என் இனிய நித்யா,
உன்
இமை அசைவில் கண் பேசும்
ஈராயிரம் பாவத்தையும்,
வில்லாகும் புருவங்கள்
விளையாடும் நேர்த்தியையும்,
உதட்டுச் சிரிப்பிலே,
உலவுகின்ற அழகினையும்,
கழுத்ததனை நீ வெட்டி
கவி பாடும் லாவகத்தையும்,
கையிரண்டும் மலராக்கி - நீ
கதை சொல்லும் வாசத்தையும்,
இடையழகை இயல் இசை போல்
இயம்புகின்ற உடையழகையும்,
காற் சிலம்பு சப்தமிட்ட
காவியங்கள் அத்தனையும்
மனக்கண்ணால் நான் கண்டேன் தோழி...
மனநிறைவு கிட்டவில்லை கேள் நீ!
நெஞ்சமெல்லாம் 'உன் நடனம்'
நர்த்தனங்கள் ஆடிவர,
கண்ணிரண்டும் உன் நடம் காணத்
தவித்திருக்கும் இந்நேரம்.......
'நாட்டியப் பேரொளி' எனும்
நற்பெயரை நீ பெற்றிடவே - என்
ஆசைகள் அத்தனையும்
முத்தங்களாய் நான் மாற்றி,
வெண்ணிலவின் புள்ளி ஒன்றில்
விண் வழியே அனுப்புகின்றேன்.
இன்றிரவு விண்ணை நீ
அண்ணாந்து பார் !
அத்தனையும், மொத்தமாய்
பெற்றிடலாம்!
லக்ஷ்மி மாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக