திங்கள், 17 செப்டம்பர், 2018

பெயர் பொருத்தம்

 நான், என் கணவர்,  என் மகள், என் மாமியார் ஆகியோர் சமீபத்தில் தான் குடும்ப சகிதம், கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்துள்ளோம். கும்பகோணம் வீடு பெரிய, பழைய வீடு. அங்கே, செல்வி, முத்து என்று இரண்டு பேர் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தனர். இப்போது நாங்கள் குடிவந்திருக்கும் அப்பர்ட்மெண்ட் வீட்டில் முன்னர் வேலை செய்து கொண்டிருந்த ஒரு அம்மா தானே வீட்டு வேலைகள் செய்ய வருவதாகக் கூறினார்.

 "உன் பெயர் என்னம்மா?" என்றேன்.
 "முத்துலக்ஷ்மி" என்றாள்.

சட்டென நானும் என் மாமியாரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டோம். 

"சரிம்மா.. நாளை முதல் வா" என்றேன்.

மறு நாள் வந்த முத்துலக்ஷ்மி, தன் குடும்ப சூழல் காரணமாகத் தன்னால் எங்கள் வீட்டு வேலைக்கு வர இயலாது என்று கூறி, வேறு ஒருவரை அழைத்து வந்தார். 

"உன் பெயர் என்னம்மா?" என்றேன்.
"லக்ஷ்மி" என்றாள்.

மீண்டும் நானும் என் மாமியாரும் புன்னகைத்துக்கொண்டோம். ஏனெனில் என் பெயர் 'லக்ஷ்மி'.

"என் பெயரும் லக்ஷ்மி தாம்மா" என்று நான் கூறியதும்.
"என் முழு பெயர் 'செல்வ லக்ஷ்மி' நீங்கள் வேண்டுமானால் என்னை 'செல்வி' என்று கூப்பிடுங்கள்" என்றாள்.

சடாரென்று துணுக்குற்றுத் தான் போனோம். 

அப்போது "வணக்கம்மா" என்றபடி வந்த ஒரு அம்மா தான் அந்த அப்பார்ட்மெண்ட் முழுவதும் சுத்தப்படுத்தும் மெயிண்டனென்ஸ் பணியில் இருப்பதாகக் கூறினார். 

"வணக்கம். வாங்க... உங்க பேர் என்ன? என்றேன்.
"மாலதி" என்று அவர்கள் கூறியதும், குபீரென்று நானும் என் மாமியாரும் சிரித்துவிட்டோம்.

ஏனெனில் என் மாமியார் பெயர் 'மாலதி'

அங்கிருந்த மூன்று பெண்களும், எங்கள் சிரிப்பிற்கான காரணம் புரியாமல் விழித்தனர். சுதாரித்துக் கொண்ட நான், இந்த பெயர் பொருத்தத்தைக் கூற அவர்களும் சிரித்தனர்,

கொஞ்ச நேரத்தில், அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி எங்களை சந்திக்க வந்தார். "வணக்கம்மா.. என் பெயர் பெரியசாமி" என்றதும் நாங்கள் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே போனோம். ஏனெனில் எங்கள் தம்பி போல் இருக்கும் எங்கள் வீட்டு கார் டிரைவர் பெயர் 'பெரியசாமி'  'அய்யோடா... நல்ல ராசியான வீடுதான் இது' என்று மகிழ்ந்தோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக