறா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், 2 குழந்தைகள் பிறந்து அவர்களின் காலேஜ் படிப்பும் முடியும் வரை எனக்கு என் முடிவு சரியென்றே பட்டது. அதற்குப் பிறகுதான் சற்று போரடிக்க ஆரம்பித்தது. அதைத் தவிர, நான் என் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக ஒன்றுமே செய்யவில்லை என்ற எண்ணமும் தலை தூக்கியது. என் கணவர் அரசாங்கத்தில் நல்ல பொறுப்பான பதவியில் இருந்தார். அதனால் எங்களுக்கு என்றுமே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதில்லை. இருந்தாலும் என் மன ஆழத்தில், நாமும் ஏதாவது செய்யவேண்டும், அது வருமானம் தரக்கூடியதாக இருக்கவேண்டும் என்ற உறுதியான உணர்வு ஏற்பட்டது. அப்போதுதான் சிவா மூலமாக பிஸினெஸ் செய்ய ஆரம்பித்தேன். நான் காலேஜ் மாணவியாக இருந்தபோது என் மனதில் இருந்த எண்ணமும் எனக்கு இல்லாமல் இல்லை.

இரண்டாவது நிகழ்ச்சி, பிஸினெஸ் ஆரம்பித்த புதிதில், எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த லேடீஸ் காலேஜ் பிரின்ஸிபலை நான் போய் பார்த்து என்னைப் பற்றியும், என் பிஸினெஸ் பற்றியும் அறிமுகப்படுத்திக்கொண்டது. ப்ரின்ஸிபல் இத்தனை தோழமையுடன் இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அவர் என்னை உற்சாகப்படுத்தி, ‘உங்களை நான் ரொம்ப பாராட்டறேன். இப்படித்தாம்மா ஒவ்வொரு பெண்ணும் முனையணும். எல்லா டிப்பார்ட்மென்ட் ஹெச்.ஓ.டி கிட்டையும் உங்க கார்ட் குடுத்துட்டு போங்க’ என்றதை இப்போது நினைக்கையில் கூட எனக்குப் புல்லரிக்கிறது. அதற்குப் பிறகு எத்தனை பேராசிரியர்கள் என் வீடு தேடி வந்து புடவைகள் வாங்கத் தொடங்கினர்! இதனால் என் பிஸினெஸ் நன்கு சூடுபிடித்தது!

என் மனதில் எழுந்த மூன்றாவது நிகழ்ச்சி,  ஒரு பள்ளி பற்றியது. அந்தப் பள்ளியின் கரஸ்பாண்டென்ட்,  புடவை பிஸினெஸ் செய்து வரும்  நான் ஒரு எம். ஆங்கில இலக்கிய பட்டதாரி என்று தெரிந்ததும், தன் பள்ளியில் ஆசிரியைப் பணியை எனக்குப் பரிந்துரைத்தார். ‘எனக்கு சொந்த தொழில் செய்வதில்தான் விருப்பம்’ என்று நான் சொன்னதும்,  அந்தப் பள்ளி ஆண்டுவிழாவில் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்து என்னைப் பற்றி , ஒரு முதுகலை பட்டதாரியான இவர்  வேறு எந்த வேலைக்கும் செல்ல பிரியப்படாமல் சுய தொழில் செய்து சொந்த காலில் நிற்கும்  தன்னம்பிக்கைப்  பெண்மணிஎன்று  பெருமையாகக், கூறினார்.

இப்படி அந்த கல்லூரி காம்பௌண்ட் சுவர் முடியும் வரை மூன்று நிகழ்ச்சிகளும் அலை மோதின.

அப்போது, சாலையில் ட்ராஃபிக் ஜாம் ஆகிவிட்டது. எங்கள் காரையும் என் கணவர் நிறுத்திவிட்டார்.  நடந்து வருவோரிடம் ‘என்ன ஆயிற்று?’ என்று கேட்டார். ‘கடை வாடகை தராமல் இழுக்கடித்ததால், கடையின் சொந்தக்காரருக்கும், கடையை வாடகைக்கு எடுத்தவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுவிட்டது. போலீஸ் வந்துருக்கிறது, கொஞ்ச நேரத்தில் வண்டிகளை சரிசெய்துவிடுவர்’ என்று கூறிச் சென்றார்.

‘ச்சு’ என்று சலித்துக்கொண்ட என் கணவர், ‘ட்ராஃபிக் சரியாகும்வரை ஒரு குட்டி தூக்கம் போடுறேன்’ என்றபடி, சீட்டைத் தளர்த்திகொண்டு சாய்ந்து கொண்டார்.

என் மனமோ இந்த வாடகை விவகாரம் போலவே, என்னிடம் புடவை வாங்கிய சிலர் எனக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றிய நிகழ்ச்சியை நினைத்துப்பார்த்தது. சிவா எனக்கு பிஸினெஸ் ஆரம்பித்துக் கொடுத்த அன்றே, ‘யாரும் ரெடி கேஷ் கொடுத்து வாங்க மாட்டார்கள் இன்ஸ்டால்மென்ட் தான். 3 இன்ஸ்டால்மென்ட்டில் முழு பணத்தையும் முடிக்கும்படி ஸ்ட்ராங்காகச் சொல்லிவிடு’ என்று கூறியிருந்தான். ஆனால் எத்தனை பேர் பணமே கொடுக்காமல் போயிருக்கிறார்கள்? நான் ஏதோ கடன் வாங்கியவள் போல் எத்தனை முறை பேலன்ஸ் பணத்திற்காக அலைந்திருக்கிறேன்? இந்த கடைக்காரர் போல நான் என்ன போலீஸிடமா கம்ப்ளென்ட் கொடுக்கமுடியும்?

அதேபோலத்தான் ஒருமுறை ஒருவர் என்னிடம் தனக்கு சில புடவைகளையும், தன் இரண்டு பெண்களுக்கும் சில சூடிதார் மெட்டீரியல்களையும் வாங்கிக்கொண்டு முதல் இன்ஸ்டால்மென்ட் கொடுத்துவிட்டுப் போனார். போனவர் என்னிடம் தெரிவிக்காமலேயே வீடு மாறிச் சென்றுவிட்டார். நான் அவரைத் தேடிக் கண்டுபிடித்து பணத்தை வசூல் செய்வதற்குள் திண்டாடித்தான் போனேன். அதெல்லாம் சில கசப்பான நிகழ்வுகள்.

ஒருமுறை ஒருவர் வந்து தனது இரண்டாவது மனைவியின் பெண்ணிற்கு ஒரு டாப்ஸ் வாங்கிச் சென்றார். எனக்குத் தெரியாது அவருக்கு இரண்டு மனைவிகள் என்று. மாலையில் அவரின் முதல் மனைவி தனது பெண்ணிற்கு ஒரு மெட்டீரியல் வாங்கும்போது நான் யதார்த்தமாய் ‘அந்த டாப்ஸ் அளவு சரியாக இருந்ததா?’ என்று கேட்டுவிட்டேன். அவர் கோபத்துடன், ‘டாப்ஸா..? டாப்ஸ் யார் வாங்கினது? இவர் வந்திருந்தாரா? யார் யாரெல்லாம் வந்திருந்தனர்? என்னென்னெல்லாம் வாங்கினர்?’ என்று கேட்கத்தொடங்கியதும் எனக்குப் புரிந்துவிட்டது. ‘இங்கப் பாருங்கம்மா.. உங்க குடும்ப சண்டையெல்லாம் வீட்டுலயே வச்சுக்கணும்’ என்று சொல்லி அனுப்பினேன். எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை.

சில நேரங்கள் ஒரு பைசா கூட வசூல் ஆகாமல் சில சரக்குகளை நான் இழக்கவேண்டியிருந்திருக்கிறது. இப்படி சின்ன சின்னதாக பல அனுபவங்கள் எனக்கு. இதனால் மன உளைச்சல் ஏற்படாமல் இல்லை. ‘வேண்டாம் இந்த பிஸினெஸ்ஸே’ என்று கூட நினைத்திருக்கிறேன். ஆனால் எனக்கும் என் பிஸினெஸ்ஸுக்கும் ஒரு பாந்தவ்யமான பந்தம் இருந்திருக்கிறது. ஏனென்றால், நான் அப்படி ஒரு ஸ்ட்ரெஸ்ஃபுல்லான மன நிலையில் இருக்கும் போதுதான், வேறு  ஒரு பெரிய பார்ட்டி வந்து நிறைய பர்சேஸ் செய்வர். இல்லையென்றால் நான் வராது என்று விட்டிருந்த பணம் எனக்குக் கிடைத்துவிடும்.  அது என் மனதிற்கு ஒரு தெம்பையும், புத்துணர்வையும் கொடுக்கும். நான் விடாமல் 10 வருடங்கள் இந்த பிஸினெஸ் செய்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது.

இப்படி ஒரு சிலர் பணத்திற்குப் பிரச்சனை செய்து எனக்கு ஒரு பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தினாலும், பல நல்ல நண்பர்களை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது இந்த பிஸினெஸ். பல பெரிய தியேட்டர் உரிமையாளர், டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உரிமையாளர், பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகளில் பணிபுரிவோர், என பலரையும் எனக்கு வாடிக்கையாளர் ஆக்கியிருக்கிறது. லேடி டாக்டர்கள் இரண்டு பேர் ‘வெரி என்டெர்ப்ரைசிங்க் அண்ட் ஸ்டூடியஸ்’ என்று என்னைப் புகழ்ந்து என்னிடம் தொடர்ந்து பர்சேஸ் செய்ததும் எனக்குப் பெருமையாக இருந்தது. இப்படி பல தரப்பு மக்களிடையே பழகப் பழக அது எனக்கு ஒரு எக்ஸ்போஷர் ஆனது.

எந்தத் தொழிலுமே வெளியிலிருந்து பார்ப்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தொழிலும் அதனதன் அளவில் கடினமானதுதான். சிறந்த உழைப்பு, முகம் கோணாமை மட்டுமல்லாமல், இந்த புடவை பிஸினெஸ்ஸில், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நாம் அவர்களுக்காகவே நமது சரக்குகளை வாங்கி வைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் மிகவும் முக்கியமானது.

ட்ராஃபிக் க்ளியர் ஆகத் தொடங்கியிருந்தது. எதிர் திசை வண்டிகள் வரத் துவங்கியிருந்தன. சற்று கண் அயர்ந்திருந்த என் கணவரும் காரைக் கிளப்புவதற்குத் தயார் ஆனார். பின் ‘என்ன சைலென்ட்டா இருக்க?’ என்றபடி என்னப் பார்த்தார். ‘இல்ல.. என் பிஸினெஸ சின்னதா வீட்டோட ஆரம்பிச்சதுலேர்ந்து எல்லா நிகழ்வுகளையும் அசை போட்டபடி இருக்கேன்’ என்றேன்.

‘என்ன அப்படி சொல்லிட்ட… உன் பிஸினெஸ் ஒண்ணும் சின்னது இல்லையே! என் திறமைசாலியான மனைவியின் அச்சீவ்மென்ட் இல்லையா அது’ என்றார் என் கணவர்.

‘அச்சச்சோ.. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை..உங்க சப்போர்ட் இல்லாம இ‘த்தனை நாள் அதை நான் நடத்தியிருக்க முடியுமா?  நீங்கதானே எனக்கு டி.வி.எஸ் 50 ஓட்ட சொல்லிக்குடுத்து, வாங்கியும் குடுத்தது. அதுக்கு முன்னாடி, சைக்கிள்ளதானே நான் பெரிய பையை காரியர்ல வச்சு எடுத்துப் போவேன். அப்புறம் நீங்க தானே என் பெயரில் விஸிட்டிங்க் ப்ரின்ட் பண்ணி எனக்கு பிரஸன்ட் பண்ணினது. அது மட்டுமா நாம எத்தன தடவ பிக்னிக் போற மாதிரி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சின்னு பல ஊர்களுக்குப் போய் ஹோல்சேல் கடைல பர்சேஸ் பண்ணியிருக்கோம்.’ என்றேன்.

‘என்ன நீ இதெல்லாம் பெருசா சொல்ர..? ஒரு குடும்பப் பொண்ணு பல சவால்கள ஃபேஸ் பண்ணி ஒரு பிஸினஸ் பண்ணும்போது அத என்கரேஜ் பண்ண வேண்டாமா? அதத் தவிர நீ எப்படிப்பட்ட உழைப்பாளி.’ என்றார் என் கணவர்.

‘என் உழைப்பு இருக்கட்டும்.. நம்ம ஃபேமலில எத்தனை பேர் என் கிட்ட ரெடிகேஷ் குடுத்து புடவை வாங்கி என்னை ஊக்கப்படுத்தியிருக்காங்க… என் தங்கை அவ ஊர்ல இருக்கற ஹோல்சேல் கடைக்கு என்னை கூட்டிட்டுப் போய் சில டாப்ஸ் வாங்கி என் Palace க்கு பரிசளித்தாளே! அத சொல்றதா? உங்க அக்கா முத்து செட்டுக்கள் வாங்கிக் கோடுத்து அதையும் பிஸினெஸ் பண்ணும்படி சொன்னார்களே அத சொல்றதா? என்னோட இன்னொரு தங்கை நான் செய்துவரும் பிஸினெஸ் பத்தி ஒரு ஆர்டிக்கிள் எழுதி அது ஒரு இங்க்லீஷ் மேகஸின்ல பப்ளிஷ் ஆச்சே அத சொல்றதா? என் அப்பாவும் பல முறை என்னோடு பர்சேஸ்க்கு வந்திருக்காரே அத சொல்றதா? எப்படியோ இத்தனை பேர் உற்சாகப்படுத்தினதுதான் என் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.’ என்றேன்.

‘நீ சொல்றதும் சரிதான். ஆனா நீ வீட்டோட மட்டும் உன் பிஸினஸை நிறுத்திடலையே! ஒரு வெப் சைட் தொடங்கி ஆன்லைன் ட்ரேடிங்க் வரை வளர்ந்தயே, இதெல்லாம் உன்னோட சாமர்த்தியம் தானே!’ என்றார் என் கணவர். அதற்குள் ட்ராஃபிக் ஜாம் க்ளியர் ஆகிவிட்டது. ‘அப்பாடா!’ என்றபடி காரை காரை முன்னோக்கிச் செலுத்தினார் என் கணவர். என் மனமோ பின்னோக்கி பாய்ந்தது

என் இரண்டு பெண்களுக்கும் நான் பிஸினெஸ் செய்துவருவதில் ரொம்ப பெருமை உண்டு. ‘அம்மா.. இப்படியே வீட்டோட உன் திறமைகள் முடங்கக்கூடாதும்மா. நான் ஃபேஸ் புக்ல Lak textile palace ங்கற பேர்ல ஒரு பேஜ் ஓபன் பண்ணித்தரேன்’ என்று சொல்லி அதற்கான ப்ரொஃபைல் பிக்சரை அப்லோட் பண்ணினாள் என் சின்னப் பெண். ‘நீ அப்பப்போ ஃபோட்டோ எடுத்து உன் பேஜ்ல போஸ்ட் பண்ணணும்’ என்று சொல்லியும் கொடுத்தாள். ‘அப்பப்பா… அதற்குத்தான் எத்தனை லைக்குகள், கமெண்ட்டுகள்!’ ‘ஒரு சின்ன கம்ப்யூட்டர் இப்படி நம்ம பிஸினெஸ் பத்தி உலகம் பூராவும் பரப்பிவிட்டதே’ என்று பூரித்துத்தான் போனேன். பலருக்கும் என் பிஸினெஸ் பற்றி தெரிய வந்தது. பலரும் விசாரிக்கத் தொடங்கினர்.

அந்த ஃபேஸ் புக் பேஜைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூரிலிருந்த ஒரு வெப் சைட் உருவாக்கும் கம்பெனியிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது ஒரு ஆச்சர்யமான உண்மை. அவர்கள் என்னிடம் ஆன்லைன் ட்ரேடிங்க் பற்றி விளக்கினர். முதலில் பயந்த நான் பின் என் மகளின் ஒத்துழைப்புடன் துணிந்து அவர்களுடன் இணைந்து www.laktextilepalace.in என்ற வெப் சைட்டைத் தொடங்கிவிட்டேன். அவர்களே அக்கௌன்ட் க்ரெடிட்டுக்கு ஒரு வங்கியுடனும், கொரியர் கம்பெனி ஒன்றுடனும் என்னை இணத்துவிட்டனர். நானும், டால் (மேனுகுயின்) வாங்கி அதில் மெட்டீரியலை போட்டு ஃபோட்டோ எடுத்து அப்லோட் செய்யத் தொடங்கினேன். என் வெப் சைட்டின் லிங்கை பலருக்கும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பினேன்.  ஆர்டர் ப்ளேஸ் ஆனதும், எனக்கும், கொரியர் கம்பெனிக்கும் மெயில் வந்துவிடும்.  உடனே கொரியர் கம்பெனிக்கு ஃபோன் செய்து அவர்கள் வரும் நேரத்திற்குள் கொரியர் கவரில் பேக் செய்து அவர்களிடம் கொடுத்து அனுப்புவேன். அமௌன்ட் எனது வங்கிக் கணக்கில் க்ரெடிட் ஆகிவிடும். என் சைட்டில், கேஷ் ஆன் டெலிவரியும் உண்டு. நிறைய ஆர்டர்கள் வந்தன’. எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையைக் கொடுத்த நாட்கள் அவை! தினம் தினம் மெயில் செக் பண்றதும், விற்றுப் போகப் போக, அதை நீக்கிவிட்டு புதிது புதிதாக ஐட்டங்களை டிஸ்ப்ளே செய்வதுமாக மிகவும் பிஸியாக இருந்தேன். எக்ஸ் எல் ஷீட்டில் அக்கௌன்ட்ஸ் மெயின்டைன் பண்ண ஆரம்பித்தேன். என் பெண்தான் எனக்கு சொல்லிக்கொடுத்தாள். டெக்னாலஜியை நான் என் கையில் எடுத்துக்கொண்டது போல இருக்கும் எனக்கு.

ஆன் லைன் ட்ரேடிங்கில் சில சிக்கலும் இருந்தது. நிறைய வெரைட்டிகளை வாங்கி டிஸ்ப்ளே செய்து கொண்டே இருக்கவேண்டும். ஃபோட்டோ விதவிதமாக எடுத்து டிஸ்ப்ளே செய்வதும் சற்று சிரமமாகத்தான் இருந்தது. மார்க்கெட்டில் நிறைய சைட்டுகள் ஆன்லைன் ட்ரேடிங்க் செய்துவரும்போது அவர்களோடு போட்டி போட என்னால் சற்று முடியாமல் போனது.

வீட்டிலிருந்தபடியே செய்தபோது, பர்சேஸ் செய்ய வருபர்களுக்கு எடுத்து காண்பித்தாலும் சரி, நானே எடுத்துச் சென்று காண்பித்தாலும் சரி, நிறைய நேரம் ஒதுக்கவேண்டியிருந்தது. மீண்டும் பொறுமையாக மடித்து எடுத்து வைக்கவேண்டும். அதுவும் கஷ்ட்டமாகத்தான் இருந்தது.

நான் ஒன்று செய்திருக்கலாம். உதவிக்கு வேற்று ஆட்களை நியமித்திருக்கலாம். வாணியையும், தேவியையும், தையலைத் தவிர்த்து என் பிஸினெஸோடு இணைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் தனியாகவே இத்தனை நாள் பிஸினெஸ் செய்தது ஒரு சாதனைதான் என்றாலும் உடல் ஒத்துழைப்பு குறையத் தொடங்கும்போது சிரமம் பெரிதாகத் தெரிந்தது. .

அதைத்தவிர, என் குடும்ப சூழலுக்கும் என் உதவி அதிகம் தேவைப்பட்டது. அந்த நேரம் பிஸினெஸா, குடும்பமா என்ற கேள்விக்கணை என்னை நோக்கிப் பாய்ந்தது, என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியது எல்லாம் ஒவ்வொரு நிகழ்வாக என் மனதில் முட்டி மோதியது.

‘வருத்தமா இருக்கியா என்ன?’ என்றார் என் கணவர்.

‘இல்ல இல்ல..மன ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியல அவ்வளவுதான். வருத்தம்னு சொல்லமுடியாது. வருத்தமில்லைனும் சொல்ல முடியாது. ஆனா எனக்கு எப்போதுமே குடும்பம்தான் முக்கியம். ஏதோ இடைப்பட்ட ஓய்வு காலத்துல ஒரு பிஸினெஸ் ஆரம்பிச்சேன். இப்போ எனக்கு வேற கடமைகள் இருக்கு. அதனால நான் சரியான நேரத்துல தான் என் பிஸினெஸை முடித்திருக்கேன்’ என்றேன்.

‘நீ தனி ஒருத்தியா இத்தனை நாள் உன் palace ஐ நடத்தினதே பெரிய விஷயம். நீ என்ன ஆசைப்பட்ட… குடும்பத்துக்கு நீயும் பணம் கான்ட்ரிப்யூட் பண்ணனும்னுதானே! நிறைய நீ பண்ணியாச்சு. குழந்தைகளுக்கு எவ்வளவு கோல்ட் காயின் வாங்கின.. நம்ப ஃபாமிலி ஃபங்ஷனுக்கு எல்லா ரிலேடிவ்ஸ்க்கும் எவ்வளவு புடவைகள் குடுத்திருக்க… உன்னால சுயமா உன் கால்ல நிக்க முடியும்னு நீ நிரூபிச்சுட்ட. இதெல்லாம் உனக்குப் பெருமைதானே!’  என்றார்.

‘ஆமா.. ஆமா.. பெருமை மட்டுமல்ல சந்தோஷமும்தான். அப்போ எல்லாம் பணத்த தினம் தினம் எண்ணிப் பாப்பேன் தெரியுமா? சிவா எனக்குக் குடுத்த 5% கமிஷன்ல சேர்ந்த முதல் 500 ரூபாயை உங்க பர்த்டேக்குதானே ப்ரசென்ட் பண்ணினேன்’ என்றேன்.

‘இப்போ மட்டும் என்ன… சிவாதானே உனக்கு தொழிலை ஆரம்பிச்சுக்கொடுத்தான். அவனுக்கே ஒரு லட்சம் வரை அன்பளிப்பா கொடுத்திருக்கியே! இது ஆச்சர்யம் இல்லையா?’ என்றார். பின் அவரே தொடர்ந்தார்.

‘ஒரு சின்ன வட்டமா உன் தொழில் பயணம் முடிந்தது போல் தெரிந்தாலும் அந்த வட்டத்தோட உயரம் அளக்கமுடியாதது மா. நான் உன் விடாமுயற்சியையும், சிரித்த முகத்தோடு நீ எல்லார்கிட்டயும் பேசி சேல்ஸ் பண்றதையும், பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். நீ எடுத்த வேலையை திறமையாத்தான் செஞ்சு முடிச்சிருக்க..  I am proud of my wife என்று கூறி அணைத்துக்கொண்டார். என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. எங்கள் கார் வீடு நோக்கி விரைந்தது முழு திருப்தியுடன்தான்.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக