புதன், 24 ஜனவரி, 2018

ஆழியொத்த அழகு மொழி

உயிரினங்களைப் படைக்கையில் ஒலியெழுப்பும் சக்தியையும் சேர்த்துதான் இறைவன் படைத்துள்ளான். ஐந்தறவு கொண்ட ஜீவராசிகளெல்லாம் இறைவன் தமக்குக் கொடுத்த ஒலியை எழுப்பியபடி வாழ்ந்து கொண்டிருக்கையில், ஆறறிவு கொண்ட மனிதன் மட்டும் ஒலிக்கு உயிரும், உணர்வும், பொருளும், கருவும் கொடுத்து, அவ்வொலியையே மொழியாக ஆக்கியுள்ளான்.

எண்ணற்ற மொழிகள் இவ்வுலகில்  இருந்தாலும், நம் தமிழ் மொழி பல கோடி ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டு, இலக்கணங்கள் வகுக்கப்பட்ட தொன்மையான ஒரு செம்மொழி என்பதை மறுப்பதற்கில்லை. எழுத்துக்களை இணைத்து வார்த்தைகளாக்கி, வார்த்தைகளை சேர்த்து வாக்கியமாக்கி, வாக்கியங்களை அடுக்கி, கட்டுரை ஆக்கி, வார்த்தை ஜாலங்கள் காட்டி கவிதையாக்கி, இசையை கலந்து, பாடல்களாக்கி மொழியில் புலமை பெற்ற பேறு பெற்றவர்கள் தமிழர்கள்.

'இரண்டு கேள்விகளுக்கு ஒரே பதில்' என்ற வகையில் மொழியை வைத்துக்கொண்டு விளையாடியுள்ளனர். உதாரணமாக,.

1. இந்து மறைவதேன்?
2. இலங்கை அழிந்ததேன்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும். 'ராமந்தாரத்தால்' என்பது பதில். அதாவது, முதல் கேள்வியில் இந்து எனில் சூரியன். சூரியன் மறைவதேன் என்ற கேள்விக்கு, 'ரா மந்தாரத்தால்' என்பது பதில்.

இரண்டாவது கேள்விக்கு  'ராமன் தாரத்தால்' என்பது பதில். அதாவது ராமனின் தாரமான சீதையால்! என்று பதில் கொள்ள வேண்டும்.

அதே போல்,

1.யானை தந்தச் சிமிழ் கடைவதேன்?
2. ஹரிச்சந்திர ராஜா காட்டுக்குப் போனதேன்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும், ஒரே பதில் 'சாதிச்சவாதத்துக்காக'.
அதாவது, யானையின் தந்தத்தைக் கொண்டு சிமிழ் கடைவது எதற்காக? என்ற கேள்விக்கு, 'ஜாதி சவ்வாதிற்க்காக'  என்பது பதில்.

இரண்டாவது கேள்விக்கு, 'சாதிச்ச வாதத்துக்காக' என்பது பதில்.

என்ன அழகான கற்பனை!

தமிழ் மொழியை விருப்பத்துடன் படிக்கத் துவங்கினால், அதில் ஒரு ஈடுபாடு ஏற்பட்டுவிடும்.
ஆழமும், அகலமும் கொண்ட ஆழி போன்ற இம்மொழியில் அமிழ்ந்து  தேடினால் ஆயிரமாயிரம், ஆணிமுத்துக்கள் ஆங்காங்கே அகப்படுவது உறுதி.

Image result for free image of an ocean

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக