வியாழன், 31 மே, 2018

இசையுலக சாதனையாளர் D.K.பட்டம்மாள்

26.05.2018,
தியாப பிரும்ம சபை,
தஞ்சாவூர்.

              D.K.பட்டம்மாள் அவர்களின் நூற்றாண்டு விழா, ஸ்ரீ.பெசண்ட்                                                                   அரங்கம், தஞ்சாவூர்.
    
                               இசையுலக சாதனையாளர் D.K.பட்டம்மாள்
                                             சிறப்புரை : திருமதி லக்ஷ்மி ரவி.


இசையுலக சாதனையாளர் D.K.பட்டம்மாள் அவர்கள்
       இந்த அரங்கத்தில் குழுமியுள்ள ஆன்றோர்கள்  அத்தனை பேருக்கும் லக்ஷ்மி ரவியின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
       தனது பவள விழாவினைக் கொண்டாடிவரும் இத் தியாகப் பிரம்ம சபை, இசைத் துறைக்கு ஆற்றிவரும் தொண்டு அளவிடற்கரியது. இதன் அங்கத்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, ‘சாதனைப் பெண்மணி D.K.பட்டம்மாள்’ என்ற தலைப்பில் எனக்குத் தெரிந்த சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
      ‘இசை’ என்ற சொல்லுக்கு இசைய வைத்தல் என்பது பொருள். மனிதர்களை மட்டுமின்றி அனைத்து உயிரினங்களையும், கட்டுப்படுத்துகின்ற – பணிய வைக்கின்ற இசைய வைக்கின்ற ஒரு மகத்தான சக்தி இசைக்கு உண்டு.  ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டமைக்கப்பட்ட அழகான ஒரு ஒலி வடிவம்தான் ‘இசை’ எனப்படுகிறது. இந்த இசை, செவிக்கு இனிமை சேர்ப்பது மட்டுமின்றி, பல நோய்களை குணப்படுத்தும் அபார சக்தியையும் கொண்டுள்ளது.  சில ராகங்களைக் கேட்பதன் மூலம், மனம் அமைதியடைந்து, மனஅழுத்தம், விரக்தி மற்றும் பல இதய நோய்கள், குணமாகின்றன என்று மருத்துவம் நிரூபித்துள்ளது.
         இந்த இசைத்துறை பொதுவாக பல பிரிவுகளைக் கொண்டது. அதில் கர்னாடக இசை என்பது மிகவும் பழமையானது. இருபதாம் நூற்றாண்டுகளில், இந்த கர்னாடக இசையில் ஆண்களே கோலோச்சிக் கொண்டிருந்த மேடைகளில், தங்கள் இசைத் திறமையால், ‘பெண் மும்மூர்த்திகள்’ என்று பாராட்டப்பட்டவர்கள், M.S,சுப்புலட்சுமி, M.L.வசந்தகுமாரி மற்றும் D.K.பட்டம்மாள் ஆகியோர். இவர்களுள், 1919ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் நாள் பிறந்த D.K.பட்டம்மாள் அவர்களின் நூற்றாண்டினைக் கொண்டாடும் பொருட்டு, அவர் சங்கீதத் துறையில் ஆற்றிய சாதனைகளையும், சந்தித்த சவால்களையும், பெற்ற விருதுகளையும், ஆற்றிய சமுதாயத் தொண்டினையும் பற்றி பேச  விழைகிறேன்.
          D.K.பட்டம்மாள் அவர்கள் தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்திற்கு அருகில் தாமல் (DHAAMAL) என்ற ஊரில் தாமல்.கிருஷ்ணசாமி தீக்ஷதருக்கும், காந்திமதி (எ) ராஜம்மாள் என்பவருக்கும் பிறந்தவர். இவரின் இயற் பெயர் அலமேலு. இவர் சிறு வயதிலிருந்தே இசைத் துறையில் பிறவி மேதையாக இருந்ததால் அனைவராலும் ‘பட்டா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டு, பின் அப்பெயரிலேயே பேரும், புகழும், பெற்றுள்ளார் எனத் தெரிகிறது. இவர் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.  இவருடைய அப்பாவுக்கு இசையில் ஆர்வம் இருந்திருக்கிறது.  அம்மா இனிமையாகப் பாடக்கூடியவர். ஆனால் அக்காலத்தில் பெண்கள் பொது இடங்களில் பாடுவது என்பது கலாச்சார சீரழிவாகக் கருதப்பட்டிருந்தது. இவருடைய அம்மா ஒரு கல்யாண வீட்டில் பலர் கேட்டுக்கொண்டதற்க்கிணங்க, ஒரு பாட்டு பாடிக்கொண்டிருந்தாராம். அப்போது, DKP யின் தாத்தா, உடனே அப்பாட்டை நிறுத்தும்படி சினந்து கூறியிருக்கிறார். அப்படியிருந்த ஒரு சூழ்நிலையில் D.K.பட்டம்மாள் அவர்கள் இசைத் துறையில் நுழைந்து. சாதனை படைத்தது ஒரு ஆச்சர்யமான விஷயம்தான். பின்னாட்களில் தன் தாத்தா தற்போது உயிரோடு இருந்து தான் மேடைகளில் பாடி, பிரபலமாக இருப்பதை பார்த்திருக்க வேண்டும் என்று அவரே கூறியிருக்கிறார்.
       
           இவர், சிறுவயதில் முறைப்படி குருகுலத்தில் சங்கீதம் 
கற்றுக்கொண்டவரல்ல. ஆனால், ஏதாவது இசைக் கச்சேரிக்குப் போய் 
வந்தால், தாம் காதால் கேட்ட கிருதிகளையும், ராகங்களையும் இயல்பாகப் பாடுவாராம். அவரது குரலின் இனிமையால் மகிழ்ந்த இவருடைய தந்தை இவருக்கு சில பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார். பிறகு ஒரு தெலுங்கு சங்கீத ஆசிரியரிடம் முறைப்படி சங்கீதம் பயிலச் செய்து இருக்கிறார்.
      D.K.P அவர்கள், முதன் முதலில், தனது 8 வது வயதில் ‘பைரவி’ 
ராகத்தில் அமைந்த தியாகராஜ கீர்த்தனை ஒன்றை ஒரு போட்டியில் 
பாடி, முதல் பரிசைப் பெற்றிருக்கிறார்.
      தனது 10 வது வயதில் மெட்ராஸ் கார்ப்பொரேஷன் ரேடியோவில் ( 
தற்போதைய அகில இந்திய வானொலி) ஒரு இசை நிகழ்ச்சி 
வழங்கியிருக்கிறார்.
      1932ம் ஆண்டு ‘மெட்ராஸ் ரசிக ரஞ்சனி சபாவில்’ மேடை கச்சேரி 

நிகழ்த்தியிருக்கிறார். அதற்குப் பிறகு ஒரு முழு நேர பாடகியாகி 

சாதித்திருக்கிறார் D.K.பட்டம்மாள் அவர்கள்.
        
       இவருக்கு, மூன்று சகோதரர்கள். அவர்கள் மூவருமே DKP யுடன் 

சேர்ந்து கச்சேரிகளில் பாடியிருக்கின்றனர். இவர்களுள், D.K.ஜெயராமன், 

D.K.Pயுடன் சேர்ந்து பல மேடைகளில் பாடியிருக்கிறார்.  அக்காவும், 

தம்பியுமாக இணைந்து பாடியது ஒருஆச்சர்யமான நிகழ்வாக 

இருந்திருக்கிறது.
        
           இவர், ‘முத்துசாமி தீக்ஷதரி’ன் சிஷ்யரான ‘அம்பி அய்யரி’டம் 

தீக்ஷதர் கிருதிகளைக் கற்றதால் அவற்றை ஆணித்தரமாகப் பாடுவதில் 

வல்லவர். ‘பாபனாசம் சிவன்’ இயற்றிய பாடல்களை நேரிடையாக 

அவரிடமே பயிலும் பேறு பெற்றவர்.  ‘அப்பாதுரை ஆச்சாரி’யிடம் தாம் 

கற்ற ‘திருப்புகழ்’, ‘தேவாரம்’ போன்றவற்றையும், ‘பாரதியாரி’ன் தேச பக்தி 

பாடல்களையும் தனது கச்சேரிகளில் பாடுவதை வழக்கமாகக் 

கொண்டிருக்கிறார். கோபாலகிருஷ்ண பாரதி, மற்றும் முத்துத் 

தாண்டவரின் பாடல்களையும், பதங்களையும் பாடி தமிழ் மொழியின் 

பெருமையைப் பறைசாற்றியிருக்கிறார்.
       
          ‘ராகம், தானம், பல்லவி’ என்பது, 20ம் நூற்றாண்டுகளில் ஆண் 

பாடகர்களால் மட்டுமே பாடப்பட்டு வந்திருக்கிறது. சவாலாக 

எண்ணப்பட்டிருந்த ‘ராகம், தானம், பல்லவியை’ப் பாடிய முதல் பெண் 

என்ற பெருமையைப் பெறுகிறார் D.K.பட்டம்மாள் அவர்கள். மிக எளிதாக, 

நுட்பமாக, கவனமாகக் கையாண்டு, சக பாடக ஜாம்பவான்களை 
ஆச்சர்யப்படுத்தியதால் ‘பல்லவி பட்டம்மாள்’ என்றே அழைக்கப்பட்டிருக்கிறார், இந்த வகையில் இசைத் துறையில் பெரும் புரட்சியே செய்திருக்கிறார் DKP அவர்கள்.அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், DKPயைப் பற்றி ஒரு மேடையில் பேசும் போது, ‘இவர் பட்டம்மாள் இல்லை பாட்டம்மாள்’ என்று பாராட்டி இருக்கிறார்.
       கர்னாடக இசைக் கலைஞர்களில் சினிமா துறையில் நுழைந்து பாடல்கள் பாடி பிரபலம் அடைந்தவர் என்ற வரிசையிலும் D.K.பட்டம்மாள் அவர்கள் முன்னணியில் இருக்கிறார்.  பாபனாசம் சிவனால் சினிமா துறையில் அறிமுகப் படுத்தப்பட்ட இவர், தேசபக்தி மற்றும் பக்திப் பாடல்களை மட்டுமே பாட ஒப்புக் கொண்டுள்ளார். பாரதியார் பாடல்களான ‘வெற்றியெட்டு திக்கும் எட்ட’. ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ போன்றவற்றை தனது கணீரென்ற குரலாலும், தெளிவான உச்சரிப்பாலும், திரைப்படங்களில் பாடி ஒரு தேசிய எழுச்சியையும், ஒருமைப்பட்டையு,ம், ஊட்டியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை. ‘தூண்டிற் புழுவினைப் போல்’ தீராத விளையாட்டுப் பிள்ளை, போன்ற பாரதியாரின் பாடல்கள் பொது மக்களிடம் பரிச்சியம் ஆனதற்கு D.K.பட்டம்மாள் அவர்களின் பங்கும் உண்டு. வைஜயந்தி மாலா அறிமுகமான AVMன் ‘வாழ்க்கை’ படத்தில் இவர் பாடிய ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்ற பாடல் பட்டி தொட்டிகளிலெல்லாம் எதிரொலித்திருக்கிறது.  இவர் தனது 80 வது வயதில் இளையராஜா மற்றும் கமலஹாசன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான, ‘வைஷ்ணவ ஜனதோ’ என்ற பாடலை ‘ஹே ராம்’ என்ற திரைப்படத்திற்க்காகப் பாடியிருக்கிறார். இசைக் கருவிகள் அவர் வீட்டிற்கே கொண்டுவரப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திரைப்பட பாடல்கள் பாடும் போது, தன் பாட்டிற்கு எவரும் உதட்டசைவு கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடனேயே பாடியிருக்கிறார் DKP அவர்கள்.  இதனால், பின்னணியில் இவர் பாடல் ஒலிக்கும், நடனக் கலைஞர்கள் அப்பாடலுக்கு நடனம் மட்டும் ஆடுவர்.
        இவர், 3வது ஃபார்ம் (8வது) வரை படித்துள்ளார்.  இசைப் பயணத்தில் தனக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்தவர்கள்,  அப்பா, மற்றும் தனது கணவர் என்று மிகப் பெருமையாகக் கூறிக்கொள்வார். இவருக்கு 21 ம் வயதில் ஈஸ்வர ஐயர் என்ற எலெக்ட்ரிகல் இஞ்சினியருடன், திருமணம் அரங்கேறியிருக்கிறது. குழந்தை திருமணங்கள் பெருமளவில் நடைபெற்றுக்கொண்டிருந்த அந்நாட்களில் இவர் தனது இசைப் பணியைப் பெரிதாக மதித்து 21 வயது வரை திருமணத்தை ஒத்திப்போட்டது பெரிய விஷயம் தான். ஈஸ்வர ஐயர், DKP பாடுவதற்கு மிகுந்த உற்சாகமும், ஒத்துழைப்பும் அளித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், குடும்பப் பொறுப்புகள், அனைத்தையும் தான் ஏற்றுக் கொண்டு, அவரை பல வெளியிடங்களுக்கு அனுப்பிக் கொடுத்து, பல மேடைகளில் பாடுவதற்கு உதவியிருக்கிறார். இதனால் அவர் தனது பணிக்கு செல்ல முடியாமல் விடுப்பு எடுக்கும்படி ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய கட்டத்தில் யார் பணியைத் தொடரலாம் என்று இருவரும் பலமாக சிந்தித்து, ஈஸ்வர ஐயர் DKP யை இசைப் பணியை தொடரும்படியும், தாம் வேலையை ராஜினாமா செய்வதாகவும் முடிவெடுத்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஈஸ்வர் ஐயர் இத்தகைய பரந்த மனப்பான்மை கொண்டவராக இருந்ததால்தான் இசை உலகின் கலைக் களஞ்சியமான DKP ஐ இந்த சமுதாயம் பெற முடிந்தது.
         இவருக்கு, சிவகுமார், லக்ஷ்மண குமார் என்று இரு மகன்கள். இருவருக்குமே இசை ஆர்வமும், இசை ஞானமும் இருந்திருக்கிறது. சிவகுமார் மிருதங்கம் பயின்று தனது 10வது வயதிலிருந்தே மேடைக் கச்சேரிகளில் தம் அம்மாவுக்கு பக்கவாத்யம் வாசித்திருக்கிறார். அவர் பாலக்காடு மணி ஐயரின் மகளான லலிதாவை, மணந்துள்ளார். இசை ஞானம் இயல்பாகவே பெற்றிருந்த லலிதா, தனது மாமியாரான DKP யிடம் சங்கீதம் பயின்று, இருவரும் சேர்ந்து கச்சேரிகளில், பாடியதும் ஆச்சர்யமான ஒரு விஷயம்தான்.  லக்ஷ்மண குமார் ஹிந்துஸ்தானி பயின்றிருக்கிறார். ஆனால் இருவருமே முழு நேர இசைக் கலைஞர்களாக இருக்கவில்லை.
சிவகுமாருக்கு, 2 மகள்கள். காயத்ரி, நித்யஸ்ரீ. இவர்கள் இருவருமே தங்கள் பாட்டி போல் நல்ல குரல் வளம் பெற்றவர்கள். நித்யஸ்ரீ மகாதேவன், மற்றும் DKP ன் கொள்ளுப் பேத்தியும், காயத்ரியின் மகளுமான லாவண்யா சுந்தர்ராமன், , இருவரும் தற்போது சங்கீதத் துறையில் பரிமளித்து, சாதனை புரிந்து வருகின்றனர்.
        லக்ஷ்மண குமாரின் மகனான ராஜ் குருவுக்கு, அரவிந்த் என்ற மகன் பிறந்தவுடன் நான்காம் தலைமுறை குழந்தை பிறந்ததை முன்னிட்டு ஹிந்து மத கலாச்சாரத்தின்படி, DKP ஈஸ்வர ஐயர் தம்பதிகளுக்கு கனகாபிஷேகம் நடந்திருக்கிறது. இத்தகைய வரப்பிரசாதம் கிடைக்க இறயருள் கிடைக்கவேண்டும். இந்த ஆதர்ஸ தம்பதிகளுக்கு அது பரிபூரணமாகக் கிட்டியிருக்கிறது.

ஞான சரஸ்வதி, சங்கீத சாகர ரத்னா, சங்கீத நாடக அகாடமி அவார்ட், சங்கீத கலானிதி, பத்ம பூஷன், சங்கீத கலாசிகாமணி, பத்ம விபூஷன், சங்கீத சரஸ்வதி போன்ற பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றவர் DKP அவர்கள்

        இவர், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் பாரதம் சுதந்திரம் பெற்ற அந்த நள்ளிரவில் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடும் அரிய வாய்ப்பைப் பெற்றவர்.
       இப்படி, இசைத் துறையில் கால் பதித்து, வீறுநடை போட்டபடி சாத்னைகள் புரிந்த DKP அவர்கள், எங்கள் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்தது, என் மனக் கண்ணில் நிழலாடுகிறது. என் மாமாவிற்கு, DKP யின் சங்கீதத்தின் மேல் அளவு கடந்த அபிமானம் உண்டு. அவர், தன் மகளின் வீணை அரங்கேற்றத்திற்கு, DKP யை தலைமை தாங்க அழைக்க விரும்பினார். மாமாவும், மாமியும் அவர்கள் வீட்டிற்குச் சென்று அழைத்தவுடன், வருவதாக ஒப்புதல் அளித்தது மட்டுமின்றி, தன் கணவருடன் அரங்கேற்றத்திற்கு வந்து, நிகழ்ச்சி முடியும் வரை இருந்து, எங்கள் உறவினர்கள் அத்தனை பேருடனும் உரையாடி – உணவருந்திச் சென்றது மலரும் நினைவுகளாக மகிழ்ச்சியைத் தருகிறது.

        அன்னாரின் நூற்றாண்டின் போது, அவரை நினைவு கூர்ந்து, எனது அஞ்சலியையும், மரியாதையையும் வெளிப்படுத்தியதில், பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி! வணக்கம்.!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக