திங்கள், 10 செப்டம்பர், 2018

விழாக்களும், அன்பளிப்பும்

Image result for image of a gift or presentation

நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டு, இக் கட்டுரையைத் தொடங்க உள்ளேன்.
திருமணம், கிரஹப்பிரவேசம், சதாபிஷேகம், பிறந்தநாள் விழா, போன்றவற்றிற்கு அழைப்பு வந்தவுடன் உங்கள் மனதில் என்ன எண்ணம் முதலில் தோன்றும்?
'என்ன அன்பளிப்பு தருவது?என்ற எண்ணம்தான்'  என்று கூறுபவர்கள் தொடர்ந்து இக் கட்டுரையைப் படிக்கலாம். இக் கட்டுரை உங்களுக்கானது தான்.
நீங்கள் என்ன பொருள் வாங்கிக் கொடுத்தாலும் அது அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமா, பிடிக்குமா, அதை அவர்கள் நம் அன்பின் அடையாளமாக வைத்துக் கொள்வார்களா என்பது சந்தேகத்துக்குரியது தான். அதைப் பிரித்துப் பார்ப்பார்கள். பார்த்துவிட்டு, அதை அப்படியே கசங்காமல் அதே வண்ணக் காகிதத்தில் சுற்றி அதில் ஒட்டப்பட்டிருக்கும் பெயர் அட்டையை நீக்கிவிட்டு,  தாம் செல்ல இருக்கும் வேறோரு விழாவிற்கு 'அன்பளிப்பு' கொடுக்க அப்படியே பத்திரப்படுத்திவிடுவார்கள். இதுதான் இன்று பல இடங்களில் நடக்கிறது. 
பரிசுப் பொருட்களுக்கான நிறைய கடைகளும், ஆன்லைன் சைட்டுகளும் இன்று பல்கி பெருகியுள்ளன. வசதிக்கும் குறைவில்லை. ஷாப்பிங் செய்து சாமான்களை வாங்கி குவிக்கும் வழக்கமும் பெருகிவிட்டது. இதனால் ஒவ்வொருவருக்குமான தேவை, விருப்பம் என்பதும்  புது வடிவம் கொண்டுவிட்டது.   இப்படி இருக்கையில், நாம் நேரத்தை செலவழித்து, கடை கடையாக ஏறிச் சென்று, ஒரு பொருளை வாங்கித் தந்தால், அது நம் அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறதா என்றால் 'இல்லை' என்பது தான் உண்மை.
வீடு க்ரஹப்பிரவேசம் என்றால், பெரும்பாலானவர்கள் சுவற்றில் மாட்டும்படியான வால் ஹாங்கிங்க்ஸ், பெயின்டிங்க்ஸ், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பர். ஆனால், இப்போதெல்லாம், வீடு கட்டும்போதே, இண்டீரியர் டெகொரஷனில் தனி கவனம் செலுத்தி, சுவர் கலருக்குப் பொருத்தமானவற்றை அவர்களே வாங்கி மாட்டிவிடுவதால் நாம் வாங்கிக் கொடுப்பது பல நேரங்கள் உபயோகமற்றதாகிவிடுகிறது.
ஷஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் என்றால், அந்த தம்பதிகளுக்குப் புடவை, வேஷ்டி வாங்கிக் கொடுத்து நமஸ்காரம் செய்வது என்பது தொன்றுதொட்டு நடந்துவரும் பழக்கமாக உள்ளது. நம் அன்பை வெளிப்படுத்த நிறைய ஜரிகை போட்ட பட்டுப் புடவை, வேஷ்டி வாங்கிக் கொடுக்கிறோம். ஆனால் அந்தப் பெண்மணிகள், 60 வயதிலும், 80 வயதிலும் இருப்பர். அவர்களால் அந்தப் புடவையை எடுத்து, தூக்கிக் கட்டகூட முடியாது. நாம் 'அன்பு' என்று பெயரில் 'சுமை'யைத் தான் தருகிறோம்.
திருமணத்திற்காகவும், ஏதேதோ பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்துவிடுகிறோம். ஆனால், இப்போதெல்லாம்,  மணமக்கள் வெளி நாடுகளிலிருந்து திருமணத்திற்காக வந்து, ஒருவாரம் இருந்துவிட்டு, திரும்பும் நிலைதான் பல இடங்களில் இருக்கிறது. அதைத் தவிர தலைமுறை இடைவெளி வேறு உள்ளது. நடுத்தர வயதில் இருப்பவர்கள், பயனுள்ள பொருள் என்று நினைப்பது இளைய வயதினருக்குப் பயனுள்ளதாக இருப்பதில்லை. அல்லது அவர்கள் முன்னமே அதை வாங்கி வைத்திருப்பர். அதனால் நாம் வழங்கும் 'அன்பளிப்பு' என்பது ஒரு சடங்காகவும், சம்பிரதாயமாகவுமே உள்ளது.
சரி, இதற்குத் தீர்வுதான் என்ன? பணமாகக் கொடுப்பதுதான் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும். வீடு கட்டி முடித்தவர்களுக்கும், திருமணம் செய்து முடித்தவர்களுக்கும்,  60 ம் கல்யாணம், 80ம் கல்யாணம் ஆன  வயதான தம்பதிகளுக்கும், பணமாகக் கொடுத்தால், அவர்களின் விருப்பத்திற்கும்,  தேவைக்கும், ஏற்ப செலவழித்துக்கொள்ள முடியும். திருமணத்திற்கு ஏதாவது பரிசுப்பொருள் தரவேண்டும் என்று நினைத்தால், அந்தப் பெற்றோர்களுடன் கலந்து பேசி, அவர்கள் வாங்கி கொடுக்க இருக்கும் சாமானில் ஒன்றை நாம் வாங்கித் தரலாம்.
இதைத் தவிர, வீட்டுக்கு வருபவர்களுக்கு  ரவிக்கைத் துணி வைத்துத் தருவது என்பது நமது கலாச்சாரம். ஆனால் அந்த ரவிக்கைத் துணியே ஒரு வட்டம் போட்டு நமக்கே திரும்ப வருகிறது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
இப்போதெல்லாம், நவராத்திரிக்கு என்று ஒரு நினைவுப் பொருள், அழகான பேக்கிங்கில் குங்குமம், மஞ்சள் என்று நிறைய செலவழித்து வாங்கித் தருகிறோம். வியாபாரிகளும், நமது இந்தப் போக்கைப் புரிந்துகொண்டு, பலவிதமாக விற்பனை செய்கிறார்கள். ஆனால் அவை உபயோகமாக இருக்கிறதா என்பது கேள்விகுறியானதுதான்.
வெளி நாடுகளுக்குப் போய் வருபவர்கள்  எல்லோருக்கும் ஏதாவது நினைவுப்பொருள் வாங்கி வரவேண்டும் என்பதும் எழுதப் படாத சட்டமாகவே உள்ளது. ஆனால், அது நம் எண்ணத்தைப் பூர்த்தி செய்கிறதா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. தின்பண்டங்கள், சாக்லேட், போன்றவையாவது ஓரளவு அந்த எண்ணத்தை ஈடேற்றும்.  
ஆகவே நண்பர்களே.. பரிசு, அன்பளிப்பு போன்றவை வாங்கும்போது சற்று யோசித்து, அதன்பின் முடிவெடுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக